உறுப்பு தானத்தில் முன்னணியில் இருக்கும் 'மோகன் பவுண்டேஷன்' 

இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டில் மட்டும் 600 உறுப்பு தானம் நடந்துள்ளது 

1

இந்தியாவில், சுமார் ஒன்றரை லட்சம் பேர் உறுப்பு தானத்திற்காக காத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் 2012 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள், 10 லட்சம் பேருக்கு வெறும் 0.08 கொடையாளர்கள் என்ற நிலையில் இருப்பதையே வெளிப்படுத்துகிறது. இது ஒரு மோசமான பற்றாக்குறை. இந்த அளவினை 0.08 லிருந்து 1 ஆக உயர்த்தினால், ஒரு நோயாளி, உறுப்பு தானத்திற்காக 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையை மாற்றி 2 ஆண்டுகள் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட முடியும்.

இந்த இலக்கை அடைவதற்காக தான், மோகன் (MOHAN – Multi Organ Harvesting Aid Network) நிறுவனத்தின், நிறுவனர்களில் ஒருவரான லலிதா ரகுராம் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார். இந்த நிறுவனம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், சுகாதார பயிற்சி பெற்றவர்களை கொண்ட தொண்டர்கள் குழு அமைப்பது, கூடவே மருத்துவர்களுக்கும், போலீசாருக்கும் பயிற்சி அளிப்பது என இந்தியாவில் உறுப்பு தானம் அதிகரிக்க செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்திய கண் தான வங்கியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக, லலிதா இந்தியா முழுவதும் விழி வெண்படல தானத்தை அதிகரிக்கும் சவாலை எடுத்துக் கொண்டுள்ளார். இதற்காக லலிதா பயன்படுத்தும் உத்தி மிகவும் எளிமையானது. எப்படியெனில், பயிற்சி பெற்ற சமூக சேவகர் ஒருவரை, மருத்துவமனைக்கும், நோயாளிக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் வேலைக்கு அமர்த்துவது. மரணம் ஏற்பட்டால் இந்த நபருக்கு உடனடியாக தெரிவிக்கப்படும். அந்த தகவல் கிடைக்கபெற்ற பின், அவர் விரைந்து இறந்து போனவரின் குடும்பத்தினருடன் கலந்து பேசி தானங்களை பெறுவதற்கான சம்மதத்தை பெற்று, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தன் பணிகளை முடித்துவிடுவார். இதனை, மும்பை சியோன் மருத்துவமனையிலும், ஹைதராபாத் நிஜாம் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சிலும், மருத்துவமனை விழி வெண்படல மீட்பு திட்டம் (Hospital Cornea Retrieval Program -HCRP) என்ற பெயரில் அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என லலிதா கூறுகிறார்.

லலிதா ரகுராம் | மோகன் பவுண்டேஷன் நிறுவனர் 
லலிதா ரகுராம் | மோகன் பவுண்டேஷன் நிறுவனர் 

இந்த திட்டம் துவங்கப்படுவதற்கு முன், குறித்த நேரத்தில் தலையிட்டு விழி வெண்படலத்தை எடுக்கப்படாததால் 35% தானங்கள் மட்டுமே பயன்படுபவையாக இருந்தன. ஆனால் தற்போது, இந்த திட்டம் துவங்கப்பட்ட பின், நாங்கள் 65% க்கும் அதிகமாக தானங்களின் பயன்பாட்டு அளவை அதிகரித்துள்ளோம்.

கண் தான வங்கி அசோசியேஷனில் எட்டு வருடம் வேலை செய்த பின் லலிதா, மல்டி ஆர்கன் (உடல் உறுப்பு) தானங்களின் வாய்ப்புகளை திட்டமிட்டு செயல்படுத்த மோகன் பவுண்டேஷனை ஹைதராபாத்தில் துவங்கினார். கடினமான முயற்சிகளுக்கு பின் முதல் ஆண்டு ஒரே ஒரு தானம் மட்டுமே நிகழ்ந்தது.

மோகன் (MOHAN) பவுண்டேஷனின் வேலைகள்

மோகன் பவுண்டேஷன் இந்தியாவின் மிகப்பெரிய உறுப்பு தான நிறுவனம். இது 4 விதமான பணிகளை செய்து வருகிறது.

1. உறுப்பு தானத்தின் அவசர தேவையை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்கிறது.

2. குடும்பத்தினரின் வருத்தமான சூழலில், கவுன்சிலிங் கொடுக்கும், மாற்று தானத்திற்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட சமூக சேவகர்களுக்கு பயிற்சி கொடுப்பது.

3. மருத்துவர்களுக்கும், ரேகைகள் பதிவு மருத்துவர்களுக்கும், போலீசாருக்கும் உறுப்பு தானம் செய்யபோகும் உடலை எவ்வாறு கையாள வேண்டும் என்ற பயிற்சியை அளித்தல்.

4. கவுன்சிலிங் கொடுப்பது முதல் உடலை குடும்பத்தினர் சம்மதத்துடன் பெற்று, தானத்தை நடத்தி முடிப்பது வரையுள்ள இவையனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தல்.

இந்த செயல்பாடுகளை பற்றி லலிதா கூறும்போது,

ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என எங்களுக்கு தகவல் கிடைக்க பெறுமாயின், எங்கள் ஒருங்கிணைப்பாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் கலந்து பேசுவார். அதே நேரம், அவசரமாக உறுப்புதானம் தேவைப்படும் நோயாளி அடையாளம் காணப்பட்டு, அவருக்கு தேவையான உறுப்பை பெற, உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும் தயாராக இருப்பார். தானம் செய்யப்பட்ட உறுப்பு மிகவும் கவனமாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு சேர்க்கப்படும். பின்னர் அந்த உடல் எப்படி பெறப்பட்டதோ, அப்படியே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

தொடர்ந்து பேசிய லலிதா,

நாங்கள் அந்த குடும்பத்தினரின் சமய சடங்குகளில் தலையிடுவதில்லை. உறுப்பு தானம் முடிந்தவுடன் குறித்த நேரத்தில் உடலை ஒப்படைத்துவிடுவோம். நாட்டின் தேவைக்காக, தெலுங்கான பந்த் சமயங்களிலும், தீபாவளி இரவுகளிலும், பொங்கல் காலைகளிலும் நாங்கள் வேலை செய்திருக்கிறோம்.

கடந்த வருடம் இந்த நிறுவனம் 600 உடல் உறுப்பு தானங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. மோகன் பவுண்டேஷன் பெங்களூரு, விசாகபட்டினம், விஜயவாடா, திருவனந்தபுரம், நாக்பூர், சண்டிகர், ஜெய்பூர், புதுடெல்லி போன்ற நகரங்களில் பரந்துள்ளது. இதில் தற்போது 500 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். இருப்பினும் லலிதா திருப்தியடையவில்லை.” நாங்கள் இதுவரை 1000 பேருக்கே பயிற்சியளித்துள்ளோம். ஆனால் அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் 5000 பேரேனும் எங்களுக்கு தேவை” என்றார்.

உடல் உறுப்பு தானத்திற்கான படிவத்தை பூர்த்தி  செய்யும் மாணவர்கள் 
உடல் உறுப்பு தானத்திற்கான படிவத்தை பூர்த்தி  செய்யும் மாணவர்கள் 

மாற்று உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் மருத்துவமனைகளை அதிகப்படுத்தும் நோக்கில் மோகன் பவுண்டேஷன் சில வகுப்புகளையும் எடுக்கிறது.

பத்து லட்சத்திற்கு ஒன்று என்ற அளவை எட்ட எடுக்கப்படும் முயற்சிகள்

போதிய விழிப்புணர்வும், மருத்துவமனைக்கு கெட்ட பெயர் வந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே இன்று இந்தியாவில் உறுப்பு தானம் மிகவும் குறைவாக உள்ளது.

இதுகுறித்து லலிதா கூறும்போது, உறுப்பு தானத்தை பற்றி மருத்துவ கல்வி நிறுவனங்கள் சரியாக கற்று கொடுப்பதில்லை. இதனால் தான் 20 முதல் 25% மருத்துவர்களே இதனை குறித்து முழுமையாக தெரிந்து வைத்துள்ளனர். அடுத்தபடியாக தடையாக இருப்பது, மருத்துவமனைகள், தேவையற்ற சுமையை எடுக்க வேண்டாம் என நினைப்பதுடன், மோசமான பிரச்சாரம் மருத்துவமனைக்கு எதிராக வந்துவிடுமோ என்றும் நினைக்கிறார்கள்.

ஸ்பெயினில் பத்து லட்சம் பேருக்கு 37 கொடையாளர்கள் உள்ளனர். இவ்வாறு இந்த கொடைகளில் சிறந்து விளங்கும் நாடுகளை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

கடந்த 2000 மாவது ஆண்டு தமிழக அரசு, இதுகுறித்து சிறப்பு வாய்ந்த உத்தரவு ஒன்றை இட்டது. அதன்படி, உடல் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், விபத்து மற்றும் மூளை சாவுகளை மண்டல உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. கடைசியாக, இந்திய அரசு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனத்தை 2012 இல் உருவாக்கியது. இது தற்போது தேசிய அளவில் உறுப்பு அகற்றுதல் மற்றும் அவற்றை பாதுகாக்கும் பணியை செய்கிறது.

“நமக்கு எதிர்பாராதவிதமாக ஒன்று சம்பவித்தால், இன்னொருவருக்கு வாழ்வளிக்கும் அதிகாரம் நம்மிடம் உள்ளது. ஆகவே ஒவ்வொரு தனிநபரும் உறுப்பு தானத்திற்கான படிவத்தினை பூர்த்தி செய்து கொடுப்பது மிகுந்த பலனை தரும்,“ என லலிதா சரியாகவே சொன்னார்.

ஒரு உறுப்பு தான கொடையாளருக்கு கருணை உள்ளமும், தானம் செய்வதற்கான சூழலும் வேண்டும். இந்த இரண்டையுமே லலிதா நிவிர்த்தி செய்து வருகிறார்.

நீங்கள் உறுப்புதான செய்து கொள்ள கிளிக் செய்யுங்கள் – உறுப்பு தான படிவம் 

ஆக்கம்: ஷ்வேத்தா விட்டா | தமிழில்: ஜான் மோசஸ்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'ரத்த திசு கொடை' - இந்தியாவில் புரட்சி செய்யும் 'தாத்ரி'