வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஏற்றுக் கொள்ளுங்கள்: ஷிவானி குப்தா

0

நாம் கனவு காணும் வாழ்வை ஷிவானி குப்தா வாழ்ந்துக் கொண்டிருந்தார். தனது வாழ்வின் இலட்சியங்கள் குறித்தும், அதை எட்டத் தேவையான உழைப்பு குறித்தும் மிகத் தெளிவான திட்டமிடலும், அறிவும் அந்த இளம் பெண்ணுக்கு இருந்தது. யாரையுமே சார்ந்திராத சுயமான வெற்றி ஷிவானி குப்தாவுடையது.

இந்தியா முழுவதும் பல ஊர்களில் படித்து, ஐ.ஹெச். எம் -ல் பட்டம் பெற்று, டில்லியின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருபதாயிரத்திற்கு மேல் சம்பளத்தோடு 'விருந்தினர் தொடர்பு அதிகாரியாக’ வேலைப் பார்த்துக் கொண்டு, தனியே வாழ்ந்திருந்த நாட்களில் வந்தது அந்த கொடூரமான இரவு! அதுவரை வாழ்க்கை இனிமையான கனவுகளோடுதான் நகர்ந்து கொண்டிருந்தது.

அன்று, ஷிவானி, தன் வீட்டில், நண்பர்களுக்கு ஒரு சிறிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அந்த இரவைப் போலவே நீண்ட விருந்து, முடிவுக்கு வந்து அவரவர் தம் வீடுகள் நோக்கி புறப்பட்டனர். தோழி ஒருவரை, அவரது ஹோட்டலில் இறக்கி விட ஷிவானியும் தயாரானார். அந்த கார் பயணம், ஷிவானியின் வாழ்க்கையையே புரட்டி போட்டது. அவர்கள் பெரும் விபத்து ஒன்றை சந்திக்க நேர்ந்தது. விபத்தின் விளைவாக, முதுகுத் தண்டில் பலத்த அடி. அதன் காரணமாக, கைகளிலும் கால்களிலும் செயல் திறனை இழந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 22 தான். அந்த விபத்து ஷிவானியை படுக்கையில் தள்ளி வீட்டோடு முடக்கியது. அந்த விபத்து உருவாக்கிய பாதிப்பில் இருந்து ஷிவானி எப்படி மீண்டார் என்பதுதான் உலகம் அறிந்து கொள்ள வேண்டிய கதை.

வாழ்வில் தான் பழைய நிலையை அடைவோமா என்பது அவருக்கு தெரியவில்லை. ஒரு சுழற்சி வாழ்வை மேற்கொள்ள தயாரானர் ஆனால் அது எப்படி இருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

“இந்த இயலாமை எதை குறித்தது என நான் அறியவில்லை, இதனுடன் எப்படி போராடுவது என்பதும் எனக்கு தெரியவில்லை. எதை எதிர்ப்பார்ப்பது என்றும் தெரியவில்லை. விபத்தால் உருவான இந்த இயலாமை என் கனவுகளில் ஒரு அங்கமாக இருக்கவில்லை. அதனால் அதுவே இறுதி கட்டமென நான் நினைக்கும் அளவுக்கு வந்துவிட்டேன். என் வாழ்க்கை இருண்டு போனதாக கருதினேன். இந்த உலகத்தை சந்திக்க முடியும் என நான் நினைக்கும் வரை அது ஒரு நீண்ட பயணமாகவே இருந்தது” என்கிறார் ஷிவானி.

வேலையை இழந்தார்

ஊனமுற்ற ஒருவரை எந்த நிறுவனம் வேலையில் வைத்திருக்கும் ?

“கார்ப்பரேட் கம்பெனிகள் ஊனமுற்றோரை வேலையில் அம்ர்த்த தயராக இல்லை. அங்கு ஒரு இடைவேளை இருந்ததனால் என்னை தொடர்ந்து பணியில் இருக்க வேண்டாம் என சொன்னார்கள். அதை எதிர்த்து போராட எனக்கு உரிமை இருந்ததா என்று கூட எனக்கு தெரியவில்லை. அதற்கு வேறு வழியில்லை என நான் அதை ஏற்றுக்கொண்டேன்”.

மறுபடியும் இந்த உலகில் தானும் ஒரு அங்கமாக எப்படி மாறுவது என அவர் கண்டுபிடித்தார், ஆனால் இம்முறை அது வேறு ஒரு பொழுதுபோக்கின் மூலமாக. “நான் ஒவியத்தை கையிலெடுத்தேன். எனது கைகள் செயலிழந்து இருந்தன, அதனால் எனது கைகளை அசைப்பது அதற்கு சிகிச்சை அளிப்பது போல இருந்தது. என் கையால் வரைந்த ஓவியங்களை நான் விற்கத் தொடங்கினேன். எங்கெல்லாம் கண்காட்சிகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் எனது ஓவியங்களோடு பங்கு பெறுவேன்” அதுதான் துவக்கமாக இருந்தது.

“மிகச்சிறந்த ஓவியர்களும், ஓவியங்களும் இங்கு இருக்கின்றன. ஆனால் நான் ஒரு சிறந்த ஓவியர் இல்லையென எனக்கு தெரிந்தது, அதனால் எப்பொழுதும் குழப்பத்திலேயே இருந்தேன். உண்மையிலேயே என் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என் ஒவியங்களுக்காக விலை கொடுத்து வாங்குகிறார்களா? அல்லது என் மீது என் ஊனத்தின் மீது கொண்ட பச்சாதாபத்தால் வாங்குகிறார்களா என்ற குழப்பம் எனக்குள் இருந்தது. ஒருவேளை அவர்கள் அதை வாங்க எனது ஊனம் தான் காரணமென்றால் என்னாலதை தாங்கிகொண்டிருக்கவே முடியாது, அதனால் அதற்கான விடையை கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே நான் வேறோரு முயற்சியில் ஈடுப்பட்டேன்” என்று தன் ஓவியச் சந்தை அனுபவத்தை பகிர்கிறார் ஷிவானி.

அப்போது ஷிவானிக்கு இங்கிலாந்தில் ஒரு மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பயிற்சியின் மூலமாகத் தான் தன்னுடைய உடல் நிலை எப்படி இருந்தாலும் தனக்கென சில உரிமைகள் இருக்கிறது என்பதை அறிந்தார்.

1996 ல் லண்டனில் இருந்து திரும்பி வந்த பிறகு, அந்தசெய்தியை உலகு முழுக்க அறிவிக்க விரும்பினார். நம்பிக்கையை அடைந்திருந்த கட்டம் அது. இந்திய முதுகுத் தண்டு சிகிச்சை மையம் அப்போது தான் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. காயங்களால் துவண்டு போயிருக்கும் ஒருவரை, சமாதானப் படுத்துவது அப்போது முற்றிலும் வேறுபட்ட கருத்தாக இருந்தது. ஷிவானி, அங்கு, கவுன்சிலராக பொறுப்பேற்றார். ஏறத்தாழ ஆறு வருடங்கள், தன்னைப் போல் இருந்த பிறருடன் கலந்து பேசி, அவர்களுக்குள் நம்பிக்கையை விதைத்தார். அது அவருக்கு புதிய அனுபவமாக இருந்தது.

“அப்போதைய, அத்தியாவசியத் தேவை விழிப்புணர்வு மட்டும் தான். யாருமே எங்களுக்கு நம்பிக்கை அளிக்க முன் வரவில்லை.” என்கிறார் .

இந்த முயற்சியை மேலும் தொடர, பாங்காக்கில் இருக்கும் யுனெஸ்கேப்-ன் (UNESCAP) தலைமை அலுவலகத்தில் ஒரு பயிற்சி நிகழ்விற்கு சென்றார். ‘ஊனப் படுத்தாத சூழலில் பயிற்சி’ என்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகவும் தலைப்பாகவும் இருந்தது. இதன் மூலமாக ஷிவானி, பிறரை போலவே இந்த உலகை எதிர்கொள்ள முன்வருவது அவருடைய உரிமை மட்டுமல்ல அரசின் பொறுப்பு என்பதை உணர்ந்தார். இந்தியா திரும்பிய உடனே அரசு சாரா அமைப்புகளுக்கும் அனைத்து மாநில தன்னார்வலர்களுக்கும் இதை நடைமுறை படுத்த ஐந்து பயிற்சி பட்டறைகளை நடத்தினார். தெளிவான திட்டம் அவரின் கையில் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த பல நாட்கள் எடுத்தது. அவர்களால் நேரடியான உதாரணங்களை பார்க்க முடியாதது அதை நடைமுறைப்படுத்துவதில் தடங்கலாக இருந்தது. இதனால் எதுவுமே எட்டக்கூடிய நிலையில் இல்லை. அதனால் எங்கள் பங்கேற்பாளர்களால் அதில் ஒன்றிப் போக முடியவில்லை. நிறைய பயிற்சிகளும், கூடுதலான ஒத்துழைப்பும் தேவைப்பட்டது. இது பற்றி எழுதப்பட்ட நூலில் உதவி எழுத்தாளராக இருந்தார் ஷிவானி, ஆனால் அதைபற்றிய அறிவும் தனக்கு குறைவாகவே இருப்பதாக உணர்ந்தார்.

“எனக்கு மேலும் படிக்க வேண்டும் என்று தோன்றியது அதனால் நான் லண்டனில் உள்ள எடெக்‌ஷெல் என்ற கல்வி நிறுவனத்தில் ‘மாஸ்டர் ஆப்ஃ ஆர்க்கிடெக்சர் டிசைன்’ படித்தேன் மற்றும் ரீடிங்க்ஸ் பல்கலையில் இன்க்லுசீவ் என்விரான்மெண்ட்டை (inclusive environment)பற்றி படித்தேன். அந்தக் கல்வியும் சில ஆய்வுகளும் துணை புரிய நிறைய பதில்களுடன் இந்த இயலாமையை பற்றி ஒரு தெளிவான பார்வையை மட்டும் அல்லாமல் ஒரு நிறுவனத்திற்கு ஆராய்ச்சிகளோடு நிபுணத்துவமான ஆலோசனைகளும் வழங்க முடிந்தது.

‘ஆக்ஸஸ் எபிலிட்டி’ (AccessAbility)

2006-ல் ‘ஆக்ஸஸ் எபிலிட்டி(access ability) என்கிற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். “உடல் ஊனமுற்றவர்கள் வசதி வாய்ப்புகளை அணுகும் வேலைகளை உருவாக்குவது தொடர்பாக திவீரமாக பல துறைகளில் பணி புரிந்தோம். தனியார் துறை, சில்லரை வணிகம், கல்வி நிலையங்கள் என ஊனமுற்றோருக்கான வேலை வாய்ப்புகளைத் தேடும் தளங்களையும், கட்டமைப்பையும் பயிற்சிகளையும் ஊனமுற்றோருக்கு வசதியாக மாற்றுவதற்கு முழு திட்டத்தையும் வகுத்து கொடுத்தோம்.

ஜெனீவாவிலிருக்கும் மனித உரிமைகளின் உயர் ஆணையர் உடனான தொடர்பின் காரணமாக ஷிவானியின் அமைப்பு சர்வதேச அளவில் அறியப்பட்டது. எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்த உலகில் தனக்கான இடத்தை மீண்டும் கண்டுபிடித்தார்.

ஆனால் துயரம் இத்தோடு முடிந்து விட்டது என நினைத்துக் கொண்டிருந்த போது வந்தது அந்த பேரிடி. 2009 -ல் ஒரு விபத்தில் தனது கணவரை இழந்தார். அவருடைய மாமனாரும் பாதிக்கபட்டார். சவால்களில் இருந்து மீண்டெழுந்த பெண்ணுக்கு அந்த துயரம் மிகப்பெரிய பேரிடிதான். நிலைகுலைந்து போனாலும் இம்முறை தானே தன்னை தேற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அவர் இவ்வுலகில் உயிர்த்திருந்து சாதிக்க வேண்டிய விஷயங்கள் பல இருந்ததனால்தான் அந்த விபத்தில் இருந்தும், கணவரின் இழப்பில் இருந்தும் மீண்டு வர முடிந்தது. இந்த முறை தனது வாழ்க்கைக் கதையை 'நோ லுக்கிங் பேக்’ (no looking back) எனும் தனது சுயசரிதை மூலமாக தேற்றிக்கொண்டார்.

“என்னை பற்றி எழுத வேண்டிய பல விஷயங்கள், கேள்விகளுக்கான விடைகள் என் கதையிலேயெ இருந்தது என்றெனக்கு உணர்த்தியது. என்னால் கட்டுபடுத்த முடியாத சூழலுடன் நான் சமாதானமாகப் போக கற்றுக்கொண்டேன்.”

விருதுகள்

தன்னுடைய உறுதியான, அசைக்கமுடியாத முயற்சிகள் நாட்டிற்கு பலம் சேர்த்ததன் காரணமாக பல விருதுகளாலும் அங்கீகாரங்களாலும் அலங்கரிக்கபட்டார் ஷிவானி. ஊனமுற்றோரின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தியதற்காக என்.சி.இ.பி.ஆர்.டி-இன் (NCEPRD)ஷெல் ஹெலென் கெல்லெர் விருதும், சிறந்த வழிகாட்டியாக இருந்ததற்காக ‘தி கவின் கேர் எபிலிட்டி மாஸ்ட்டெரி’ விருதும், ஊனமுற்ற மாணவர்களுக்கான ‘ஸ்நோடன்’ விருதும், சமூக அநீதியை துணிவோடு எதிர்கொள்ளும் பெண்களுக்கு வழங்கப்படும் ‘ நீர்ஜா பானட்’ விருதும் வென்றார்.

இவைமட்டுமின்றி நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகம் சார்பாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடமிருந்து தேசிய விருதும் பெற்றார். இந்த விருதுகள் பற்றி ஷிவானி கூறுகையில்,‘’ இந்த விருதுகளில் எனக்கு சிறப்பாக இருந்தது நீர்ஜா பானட் விருது தான். என் நிலையை அறிந்த குழுவினர், நானே மேடைக்கு செல்வதற்கு வசதியாய் படிக்கட்டுகள் மீது சில ஏற்பாடுகள் செய்திருந்தனர். எனக்கு அது பெரிய விஷயமாக இருந்தது. அவர்களுடைய எண்ணம் தான் முக்கியமானது” என்கிறார் ஷிவானி.

ஆனால், இவ்வளவு முதிர்ச்சி மற்றும் புரிதலுடன் நடந்துக் கொள்பவர்களை ஷிவானி தினமும் சந்திப்பது இல்லை.

இருபத்தைந்து பைசா

"இந்திய சமுதாயத்தில், ஊனம் மிக சுலபமாக பரிதாபத்தையும் கருணையையும் கொண்டு வந்து விடும். நான் கோவிலுக்கு வெளியே, வீல் சேரில் உட்கார்ந்திருந்த ஒரே காரணத்தினால் நான் பிச்சை தான் எடுக்கிறேன் என நினைத்து எனக்கு ஒரு பெண் இருபத்தைந்து பைசா கொடுத்தார். இப்படி களங்கப்படுத்துவது, நம் மனதில் காயங்களை உருவாக்கி விடுகிறது. இயலாமை எங்கள் வாழ்வின் அம்சங்களுள் ஒன்று என யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஒருவேளை நீங்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டி இருந்து அந்த மொழி உங்களுக்கு தெரியாமல் இருந்தால் நீங்களும் ஒரு விதத்தில் ஊனமாகி விடுகிறீர்கள். அதனால் நீங்கள் தேவையற்றவராகி விடமாட்டீர்கள். அதைப் போலவே எங்களிடமும் பல திறமைகள் உள்ளன” என்று நம்பிக்கையை விதைக்கிறார் ஷிவானி.

தன்னுடைய நம்பிக்கையிலும், துணிச்சலாலும், அசைக்கமுடியாத பற்றினாலும், பாதை தெரியாத பலருக்கு வழிகாட்டுதலாக இருக்கிறார். “பொறுமையாய் இருங்கள், வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஏற்றுக் கொள்ளுங்கள், எப்போதுமே நன்றியுடையவர்களாக இருங்கள்” என்று நிறைவு செய்கிறார்.