குழந்தைகளுக்கு வரும் மஞ்சள்காமாலை நோயை வீட்டிலேயே குணப்படுத்தும் சாதனம் கண்டுபிடித்த இரு பொறியாளர்கள்!

விவேக் கொப்பார்த்தி, சிவகுமார் பழனிசாமி இருவரும் குழந்தைக்கு ஏற்படும் மஞ்சள்காமாலை நோய்க்கு பெற்றோர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சையளிக்க ’ஸ்கைலைஃப்’ என்கிற சிறிய ஒளிக்கதிர் சாதனைத்தை கண்டுபிடித்துள்ளனர்.

0

உலகெங்கும் பத்து குழந்தைகளில் ஆறு குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் 5.4 மில்லியன் குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலைக்கான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது ஒவ்வொரு நாளும் 1,293 குழந்தைகள் இறக்கின்றனர் அல்லது மூளை பாதிப்பினால் அவதிப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.

எனினும் இந்த பயங்கர நிலையை மாற்றமுடியும். விவேக் கொப்பார்த்தி, சிவகுமார் பழனிச்சாமி இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர்கள். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் ’ஸ்கைலைஃப்’ (Skylife) என்கிற நீல ஒளி உமிழ் இருமுனையம் (LED) சார்ந்த சிறிய ஒளிக்கதிர் அமைப்பை கண்டுபிடித்துள்ளனர். இதை வீட்டிலேயே பயன்படுத்தலாம். இந்த சாதனம் சூரியசக்தி மற்றும் பேட்டரி சக்தியில் இயங்கும்.

இது எவ்வாறு துவங்கியது?

சிவா ஒரு மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் R&D பொறியாளராக இருந்தார். இந்த நிறுவனம் பச்சிளம் குழந்தைகளுக்கான இன்குபேட்டர்ஸ் உருவாக்கிக் கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மருத்துவனைகளை பார்வையிட்டபோது மஞ்சள் காமாலை பாதித்த குழந்தைகளின் கொடூர நிலையைக் கண்டார்.

”இந்தப் பயணத்தின்போது மஞ்சள்காமாலை காரணமாக பல குழந்தைகள் இறந்ததைப் பார்த்தேன். பண வசதியின்மையும் மருத்துவமனைகளில் போதுமான சாதனங்கள் இல்லாததுமே இதற்கு முக்கியக் காரணம்,” என்றார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் தனது சிறுவயது நண்பருடன் இது குறித்து கவலையுடன் விவாதித்தார். அப்போது விவேக்கும் சிவாவும் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் (ASU) பயோமெடிக்கல் பொறியியல் படித்துக்கொண்டிருந்தனர். ஒரே இருப்பிடத்தை பகிர்ந்து கொண்டனர். இவ்விருவரும் இந்த பிரச்சனைக்கான தீர்வை எப்படி உருவாக்கலாம் என்று விவாதித்தனர்.

சிகிச்சையளித்தால் காப்பாற்றக்கூடிய நிலையில் இருக்கும் அப்பாவிக் குழந்தைகள் இறந்துவிடக்கூடாது என்கிற நோக்கத்தில் இருவரும் அவர்களது இருப்பிடத்திலிருந்தே முயற்சியைத் துவங்கினர். விவேக் கூறுகையில்,

”தொழில்நுட்பம் உள்ளது. புதுமையான, நெகிழ்வான வழிமுறைகளில் இதை நடைமுறைப்படுத்துவதற்கான வழியைக் கண்டறிய படைப்பாற்றலும் ஆர்வமும் அவசியம்.”

ASU-வின் எட்சன் மாணவ தொழில்முனைவோர் முயற்சி வாயிலாக முதலீடு கிடைத்தது அவர்களது திருப்புமுனையாக அமைந்தது.

நியோலைட் உருவாக்குதல்

விவேக் அந்தக் காலகட்டத்தை நினைவுகூறுகையில், ”எங்களிடம் ஒரு சின்ன திட்டம் இருந்தது. அதைச் செயல்படுத்த விரும்பினோம். ASU-வில் அலுவலகம் அமைக்கதற்கான இடவசதி கிடைக்கபட்ட மாணவர் தலைமையிலான 20 ஸ்டார்ட் அப்களில் எங்களுடைய முயற்சியும் ஒன்றாகும். அத்துடன் ஆலோசகர்களின் நெட்வொர்க், 25,000 டாலர் தொகை திட்டத்தை ஒரு ப்ராடக்டாக உருவாக்கவும் ப்ராடக்டை ஒரு நிறுவனமாக உருவாக்கவும் கிடைத்தது. எங்களிடம் ஒரு வென்சர் மேலாளர் இருந்தார். இவர் எங்களது வளர்ச்சியை கண்காணித்து நிதியை நிர்வகிக்கவும் உதவினார்.

குழந்தைகளுக்கு உண்டாகும் மஞ்சள்காமாலை நோய்க்கு தீர்வுகாணும் நோக்கத்துடன் 2014-ம் ஆண்டு சிவாவும் விவேக்கும் நியோலைட் நிறுவனத்தை நிறுவினர். விவேக் குறிப்பிடுகையில், 

“இந்த முயற்சியில் வெற்றியடைய முடியுமா தெரியாதபோதும் பிரச்சனைக்கு தீர்வுகாண ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தோம். தொழில்முனைவுச் சிந்தனையுடனும் தாக்கத்தை எதிர்நோக்கியும் நாங்கள் களமிறங்கினோம்.”

நான்கு மாணவர்கள் அடங்கிய குழுவாக 7,000 டாலர் மானியத் தொகையுடன் துவங்கப்பட்டு இன்று நியோலைட் 12 முழுநேர ஊழியர்கள் அடங்கிய குழுவாகச் செயல்படுகிறது. இவர்கள் மருத்துவத் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருப்பர்வகளைக் கவர்ந்துள்ளதாகவும் மிகப்பெரிய அமெரிக்க மருத்துவ அமைப்புகளுடன் ஒன்றிணைந்துள்ளதாகவும் 3.5 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார் விவேக். மேலும், “எங்களது ஸ்கைலைஃப் சாதனத்திற்கு கடந்த மாதம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அனுமதி வழங்கியுள்ளது,” என்றார்.

ஒவ்வொரு குழந்தையையும் காப்பாற்றுதல்

ஸ்கைலைஃப் கிட்டத்தட்ட ஒரு லேப்டாப் அளவே இருக்கும். ஒரே கையில் எளிதாக தூக்கிவிடலாம். மஞ்சள்காமாலை நோய்க்கு மருத்துவமனையைக் காட்டிலும் வீட்டிலேயே சிகிச்சையளிக்க இந்தச் சிறிய சாதனம் உதவுகிறது.

விவேக் குறிப்பிடுகையில்,

”மருத்துவமனைகளில் என்ஐசியூ பகுதியில் இடத்தை சேமிக்கும் விதத்தில் சாதனத்தின் அளவு இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினோம். எளிமையான சிகிச்சைமுறையை உருவாக்க விரும்பினோம். மிகக்குறைவான பக்க விளைவுடன்கூடிய விரைவான சிகிச்சை முறையில் கவனம் செலுத்தினோம்.

தயாரிப்பிற்கு எஃப்டிஏ அனுமதி கிடைத்திருந்தாலும் இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தவில்லை. விவேக் குறிப்பிடுகையில், “ஒரு குழந்தை எங்கு பிறந்திருந்தாலும் சிகிச்சையளிக்க சாத்தியமுள்ள நோய் தாக்கத்தால் இறந்துவிடக்கூடாது. இதுவே ஒரு நிறுவனமாக நாங்கள் தீர்வுகாண விரும்பும் பிரதான பிரச்சனையாகும். இதற்கான சிறந்த வழி எங்கும் பயன்படுத்த உகந்த ஒரு சாதனத்தை உருவாக்குவதுதான் என்று நம்பினோம்.

உயிர் காக்கும் சாதனங்கள் பணக்கார நாடுகளிலுள்ள மிகச்சிறந்த மருத்துவமனைகளில் மட்டுமே இருக்கக்கூடாது. விவேக் கூறுகையில், “இந்தியாவில் பிறப்பு விகிதம் அதிகம். இத்துடன் பொருளாதார காரணிகளும் இணைந்து மருத்துவமனைகளில் அதிக கூட்டம் சேர்கிறது. அதாவது முறையான சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கப்படுவதில்லை. நம்மிடம் சரியான தரவுகளும் இல்லை. இந்தியாவில் மஞ்சள்காமாலை நோய் காரணமான இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு அசாமில் ஏற்படுகிறது. இது வளங்கள் குறைவாக காணப்படும் மாநிலமாகும். எங்களது தொழில்நுட்பம் சூரிய ஒளி அல்லது பேட்டரி சார்ந்த சக்தியால் இயங்குவதால் இது அசாம் மக்களுக்கு உதவக்கூடிய சரியான தீர்வாகும்.

”குறைந்த செலவில், நெகிழ்வான சிகிச்சை மாதிரிகளுடன் நாங்கள் உருவாக்கும் இது போன்ற தீர்வுகளை இந்தியா போன்ற நாடுகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்தச் சாதனம் அதிக குழந்தைகளைச் சென்றடையும் என்று நம்புகிறேன்,” என்றார்.

ஸ்கைலைஃப் 2018-ம் ஆண்டு துவக்கத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களது பணியை மஞ்சள்காமாலைக்கான சிகிச்சையுடன் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்றும் மற்ற பிரச்சனைகளுக்கான சிகிச்சைக்குத் தேவையான சாதனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் சிவா.

வளர்ந்து வரும் சந்தைக்காக சாதனத்தின் விலையை மேலும் மலிவாக மாற்ற இந்தியா சார்ந்த மருத்துவ சாதன தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்படும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் உலகெங்கும் காணப்படும் மஞ்சள்காமாலை மற்றும் இதர பச்சிளம் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இந்தியாவில் R & D வசதியை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 

“இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதால் நாங்கள் இங்கிருந்தே துவங்குகிறோம்,” என்றார் சிவா.

ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 பட்டியலில் இடம்பெற்றிருக்கும் விவேக் தன்னுடைய சாதனையை நினைத்து திருப்தி கொள்ளவில்லை. மாறாக, “நியோலைட் வாயிலாக எதை சாத்தியப்படுத்தமுடியும் என்பதற்கான அங்கீகாரம்தான் விருதுகள். எனவே அது சாத்தியமாகும் வரை நான் தொடர்ந்து பணிபுரியவேண்டும்,” என்று கூறி முடித்தார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்நேஹ் சிங்