ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொந்தக்காரர் ஊர்வசி நடத்தும் தள்ளுவண்டி கடை!

2

குர்கானை சேர்ந்த ஊர்வசி யாதவ் ஒரு எஸ்யூவி வண்டி, 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரர். ஆனால் அவர் கடந்த ஆண்டு ரோட்டு ஓரக்கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார் என்றால் நம்ப முடியுமா? தொடக்கத்தில் அவரை கேலி செய்த பலரையும் கண்டுகொள்ளாமல் தன் பணியை செய்த ஊர்வசி, தற்போது ஒரு ரெஸ்டாரண்டையும் திறந்துள்ளார். 

ஊர்வசியின் கணவர் திடீரென இறந்தபோது, குடும்பத்தின் வருங்காலத்தை பற்றி கவலைக் கொண்டு நிதி நிலையை சமாளிக்க யோசித்தார். மழலையர் பள்ளி ஆசிரியையான ஊர்வசி, சோலே-குல்சே தள்ளுவண்டி கடையை ரோட்டோரம் திறந்தார். இதன் வருமானம் கொண்டு கூடுதலாக சம்பாதிக்க முடிவெடுத்தார்.

பட உதவி: Youtube
பட உதவி: Youtube

அவருக்கு நிதி நெருக்கடி என்று எதுவும் இல்லாத போதும், வருங்காலத்துக்காக இந்த கடையை திறந்ததாக ஊர்வசி கூறுகிறார். அவருக்கு சமைப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால் இந்த ஐடியா தோன்றியதாக தெரிவித்தார். 

ஊர்வசியின் கணவர் அமித் யாதவ், பிரபல உற்பத்தி நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றினார். ஒரு நாள் தவறி விழுந்த அமிதின் இடுப்பு முறிந்தது. அப்போது அதற்கு ஏற்பட்ட மருத்துவ செலவு, பின் அவர் இறந்ததில் மாதச்சம்பளமும் நின்று போனதால் ஊர்வசி இந்த முடிவை எடுத்தார். 

”என் குழந்தைகள் நல்ல நிலையில் வாழ்ந்து வந்ததால் அதே வாழ்க்கையை தர நான் உழைக்கவேண்டும் என்று தீர்மானித்தேன்,” என்கிறார் ஊர்வசி. 

கடையை தொடங்கிய ஊர்வசி, ஒரு நாளுக்கு 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் ஈட்டினார். ஆனால் இத்தகைய முடிவை எடுப்பது அவருக்கு அவ்வளவு சுலபமாக இருந்திருக்கவில்லை. அவரின் மாமியார் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. அவரின் குழந்தைகளும் கூட ரோட்டில் கடை வைப்பது சரிவராது என்று எண்ணினர். ஆனால் தன் முடிவில் திடமாக இருந்து அதை நிறைவேற்றினார். 

ஊர்வசியின் நம்பிக்கை பொய்க்கவில்லை. அவர் தனது உணவு வண்டிக்கு லைசென்ஸ் எடுத்து, நடத்தி தற்போது குர்கானில் ‘ஊர்வசி ஃபுட் ஜாயிண்ட்’ என்ற ரெஸ்டாரண்ட் திறக்கும் அளவிற்கு பிரபலமாகி உள்ளார். 

சோலே-குல்சே முக்கிய உணவு வகையை தவிர பிற ருசிகர ஐயிடங்களையும் செய்து கொடுக்கிறார் ஊர்வசி. இவரின் இந்த தன்னம்பிக்கை பலரை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.