மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை- பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது!

0

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் முடங்கி போய் இருந்தாலும், நேற்று மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட திருத்த மசோதா’ வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்பதே அந்த சட்ட திருத்த மசோதா குறிப்பிடுகிறது.   

லோக் சபா, சிறிய விவாதத்திற்கு பின் இரண்டு மணி நேரத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. குளிர்கால தொடரின் கடைசி தினமான நேற்று இது நிறைவேற்றப்பட்டது, மாற்றுத்திறனாளிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட திருத்த மசோதா சபையில் நிறைவேறிய போது பிரதமர் நரேந்திர மோடியும் இருந்தார். ராஜ்ய சபையில், இந்த மசோதா மீதான விவாதம் புதன்கிழமை எழுந்தது. The Rights of Persons with Disabilities Bill, 2016 என்று குறிப்பிடப்படும் இந்த மசோதா குறித்து பதில் அளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலோட், 

“மாற்றுத்திறனாளிகளுக்காக உலகளாவிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது, ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படும். இந்த அட்டையை நாடு முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியும். புதிய மசோதாவில் பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருந்த 82–ல் 59–ஐ மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் வகையினம் 7 இல் இருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

இந்த அடையாள அட்டை மூலம் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளை உடனடியாக அனுகி அதற்கான தீர்வை வழங்க சுலபமாக இருக்கும் என்றார் கெலோட். மேலும் ஜெர்மன் மற்றும் பிரிடிஷ் நிறுவனங்களுடன் கைக்கோர்த்து, அதிநவீன செயற்கை மூட்டுகளை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் நிறைவேறியது பற்றி கருத்து தெரிவித்த மாற்றுத்திறனாளியும், பன்முகத்தன்மை மற்றும் உள் அடக்குதல் நற்செய்தியாளர் மதுமிதா வெங்கட்ராமன்,

“சரியான திசையில் பயணிப்பதற்கான முதல் படி இது. மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லின் வரையறையை விரிவுசெய்து கூடுதல் பிரிவுகளை அதில் சேர்த்தது சிறந்த முடிவு. இந்த சட்டம் எந்த அளவிற்கு செயல்முறைப் படுத்தப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்,” என்றார். 

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பறிப்போருக்கு தண்டனை வழங்க அனைத்து நாடுகளும் சட்டம் இயற்றவேண்டும் என 2008–ம் ஆண்டு ஐ.நா. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டாலோ, அவர்களை பாதிக்கும் வகையில் செயல்படுவோருக்கு குறைந்தது ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதவும் விதிக்கவேண்டும் என்று அறிவுரைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை பாதுகாக்க 2014–ம் ஆண்டு நமது பாராளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு அவைகளிலும் இது நிறைவேற்றப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்கள் நல்வாழ்விற்காக பணிபுரியும் பல தொண்டு நிறுவனங்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர். இறுதியாக இந்த புதன்கிழமை அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் டெல்லி மேல்–சபையில் இந்த மசோதா நிறைவேறியது.