ராணுவத்தில் வீரமரணம் அடைந்த 4000 தியாகிகள் குடும்பங்களுக்கு கடிதம் எழுதியுள்ள செக்யூரிட்டி!  

0

கடந்த 18 ஆண்டுகளாக ஜிதேந்திரா சிங் தியாகிகளின் குடும்பங்களுக்கு கடிதங்கள் எழுதி வருகிறார். சூரத்தில் வசிக்கும் 37 வயதான இந்த தனியார் செக்யூரிட்டி தன்னால் இயன்ற வரை இந்தப் பணியை மேற்கொள்ள விரும்புகிறார்.

1999 கார்கில் போர் நடந்த சமயத்தில் இருந்தே நான் கடிதங்கள் எழுதி வருகிறேன். ராணுவத்தில் பணிபுரிவது மிகவும் கடினமானது. நமக்காக உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவது நாட்டின் கடமையாகும். அவ்வாறு உயிர் நீத்த பலரது குடும்பத்தினர் மிகுந்த துக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது குடும்பங்களுக்கு நாம் சேவையளிக்கவேண்டியது நம் கடமையாகும்,” என்று ’தி பெட்டர் இண்டியா’விடம் தெரிவித்தார்.

ஜிதேந்திரா இதுவரை 4,000 கடிதங்கள் எழுதியுள்ளார். பல குடும்பங்களில் இருந்து மகன், கணவர், அப்பா போன்றோர் இந்திய மக்களுக்காக சேவையளித்ததற்காக அந்தக் குடும்பங்களுக்கு நன்றி பாராட்டுவதே அவரது நோக்கமாகும்.

ஜிதேநிரா சிங் ராஜஸ்தானின் பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள குட்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் ராணுவத்துடன் தொடர்பு உள்ளது.

“என் குடும்ப உறுப்பினர்கள் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் இருந்தே இந்திய ராணுவத்தில் பணிபுரிகின்றனர். நானும் ராணுவத்தில் சேர விரும்பினேன். ஆனால் முடியவில்லை. என்னுடைய அப்பா மஹர் ரெஜிமெண்ட்டில் இருந்தார். கார்கில் போர் நடந்த சமயத்தில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர் தன்னுடைய ரெஜிமெண்ட்டைச் சேர்ந்தவரா என்பதைக் குறிப்பிடுவார். அப்போதுதான் தியாகிகளின் குடும்பங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என தீர்மானித்தேன்,” என்றார்.

10,400 ரூபாய் வருமானத்துடன் குடும்பத்தை நடத்த போராடி வரும் இவர் தனது வீட்டில் கடிதங்கள் எழுதுவதற்காகவே ஒரு பிரத்யேக பகுதியை ஒதுக்கியுள்ளார். அந்தப் பகுதியில் 9 க்விண்டால் எடை கொண்ட ஸ்டேஷனரி இருக்கும். 38,000 தியாகிகளின் தகவல்களை வைத்துள்ளார். விரைவில் இவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி கடிதம் எழுத உள்ளார்.

தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பற்றிய விவரங்கள் சேகரிப்பது குறித்து அவர் விவரிக்கையில்,

தியாகிகளின் குடும்பத்தினரின் முகவரிகளைக் கேட்பதற்காக புதுடெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தை தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். செய்தித்தாள்களையும் ஊடகங்களையும் பயன்படுத்தி தகவல்களையும் முகவரிகளையும் சேகரித்து வருகிறேன். அவர்களது நலன் குறித்து சிந்திக்கும் நபர் ஒருவர் குஜராத்தில் இருக்கிறார் என்பதை தெரிவிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார் ஜிதேந்திரா.

கடந்த பதினெட்டு ஆண்டுகளில் ஜிதேந்திரா பல முறை தியாகிகள் குறித்த தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஹர்தீப் சிங் என்பவர் ஹரியானாவின் கர்னல் பகுதியைச் சேர்ந்த தியாகி ஆவார். இவர் 2003-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடான தாக்குதலின்போது உயிர் தியாகம் செய்தவர். இவரது பெயரையே ஜிதேந்திரா தனது மகனுக்கு வைத்துள்ளார் என ’தி பெட்டர் இண்டியா’ குறிப்பிடுகிறது.

தி ஹிந்து உடனான உரையாடலில் ஜிதேந்திரா கூறுகையில்,

”தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை. அவர்களால்தான் நாம் பாதுகாப்பாகவும் ஜனநாயகத்தின் பலனை அனுபவித்துக்கொண்டும் இருக்கிறோம். தியாகிகளின் குடும்பதினர் பரிதாபமான நிலையில் வாழ்வதைப் பார்த்திருக்கேன். நாம் அவர்களுக்கு நன்றி பாராட்டவேண்டும். நான் கடிதங்களை எழுதி என் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA