ஏழைத் தாய்மார்களுக்கு பிறக்கும் குறைப் பிரசவக் குழந்தைகளை காக்க உதவும் மலிவு விலை வெப்பமூட்டி!

0

குறைப் பிரசவக் குழந்தைகளுக்கு ஒரு தாயின் கருவறை வெப்பத்தை அளிக்கும் புதிய இன்குபேட்டர். இப்போது வழக்கத்திலுள்ள வெப்பமூட்டி இன்குபேட்டர்கள் சாமான்யர்கள் நெருங்க முடியாத விலையில் உள்ளது. கிராமப்புறங்களில் அதனைப் பயன்படுத்துவது மிகவும் கடினம். ஏழ்மையான தாய்மார்களுக்கு ஏற்ற புதிய வெப்பமூட்டியை ராகுல் கண்டுபிடித்து அளித்துள்ளார்.

குறைப் பிரசவக் குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது நியோனேட்டல் ஹைபோதோரிய எனும் நோய். ஒரு தாயின் கருவறை வெப்பம் (குறைப் பிரசவக்) குழந்தைக்கு அளிக்கப்படுமானால் அக்குழந்தையை மேற்படி நோய் தாக்காமல் இயல்பான எடைவளர்ச்சி காண முடியும். (எடை வளர்ச்சி குழந்தையின் ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது) இப்போது வழக்கத்திலுள்ள வெப்பமூட்டி இன்குபேட்டர்கள் சாமான்யர்கள் நெருங்க முடியாத விலையிலும், தொடர்ந்து மின்சாரம் தேவைப்படும் ஒன்றாகவும் உள்ளது. கிராமப் பகுதிகளில் அதனைப் பயன்படுத்துவது மிகவும் கடினம். தாய்மார்கள் அதனைப் பயன்படுத்துவதற்கு மருத்துவத் தாதிகளிடம் பயிற்சி பெற வேண்டிய அளவிற்கு சிக்கலான உபகரணம் ஆகும். அத்தனைக்கும் மேலாக அது பழுதடைந்து விட்டால் கிராமப்புறத்தில் சீர் செய்யவும் முடிவதில்லை.

தாய்மை வெப்பத்தைக் கண்டுபிடித்தல்

பயன்படுத்துவதற்கு எளிதான, எங்கும் வெளியில் எடுத்துச் செல்லக் கூடிய இந்த அரவணைப்புக் கருவி, 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மின்னிணைப்பும் தேவைப்படுவதில்லை. குழந்தைக்குத் தாயின் இதமான வெப்பத்தை தரவியலாத ஆம்புலேன்ஸ், மருத்துவமனை, அவசரமில்லா சிகிச்சை வார்டுகள், பயணங்கள் போன்ற சூழலிலும் கூட ஒரு தாயின் உடல் சூட்டை அளிக்கவல்லது இக்கருவி. இந்த அரவணைப்புக் கருவியை கண்டுபிடித்தவர்கள் ராகுல் பணிக்கர், ஜானே சென், லினஸ் லியாங், நாகனந்த் மூர்த்தி.

லஷ்மம்மா
லஷ்மம்மா

‘லம்பானி’ பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் லஷ்மம்மா. கூலிவேலை செய்யும் இவர் குடும்பத்தின் மாத வருமானம் வெறும் ஆயிரம் ரூபாய். அவருக்கு 1.5 கிலோ எடையில் குறைப் பிரசவமாகப் பிறந்த குழந்தைக்கு வெளி வெப்பம் தரவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரது கிராமத்தில் இருந்து 24 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்றாடம் 250 ரூபாய் செலவிட்டு குழந்தையைப் பாதுகாப்பது லஷ்மம்மாவால் இயலாது எனவே டாக்டர் அளித்த 75 ரூபாய் செலவிலான அரவணைப்பு இன்குபேட்டர் அவரது கைக்குழந்தையின் வாழ்க்கையைப் பாதுகாத்திருக்கிறது.

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை வெற்றி வேல். அடுத்தபடம் குழந்தை உடல் எடைக் கூடிய நிலையில்.
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை வெற்றி வேல். அடுத்தபடம் குழந்தை உடல் எடைக் கூடிய நிலையில்.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி பகுதியில் வசிப்பவர் மாரியம்மா. குழந்தையின் தந்தை வீடு வீடாகச் சென்று கிளி ஜோசியம் பார்ப்பவர். இவர்கள் தங்களது குழந்தையை அரவணைப்பு வெப்பமூட்டியில் வைத்துப் பாதுகாத்ததால் இரண்டே மாதங்களில் குழந்தை 1.6 கிலோ எடையில் இருந்து 3.0 கிலோ எடையை அடைந்து ஆரோக்கியமாக இருக்கிறது.

கண்டுபிடிப்பின் துவக்கம்

ராகுல் பணிக்கர் சென்னை ஐஐடியில் 2002 இல் மின் பொறியியல் பட்டம் பெற்றவர். ஸ்டாம்ஃபோர்டில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அங்கேயே ஆய்வை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதும் ஏற்றுக் கொண்டார். அதே சமயத்தில் ஸ்டாம்ஃபோர்டு சோதனை வெள்ளோட்டமாக டி.ஸ்கூலை ஆரம்பித்திருந்தது.

"அதனை ஒரு சோதனைக் கூடமாகக் கருதி அடிக்கடி அங்கு சென்று வருகிற பழக்கம் எனக்கு இருந்தது. உண்மையில் அங்கிருந்த நண்பர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அங்குள்ள நிறைய சிந்திக்கும் மூளைகள் எனக்கு பெரும் ஊக்குவிப்பாக அமைந்தது’’ என்ற ராகுல்.

ராகுல்
ராகுல்

மூன்றாண்டுகளாக சிலிக்கான் வேலியில் இருந்தார். அங்கே தொழில் முனைப்பு அவரைத் தொற்றிக் கொண்டது.

‘’எங்கு பார்த்தாலும் கூகுள் முகநூல் பற்றிய பேச்சு பரவிக் கொண்டிருந்த நேரம் அது. ஆர்வமுள்ள யாரும் அங்கே நிறைய கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புள்ள இடம் அது. தொழிலும், நுட்பமும் ஒரு பிரச்சனைக்கான தீர்வின் அளவீடு என்பதைப் பார்க்க முடியும்’’.

இரண்டு எதிர் முனைகளைச் சந்திக்கச் செய்த டி.ஸ்கூல்

நமது பாடத் திட்டம் பிரச்சனைகளை தீர்ப்பதற்குக் கற்றுத் தருவதில்லை. பிரச்சனைகளை சரியாக அடையாளம் கண்டுவிட்டால் அவற்றினுள் தீர்வுக் காண கண்டுபிடிப்புகளும் படிந்திருக்கும். சரியான பிரச்சனைகள் என்று குறிப்பிடுவது பெரிய அளவிலானதை அல்ல. பிரச்சனை எங்கே உள்ளது என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் அங்கே தீர்விற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன என்பதை உணர முடியும்.

அனைத்திற்குமான முதற்புள்ளி

டி ஸ்கூல் "மிகக் குறைந்த செலவில் தொழில்முனைவு மாதிரி’’ என்ற புதிய பாடத்திட்ட வகுப்பை அறிமுகப்படுத்தியது. தனது பட்டத்தின் இறுதி நிலையில் இருந்த ராகுலுக்கு இந்த கோர்சில் சேர விருப்பம் ஆனால் அதற்குத் தேவையான பணமும், நேரமும் அவரிடம் இல்லை. இந்த நிலையில் டி ஸ்கூலின் நிர்வாகிகளில் ஒருவரான பொர்னீ ரோத்தைச் சென்று சந்தித்து தனது இக்கட்டான நிலையை விளக்கினார் ராகுல். அதற்கு பொர்னீ கூறியது-

"நீ இந்த புதிய கோர்சில் சேராமலே பட்டத்தை மட்டும் பெறலாம். ஆனால் வகுப்புக்கும் சென்று கொண்டு இந்த படிப்பையும் தொடர்ந்தால், இரண்டையும் முடித்த சூப்பர்மேன் ஆகி விடுவாய்’’ என்றார்.

ராகுல் இந்த படிப்பில் சேர முடிவை எடுத்தார்.

வாழ்க்கைப் பயணத்தை மாற்றிய கல்வி

"நான் படித்தது ஐஐடி ஒரு தொழில் நுட்பக் கல்லூரி. ஆனால் வந்து சேர்ந்தது ஸ்டாம்ஃபோர்டு ஒரு பல்கலைக்கழகம். இங்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொருளாதார வல்லுனர்கள், அரசியல் விஞ்ஞானிகள், சட்ட மாணவர்கள் என வெவ்வேறு துறைச் சார்ந்தவர்கள். இருந்த போதிலும் டி ஸ்கூலைப் பொருத்த மட்டில் பிறதுறை சேர்ந்தவர்களுடன் பழகவும், அவர்கள் எனது பிரச்சனைகளுக்கு உதவியும் செய்தார்கள்.’’

மேற்படி வகுப்புகளுக்குப் பங்குதாரர்கள் இருந்தனர். அவர்கள் பிற அமைப்புகளின் பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றிற்குத் தீர்வளிக்க மாணவர்களை ஈடுபடுத்தி வந்தனர். நேபாளைச் சேர்ந்த 'மெடிசன் மோண்டியல்' எனும் ஒரு தொண்டு நிறுவனம், வெப்பமூட்டி சாதனத் தயாரிப்புச் சோதனை முயற்சியில் இருந்தது. புழக்கத்தில் உள்ள இன்கூபேட்டர் சாதனம் கண்ணாடியில் இருக்கிறது. மாறாக அதே வெப்பத்தை அளிக்கக்கூடிய, ஆனால் விலை மலிவான சாதனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இத்திட்டத்தில் ராகுல், ஜானே ஆகிய இருவரும் குழுவாகப் பணியாற்றினார்கள். 

"இதை விட விலை மலிவான வெப்ப மூட்டிகளை எங்களால் உருவாக்க முடியும். ஆனால் அது சில குழந்தைகளுக்கு மட்டுமே பயனளிக்கும். மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது என்பதைப் புரிந்து கொண்டோம்.’’ திட்டத்திற்கான ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ராகுலுக்கும் ஜானேக்கும் இச்சாதனம் சிறிய நகரங்களும், கிராமங்களும் மட்டும் பயனுள்ளதாக இருக்கும் என புரிந்தது. விலை மலிவான பொருளை கிராமங்களுக்கு இலவசமாக அளித்தாலும் மக்களுக்குப் பயன்படுத்தத் தெரியாது என்பதால் அவை வீணாகவே இருக்கும். "நமது சுகாதாரத் துறை மேற்கத்திய நாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்குள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியவர்களின் எண்ணிக்கை நமது மக்கட் தொகைக்குப் போதுமானதல்ல. அதுவொரு பெரும் பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருக்கிறது.’’

ராகுல், ஜானே குழுவினர் இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கான மாற்றுச் சிந்தனையில் இறங்கினர். குழந்தையை வெப்பமான சூழலில் வைத்திருப்பதற்கான அடிப்படையிலேயே சில மாற்றமுடைய ஒரு சாதனத்தை கண்டுபிடித்தது ராகுல், ஜானே ஆய்வுக் குழு. அது மோண்டியல் தொண்டு நிறுவனத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாகவும், டிஸ்கூல் நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் அமைந்தது.

பட்டமும் கல்வியும்

"எங்களது ஆய்வுப் பாடத்தின் துவக்கத்தில் எதையாவது ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. ஆனால் மற்றொரு புறம் எங்களைத் தொடர்ந்து நெறிப்படுத்திக் கொண்டே இருந்தோம். நாங்கள் எத்தகைய தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதை எங்களது ஆய்வில் பெற்ற அனுபவம் எங்களுக்கு உணர்த்தியது. எங்களால் சாதிக்க முடியாததை வேறு யாரால் முடியும் என்ற முடிவிற்கு வந்தோம். நாங்கள் செய்ய வேண்டியது கைக்கெட்டும் தொலைவிலேயே இருந்தது.’’

‘’எனக்கு போதுமான வாய்ப்புகள் இருந்தன. அவற்றை இப்போதே பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் உலகின் முக்கியமான பிரச்சனையை தீர்க்க வேண்டிய பொறுப்பினை நிறைவேற்றாதவன் ஆகிவிடுவேன். நல்ல வாய்ப்பை இழந்து விட்டு மக்கள் கையிலேயே பொறுப்பைக் கொடுத்து விட்டதாகத் தான் அர்த்தம் ஆகும். அது முற்றிலும் நியாயம் ஆகாது. என்னுடைய எண்ணங்களைச் சரியான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி செய்யாவிடில் என்னுடைய கல்வியில் நான் தோல்வியுற்றவனாக ஆகியிருப்பேன்" என்கிறார் ராகுல்.

அளவில்லா கடின உழைப்பும் எண்ணற்ற தடைகளும்

ஸ்டாம்ஃபோர்டு பள்ளியில் நடந்த தொழில் திட்டப் போட்டியில் விருதினை வென்றார்கள் ராகுலும், ஜானேயும். பரிசுத் தொகை 25000 டாலர். ‘’விருதிற்குத் தேர்வு செய்த நடுவர்கள் எமக்களித்த பாராட்டு மேலும் ஒரு 10,000 டாலர் தொகையைப் பெற்றுத் தந்தது.’’ அதுபோக சுற்றுச் சூழல் பசுமை உதவித் தொகை 90,000 டாலரையும் பெற்றார்கள். இரண்டு ஆண்டுகளில் அவர்களது கையில் இருந்த தொகை 125,000 டாலர்கள்.

எண்ணற்ற தடைகளின் ஊடாக ராகுல் சிலிக்கான் வேளியில் ஒரு வேலையில் அமர்ந்தார். தனது இரவுப் பொழுதுகளையும் வார இறுதி நாட்களையும் ஆய்வுப் பணிக்காகவும், திட்ட வேலைகளுக்காகவும் செலவிட்டார். வருடாந்திர விடுமுறைகளில் இந்தியாவிற்கு வந்து, முடிந்த போதெல்லாம் தனது நேரத்தை ஆய்விற்காகவே செலவிட்டார். நாடு முழுவதும் 14 மாநிலங்களுக்குச் சென்று மக்களின் வீடுகள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவ இல்லங்கள் ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 2009 இல் தனது வேலையை விட்டு விட்டார் ராகுல். அதற்கு முன்னரே 2008 ஆம் ஆண்டு ஜானே தனது ஸ்டாம்போர்டு கல்வியை முடித்து விட்டு பணம் திரட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

துவக்க நாட்களில் அதிர்ஷ்டவசமாக, மணிப்பாலைச் சேர்ந்த கிரண் மஜூம்தார் ஷா மற்றும் ரஞ்சன் பால் ஆகியோரிடமிருந்து முதலீடு கிடைத்தது. முதல் கட்ட முதலீட்டு உதவிக்கு ஆதரவாக இருந்தவர்கள் வினோத் கோஷலா மற்றும் காப்ரிகான் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தார். இரண்டாம் கட்ட முதலீட்டிற்கு ஆதரவாக இருந்தவர் சேல்ஸ் போர்ஸ் டாட்காம் எனும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான மார்க் பெனியோப்.

சவால்களும் வெற்றிகளும் – எதிர்காலத் திட்டம்

தங்களது திட்டத்தை 2012 இல் அறிமுகம் செய்ய அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. ‘’பழைய பாணியை மறுநிர்மாணம் செய்வது மிக எளிது. ஆனால் புதிய வகையிலான மருத்துவ சாதனத்தை உற்பத்தி செய்வதற்கு வழக்கமான விதிகளின் ஒப்புதலைப் பெறுவது மிகக் கடினமான செயலாகும். அதிலும் இந்தியாவைப் பொறுத்த மட்டில் எங்களுக்கு சரியான வழிகாட்டி அமையவில்லை. இன்றும் கூட அதற்கான சாத்தியங்கள் இல்லை. அதற்காக எங்கள் அனுபவத்தை மட்டுமே வைத்து இந்தக் கருத்தை அளவிட முடியாது. எங்களது உற்பத்திச் சாதனத்தை ஐரோப்பிய நாடுகளில் விற்பதற்கு சிறப்பு முத்திரையும் பெற்றுள்ளோம். மேற்கத்திய தரத்திலான மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான வசதிகளைக் கொண்டுள்ளதாக தயாரிப்புச் சான்றிதழும், கணக்காய்வு முத்திரையும் பெற்றுள்ளோம்’’

இன்க்யூபேட்டரை விற்பனை செய்வதும் அவ்வளவு எளிதானதல்ல. ‘’இது சாதாரணமாக சந்தையில் விற்று விடக் கூடிய சாதனம் அல்ல. இத்தகைய இன்க்யூபேட்டரையோ வெப்ப மூட்டியையோ அவ்வளவு எளிதாக மருத்துவமனைகளில் பார்த்து விட முடியாது. இதனை விற்பதற்கும் தனித் திறமை தேவைப்படுகிறது’’ என்று கூறுகிறார். ரகு தர்மராஜூ தற்பொழுது மேற்படி நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருக்கிறார். புதிய வெப்பமூட்டி சாதனத்தை சந்தைப்படுத்துவதில் அன்றிலிருந்து இன்று வரை முக்கியமான பங்காற்றி வரும் ரகு, சென்னை ஐஐடியில் அறிவியல் தொழில் நுட்பத்தில் பட்டம் பெற்றவர், கார்னலில் நிர்வாகத் தொழில் மேலாண்மை பயின்றவர். இருந்தாலும் தற்பொழுது சமூகத் தொழில் நிறுவனத்திற்காகச் சேவையாற்றிக் கொண்டிருக்கிறார்.

நன் மதிப்பைப் பெறுவதற்கு நல்ல தகுதிகள் உதவிகரமாக இருக்கும் என்கிறார் ராகுல். 

‘’துவக்க நிலை தகைமையாளர்களைப் (adopters) பெறுவதற்கு மட்டுமே நாங்கள் சிரமப்பட வேண்டியிருந்தது. நாங்கள் அணுகும் பத்து பேர்களில் ஒருவர் மட்டுமே நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைக் கேட்கத் தயாராக இருந்தனர்’’

அவர்கள் 300 மருத்துவமனைகளுக்குச் சென்று அணுகிய பின்னரே அரசு கவனிக்கத் தொடங்கியது. ஒரு புதிய சாதனம் அதிலும் ஒரு மருத்துவ சாதனம் என்கிற போது அதனை ஏற்றுக் கொள்வது கடினமானது தான் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதிகார மட்டத்தில் இருந்தவர்கள் எங்களது சாதனம் பயனுள்ளது என்பதை விரைவிலேயே புரிந்து கொண்டார்கள். நான் சுகாதாரச் செயலாளர் ராஜீவ் சதானந்தனைச் சென்று சந்தித்த உடனே நாம் துவக்குவோம் என்றார் .

‘’முதலில் கேரளாவில் 5 அளவீடுகளுடன் துவக்கப்பட்டது. அது உடனே ராஜஸ்தானில் 50 ஆனது. கர்நாடகாவில் பாரன் மாவட்டத்தில் 500 ஆனது. தற்பொழுது 150,000 குழந்தைகள் இந்த வெப்பமூட்டியின் அரவணைப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்’’

வாடகைச் சாதனத்தை அறிமுகம் செய்வதற்கான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ASHA ஊழியர்கள் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் ஒரு முன்னோட்டம் வெற்றிகரமாக நடை போடுகிறது. அதற்குரிய எதிர்காலம் வெகு பக்கத்திலேயே இருக்கிறது. இந்த அரவணைப்புக் கருவியில் நோயறியும் அம்சங்களைப் பொருத்துவது குறித்தும் யோசித்து வருகிறார்கள். அலைபேசியுடன் பொருத்தி நிமோனியா, செப்சிஸ் போன்ற நோய்களை ஆரம்பநிலையிலேயே இனங்காணுவதற்கான சென்சர்களை இணைக்க முயற்சித்து வருகிறார்கள்.

நாங்கள் வெறுமனே மருத்துவ சாதனத்தை விற்பவர்கள் அல்ல. நமது மருத்துவ பயில்முறையை மாற்றுவதற்கான முயற்சியை மேற் கொண்டு வருகிறோம். இதற்கு சிறிது காலம் பிடிக்கும். நமது மருத்துவக் கொள்கையிலும், நடைமுறையிலும் சில மாற்றங்களைக் காண்பதே எங்களது முதல் இலக்கு. பொதுச் சுகாதாரத் துறை விரைவான விற்பனைக்கானதல்ல. இதில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறோம். இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் அதுவே எங்கள் லட்சியம். தனிப்பட்ட இளம் திறனாளர்கள் தங்களது கல்வித் தகுதியை வளர்த்துக் கொள்வதன் மூலம் தங்கள் பாதையைச் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும். இந்த உலகத்தின் பிரச்சனைகளுக்கு சந்தை அடிப்படையிலான தீர்வைக் காண முடியும் என்பதை நடைமுறைப்படுத்துவதே எங்களது அடுத்த இலக்கு. இதற்கு கூடுதலான வெற்றிக் கதைகளும், வெற்றிகரமான முன்னோடிகளும் தேவைப்படுகிறார்கள். அதற்கான எடுத்துக் காட்டாக நாங்கள் இருக்கிறோம். எங்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு பலரும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்’’

ஆங்கிலத்தில்: ஸ்னிக்தா சின்கா | தமிழில் போப்பு