திருமண பரிசாக புத்தகங்களை வழங்கக் கோரிய தம்பதிகள்!

0

இந்தியாவில் திருமணங்கள் வெகு விமர்சையாகவே கொண்டாட்டபடுகின்றன. ஆனால் ஒவ்வொரு திருமணமும் அமர் மற்றும் ராணி கலம்கார் திருமணம் போன்று பின்பற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த தம்பதி தங்களது திருமணத்திற்கு வரும் அனைவரும் புத்தகங்களை மட்டுமே பரிசாகக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தப் பரிசுகளைக் கொண்டு நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒரு நூலகத்தை உருவாக்க இவர்கள் விரும்பினர்.

புத்தகங்களின் வலிமையை நன்குணர்ந்த இந்தத் தம்பதி சமூக நலனில் ஆர்வம் உடையவர்கள். அமர், யுவ சேத்னா என்கிற அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். போட்டித் தேர்வுகள் எழுத விரும்பும் மாணவர்களுக்கு உதவவேண்டும் என்பது இவரது கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான வழி தெரியாமல் தவித்தார்.

அமரின் மனைவி ராணி பூனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராக உள்ளார். அவரும் இந்த கருத்தினை ஆதரித்து இந்த உன்னதமான நோக்கத்திற்காக பங்களித்தார். நியூஸ்18 உடனான நேர்காணலில் இவர் குறிப்பிடுகையில்,

"மஹாராஷ்டிராவின் கிராமப்புறத்தைச் சேர்ந்த பலருக்கு புத்தகங்களை வாங்குவதற்கான பண வசதியும் இல்லை. அவை கிடைக்கும் இடங்களைக் கண்டறியவும் முடிவதில்லை. போட்டித்தேர்வுகள் கடினமானதாகும். ஆனால் இந்தத் தேர்வுகளுக்கான சரியான புத்தகங்களைக் கண்டறிவது அதைக் காட்டிலும் கடினமானது."

இந்தத் தம்பதி தங்களது திருமண அழைப்பிதழில் இந்த யோசனையை முன்வைத்தனர். இந்த அழைப்பிதழ் வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பட்டது என இண்டியாடைம்ஸ் தெரிவித்தது. இவர்களது அழைப்பிதழ் அதிகம் பரவி பலர் இந்த நோக்கத்திற்காக ஆதரவளிக்க முன்வந்தனர். உறவினர்கள் அல்லாத அந்நியர்களும் உதவினர். 

இவர்கள் சுமார் 3,000 புத்தகங்களை சேகரித்துள்ளனர். மஹாராஷ்டிராவின் அஹ்மத்நகரில் ஒரு நூலகத்தை அமைக்க விரும்புகின்றனர் என Kenfolios தெரிவிக்கிறது. அமர், வாழும் கலை அமைப்புடன் இணைந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி வருகை புரிந்து ஆசிகள் வழங்கினார்.

கட்டுரை : THINK CHANGE INDIA