இந்தியாவின் எட்ட முடியாத பகுதிகளை இணைக்க விரும்பும் 'கனெக்ட் இண்டியா'

0

லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் நிர்வாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ள 'கனெக்ட் இண்டியா'வின் ( Connect India) எல்.ஆர்.ஸ்ரீதர் இந்த துறைகளில் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவர், தனது தொழில் வாழ்க்கையை 1981-ல் எக்ஸ்பிரஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் நிர்வாக வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டு பிரிவில் துவக்கினார்.

ஸ்கைபாக், ஓவர்நைட் எக்ஸ்பிரஸ் மற்றும் டிஎண்டி எக்ஸ்பிரஸ் வேர்ல்டுவைடு மற்றும் ஏஎப்.எல் இடையிலான கூட்டு முயற்சியான கார்பரேட் கூரியர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கான நெட்வொர்க்கை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். 2006 ல் இவர் சிகால் டிஸ்ட்ரிபார்க்ஸ் லிட் நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். சிகால் குழும நிறுவனங்களின் துணை நிறுவன இயக்குனர் குழுக்களிலும் அங்கம் வகித்திருக்கிறார். கஃபே காபிடே நிறுவனம் சிகால் லாஜிஸ்டிக்சை 2011ல் கையகப்படுத்திய போது ஸ்ரீதர், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் ஆலோசனை மற்றும் பணி நியமன நிறுவனத்தை சொந்தமாக துவக்க தீர்மானித்தார். இதற்கான நேரமும் சரியாக இருந்தது.

கனெக்ட் இண்டியா நிறுவனர் எல்.ஆர்.ஸ்ரீதர்
கனெக்ட் இண்டியா நிறுவனர் எல்.ஆர்.ஸ்ரீதர்

2013ல் இந்தியாவில் இ-காமர்ஸ் துறை செழிக்கத்துவங்கியது. லாஸ்ட் மைல் டெலிவரி என்று சொல்லப்படும் விநியோக சேவை முக்கிய வர்த்தக அம்சமாக அமைந்தது. இந்த வளர்ச்சி தந்த உந்துதலால் அவர் கனெக்ட் இண்டியா நிறுவனத்தை துவக்க முடிவு செய்தார்.

இன்று கனெக்ட் இண்டியா, இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான பொதுவான லாஸ்ட் மைல் டெலிவரி வசதியை வழங்கி வருகிறது. 5,000 மக்கள் தொகை கொண்ட தொலைதூர கிராமங்களை கூட நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைத்து வருவதுடன், சர்வதேச அளவிலும் கூட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

"மோடி அரசு இந்தியாவை இணைப்பது பற்றி பேசத்துவங்கிய போது இது சரியான நேரம் என நினைத்தேன். கிராம மக்களுக்காக பணியாற்றுவதுடன் அவர்கள் வாழ்க்கையையும் மேம்படுத்தும் வகையில் லாஸ்ட் மைல் விநியோக அமைப்பை துவக்க தீர்மானித்தேன்” என்கிறார் ஸ்ரீதர்.

கிராமங்களை நோக்கி

இந்நிறுவனம் அனைத்து 675 மாவட்டங்கள் மற்றும் 25,000 அஞ்சல் குறியீடுகள் ஆகியவற்றை இணைக்க திட்டமிட்டுள்ளது. உள்ளூர் தொழில்முனைவர்களை கொண்ட விநியோக வலைப்பின்னலை உருவாக்குவதன் மூலம் இதை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. 200 முதல் 300 இடங்களுக்கு சேவை அளிக்க கூடிய தொழில்முனைவோரை பணிக்கு அமர்த்தியுள்ளது. விநியோக மையங்களாக செயல்படக்கூடிய பொது சேவை மையங்களுடனும் ( சி.எஸ்.சி) ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே இத்தகைய 600 மையங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதுடன் இந்த நிதியாண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

"நகர்புற இந்தியாவுக்கும் கிராமப்புறத்திற்கும் இடையிலான லாஜிஸ்டிக்ஸ் இணைப்பை உருவாக்குவது தான் நோக்கம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு மைய இடத்தில் இருந்து கிராமங்களுக்கு எங்கள் வாகனத்தை இயக்குகிறோம் என்று கனெக்ட் இண்டியாவின் விநியோக அமைப்பை விளக்குகிறார். ஒரு அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கு ஒரு கனெக்ட் இந்தியா மையத்தை ( சிஐசி)ஒதுக்குகிறோம். ஆக ஒவ்வொரு அஞ்சல் குறியீட்டிலும் 30 முதல் 40 ஷிப்மெண்டை கையாளும் ஒரு சிஐசி மையம் இருக்கும்.

மெட்ரோக்களில் இந்த மையம் ஒன்று அல்லது இரண்டு கி.மீ சுற்றளவில் செயல்படுகிறது. மருந்தகங்கள், மளிகை கடைகள், வணிக வளாகம் மற்றும் மொபைல் மையங்கள் மூலம் விநியோகிக்கும் முறையை பின்பற்றுகிறது. கடந்த 4 மாதங்களில் நிறுவனம் 2,000 மையங்களை திறந்துள்ளது. இந்த மையங்களை நடத்தும் தொழில்முனைவோர் 30 முதல் 50 சதவீத வருவாய் பங்கை பெறுகின்றனர்.

உயரும் வாழ்க்கைத்தரம்

இந்தியாவில் இப்போது 58 மில்லியன் சிறிய மற்றும் வீட்டில் செயல்படும் வர்த்தகங்கள் இருக்கின்றன. இந்த விற்பனையாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச சந்தையை அடைய கனெக்ட் இண்டியா தனது சி.ஐ.சி மையம மூலமாக இ-காம்ரஸ் வழியே உதவ உள்ளது.

பலனடைய இருப்பது விற்பனையாளர்கள் மட்டும் அல்ல. பொருட்களை டெலிவரி செய்பவரும் 35 முதல் 50 சதவீத பங்கை பெறுகிறார். இது தான் கனெக்ட் இண்டியா மாதிரியின் சிறப்பம்சமாக இருக்கிறது. மெட்ரோ நகரங்களில் டெலிவரி சேவை வழங்குபவர்கள் செலவை சமாளிக்க முடியாமல் கடனில் தவிக்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்பங்களை வேறு கவனிக்க வேண்டும். கனெக்ட் இண்டியா மாதிரி, கிராமங்களில் இருந்து கொண்டே நகரத்து வருவாய் சம்பாதிக்க உதவுகிறது.

ஊழியர்களின் திறன் மற்றும் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்த நிறுவனம் கிராமப்புற மையங்களில் பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 சதுர அடி திறன் மையங்களை அமைத்துள்ளனர்.

"கனெக்ட் இண்டியா திறன் வாய்ந்த லாஜிஸ்டிகஸ் ஊழியர்களை உருவாக்க விரும்புகிறது. அவர்களுக்கு தொடர்புடைய விநியோக வர்த்தகம் மற்றும் பிற நடவடிக்கைகளில் பயிற்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்கி தொடர்ந்து செயல்படுத்தும்” என்கிறார் ஸ்ரீதர்.

புதிய வர்த்தகம்

விலை மற்றும் பொருட்களை கையாளும் அளவில் மாறுபாடுகளை கொண்டிருக்க கூடிய வர்த்தக மாதிரி மூலம் லாஜிஸ்டிக்ஸ் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவர கனெக்ட் இண்டியா விரும்புகிறது. மளிகை கடைகள், மருந்தகங்கள், கடைகள், போன்ற முழு அளவு பயன்படுத்தப்படாத வசதிகளை திறம்பட பயன்படுத்தி விரிவான விநியோக அமைப்பை உருவாக்க முயன்று வருகிறது.

நிறுவனம் தனது சி.ஐ.சி மையங்களுக்காக பல சேவைகள் கொண்ட ஒற்றை முனையம் (எஸ்.டி.இ.எம்.எஸ்) மாதிரி கீழ்,பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து, கேஷ் ஆன் டெலிவரி மற்றும் வர்த்தகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கூரியர் சேவை, வங்கி மற்றும் இ-காமர்ஸ் சேவை, பாதுகாப்பான ஆவணங்கள் டெலிவரி, மைக்ரோ வேர்ஹவுசிங் மற்றும் டிராப் பாக்ஸ் வசதி ஆகியவற்றை வழங்கி நீடித்த விநியோக வசதிகளை அளிக்க உள்ளது. மொபைல் செயலி மூலம் டெலிவரி நிலைப்பற்றிய தகவல்களையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

புதிய அணுகுமுறை

2015 ஆகஸ்ட்டில் கனெக்ட் இண்டியா 17 மாநிலங்களில், 150 நகரங்களில் வர்த்தக செயல்பாடுகளை துவக்கவும் நகர மற்றும் கிராமப்புற சந்தைகளில் 1,500 சி.ஐ,சி மையங்களை துவக்கவும் ஆவிஷ்காரிடம் (Aavishkaar) இருந்து ரூ.32 கோடி நிதி பெற்றது.

"ஜனவரி -பிப்ரவரியில் இரண்டாம் கட்ட முதலீட்டை எதிர்பார்க்கிறோம். அப்போது தானியங்கிமயத்திற்கு மாறுவோம். நாடு முழுவதும் மைக்ரோ வேர்ஹவுசிங் அமைக்க விரும்புகிறேன்” என்கிறார் ஸ்ரீதர்.

இப்போது நிறுவனத்தில் 200 ஊழியர்கள் உள்ளனர். ஆண்டு இறுதிக்குள் இது 1,000 ஆக அதிகரிக்க உள்ளது. 350 இடங்களில் 15,000 அஞ்சல் குறியீடுகளுக்கு விரிவாக்க உள்ளது.

2016 ஜனவரி வாக்கில் 5,000 மையங்கள் துவக்க திட்டமிட்டுள்ளது. இவை 30,000 வேலைவாய்ப்புகளையும் 1,00,000 ஷிப்மெண்டை கையாளும் 500 சி.ஐ,சி மையங்களையும் உருவாக்கும்.

"கனெக்ட் இண்டியா, மெட்ரோ, முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு நகரங்களில் அருகாமை வசதி கொண்ட விநியோகத்தை அளிப்பதுடன், கிராமப்புற இந்தியா சர்வதேச வர்த்தகத்தில் பங்கேற்கும் வகையில் நம்பகமான மைக்ரோ லாஜிஸ்டிஸ் அமைப்பையும் வழங்கும். 2016-17 ல் நாங்கள் ரூ.260 முதல் 300 கோடி நிறுவனமாக இருப்போம். ஐந்தாண்டுகளில் பில்லியன் டாலர் நிறுவனமாக இதை உருவாவோம்” என்கிறார் ஸ்ரீதர்.

இணையதள முகவரி: Connect India