ரங்கோலியில் பாகுபலி-2 படக்காட்சிகள்: பிரமோத், மாணவர்களின் 50 மணி நேர அசத்தல் படைப்பு!

1

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த கலை ஆசிரியர் ப்ரமோத் ஆர்வி, தன் மாணவர்களுடன் இணைந்து 150 சதுர அடியில் பாகுபலி-2 ரங்கோலி படத்தை வரைந்து பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

50 மணி நேரம் தொடர்ச்சியாக பணிபுரிந்து இந்த ரங்கோலி கோலத்தை ப்ரமோத் மற்றும் மாணவ குழுவினர் முடித்துள்ளனர். பல வண்ணங்களை கொண்டு பாகுபலி காட்சிகளில் வரும் படங்களை மாதிரியாக வைத்துக்கொண்டு இவர்கள் ரங்கோலி ஓவியம் படைத்துள்ளனர். பல காட்சிகள் இதில் தத்ரூபமாக உள்ளதால் பார்ப்பவர்கள் கண்களை கவர்ந்துள்ளது. 

நாசிக் மாவட்டத்தில் மாலேகெளன் என்ற இடத்தில் வசிக்கும் ப்ரமோத், அங்கே கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது 43 டிகிரி வெப்பம் கொண்டுள்ள அப்பகுதியில், ரங்கோலி கோலம் அழிந்து விடாமல் வரைய ஃபேன் மற்றும் கூலர் என்று எதுவும் இல்லாமல், வேர்வை துளியுடன் ப்ரமோத் மற்றும் மாணவர்கள் தங்கள் படைப்பை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 50 மணி நேரத்தில், 80 கிலோ வண்ண ரங்கோலி பவுடர்களில் இவர்கள் இந்த ரங்கோலியை வரைந்துள்ளனர். 

பாகுபலி- இறுதி பகுதியை பார்த்த ப்ரமோத், அதை ரங்கோலி கோலமாக வரைய திட்டமிட்டார். படத்தில் வரும் பிரம்மாண்ட காட்சிகள் சிலவற்றை கோலமாக வரைந்தால் அழகாக இருக்கும் என்று எண்ணினார். ரங்கோலி கோலம் போடுவதற்கு முன் ப்ரமோத் மற்றும் அவரது மாணவர்கள் பாகுபலி-2 படத்தை திரையரங்கில் பார்த்தனர். படத்தின் போதே, சிலர் அதில் வரும் முக்கிய காட்சிகளை படமாக வரைந்து கொண்டனர். அதை வைத்துக்கொண்டு ஒரு பெரிய ரங்கோலி படத்தில் பல காட்சிகள் இடம்பெறுவது போல கோலத்தை வரைந்து முடித்துள்ளனர். 

பாகுபலி ரங்கோலியை காண மக்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர். இவரது ரங்கோலி சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பை பெற்று அவை வைரலாக பரவி வருகிறது.

ப்ரமோத் மற்றும் அவர் மாணவர்கள் வரைந்த பாகுபலி ரங்கோலியின் படத்தொக்குப்பு இதோ உங்களுக்காக: