பூச்சிக் கொல்லி மருந்தில்லா தரமான காய்கறிகள் வழங்கும் 'பிரஷ்பாக்ஸ்'

0

இன்றைய போட்டி மிகுந்த உலகில், ஒருவர் தனது சொந்த ஊரை விட்டு வந்து வெளியூரில் வேலை பார்ப்பது சர்வசாதாரணமாகி விட்டது. ஆனால் பரபரப்பான வேலைகளுக்கு இடையிலும், ஒருவர், தனது சொந்த வீட்டுச் சாப்பாடு மற்றும் குடும்பத்தை விட்டுப் பிரிந்த ஏக்கம் இல்லாமல் இருக்காது. 31 வயது ரோஹன் குல்கர்னி தனது 7 வருட கார்ப்பரேட் வாழ்க்கை அனுபவத்தில் பல்வேறு ஊர்களில் வசித்திருக்கிறார். ஒருவர் தனது குடும்பம் மற்றும் வீட்டுச் சாப்பாடை இழந்த ஏக்கத்தில் இருந்து வெளியே வருவது சுலபமல்ல என்பதைப் புரிந்து கொண்டார். ஆனால் பிடித்த சாப்பாடு கிடைக்காது என்றாலும் புத்தம்புது பழங்களும் காய்கறிகளும் எப்போதும் எங்கும் கிடைக்குமே.

இந்த எண்ணம்தான் 2015 செப்டம்பரில் அவரை 'ஃபிரஷ்பாக்ஸ்' Freshboxx வெனச்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கச் செய்தது. கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில்தான் அவர் அதைத் தொடங்கினார். ஹூப்ளியை அவர் தேர்வு செய்ததற்குக் காரணம் அவர் வளர்ந்த நகரம் இதுதான். அந்த நகரத்தை கிட்டத்தட்ட தங்கள் வசம் வைத்திருந்த பிக்பாஸ்கெட்(Bigbasket), கிரோபெர்ஸ் (Grofers), பெப்பர்டேப் (PepperTap) போன்ற நிறுவனங்களின் போட்டியில் வளர்ந்தார். இன்போசிஸ் மற்றும் பிற ஐடி நிறுவனங்கள் விரைவில் கிளைகளைத் திறக்க இருக்கும் ஹூப்ளி, மிகப்பெரிய சந்தையாக வளரப் போகிறது என்பதில் ரோஹன் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்.

வீட்டிற்கு டெலிவரியாகும் பழங்களும் காய்கறிகளும்
வீட்டிற்கு டெலிவரியாகும் பழங்களும் காய்கறிகளும்

“தீங்கு விளைவிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் வரும் பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடுவதால் மரணத்தை ஏற்படுத்தும் கேன்சர் போன்ற புற்று நோய்கள் வரலாம்” என்கிறார் ரோஹன்.

எனவே பண்ணையில் இருந்து புதிதாக, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, வேதிப் பொருட்கள் இல்லாத பழங்களையும் காய்கறிகளையும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே கொண்டு தருகிறது ரோஹனின் 'ஃபிரஷ்பாக்ஸ்'. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பழங்கள் அல்லது காய்கறிகளை கஸ்டமர் கேர் எண்ணிலோ அல்லது வெப்சைட் மூலமோ ஆர்டர் செய்யலாம்.

சாணக்கியா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் ரோஹன் எம்பிஏ முடித்தார். பல்வேறு வகையான தரகு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் அவர் பணியாற்றினார். கடைசியாக எம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்சேஞ்ச் லிமிட்டட் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

கொள்முதல் எப்படி?

வெள்ளிக் கிழமை வரையில் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறுகிறது ஃபிரஷ்பாக்ஸ். பிறகு அவை விவசாயிகளுக்கு அனுப்பப்படுகின்றன. சனிக்கிழமை காலையில் (அதிகாலையில்தான் காய்கறிகளைப் பறிப்பார்கள்) விவசாயிகளிடமிருந்து பழங்களையும் காய்கறிகளையும் ஃபிரஷ்பாக்ஸ்சின் வாகனங்கள் சேகரித்து வருகின்றன. காய்கறிகளும் பழங்களும் வந்து சேர்ந்ததும், அவற்றை ஃபிரஷ்பாக்ஸ் பணியாளர்கள் எடை போட்டு, சலித்து, கழுவி சுத்தம் செய்கின்றனர்.

விவசாயிகளிடமிருந்து வந்த காய்கறிகளையும் பழங்களையும் பிரஷ்பாக்ஸ் இப்போதைக்கு பின்னால் இருக்கும் காலி இடத்தில்தான் இருப்பு வைத்துக் கொள்கிறது. அதற்கென்று குடோன் எதுவும் இல்லை. குடோனை உருவாக்கத் தேவையான பணம் திரட்டும் முயற்சியில் இருக்கிறார்கள்.

தார்வாடில் உள்ள விவசாய விஞ்ஞானப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு வைத்துக் கொண்டிருக்கிறது ஃபிரஷ்பாக்ஸ். இந்தப் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு தேவையான நவீன விவசாய முறைகளை சொல்லித் தருகின்றனர். இப்போதைக்கு ஃபிரஷ்பாக்ஸ்க்காக 24 விவசாயிகள் பணியாற்றுகின்றனர். ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் பொறுத்து விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக ஆர்டர் கிடைப்பதால், உண்மையில் தங்களது தேவை என்ன என்பதை கணக்கிடுவது கடினமாக இருப்பதாகக் கூறுகிறார் ரோஹன். தனது இருப்பு முழுவதையும் வாடிக்கையாளர்களுக்கு விற்க முடியாமல் போகும் பட்சத்தில், விற்பனையாளர்களுக்கு அவற்றை விற்று விடுகிறார்கள்.

“விவசாயிகளின் தற்கொலை பற்றிக் கேள்விப்படுகிறோம். அவர்களின் உற்பத்திக்கு நுகர்வோர் அளிக்கும் விலை, முறையாக விவசாயிகளைப் போய்ச் சேர்வதில்லை. வழியில் உள்ள இடைநிலையாளர்களுக்குப் போய்விடுகிறது. அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவே செயற்கையான தேவையையும் விநியோகத்தையும் உருவாக்குகின்றனர். எங்களைப் பொருத்தவரையில் குறைந்த பட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கு தர முயற்சிக்கிறோம். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும் பட்சத்தில், மேலும் அதிகமாக அவர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதத்தையும் வழங்குகிறேம்” என்கிறார் ரோஹன்

தொழில்நுட்பப் பயன்பாடு

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள கெமிக்கல்களை அகற்ற ஓசோன் தொழில்நுட்பத்தைப் (Ozone technology) பயன்படுத்துகிறது ஃபிரஷ்பாக்ஸ். இந்தத் தொழில்நுட்பத்தில் ஓசோன் கலந்த தண்ணீரில் காய்கறிகளையும் பழங்களையும் போட்டு, அவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அழிக்கிறார்கள்.

தோற்றமும் வளர்ச்சியும்

மூன்று லட்ச ரூபாய் மூலதனத்தில் ஆரம்பிக்கப்பட்டது ஃபிரஷ்பாக்ஸ். தனக்குத் தோள் கொடுக்க இணை நிறுவனரையும், ஒரு நல்ல வேலைத் திறன் மிக்க குழுவையும் கண்டறிய ரோஹன் போராட வேண்டியிருந்தது.

ரோஹன்குல்கர்னி, நிறுவனர், ஃபிரஸ்பாக்ஸ் வென்சர்ஸ்
ரோஹன்குல்கர்னி, நிறுவனர், ஃபிரஸ்பாக்ஸ் வென்சர்ஸ்

இப்போது, ஏழு பேர் இருக்கிறார்கள். ஒருவர் பில் போடுவது போன்ற பணிகளை கவனித்துக கொள்கிறார். இன்னொருவர் காய்கறிகளையும் பழங்களையும் விவசாயிகளிடமிருந்து கொண்டு வந்து சேர்ப்பதைக் கவனித்துக் கொள்கிறார். வந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தம் செய்து, பேக் செய்யும் பணியில் மற்றவர்கள் ஈடுபடுகின்றனர். இப்போது வரையில் ரோஹனுக்கு இணை நிறுவனர் கிடைக்கவில்லை.

“வாரத்திற்கு 100 சதவீத வளர்ச்சியுடன் நாற்பத்தைந்தே நாட்களில் ஹூப்ளியில் 120 வாடிக்கையாளர்களைப் பிடித்து விட்டோம். இப்போது மாதம் ஒன்றுக்கு 400 ஆர்டர்கள் வரையில் வருகிறது” என்கிறார் ரோஹன்.

விரிவாக்கத் திட்டம்

நிறுவனம் வளர்ச்சியடைந்ததும் தார்வாட், பெல்காம், கோவா ஆகிய இடங்களில் கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். அடுத்த நிதியாண்டில் 1200 ரூபாய் வரையில் ஆர்டர் செய்யும் சுமார் 4 ஆயிரம் வாடிக்கையாளர்களைப் பிடித்து விட வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறார்கள். அடுத்த நிதியாண்டில் ரூ.5 கோடியே 76 லட்சம் வரை வருமானம் வரும் என எதிர்பார்க்கிறது ஃபிரஷ்பாக்ஸ்.

இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பலசரக்கு விற்பனையையும் வரும் நிதியாண்டில் தொடங்க திட்டமிட்டிருக்கிறது ஃபிரஷ்பாக்ஸ். அப்பளம், உறுகாய், மசாலாக்களை இயற்கை முறையிலும் சுகாதாரமாகவும் தயார் செய்து அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் தேஷ்பாண்டே அறக்கட்டளை நடத்திய சாண்ட்பாக்ஸ் ஸ்டார்ட்அப் சேலஞ்ச் போட்டியில் 72 நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் விருதைப் பெற்று ஒரு லட்ச ரூபாய் நிதியைப் பெற்றது ஃபிரஷ்பாக்ஸ். 

யுவர்ஸ்டோரி கருத்து

வரும்காலத்தில் இந்தியாவில் விவசாயத் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இந்தத் துறையில் புதிதாக பல நிறுவனங்கள் உருவாகியிருக்கின்றன. அனுபல் அக்ரோ(Anubal Agro) என்ற நிறுவனம் இயற்கை முறை விவசாயத்திற்கு உதவுகிறது. விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதோடு இலவச விதைகளையும் அது வழங்குகிறது. சேவ் இன்டியன் கிரைன்.ஆர்க்(Save Indian Grain.org) விவசாயப் பொருட்களை இருப்பு வைப்பதற்கான வசதிகளை வழங்குகிறது. சிறிய மற்றும் உதிரி விவசாயிகளை ஒருங்கிணைத்து சந்தை வாய்ப்புக்களை வழங்குகிறது. டெஸ்ட்டாமார்ட்.காம் (DestaMart) விவசாய இடு பொருள் விநியோகஸ்தர்களையும் உற்பத்தியாளர்களையும் இணைத்து அந்த விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்துகிறது.

இந்த ஆண்டு மே மாதத்தில் மஹிந்திரா அக்ரி பிசினஸ், பெங்களூரில் உள்ள சி6 எனர்ஜி நிறுவனத்துடன் தயாரிப்பு உரிம ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. விளைச்சளை அதிகரிக்கும் ஜிங்கோ எனும் தயாரிப்பை சந்தைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் அது.

விவசாயமும் அது சார்ந்தத் துறைகளும் ஆண்டுக்கு ஆண்டு 1.9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும் மொத்த மதிப்புக் கூட்டில் 14.2 சதவீதம் வரையில் அது பங்களிக்கும் எனவும் கூறுகிறது இண்டியா பிராண்ட் ஈக்குட்டி அறக்கட்டளையின் அறிக்கை. ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்களில் 58 சதவீதம் பேருக்கு விவசாயம்தான் வாழ்வாதாரம். முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் துறையில் புதிய நிறுவனங்கள் கால்பதிப்பதன் மூலம், விவசாயத்தை மேம்படுத்துவதிலும் விவசாயிகளின் முன்னேற்றத்திலும் அவற்றால் சிறப்பான பங்களிக்க முடியும்.

இணையதள் முகவரி: FreshBoxx

ஆக்கம்: அப்ராஜிதா சவுத்ரி | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா