உங்கள்  வீடியோ ரெஸ்யூமை பதிவு செய்து வேலைவாய்பை அதிகரிக்க உதவும் தளம்!

0

பல ஆண்டுகளாக சிறந்த பணியைப் பெறுவது என்பது ரெஸ்யூமையே பெரிதும் சார்ந்து இருந்து வருகிறது. ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகம் இதை மாற்றியமைத்துள்ளது. புகைப்படங்கள் மற்றும் பாரம்பரிய CV-க்களுக்கு பதிலாக வீடியோ மூலம் களமிறங்கியுள்ளது. சரியான வீடியோ ரெஸ்யூம் வேலை தேடுவோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட உதவும்.

ஷ்ரோஃபைல் (Shrofile) உலகெங்குமுள்ள ப்ரொஃபஷனல்கள், ஊழியர்கள், பகுதிநேர பணியாளர்கள் போன்றோருக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிநபரின் ஆளுமையின் அம்சங்களை படம்பிடித்துக்காட்டி பணியிலமர்த்துவோர் எளிதாக பணியிலமர்த்தும் முறையை மேற்கொள்வதற்காக உருவானது இந்த வீடியோ சார்ந்த தளம்.

இந்தியாவில் பணியிலமர்த்தப்படும் துறை ஒழுங்குப்படுத்தப்படாமல் உள்ளது. 1 பில்லியன் ஆண்டு வருவாயில் Naukri, Indeed, Shine, LinkedIn போன்றவை 20 சதவீதத்திற்கும் குறையாவகவே பங்களிக்கிறது. விண்ணப்பிப்பவர்களின் நிலையற்ற தன்மையும் தரப்படுத்தப்படாத பணியிலமர்த்தும் முறையே இதற்குக் காரணம்.

ஆளுமையில் கவனம் செலுத்துதல்

ப்ரொஃபஷனல்கள் தங்களை சிறப்பாக வெளிக்காட்டிக்கொள்ளவும் அவர்களது ஆளுமையின் மிகவும் சுவாரஸ்யமான பகுதிகளை வெளிக்காட்டிக்கொள்ளவும் பெரிதும் உதவுவது குறித்து குறிப்பிட்டார் ஷ்ரோஃபைல் இணை நிறுவனரான நேஹா.

“வீடியோ ஒருவருடனான சந்திப்பை அதிக நெருக்கமாக்குகிறது. நீங்கள் உண்மையில் யார் என்பதை அது காட்டும். அதாவது உங்களது உடல்மொழி, தொடர்புகொள்ளும் பாணி, அணுகுமுறை, அனைத்தையும் காட்டுகிறது. உங்களைப் பற்றிய குறிப்புகளோ அல்லது புகைப்படமோ எப்போதும் உங்களை நெருக்கமாக வெளிப்படுத்தாது.

பயனர்கள் பதிவிடும் வீடியோக்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக உருவாக்கப்படுவதில்லை. அது பயனரின் சுயவிவரத்தின் ஒரு பகுதியாகும். இதனால் இந்தத் தளம் ப்ரொஃபஷனலின் ஆளுமை குறித்த பாரபட்சமற்ற பார்வையை வழங்குகிறது.

ப்ரொஃபஷனல்கள் மட்டுமல்லாது நிறுவனங்களும் தங்களது மேலாண்மை மற்றும் தலைமைக் குழுவை ஒளிபரப்பு செய்து நிறுவனத்தின் கலாச்சாரம், ப்ராண்ட், நோக்கம் போன்றவற்றை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்தத் தளம் உதவுகிறது.

”நாங்கள் வீடியோ வாயிலாக நேர்காணல் நடத்தும் தளம் அல்ல. நாங்கள் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட ஒரு சிறிய வீடியோ வாயிலாக ஒரு தனிநபரின் ஆளுமை தொடர்பான அம்சங்களை முன்னிலைப்படுத்திக் காட்டுவதில் கவனம் செலுத்தும் ஆளுமை சார்ந்த தளம்,” என்கிறார் நேஹா.

இந்த தளம் எவ்வாறு செயல்படுகிறது?

இந்த தளத்தை இன்ஸ்டால் செய்ததும் பயனர் தங்களை சிறப்பாக வெளிப்படுத்திக் கொள்ள கீழ்கண்ட எளிய குறிப்புகளை பின்பற்றலாம்:

உங்களை வெளிப்படுத்துங்கள் : சுயவிவரங்களை 30 விநாடி வீடியோவாக பதிவுசெய்யவும்

வீடியோவை மேம்படுத்துங்கள் : எளிய வீடியோ எடிட்டிங் அம்சங்களைக் கொண்டு வீடியோவை மேம்படுத்துங்கள்

பிறருடன் தொடர்புகொள்ளுங்கள் : உங்களது வீடியோ சுயவிவரங்களை நிறுவனங்களுடனும் பயனர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

மற்றவர்களைக் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் : மற்ற ப்ரொஃபஷனல்கள் தங்களை எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

நம்பகத்தன்மையை நிலைநாட்டலாம்: வீடியோ பரிந்துரைகள் வாயிலாக உங்களது சுயவிவரங்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்டலாம்.

30 விநாடி வீடியோ மூலம் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் வகையில் நன்கு ஆய்வுசெய்யப்பட்ட முன்பே வரையறுக்கப்பட்ட ஆளுமை தலைப்புகளை தளம் வழங்குகிறது. இதற்கு பயனர் பதிலளிக்கலாம். ஒவ்வொரு வீடியோவும் ப்ரொஃபஷனலின் ஆர்வம், அனுபவம், உந்துதல் மற்றும் ஆளுமை சார்ந்த பிற அம்சங்கள் தொடர்பான தலைப்புகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் 30 விநாடி பதிவுசெய்யப்படும்.

மனிதவள ப்ரொஃபஷனல்களின் பின்னணியுடன் செயல்படுகிறது

ஷ்ரோஃபைல் மனிதவளத் துறையில் அனுபவமிக்க 40 வயதான நேஹா லால் மற்றும் 29 வயதான ரூபல் ப்ராசாத் ஆகிய இருவரால் 2017-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இவர்கள் தங்களது அனுபவத்தைக்கொண்டு ப்ரொஃபஷனல்கள் ரெஸ்யூமைத் தாண்டி தங்களை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் ஒரு தளத்தை உருவாக்க விரும்பினர்.

அதன் பிறகு தளத்தின் விற்பனை மற்றும் வணிக மேம்பாட்டை கவனித்துக்கொள்ள மனிஷ் ராய், நலின் மிட்டல் ஆகியோரை இணைத்துக்கொண்டனர்.

அடுத்தகட்ட செயல்பாடுகள்

“தற்சமயம் வருவாயை ஈட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. நாங்கள் தளத்தில் ப்ரொஃபஷனல்களின் டேட்டாபேஸை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார் நேஹா.

ஷ்ரோஃபைல் 12 நபர்கள் அடங்கிய குழுவுடன் செயல்படுகிறது. இந்த தளத்தில் 8,000 சிறு வீடியோக்களுடன் 10,000 ப்ரொஃபஷனல்களின் டேட்டாபேஸ் உள்ளது. வருவாயை நிலைப்படுத்த எஃப்எம்சிஜி, நிதிச் சேவைகள், ஹாஸ்பிடாலிட்டி, உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவு என 10-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் பணிபுரிந்து வருகிறது.

தற்போது வரை சுய நிதியில் இயங்கி வரும் இந்த ஸ்டார்ட் அப் பயனர் தொகுப்பை அதிகரிக்கவும் வீடியோக்களை ஆய்வு செய்ய உயர்தர செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை துரிதப்படுத்தவும் நிதி உயர்த்த திட்டமிட்டு வருகிறது.

ஆண்டு சந்தா வாயிலாக வருவாயை ஈட்ட திட்டமிட்டு வருகிறது இந்த ப்ராண்ட். நிறுவனங்கள் ப்ரொஃபஷனல்களை திறன் மற்றும் அனுபவத்துடன் கூடிய ஆளுமையின் அடிப்படையில் தேர்வு செய்வதற்காக நவீன SaaS தளத்தை அறிமுகப்படுத்துகிறது. நிறுவனங்கள் ஆண்டு சந்தா அடிப்படையில் இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். வருங்காலத்தில் இதையே முதன்மையான வருவாய் மாதிரியாகக்கொள்ள திட்டமிட்டுள்ளது ஷ்ரோஃபைல்.

”பல அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆளுமை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆய்வு, வீடியோ மேம்படுத்துதல் மற்றும் உருவாக்கும் டூல்ஸ் ஆகியவை திட்டமிடப்பட்டு வருகிறது. ஒரு புதிய காப்புரிமை நிலுவையிலுள்ள ஆளுமை வளர்ச்சி வரைபடம் உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். ஒருவர் உலகத்தால் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் அறியப்படாத பகுதிகளை ஆராயவும் இது உதவும்,” என்றார் ரூபல்.

ஆங்கில கட்டுரையாளர் : லிப்சா மன்னன்