மதுரை பெண் தன் கண்டுபிடிப்புகளால் சிலிக்கான் வேலி வரை சென்ற கதை!

2

சாதாரண பாரம்பரிய மதுரை குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், திவ்யா சொர்ணராஜாவிடம் பண்டையக்கால தமிழ்ப்பெண்ணுடைய எந்தவொரு அடையாளமும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். இன்று தன்னை ஒரு தொழில்முனைவராக அடையாளப்படுத்திக் கொள்வதில் திவ்யா வெற்றி முத்திரையையும் பதித்திருக்கிறார்.

தன்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே மின்னணு சுற்றுகளை (Electronic Circuits) மட்டுமே பார்த்து அதனுடன் தன்னுடைய பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்ட திவ்யாவின் தந்தை சில்லறை மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு இயந்திரங்களை தனி பாகங்களாக பிரித்து அதிலிருக்கும் அச்சிட்ட மின்னணு பலகையை (Printed Circuit Board) பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்புகள் தானாக அமைந்தது. "என்னை விட வேகமாக கணக்குகளை எப்படி இந்த கால்குலேட்டரால் செய்யமுடிகிறது என்ற கேள்வி எனக்கு எப்போதுமே இருந்ததுண்டு." என்று தன்னுடைய பால்ய காலத்து நினைவுகளை பகிர்ந்துக்கொள்கிறார் திவ்யா. ஒரு முறை கால்குலேட்டேர் ஸ்க்ரீனை பிரித்த போது, மூன்று அடுக்கு கொண்ட எல்சிடியை பார்த்த திவ்யாவிற்கு சற்று குழப்பத்தை தந்தது. இவருடைய இந்த மின்னணு விளையாட்டுகள் இவரது பெற்றோர்க்கு சின்ன எரிச்சலை அளித்தாலும், தன்னுடைய ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொண்டு முனைப்போடு திவ்யா செயல்பட்டார்.

15 வயது சிறுமியாக இருந்த திவ்யாவிற்கு, நானோ தொழில்நுட்பத்தின் மீது ஒரு தனி ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆர்வமே அவரை நானோட்யூப்களை பற்றி சிறப்புரை தருவதற்கு தூண்டுதலாகவும் அமைந்தது. கல்லூரி நாட்களில் கணக்குகளுக்கு உடனே உடனே பதிலளித்து சக மாணவிகளுக்கு ஆச்சரியத்தை வழங்குவது திவ்யாவிற்கு வாடிக்கையே. இயற்பியல் மற்றும் கணக்கு பாடங்களில் இருந்த அதிகப்படியான ஆர்வம் அந்த பாடங்களில் இருக்கும் கடினமான கேள்வி மற்றும் கணக்குகளுக்கு சரியான பதில் அளிப்பதை தனி சவாலாக எடுத்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தன்னுடைய தொழில்முனைவர் கனவை நோக்கி முதல் அடியை, திவ்யா கல்லூரி நாட்களில் எடுத்து வைத்தார். அவர் பொறியியல் பட்டத்தை முடித்த வேலம்மாள் கல்லூரியின் தொழில்முனைவர் செல்லை நடத்தும் வாய்ப்பு எற்பட்டது. தேசிய தொழில்முனைவர் இணையத்தின் முயற்சியாக செயல்பட்ட அந்த தொழில்முனைவர் செல்லை, 'லெமன் இன்க்' என்றும் பெயரிட்டார் திவ்யா. "குறைந்த நேரத்திலிருக்கும் வகுப்புகளை லெமன் பீரியட்ஸ் என்று சொல்லுவதுண்டு. நான் தொழில்முனைவர் செல்லை நடத்தத்தொடங்கிய சமயத்தில் அந்த வகுப்புகளே இல்லாமல் போனது. அதனால் தான் அப்படி ஒரு பெயரை வைத்தேன்." என்று விளக்குகிறார் திவ்யா.

இந்திய விவசாயத்துறையில் பணிபுரிந்த தருணம்

2010ம் ஆண்டில் தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்த திவ்யா, விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை கொண்டுவர திட்டமிட்டார். "தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விளைப்பொருள்கள் நேரடியாக வாடிக்கையாளர்களை சென்றடைய கனவு கண்டேன். இதன் மூலம் நடுவில் இருந்த தரகர்களை கட்டுப்படுத்தி ஏற்படும் நஷ்டத்தை சரி செய்ய எண்ணியிருந்தேன்" என்று குறிப்பிடுகிறார் திவ்யா. "உற்பத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே எனது திட்டம்." என்று விளக்கும் திவ்யா, இதற்காக அக்கம் பக்கத்திலிருந்த விவசாயிகளை சந்தித்தும் பேசினார். "ஒரு இளம் பெண் தன்னுடைய திட்டத்தை பற்றி எடுத்து பேசுவதை எல்லா விவசாயிகளும் சந்தோஷமாக ஏற்றாலும், தொழில் சம்பந்தமான விஷயம் என்று வரும் போது, சற்று தயக்கமாகவே இருந்தனர்" என்கிறார் திவ்யா.

தன்னுடைய விவசாயிகளுக்கான திட்டத்திற்கு நிறைய நிதியும், ஒரு நல்ல முதலீட்டாளரும் தேவை என்பதை உணர்ந்த திவ்யா, ரத்தன் டாட்டாவை தொழில் திட்டத்தோடு தொடர்பு கொண்டார். ஏன் ரத்தன் டாட்டா என்று கேட்டபோது?, "டாட்டா என்ற பிராண்ட் கிராமங்களில் புகழ்பெற்றது. தவிர, டாட்டாவிற்கு இது போன்ற விஷயங்களில் ஆர்வம் மற்றும் உணர்வும் உண்டு கூட" என்று விளக்கும் திவ்யாவிற்கு டாட்டா அலுவலகத்திலிருந்து ஒரு பதில் வந்தது மட்டுமல்லாமல், அவர்களுடைய புது கண்டுபிடிப்பிற்கான ஆய்வகத்தில் (Innovation Lab) வேலைக்கு சேரவும் அழைப்பு வந்தது.

சிங்குலாரிட்டி பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தொழில்நுட்ப பயிற்சி படிப்புகள்

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இருக்கும், சிங்குலாரிட்டி பல்கலைக்கழகத்தில் கல்விக்கு ஒரு புதிய பரிமாணத்தை தரும் வகையில் வித்தியாசமான தொழில்நுட்ப படிப்புகள் அளிக்கப்படுவதுண்டு. இந்த படிப்பிற்காக, திவ்யா 10 வாரம் முழு ஊக்கத்தொகையுடன் சிலிக்கான் வேலிக்கு அனுப்பப்பட்டார். 2012ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபாடிக்ஸ் (Robotics), நானோ தொழில்நுட்பம் (Nano Technology), உயிர் தகவலியல் (Bioinformatics), 3டி பிரிண்டிங் (3d Printing), பயோடேக்னாலாஜி (Biotechnology), இணையம் மற்றும் கணினியியல், விண்வெளி மற்றும் இயற்பியல் போன்ற பல துறைகளை பற்றிய விஷயங்களை ஒரு சேர பாடமாக வைத்து அதில் சேர்ந்து திவ்யா பயின்றார்.

தொழில்நுட்பத்தை பற்றி பேசும் போது, "நாம் தற்போது இருக்கும் காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிவேகமாக இருந்து வருகிறது. இதன் மூலம், இன்னும் சில வருடங்களில் உலகமே வித்தியாசமாக மாறிவிடும்." என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

சிலிக்கான் வேலிக்கு பின் திவ்யா வைத்த அடுத்த அடிகள்

சிலிக்கான் வேலி படிப்பை முடித்து ஆய்வகத்திற்கு வந்த திவ்யாவின் மனதில் ஏகப்பட்ட புதிய விஷயங்களுக்கான யோசனைகள் இருந்தது. அதில் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (Internet of Things, IoT) மற்றும் ப்ளூடூத் 4.0 (Bluetooth 4.0) என்ற தனது புது யோசனையை பற்றி விளக்கும் திவ்யா, "இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் மூலம் பல சாத்தியங்கள் உண்டு என்கிறார். சாதாரண விஷயங்களுக்கு மனிதனின் அவசியம் இல்லாமல், ஒரு இயந்திரம் தானாக செயல்பட்டு கொள்வதற்கு இது உதவும். தவிர, மருத்துவம், உற்பத்தி துறை, நகரங்களை நவீனமயமாக்கும் திட்டங்களில் உபயோகிக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தில், சக்தியை பெருமளவில் சேமிக்கமுடியும். உதாரணத்திற்கு, இயந்திரங்கள் எப்போது தொடங்க வேண்டும், எப்போது நிறுத்தப்பட வேண்டும் என்ற செயல்களை தானாக செய்துக்கொள்வதன் மூலம் மின்சாரம் அதிக அளவில் மிச்சப்படுத்தப்படும். ஏறக்குறைய இதே விஷயத்தை தான் கூகுள் நிறுவனத்தால், வாங்கப்பட்ட நெஸ்ட் (Nest) என்ற நிறுவனம் கண்டுபிடித்தது."

ப்ளூடூத் 4.0 கீழ் செயல்ப்படும் 'ப்ளுடூத் குறைந்த மின்சாரம்' (Bluetooth Low Energy) என்ற திட்டத்தில் இயந்திரங்களின் மூலம் தகவல் பரிமாறிக்கொள்ளும் போது மின்சாரத்தை சேமிக்கமுடியும். பெரிய பேட்டரிகளை தவிர்த்து சின்ன சின்ன செல்களை பொருத்துவதால், இது சாத்தியமாக்கப்படும் என்றும் விளக்குகிறார் திவ்யா. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் அதிக அளவில் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் திட்டத்திற்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் தொழில்நுட்பத்தை செலுத்தியது.

2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திவ்யா சிலிக்கான் வேலியில் தன்னுடைய ஆரம்ப நிறுவனத்தை தொடங்கினார். "இங்கிருக்கும் சுற்றுசூழல் சற்று வித்தியாசமானது மட்டுமல்லாமல், புதிய விஷயங்கள் மற்றும் திட்டங்களுக்கு அதிக ஆர்வமும் வரவேற்ப்பும் இங்கு கிடைக்கும். ஒரே வழியில் செய்யும் விஷயத்தை வேறு விதத்தில் செய்து பார்ப்பது இங்கு மிகவும் சாதாரணம். வித்தியாசமான திட்டத்திற்கு தேவையான உதவியும், வரவேற்பும் இங்கு அதிகம்." என்கிறார் திவ்யா தீர்க்கமாக.

மேலும், ஐஒடி (IoT) எனப்படும் தனது திட்டத்தை இரு வழியில் பயன்படுத்தமுடியும் என்றும் விளக்குகிறார் திவ்யா. இயந்திரங்களின் உள்பாகங்களில் இதை செலுத்துவது மற்றும் ஒரு தனி இயந்திரமாக வடிவமைப்பது என்று இரு வழிகளுண்டு. ஆரோக்கியம் மற்றும் சுகாதார துறையில் ஒன்று இயந்திரங்களில் தனி சென்சார் கருவிகளாக பொருத்தப்பட்டு தகவல்களை ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். அல்லது, ஒரு தனி நபருடைய உடல் வளத்தையும், ஆரோக்கியமும் எந்தளவில் உள்ளது என்பதை எடுத்து அதை மேற்பார்வை செய்யவும் உபயோகப்படுத்தலாம்.

"பித் இன்க்" (Pith Inc) என்று தனது நிறுவனத்திற்கு பெயரிட்ட திவ்யா, "இன்னும் இயந்திரத்தின் நுண் நெறிமுறைகளை (Critical Protocols) சரியாக வடிவமைத்து பொருத்தப்பட வேண்டும். நாங்கள் அதனுடைய ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறோம். தவிர, இணைய நெறிமுறையின் 6ம் நிலை (Internet Protocol Version 6) என்ற வடிவமைக்கப்பட்டிருக்கும் புது தளம் ஐஒடி திட்டத்திற்கு ஏதுவாக இருக்கும் என்கிறார் திவ்யா. அணைத்து இயந்திரங்களும் இணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால், ஒரு தனி அடையாளமும் தானாக உருவாக்கப்படும்." என்றும் விவரிக்கிறார் திவ்யா.

அதிகப்படியான ஆர்வமும் சிந்தனையும் திவ்யாவை புது முயற்சிகளுக்கு தன்னை ஈடுபடுத்திக்கொள்ள உத்வேகமாக இருப்பது நன்கு தெரிகிறது. சயின்ஸ் கதைகளை அதிகம் விரும்பி படித்து புது சிந்தனைகளை எடுத்துக்கொள்ளும் திவ்யாவிற்கு நிச்சயமாக பித் இன்க் முதல் படி என்றே சொல்லலாம்.