ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியாதவர்களுக்கு பிராந்திய மொழியில் உதவிடும் தளம்!

0

2017-ம் ஆண்டு நிறுவனர்களான அப்ரமேயா ராதாகிருஷ்ணன் மற்றும் மயான்க் பிடாவட்கா ஆகியோர் இணைந்து 'வோக்கல்' (Vokal) என்கிற ஸ்டார்ட் அப்பை நிறுவினர். இந்திய மொழி உள்ளடக்கப் பிரிவில் செயல்படும் இந்த ஸ்டார்ட் அப் அறிவிக்கப்படாத நிதித்தொகையை உயர்த்தியுள்ளது.

அப்ரமேயா ராதகிருஷ்ணனனும் இணை நிறுவனரான ரகுநந்தனும் ’டேக்ஸிஃபார்ஷ்யூர்’ நிறுவனத்தை 2015-ம் ஆண்டு இவர்களது போட்டியாளர்களான ஓலா நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் இருந்து, “நீங்கள் விரைவில் ஸ்டார்ட் அப் துவங்க திட்டமிட்டுள்ளீர்களா?” என்கிற கேள்வியைத் தொடர்ந்து அப்ரமேயாவிடம் பலர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்ரமேயா ’இப்போது இல்லை’ என்றே தொடர்ந்து அனைவரிடமும் பதிலளித்து வந்தாலும் இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் இருந்து நீங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அவர் பல்வேறு ஸ்டார்ட் அப்களுக்கு ஏஞ்சல் முதலீட்டாளராகவும் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக 12 ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளார். இவற்றில் சில நிறுவனங்களில் முதலீடு குறித்து அறிவித்துள்ளார். சிலவற்றை அறிவிக்கவில்லை. இவர் முதலீடு செய்யும் தொகை 10 லட்ச ரூபாய் முதல் 40 லட்ச ரூபாய் வரை ஆகும். 

வணிக செயல்பாடுகளை நேரடி விற்பனைக் கடைகளில் இருந்து ஆன்லைனில் மாற்ற உதவும் ’குட்பாக்ஸ்’ என்கிற ஹைப்பர்லோக்கல் செயலி, ஆன்லைன் பயிற்சிகள் வழங்கும் ’அன்அகாடமி’ (Unacademy), தேவைக்கேற்ப அழகு சேவை வழங்கும் Vyomo, அன்றாட தேவைகளுக்கான ஆன்லைன் தளமான ’டெய்லி நின்ஜா’ (Daily Ninja), ஆன்லைன் ஆலோசனை வழங்கும் ஸ்டார்ட் அப்பான YourDost ஆகிய நிறுவனங்களுக்கு முதலீடு செய்கிறார்.

மீண்டும் ஸ்டார்ட் அப்

அப்ரமேயா உடனே ஸ்டார்ட் அப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்காத ஸ்டார்ட் அப் சுற்றுசூழலுக்கு அவர் முகநூல் வாயிலாக இரண்டாவது தொழில்முனைவு முயற்சி குறித்து அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரது அடுத்த முயற்சி ’வோக்கல்’ என்கிற தளம். இது ஆங்கிலத்தில் சரளமாக உரையாடத் தெரியாத பயனர்களுக்காக இந்திய மொழியில் கேள்வி பதில் வடிவில் இயங்கும் தளமாகும்.

பெங்களூருவின் இந்திராநகரில் உள்ள ஒரு கஃபேவில் அமர்ந்து இந்தப் பகுதியில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பிய காரணத்தையும் வோக்கலின் செயல்பாடுகளையும் விவரித்தார். ஆனால் அதற்கு முன்பு இரண்டாவது முறையாக செயல்படத் துவங்குவது எளிதாக இருக்குமா என தெரிந்துகொள்ள விரும்பினேன். ’நிச்சயமாக’ என்றார் அப்ரமேயா.

உங்களது முந்தையை செயல்பாடுகள் குறித்து மக்கள் அறிந்திருப்பார்கள் என்பதால் ஊழியர்களை பணியிலமர்த்துவதும் நிதி உயர்த்துவதும் எளிதாகவே இருக்கும். என்றும் அத்துடன் தவறுகளும் வேறுபட்டதாக இருக்கும் என்றார்.

”புதிய தவறுகள் இருக்கும். ஸ்டார்ட் அப் என்பது நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. உங்களது திட்டம் உருவான நேரம், பணியிலமர்த்த கண்டறியும் நபர்கள், மக்கள் திட்டத்தை விரும்புவார்களா போன்றவை உங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும். நீங்கள் அவை அனைத்தையும் ஒன்றிணைத்து பார்க்கவேண்டும். புதிய தவறுகள் ஏற்படலாம். அந்தத் தவறுகளை இழைக்க நான் தயாராக இருக்கிறேன்.”

அடுத்த பில்லியனில் கவனம் செலுத்துதல்

நாட்டில் பொருளாதார ஏற்றதாழ்வு காணப்படுவதற்கு முக்கியக் காரணமே அறிவில் ஏற்றத்தாழ்வு இருப்பதுதான் என்கிறார் அப்ரமேயா. அவர் கூறுகையில்,

”இன்று நமக்கு எழும் சந்தேகங்களுக்கோ கேள்விகளுக்கோ விடை காண்பது கடினமான விஷயம் இல்லை. நம்மிடம் இருக்கும் ஃபோனை எடுத்து ஆன்லைனில் விடை கண்டறியலாம். ஆனால் நிதானமாக ஆழ்ந்து நாம் சிந்தித்துப் பார்த்தோமானால் இந்திய மக்கள்தொகையில் ஆங்கில மொழியை நன்கறிந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் மட்டுமே இதைச் செய்யமுடியும் என்பதை உணரலாம். அப்படியானால் ஆங்கில மொழி சரளமாக அறியாத ஆனால் சொந்த மொழியை நன்கறிந்த நபர்களின் நிலை என்ன? அந்த நபர்களை மனதில் கொண்டே ’Vokal' உருவாக்கப்பட்டுள்ளது.”

வோக்கல் பயனர்களே உருவாக்குகின்ற உள்ளடக்கங்களைக் கொண்ட தளம். இதில் ஒருவர் அடுத்தவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம் பேசத் தெரியாத பெரும்பாலானோர் தங்களது நண்பர்களையோ குடும்பத்தினரையோ சார்ந்துள்ளனர். அல்லது ஒரு சில உள்ளடக்க தளங்களைச் சார்ந்துள்ளனர். மக்களுக்கு சேவையளிக்கக்கூடிய உயர்தர உள்ளடக்கங்கள் இந்திய மொழிகளில் அதிகம் இல்லை என அப்ரமேயா நம்புகிறார்.

உதாரணத்திற்கு மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். இதற்கான பாடத்தொகுப்புகள் உள்ளூர் மொழிகளில் கிடைக்கிறது. தேர்வு எழுதுபவர்கள் இந்திய மொழிகளிலும் விடையளிக்கலாம். இருப்பினும் பலர் ஆரம்ப நிலையில் திணறுகிறார்கள் – எங்கே படிக்கத் துவங்குவது? தேர்வில் எவ்வாறு தேர்ச்சி பெறுவது? எவ்வாறு படிப்பதற்கான அட்டவணையை அமைப்பது? இது போன்ற கேள்விகள் எழும்.

இணையத்தில் மாறுபட்டு நடந்துகொள்கின்றனர்

”ஆங்கிலம் பேசத் தெரியாத இந்தியர்கள் ஆங்கில பேசும் இந்தியர்களைக் காட்டிலும் இணையத்தில் மாறுபட்ட விதத்தில் நடந்துகொள்கின்றனர். நாம் ஒருவரை தொடர்பு கொள்ள வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறோம். ஆங்கிலம் பேசத் தெரியாத இந்தியருக்கு தொடர்பு கொள்வதென்றால் மொபைலில் அழைக்கவேண்டும் என்றும் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்றால் வாட்ஸ் அப்பை பயன்படுத்தவேண்டும் என்றும் நினைக்கின்றனர். 

“வாட்ஸ் அப் தொடர்புகொள்வதற்கு அல்ல என நினைத்து அவர்கள் அதன் மூலம் உரையாடுவதில்லை. பலருக்கு முகநூல் கணக்கு இருந்தாலும் அதில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை,” என்றார் அப்ரமேயா.

ஒவ்வொருவருக்கும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற அடிப்படைத் தேவை இருக்கும். ஆனால் ஆங்கிலம் சார்ந்த ப்ராடக்டுகள் அந்தத் தேவைக்கு தீர்வளிப்பதில்லை.

தற்போது இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்சம் வேறு இரண்டு மொழிகளாவது தெரிந்திருக்கும். ஆனால் நாம் அனைவரும் உள்ளடக்கத்தை ஆங்கிலத்தில் உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறோம். நான் என்னுடைய டேக்ஸிஃபார்ஷ்யூர் கதையை கன்னட மொழியில் கூறியதில்லை. அந்த மொழியில் அதைக் கேட்கும் மக்கள் இருக்கிறார்களா? ஆம். ஆனால் அதை நான் தெரிவிப்பதற்கான தளம் இல்லை. வோக்கல் அத்தகைய தளமாக செயல்பட விரும்புகிறது.

ஓராண்டிற்கு மேலாக வோக்கலில் பணிபுரிந்து வரும் அப்ரமேயா இந்தத் திட்டம் குறித்து வோக்கலின் இணை நிறுவனரான மயான்க் பிடாவட்காவிடம் தொடர்ந்து பேசி வந்தார்.

மயான்க் ரெட்பஸ் நிறுவனத்தில் முக்கியக் குழு உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு வெவ்வேறு ஸ்டார்ட் அப்களில் ஆலோசகராக இருந்தார். அப்ரமேயாவுடன் இணைவதற்கு முன்பு ’மீடியண்ட்’ மற்றும் ‘குட்பாக்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தார். வோக்கல் நிறுவனத்தில் இணை நிறுவனராக இணைந்தது குறித்து மயான்க் விவரிக்கையில்,

”வோக்கல் நிறுவனம் அதன் தற்போதைய வடிவில் சில மாதங்களாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் அது மிகவும் சுவாரஸ்யமான பிரிவு என்றும் இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பிரிவு என்றும் நினைக்கிறேன். இதில் யாரும் அதிகம் செயல்படவில்லை. அதிக வாய்ப்புகளும் உள்ளன. இதில் தரமான உள்ளடக்கத்தை உருவாக்கவும் இல்லை அதிகம் ஆராயவும் இல்லை.”

கேள்வி-பதில் வடிவம்

மக்கள் பேசவும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் விரும்புகிறார்கள் என்றாலும் வெகு சிலரே உள்ளடக்கத்தை உருவாக்குகின்றனர். அப்ரமேயா மற்றும் மயான்க் இருவரும் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான தேவை இருப்பதை உணர்ந்தனர். இதற்கு கேள்வி பதில் வடிவமே சிறப்பாக இருக்கும் என நினைத்தனர்.

தனிநபர்கள் வோக்கல் தளத்தில் அவர்களுக்குத் தேவையான கேள்விகளைக் கேட்கலாம். மற்ற பயனர்களால் அதற்கு விடையளிக்கப்படும். ’குரல்வழி பதிவு’, ’எழுத்து வடிவம்’ ஆகிய தேர்வுகள் இந்த செயலியில் உள்ளது. எழுத்து வடிவ தேர்விற்காக ’கூகுள் வாய்ஸ்’ வசதியும் உள்ளது. பெயர் வெளியிடாமலும் விடையளிக்கலாம்.

”ஒருவர் தனது சுயவிவரத்தை வெளியிட விரும்பினால் அன்றி யார் கேள்வியைக் கேட்டார்கள் என்பது பெரும்பாலும் வெளியிடப்படாது,” என்றார் அப்ரமேயா. விடை பெற விரும்புபவர் குரல் வழி பதிவாகக்கூட கேள்விகளை கேட்கலாம். பயனர் உருவாக்கும் விடைகள் இந்தத் தளத்தில் காணப்படும். ஒரு நபர் கூகுளில் கேள்வி கேட்க விரும்பினாலும் அதில் பட்டியலிடப்படும் வெவ்வேறு தேடல் பக்கங்களில் வோக்கல் தளம் இடம்பெற்றிருக்கும்.

”ஆங்கிலம் பேசுபவர்கள் எழுத்து வடிவத்திற்கு பழக்கப்பட்டவர்கள். ஆனால் ஆங்கிலம் பேசாதவர்கள் இதற்குப் பழக்கபட்டதில்லை. அவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்வதும் ஆடியோ வாயிலாக தகவல்களை அனுப்புவதும் சிறந்தது. எனவே ப்ராடக்ட் இதை வழங்கவேண்டியது முக்கியம். குரல்வழியாக மற்றும் ஆடியோ வாயிலாக அறிவை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதே திட்டம்,” என்றார் மயான்க்.

முதல் நாளில் துவங்கி வளர்ச்சி

நிறுவனர்கள் இரண்டாம் முறை மற்றும் மூன்றாம் முறையாக தொழில்முனைவில் ஈடுபடுபவர்களாக இருப்பதால் இவர்களது பயணம் எளிதாக இருந்திருக்கவேண்டும். ஆனால் மயான்க் இதற்கு எதிர்மறையாக குறிப்பிட்டார். எந்த ஒரு தொழில்முனைவுப் பயணம் போலவே எதுவும் தெரியாது என்கிற அனுமானத்துடனேயே துவங்கவேண்டும் என்கிறார். அடுத்த பில்லியனுக்கான இந்தச் சந்தைக்காக வணிகத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி மக்களிடம் கேட்டறிவதுதான் என்று நம்புகிறார் மயான்க்.

”வணிகத்தை உருவாக்குகையில் ஒழுக்கத்தை இணைக்கவேண்டும். விரைவாக வளர்ச்சியடையவேண்டும். சரியான குழுவை தேர்ந்தெடுக்கவேண்டும். முதல் தொழில்முனைவு முயற்சியில் நாங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்திய மாணவர்களாக இருந்தோம். ஆனால் இப்போது வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பயிற்சியாளர்களாக இருக்கிறோம். முதல் நாளில் இருந்தே நாங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம்,” என்றார் மயான்க்.

தற்போது கூகுள் ஒவ்வொரு ஆண்டும் ஹிந்தியில் 10 பில்லியனுக்கும் அதிகமான குரல் சார்ந்த தேடல்களைப் பதிவுசெய்கிறது. கூகுள் தேடலின் 25 சதவீதம் குரல்வழி பதிவாகவே உள்ளது.

வோக்கல் தற்போது உத்திரப்பிரதேசம், பீஹார், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பயனர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இக்குழுவினர் தற்போது ப்ளேபுக்கை ஹிந்தியில் வடிவமைத்து வருகின்றனர். பின்னர் இது மற்ற மொழிகளிலும் பின்பற்றப்படும்.

வாடிக்கையாளர் தேவையறிந்து செயல்படுதல்

ஆங்கிலத்தில் தேடல் பொறியை சிறப்பாகப் பயன்படுத்துவதைக் காட்டிலும் ஹிந்தியில் தேடல் பொறியைப் பயன்படுத்துவது மாறுபட்டதாகும். குரல்வழிப் பதிவிலிருந்து எழுத்து வடிவமாக மாறுவது துல்லியமாக இருக்காது. “ஹிங்கிலீஷ்க்கு (Hinglish) மாறினாலோ அல்லது மிகவும் விரைவாக பேசினாலோ டைப் செய்வது துல்லியமாக இருக்காது. எனவே அதற்கே உரிய சவால்களும் இருக்கத்தான் செய்கிறது,” என்றார் அப்ரமேயா.

வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வதே மிகப்பெரிய சவாலாகும். அவர்களின் பிரச்சனையை புரிந்துகொண்டு தீர்வளிப்பதற்கான தேவை உள்ளது. 

”நாங்கள் இன்னமும் கற்றுக்கொண்டும் புரிந்துகொண்டும் இருக்கிறோம்,” என்றார்.

வோக்கல் தளத்தில் ஒருவர் கேள்விகளைக் கேட்க மட்டுமே சைன்-அப் செய்யலாம். ஆனால் ’இன்வைட்’ செய்யப்பட்டால் மட்டுமே விடையளிக்க முடியும். அல்லது அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். உள்ளடக்கத்தின் தரம் சிறப்பாக இருப்பதை உறுதிசெய்வதற்காக அந்த விடைகளுக்கு முதலில் ஒப்புதல் அளிக்கப்படும். குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டாண்டுகளுக்காவது பதிலளிப்போர் சமூகத்தை வெளியிடாமல் வைத்துக்கொள்ள இக்குழுவினர் விரும்புகின்றனர்.

குறைவான இணைய இணைப்பு அல்லது குறைவான மொபைல் ஸ்பேஸ் இருக்கும் சூழல்களிலும் செயல்படும் விதத்தில் வோக்கல் தளத்தை உருவாக்கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் PWA (progressive web app) பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நிறுவனர்களைத் தவிர மொத்த குழுவில் 30 பேர் உள்ளனர். இதில் பாதி ஊழியர்கள் பொறியியல் பணியிலும் மீதம் இருப்பவர்கள் உள்ளடக்கப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய் அதிகரிக்கச்செய்ய பயனர்களிடம் கட்டணம் வசூலித்து ’லைவ் செஷன்கள்’ உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகின்றனர். “உங்களது நிபுணத்துவத்துடன் லைவ்வாக செயல்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பின்பற்றுவோரைக் கொண்ட குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதைப் பார்க்க நீங்கள் மிகவும் குறைந்த கட்டணமாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை செலுத்தவேண்டியிருக்கும்,” என்றார் அப்ரமேயா.

ஒரு சமூகத்திடம் கேள்வியெழுப்புவது இலவசம் என்றபோதும் ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து பதிலைப் பெறுவதற்கு ஒரு கேள்விக்கு 5 ரூபாய் என்கிற கட்டணம் வசூலிக்கப்படும். ஆக்சல் பார்ட்னர்ஸ் மற்றும் ப்ளூம் வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வோக்கல் நிதி உயர்த்தியுள்ளது.

ஒரு வேறுபட்ட சந்தையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து அப்ரமேயா விவரிக்கையில்,

நாங்கள் டாக்ஸி துரையில் செயல்படும்போது கற்றதை ரசித்தேன். அதை விடப் பெரிய விஷயம் என்னவென்றால் அடுத்த பில்லியனுக்காக உருவாக்குவதுதான். போக்குவரத்து ஒரு வேறுபட்ட துறையாகும். அதன் செயல்பாடுகள் கடினமாக இருக்கும். தற்போது செயல்படும் பிரிவில் ப்ராடக்ட் மற்றும் தொழில்நுட்பத்தைத் தாண்டி தாக்கம் மிகப்பெரியது என்று தோன்றுகிறது. மொழி வாயிலாக மக்கள் அவர்களுக்குத் தெரிந்ததை வந்து பகிர்ந்துகொள்ள உந்துதலளிப்பதில் மிகப்பெரிய தாக்கம் உள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா