களம் காணுமா ஜல்லிக்கட்டு... இளைஞர்களின் இந்த எழுச்சி பறைச் சாற்றுவது என்ன?

1

முதல் உலகப் போர் எப்படி துவங்கியதென்றால் ஆஸ்திரிய இளவரசர் பெர்டினாட் மற்றும் அவர் மனைவி ஷோபி இருவரும் போஸ்னியா தலைநகர் சரஜெவோ நகருக்கு சென்று திரும்பும் போது சுட்டுக்கொல்லப் பட்டார்கள். அதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே மூண்ட பூசலானது போராக மாறியது. இருநாட்டு ஆதரவு நாடுகள் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டன. உலகப் போர் பிறந்தது.

உண்மையில் உலகப்போர் அந்த இளவரசரின் சாவுக்கு நீதி கேட்டா பிறந்தது? இல்லவே இல்லை. அன்றைய தொழில்புரட்சியின் விளைவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்து வைத்திருந்தார்கள். எண்ணற்ற வீரர்களை ராணுவத்தில் இணைத்திருந்தார்கள். எல்லா ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் அதிகாரபசி வெறிபிடித்து உறைந்திருந்தது. அதை ஒரு சம்பவம் கிளப்பிவிட்டது அவ்வளவே. இது தான்டா சான்ஸ் என்று எல்லோரும் தங்கள் பலத்தை காட்ட உலகப்போர் பிறந்தது. மொத்தமாக இரண்டரை கோடி பேர்களை அழித்து, ஒரு கோடி பேர்களை ஊனமாக்கி அரசுகளை மாற்றிப் போட்டு எட்டு புதிய நாடுகள் பிறந்தது.

அது போலவே இன்று நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது பலகாலமாக பலதரப்பட்ட அரசியல் ஏமாற்றங்களால் அழுத்தப்பட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு தானே தவிர மாடுகளின் மீதான தமிழனின் பாசம் என்றோ பாரம்பரியத்தை காக்கும் முயற்சி என்றோ குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

மாடுகளின் மீதான பாசம் என்றால் காலந்தோறும் அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளின் எண்ணிக்கை குறையவேண்டும். மாட்டுக்கறி உண்பதை தடைகோரி போராட்டம் நடத்தி இருக்கவேண்டும். வடஇந்தியாவில் மாட்டுக்கறி உண்கிறார்கள் என்று பலர் தாக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். அது போன்ற எந்த அசம்பாவிதமும் இங்கு இந்த போராட்டகாலத்திலும் நடக்கவில்லை.

இந்த தடை விவசாயிகளின் மீதான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. நாட்டு மாட்டினங்கள் அழிக்கப்பட்டால் தரமான பால் கிடைக்காது என்றும், நிலத்திற்கு பொருந்தாத வெளிநாட்டு மாட்டினங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அதற்கான செலவினங்கள் அதிகரித்து விவசாயிகள் மேலும் சிரமத்திற்கு உள்ளாவர்கள் என்று அஞ்சுகிறார்கள். இதில் உண்மை இருக்கிறது தானே. பிராய்லர் கோழிகளை விட நாட்டுக்கோழியின் விலையும், அதன் முட்டை விலையும் இரண்டு மடங்கு அதிகமாக விற்கப்படுவது ஏன்?

இந்த நூற்றாண்டில் மிகவும் அச்சுறுத்தலான விஷயம் எது என்று உலக அளவில் விஞ்ஞானிகளிடம் நடந்த கருத்து கணிப்பில் எல்லோரும் வருத்தத்துடன் பதிவு செய்தது அரியவகை விலங்கினங்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதே என்று கூறினார்கள். காரணம் ஒவ்வொரு உயிரினமும் காரணமில்லாமல் இயற்கையினால் படைக்கப்படுவதில்லை. தேவை இல்லாதவை அழிந்துபோகும் தேவையானவை நிலைத்து நிற்கும். இது தான் இயற்கையின் அடிப்படை விதி. ஒவ்வொரு உயிரனமும் இடம், பருவநிலை, அங்கு நிலவும் சூழல் என்று பலதரப்பட்ட இயற்கை சோதனைகளுக்கு பிறகே நிலைத்து நிற்கிறது. அதை மனிதன் வியாபாரத்தின் பொருட்டு குலைத்துப் போடும்போது அதன் பக்கவிளைவுகளை நினைத்து அச்சப்படுவதில் என்ன தவறுள்ளது

இன்னொரு பக்கம் பீட்டா அமைப்பின் மீதான பலதரப்பட்ட கேள்விகள் சந்தேகங்கள் எதுவும் அவர்களால் தெளிவுபடுத்தப் படவில்லை. விலங்குகள் மீதான உண்மையான அக்கறை உண்டென்றால் மாட்டுக்கறி உற்பத்தியாளர்கள் / ஏற்றுமதி செய்பவர்கள் மேல் ஏன் வழக்கு தொடரவில்லை? இந்தியாவில் இருந்து சென்ற ஆண்டு மட்டும் 26,681.56 கோடி ரூபாய் அளவிற்கு மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த மாமிச ஏற்றுமதியில் இது 80%க்கும் அதிகம்.

பீட்டா ஆதரவாளர்கள் “அவை கொல்லப்படுகிறது ஆனால் சித்ரவதை செய்யப்படவில்லை” என்று வறட்டுவாதம் வைத்தாலும் ஏற்கமுடியாததாக இருக்கிறது நிஜம். ஒரு மாடு, விவசாயிடம் இருந்து விற்கப்பட்ட அந்த நொடி முதல் சித்ரவதை செய்யப்படுகிறது. வண்டியில் குறைந்த இடத்தில் எண்ணற்ற மாடுகளை நெருக்கி அடித்து ஏற்றும் போதும் கீழே இறக்கும் போதும் அடிமாட்டு தொழுவத்தில் உணவின்றி தங்கவைத்து, தலைகீழாக தொங்கவிடப்பட்டு இறுதியில் நெற்றி பொட்டில் துளையிடப்பட்டு, பின்பு தான் கொல்லப்படுகிறது. இந்த வீடியோக்கள் நிறைய Youtube இல் காணக்கிடைக்கிறது. இவை எதுவும் சித்ரவதை இல்லையா...

ஆக இருதரப்பும் கூறும் மாட்டின் மீதான அக்கறை என்பது கடைந்தெடுத்த பொய். இது மூன்றாம் உலக நாடுகளின் விவசாய சந்தை பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் மக்கள் போராட்டமாகவே இதை கருதவேண்டும்.

போராடும் மாணவர்கள் இதை ஜல்லிக்கட்டு வேண்டும் ஒற்றை கோஷத்தில் சுருக்கி இருக்கிறார்களே தவிர இத்தனையையும் அவர்கள் அறியாமல் அல்ல. சமூக வலைத்தளங்கள் இதை பலகாலங்களாக மக்களிடம் ஆதாரப்பூர்வமாக கொண்டு சேர்த்திருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. அதனால் தென்மாவட்டங்களில் மட்டுமே பிரசித்திபெற்ற ஜல்லிக்கட்டிற்காக மாநிலம் முழுவதும் இளைஞர்கள் போராடுகிறார்கள். முல்லைபெரியார், கூடங்குளம் அணுமின் நிலையம், தேனி நியுட்ரினோ ஆய்வுநிலையம் இவற்றில் வராத எதிர்ப்பு ஜல்லிக்கட்டிற்கு வரக்காரணம் அதன் பின்னணியில் இருக்கும் மாநிலம் தழுவிய விவசாயத்தின் அழிவும், வெளிநாட்டு தொண்டு நிறுவனத்தின் அரசியலும், அதற்கு அவர்கள் சொல்லும் உப்புசப்பில்லாத காரணமுமே ஆகும்.

மேலும் இந்த போராட்டத்திற்கு இன்னபிற பரிணாமங்களும் உண்டு. மக்கள் நேரடியாக பாதிக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு நியாயமற்று இருப்பது, செல்லாத பணம் அறிவிப்பில் முன் யோசனை இல்லாதிருந்து மக்கள் அன்றாடம் துன்பப்பட்டது, ரூபாய் நோட்டின் எண்கள் வரை சட்டதிட்டங்களை மீறி தொடரும் இந்தி மொழி திணிப்பு, தமிழக அகழ்வாராய்ச்சி நிறுத்தி வைப்பு, நீட் தேர்வு திணிப்பு, காவிரி நீர் பிரச்சனையில் மத்திய அரசின் ஒருதலை பட்சமான நிலைப்பாடு, எய்ம்ஸ் மருத்துவமனை மறுப்பு என்று மத்திய அரசின் பல நடவடிக்கைகள் மக்கள் விரோதபோக்கு உள்ளது. இது தமிழ்நாட்டின் மீதான திட்டமிட்ட புறக்கணிப்பாக பார்க்கப்படுகிறது. அதன் உச்சமாக ஜல்லிக்கட்டின் மீதான உச்சநீதிமன்றத்தின் தடையை ஒரு அவசரசட்டம் கொண்டு வந்து தடுக்காமல் நாடகம் நடத்துவது. மறுபுறம் கார்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அவசரச்சட்டம் மூலமாக நிலங்களை கையகப்படுத்த பலமுறை முனைவதும் மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக அறுத்துவிட்டது.

மறுபுறம் ஜல்லிக்கட்டில் உள்ள சாதியபிணக்குகளை மறுக்கமுடியாது. கடந்தவாரம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்த ஜல்லிக்கட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சிலர் மாடு பிடித்துவிட்டார்கள் என்பதற்காக அவர்களின் மீது ஆதிக்கசாதியினர் கொலைவெறி தாக்குதல் நடத்தி நான்கு பேர் அருவாளால் வெட்டுப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மேல் வழக்கும் பதியபட்டுள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக ஆதிக்கசாதியினரின் ஜல்லிக்கட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உசுப்பேத்தப்படவும் சேர்கிறது.

போராட்டத்தில் இறங்கும் மாணவர்கள் இந்த சாதிப்பாகுபாடை இனி வரும் காலங்களில் வராமல் உறுதிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் இத்தனை பாடும் விழலுக்கு இறைத்த நீராக, தங்களுக்கு தாங்களே நிகழ்த்திய அநீதியாக மாறி விடக்கூடும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

இறுதியாக மக்கள் விரும்புவது என்னவென்றால் இளைஞர்கள் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒரு ஒத்திகையாகவே கருத வேண்டும். இன்னும் பரந்துபட்டு சிந்தித்து மக்களை சிந்திக்கவிடாமல் செய்யும் சாதி, மத, இன விஷ பார்ப்பனிய களைகளை அகற்றவும், இயற்கையை போற்றவும், விவசாயத்தை காக்கவும், இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்புகளில் மாநில உரிமைகளை காக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும் ஆகவேண்டிய போராட்ட கொள்கைகளை மனதில் வைத்து அடுத்தடுத்த முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்பதே.

சமூக போராட்டங்கள் மட்டுமே மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி செழிப்பை கொண்டுவருகிறது. அதற்கு கடந்தகால போராட்டங்களே சிறந்த உதாரணங்கள். நம் பாட்டன்கள் போராடாவிட்டால் சுதந்திரம் இல்லை, நம் தாத்தன்கள் போராடாவிட்டால் சமூகநீதி இல்லை, நம் தந்தைகள் போராடாவிட்டால் கல்வி இல்லை. நாம் போராடாவிட்டால் எதிர்காலமே இல்லை... 

கட்டுரையாளர்: கார்த்திகேயன். இவர் ஃபாஸ்துரா டெக் என்ற நிறுவனத்தின் நிறுவனர். மதுரையை சேர்ந்த இவர் ஒரு தமிழ் ஆர்வலர், தன் ஆழமான கருத்துக்களை பதிவிடுபவர். இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.