20 வயதில் செய்வது 40 வயதில் பலனை தரும்! 

3

பலமுறை நம்மில் சிலர், “நான் அப்போது அப்படி செய்திருந்தால்... இப்போது நிறைய பணம் சேமித்து இருப்பேன்...”, அதேபோல், ”அப்போது நான் ரிஸ்க் எடுத்திருந்தால்... இப்போது சாதித்து இருப்பேன்...” என்று புலம்புவதை கேட்டிருப்போம். சில விஷயங்களை காலம் தாழ்த்தாமல் இளம் வயதிலேயே செய்வது உச்சிதம். குறிப்பாக அப்போது எடுக்கும் அந்த முடிவுகளால் தற்போது அதன் பலனை அனுபவித்து,  வாழ்க்கைப் பயணத்தை எளிதாக நடத்தி செல்லமுடியும். காலம் பொன் போன்றது என்பர். ஒருவரின் நிதி சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, பணிவாழ்க்கை குறித்த முடிவுகள் ஆளானும் சரி, நாம் இளம் வயதில் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கிறது. 20 வயதில் நாம் சிலவற்றை செய்தால் அதன் பலனை 40 வயதில் கண்டு, சிறந்த வெற்றிப்பெற்ற ஒரு மனிதராக உருவெடுக்கமுடியும்.  

20 வயதில் நாம் செய்யவேண்டியது என்ன? 

துணிந்து முடிவுகள் எடுங்கள்: ரிஸ்க் எடுக்க ஏற்ற வயது 20. எதைப்பற்றியும் பெரிதாக கவலை இல்லாத வயது அது. திட்டமிட்டு துணிந்து முடிவை எடுத்தால் பணி வாழ்க்கையில் வெற்றி அடைய அதிக வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு 20’வயதுகளில் நீங்கள் செய்து வரும் வேலையில் திருப்தி இல்லை என்றால், ரிஸ்க் எடுத்து அந்த பணியை விடுத்து உங்கள் மனம் சொல்லும் பாதையில் செல்லுங்கள். இந்த உலகில் உள்ள புதிதான பல விஷயங்களை முயற்சிப்பதற்கான கால அவகாசம் உங்கள் கையில் அந்த வயதில் இருக்கும். குடும்பச்சுமை பெரிதளவில் இல்லாத வயது அது. அப்படி நீங்கள் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டாலும் அதை சரிசெய்ய உங்கள் கையில் நேரமும், வயதும் இருக்கும். எழுத்தாளர் ராப் சால்கோவிட்ஸ், 

“இளம் வயதினருக்கு அதிக வலிமை இருப்பது சாதகமான ஒன்று. சொந்த வாழ்க்கையின் தலையீடு குறைவாக உள்ளதால், துணிந்து முடிவுகளை எடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கும். ஆனால் அதே முடிவுகளை அனுபவசாலிகள் எடுக்க தயங்குவர்...” 

இளைஞர்கள் தொடங்கும் நிறுவனங்கள், வெற்றிப்பெறும் போது மிகப்பெரிய தாக்கத்தையும், தோல்வியுறும் போது சிறிய அளவு அடியை மட்டுமே விட்டுச்செல்கிறது,” என்று ஒரு கட்டுரையில் எழுதி இருந்தார். 40 வயதுகளிலும் 20 வயதில் செய்த அதே வேலையை செய்ய நீங்கள் விரும்பமாட்டீர்கள். அப்போதே தைரியத்துடன் மனம் சொன்ன போக்கில் சென்றிருக்கலாம் என்று இப்போது புலம்பவும் மாட்டீர்கள். 

பணியிடம் அளிக்கு பயிற்சியில் தீவிரம் காட்டுங்கள்: பணியிடத்தில் உள்ள மேலாளர்கள் தங்களின் ஊழியர்களுக்கு நல்ல படிப்பினைகளையும், பயிற்சிகளையும் வழங்குவது வழக்கம். இது ஒருவரின் சொந்த மற்றும் பணி வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிக்கக் கூடிய ஒன்றாகும். அதனால் இந்த பயிற்சியை தீவிரமாக எடுத்துக்கொண்டு அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். பின்னாளில் இது போன்ற பயிற்சிகளுக்கு செலவழித்து நீங்கள் கற்கவேண்டியது கடினமான விஷயம். இளம் வயதில் பணியிடத்தில் கிடைக்கும் பயிற்சி, இலவசமாக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய கல்வி மட்டுமல்லாது ஒரு அனுபவமும் தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஒரு சில வருடங்களுக்கு பின் நீங்கள் வேறு பணிக்கு செல்லும்போது அந்த பயிற்சியின் மதிப்புகளை அறிவீர்கள். இது உங்களின் பணிவாழ்க்கையில் கிடைக்கும் ஒரு சிறந்த பரிசு. 

வருமானத்தை சரிவர கையாளுங்கள்: இளம் வயதில் வருமானத்தின் மதிப்பை கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் நிதி மேலாண்மைக்கு நல்ல திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். அதற்கு தேவையான திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். சம்பாதியத்தை கையாள்வதில் உங்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் தகுந்த வல்லுனர்களின் உதவியை நாடுகள். அந்த வயதிலேயே நீங்கள் நிதியை கையாள கற்றுக்கொண்டால் பின்னாளில் அது உதவியாக இருக்கும். 20’களில் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதால் காப்பீட்டு தொகை குறைவாக இருக்கும், அதனால் அப்போதே முதலீடு செய்ய தொடங்குங்கள். கல்விக்கடன் இருந்தால் பணியை தொடங்கியவுடன் அதை முதலில் அடைத்திடுங்கள். முக்கியமாக பணியிடமாற்றம் மேற்கொண்டால், நீங்கள் உங்கள் பிஎஃப் பணத்தையோ, ரிட்டயர்மண்ட் சேமிப்பை எடுத்து செலவழித்து விடாதீர்கள். இருப்பதை வைத்து சமாளித்து புதிய பணியில் சேர்ந்தவுடன் அதனை அப்படியே தொடருங்கள். 

சீனியர்கள் மற்றும் வழிக்காட்டிகளிடம் தைரியமாக அனுகுங்கள்: உங்களுக்கு ஏதேனும் உதவி அல்லது ஆலோசனை தேவைப்பட்டால் தைரியமாக உங்களின் வழிக்காட்டிகளை அனுகுங்கள். தயங்கவேண்டாம் ஏனெனில் அனுபவசாலிகளிடம் இருந்து நீங்கள் நிறைய கற்கமுடியும். இதை வேறு எந்த புத்தகத்திலும் கற்கமுடியாது. உங்கள் சீனியர்களிடம் நல்ல முறையில் பழகுங்கள், அவர்கள் உங்களை நல்வழியில் நடத்துவர். 40 வயதுகளில் நல்ல வழிக்காட்டிகளை கண்டெடுப்பது அரிதான விஷயம் அதனால் இளம் வயதில் நல்ல மனிதர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். யாரையேனும் போல் நீங்களும் வளர நினைத்தால், அவரை தொடர்புகொண்டு பேசுங்கள், அவரிடம் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பணிவாழ்க்கைக்கு இது மிகவும் முக்கியம். 

தொடர்புகளை பெருக்கி உறவுகளை தொடருங்கள்: தொடர்புகளை உருவாக்குவதே வாழ்க்கையில் பின்னர் உங்களுக்கு அவர்கள் உதவக்கூடம் என்ற அடிப்படையில் தான். பிரபலமான, அனுபவசாலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு வளமான பாதையை காட்டக்கூடும். ஆனால் அத்தகைய தொடர்புகளை தொடருவதும் எளிதல்ல... உண்மையாக அவர்களுக்காக நீங்கள் நேரம் செலுத்தி, முயற்சி எடுத்தால் மட்டுமே அவரும் அதை மதித்து தொடருவார். இளம் வயதில் இதை செய்ய ஆரம்பியுங்கள், புதிய தொடர்புகளையும் ஏற்படுத்தி கொண்டே இருங்கள். எல்லாரும் தற்போதைய வாழ்க்கைக்கு தேவையாக இல்லையென்றாலும் ஏதோ ஒரு நாள் அவர்களின் தேவை உங்களுக்கு ஏற்படலாம் அதனால் யாருடைய தொடர்பையும் துண்டித்து கொள்ளாதீர். 

20 வயதில் நீங்கள் போடும் அடித்தளம் வருங்கால வாழ்க்கையின் கட்டிடமாக மாறும். அதனால் உங்களின் முழு முயற்சியை செலுத்தி அந்த அடித்தளத்தை கட்டமையுங்கள். இதுவே உங்கள் பணிவாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கைக்கு ஒரு ஸ்திரத்தன்மையையும், வளமான முடிவுகளை அளித்து உங்களை வெற்றி அடையச்செய்யும். 

ஆங்கில கட்டுரையாளர்: மாண்டி மஜீத்