ஒற்றையாளாய் வறுமையை ஒழிக்க முயலும் ஐ.ஐ.டி மாணவர்!

0
சிறு வயதில் எங்களை அப்பா அடிக்கடி வெளியே சாப்பிட அழைத்துச் செல்வார். அப்படி போகும் வழியில் வறுமையினால் ஒருவேளை சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிறைய சிறுவர்கள் கொல்கத்தா தெருக்களில் தென்படுவார்கள். அவர்களுக்கு உணவோ பணமோ கொடுத்து உதவ முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அதுதான் என்னை இந்த Assist The Needy (ATN) அமைப்பை தொடங்கத் தூண்டியது.

சுபஜித் மண்டல், ஐ.ஐ.டி காரக்பூரின் 2007 பேட்ச்சை சேர்ந்த திறமை வாய்ந்த மாணவன். பின் 2014-ல் சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார். 2015-ல் லூமன்லேப் நிறுவனத்தில் இன்டெர்னாக இணைந்தார். ஆகஸ்ட் 2015-ல் அங்கேயே முழு நேரமும் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

குழந்தை பருவத்திலிருந்தே வறுமையில் உழல்பவர்களுக்கு உதவ ஏதேனும் அமைப்பை உருவாக்க வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தார் சுபஜித்.

தூண்டுகோல்கள்

பிற நிறுவனங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது லூமன்லேப். அங்கே வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப புதிது புதிதாய் ஏதேனும் ஒன்றை கண்டுபிடித்துக் கொண்டே இருந்தார்கள். எல்லா வித கோட்பாடுகளையும் உடைத்தெறிந்து புதிய கோட்பாடுகளை உருவாக்கினார்கள். மக்களின் அன்றாட வாழ்க்கையை கூர்ந்து நோக்கி அதன் வழியே புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். அவர்கள் வேலை பார்த்து வந்த தீம்களில் 'பணம்' என்பதும் ஒன்று.

அங்கே இன்னொரு சுதந்திரமும் இருந்தது. ஏதேனும் பிரச்னை வந்தால் ஊழியர்கள் யார் வேண்டுமானாலும் அதற்கு முடிவு சொல்லலாம். இன்னொரு சுவாரசியமான தகவலையும் சொல்கிறார் சுபஜித். 'எங்கள் ரிசோர்ஸ்களை வைத்து புதிதாய் நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதைக் காட்டிதான் வெளியில் இருந்து நிதி உதவிகள் வாங்கினோம்.

பழைய நண்பரும் உஜ்ஜிவன் நிறுவனத்தின் சி.ஒ.ஒவான ரஜத் சிங்கோடு சுபஜித் மேற்கொண்ட உரையாடல்தான் அவர் வாழ்க்கையையே மாற்றியது. உஜ்ஜிவன் என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சிறு கடன்கள் அளிக்கும் ஒரு அமைப்பு. 'உதவி தேவைப்படுபவர்கள் பற்றிய விவரங்களைத் தாங்கி ஒரு இணையதளம் இருந்தால் உதவியாய் இருக்குமே' எனக் கேட்டார் சுபஜித். ரஜத்தும் உடனே ஆமோதித்தார்.

தேவைப்படுவோருக்கு உதவு

தன்னுடைய குழுவோடு நிறைய ஆலோசனைகள் நடத்தி ஏ.டி.என்னை தொடங்கினார் சுபஜித். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கம். உதவி தேவைப்படுபவர்கள் பற்றிய விவரங்கள் அறிந்த, இணையம் பயன்டுத்தும் நடுத்தர குடும்பத்து ஆட்கள்தான் இவர்களின் குறி. ஏ.டி.என் யாருக்கும் கடன் தருவதில்லை. ஆனால் உதவி தேவைப்படுபவர்களை இணைக்கிறது. குறைகளுடைய இன்றைய வங்கி செயல்முறைகளுக்கான மாற்றாக இருக்கிறது.

இந்த அமைப்பின் வழிமுறை மிகவும் எளிமையானது. நீங்கள் ஒருவருக்கு உதவ விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஏ.டி.என் இணையதளத்திற்கு சென்று ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உதவி தேவைப்படுபவரின் விவரங்களை அளிப்பது மட்டும்தான். இது உஜ்ஜிவனின் கவனத்திற்கு செல்ல அவர்கள் மிச்சத்தை பார்த்துக்கொள்வார்கள். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உங்களுக்கு ஒரு நிமிடம் போதும். நீங்கள் பணம் தரத் தேவையில்லை. ஜவாப்தாரி ஆகவேண்டியதும் இல்லை.

செயல்முறையை விளக்கும் வீடியோவை பாருங்கள்:

வங்கிகள் கண்டுகொள்ளாத கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகள் அவ்வளவவு எளிதாய் கிடைப்பதில்லை. 'மெட்லைப் பவுண்டேஷன் இதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 200 மில்லியன் டாலர்கள் வரை ஒதுக்கியிருக்கிறது' என்கிறார் சுபஜித்.

தடைகளை தகர்த்தெறி

தொடக்கத்தில் நினைத்தது எல்லாம் நடந்துவிடவில்லை. தெளிவான திட்டம், தேவையான நிதி உதவி என எல்லாம் இருந்தும் முதல் முறை சுபஜித்தின் பாஸ் இந்த ஐடியாவை நிராகரித்து விட்டார். ஆனால் தளராத சுபஜித் உடனே ஏ.டி.என்னை தொடங்கினார். பின் அவரது பாஸிடம் சென்று பேசினார்.

சில வாரங்களிலேயே ஏ.டி.என்னின் ஃபேஸ்புக் பக்கம் 4,400+ லைக்ஸ்களை வாங்கியது. 6,000 பேருக்கும் மேல் இவர்களின் வீடியோவை பார்த்திருக்கிறார்கள். ஆறு கடன் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இதை எல்லாம் பார்த்த சுபஜித்தின் முதலாளி ஜியா ஜமன் ஒத்துழைப்பு அளிக்க ஒப்புக்கொண்டார். 'குறுகிய காலத்தில் இத்தகைய வரவேற்பு பெறுவதென்றால் நிச்சயம் அது தரமான சேவையாகத் தானே இருக்கமுடியும்' என்கிறார் ஜியா.

இங்கே உதவ விருப்பமுள்ளவர்கள் நிறையவே இருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அதை தெரிந்துகொள்ள முயற்சிப்பதுதானே ஒரே வழி' என்கிறார் ஜியா.

இந்த முயற்சிக்கு வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுவது குதிரைக்கொம்பாகத்தான் இருக்கிறது. தெளிவான தரவுகள் அதற்குத் தேவையாய் இருக்கின்றன.

சவால்களும் எதிர்கால திட்டங்களும்:

தங்களுக்குப் பொருத்தமான வருமான வழிமுறை எது என இன்னும் முடிவாகவில்லை என்கிறார் சுபஜித். இதுகுறித்து நிறைய திட்டங்கள் இருந்தாலும் எது சரியாக இருக்கும் என்ற தீர்மானத்திற்கு அவர்களால் இன்னும் வரமுடியவில்லை. 'இதைக் கண்டறிவதுதான் சுயதொழிலில் இருக்கும் மிகச் சிரமமான விஷயம். 'ஒரு பாசிட்டிவான பெரிய அளவிலான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதுதான் எங்களின் நோக்கம்' என்கிறார் சுபஜித்.

கன்வெர்ஷன்தான் இப்போது இவர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். இதைச் சமாளிக்க ஃபேஸ்புக்கில் இருக்கும் வாடிக்கையாளர்களை குறி வைத்து இருக்கிறார்கள். அதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறார்கள்.

இவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. பிற க்ரவுட்பண்டிங் நிறுவனங்கள் எல்லாம் வளர்ந்து வரும்போது, நிச்சயம் இவர்கள் வளர்வதற்கான வெளியும் இருக்கிறது. 'ஒரு மில்லியன் மக்களுக்காவது உதவிட வேண்டும் என்பது என் சின்ன வயது கனவு. அதை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன்' என்கிறார் சுபஜித்.

இணையதள முகவரி

ஆக்கம் : ஸ்னிக்தா சின்ஹா | தமிழில் : சமரன் சேரமான்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

காலத்தால் அழியா உதவி 'கல்வி உதவி'

பள்ளி கல்விக்கான கடனுதவி வழங்கும் சென்னை 'ஷிக்க்ஷா' நிறுவனம்!