சேமிப்பை முதலீட்டாக்கி ஹோம் பார்லர் தொடங்கிய எஞ்சினியர் பெண்!

0

சமீபகாலமாக தொழில்முனைப்பு கனவு பெரும்பாலானோருக்கு உள்ளது ஆனால் அதில் பெண் தொழில் முனைவோர்கள் என்று பார்த்தால் கை விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருக்கின்றனர். அதிலும் 5 ஆண்டுகளுக்கு முன், பெண்கள் துணிந்து சுய தொழில் தொடங்குவது சற்று சவாலான ஒன்று தான். 

2013ல் வளர்மதி விஸ்வநாதன் சுய தொழில் தொடங்கியது மட்டுமல்லாமல் புதிய தொழில் யோசனையையும் கொண்டு வந்து வெற்றி கண்டுள்ளார்.

வளர்மதி விஸ்வனாதன் 
வளர்மதி விஸ்வனாதன் 

விருதாச்சலத்தைச் சேர்ந்த வளர்மதி விஸ்வநாதன் 5ht அழகு நிலையத்தின் நிறுவனர். 2013ல் வீட்டில் இருந்துக்கொண்டே அழகு சேவைகளை பெரும் நடமாடும் அழகு நிலையத்தை அறிமுகம்படுத்தி தன் தொழில் பயணத்தை துவங்கினார். அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பை முடித்த வளர்மதிக்கு தொழில் தொடங்க வேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. ஆனால் கல்லூரி முடிந்தப்பின் வெளியில் வந்து தொழில் தொடங்க போதிய ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை.

“படிப்பு முடிந்தவுடன் என் ஊரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது அதனால் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன்...” என பேசத் துவங்குகிறார் வளர்மதி.

பணிக்கு சேர்ந்தவுடன் தன் தொழிலுக்கு தேவையான முதலீட்டை சேமிக்க துவங்கிவிட்டார். 5 மாதம் வேலை செய்தபின் வேலையை விட்டு தனது தொழில்முனைவர் பயணத்தை தொடங்கினார். பொறியியல் படித்து இருந்தாலும் சுயபராமரிப்பு, சேவைகள் மீது அதிக பற்றுக்கொண்டதால் அதையே தன் தொழிலாக எடுத்துக்கொண்டார்.

“நேரமின்மை காரணமாக பலர் தங்களை பராமரித்து கொள்வதில்லை, பெண்கள் தங்களை ரிலாக்ஸ் செய்துக்கொள்ள அழகு நிலையத்திற்கு போக வேண்டும் என்று நினைத்தால் குறைந்தது 3 மணி நேரம் தேவைப்படுகிறது.”

முகம் மற்றும் கை கால்களுக்கு அழகு நிலையத்தில் சேவைகளை எடுத்துக்கொண்டு ஒய்வு பெற்றால் கூட மீண்டும் வீடு திரும்புவதற்குள் கலைத்துவிடுகிறார்கள். சிலருக்கு பார்லருக்கு போக நேரம் கூட இருப்பதில்லை என்கிறார் வளர்மதி. இந்த சிக்கலை தீர்க்கவே வீட்டில் வந்து அழகு சேவை செய்யும் முறையை அறிமுகப் படுத்தியுள்ளார்.

வீட்டிற்கேச் சென்று சேவைகளை தருவதாலும் நிலையம் அமைக்க வேண்டிய தேவை இல்லாததாலும் வளர்மதிக்கு பெரியதாக முதலீடு தேவைப்படவில்லை. தான் பணியில் இருக்கும்போது சேமித்த பணமே போதுமானதாக அமைந்துள்ளது.

வீட்டில் நான் தொழில் தொடங்க முழு மனதாக ஒப்புக்கொள்ளாததால் நிதி உதவி ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. எனது சேமிப்பு மட்டும் தான் என் ஆதாயம்.

”பெரும் தொகை இல்லாததால் நான் முதலீடு செய்து வந்த சிறு லாபத்தையும் மீண்டும் நிறுவனத்தில் போட்டு படிப்படியாக என் நிறுவனத்தை முன்னேற்றிக் கொண்டு வந்தேன்,” என்கிறார் வளர்மதி.

தொடக்கத்தில் ஒப்பனையாளர், தெரப்பிஸ்ட் என மூன்று பேருடன் தன் நிறுவனத்தை துவங்கினார். வீட்டில் சேவை என்றாலே அழகு நிலையத்தில் கிடைக்கும் சேவை போல் இருக்காது என்ற சிந்தனை தான் பலருக்கும் இருக்கும். இந்த எண்ண ஓட்டத்தை மாற்ற வேண்டும் என்று சிறந்த தயாரிப்புகளையும், சேவைகளையும் உறுதி செய்துக்கொண்டார். சேவை அளிக்கும் போது அணியும் ஆடையில் இருந்து பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை அனைத்தையுமே நேர்த்தியாக தேர்ந்தெடுப்பதாக தெரிவிக்கிறார். 

வீட்டில் பார்லர் அனுபவம் பெறுவதால் வாடிக்கையாளர்கள் எதையும் சமரசம் செய்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. இதுவே இவர்களது தனிப்பட்ட விற்பனை புள்ளி ஆகும்.

“முதல் மூன்று மாதம் என் நண்பர்களுக்கு மட்டுமே எனது சேவையை அளித்தேன் அதில் இருந்து பல படிப்பினைகளை கற்றப்பின் முழுமையாக சென்னை முழுவதும் எங்களது சேவையை துவங்கிவிட்டேன்.”

2013ல் இந்த சேவையை முதலில் அறிமுகப்படுத்தியது 5ht நிறுவனம் தான் அதனால் மக்கள் இடத்தில் இந்த கருத்தை கொண்டு சேர்ப்பது சற்று கடினமாக இருந்தது என்கிறார் வளர்மதி. அதனால் சந்தையில் பிரபலம் அடைய சில காலம் எடுத்துக்கொண்டது. இருப்பினும் மார்க்கெடிங் என தனியாக செலவுகள் ஏதும் செய்யாமல் தனது சேவைகள் மீது நம்பிக்கை இருந்ததால் வாடிக்கையார்களின் வாய் வார்த்தை மூலமாகவே பல வாடிக்கையாளர்களை பெற்றுள்ளார்.

“அழகு நிலையத்தை வீட்டிற்கே கொண்டுவருவதால் பல வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவதோடு எங்களை தவிர வேறு எங்கும் சேவை பெறாமல் எங்களுக்காகக் காத்து இருக்கின்றனர். இதுவே எங்களது வெற்றி,” என்கிறார்

இன்று சென்னையில் 12 ஊழியர்களோடு இயங்கும் 5ht சலூனுக்கு 5 ஆயிரத்துக்கும் மேலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மற்ற மாநிலங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமாக ப்ரைடல் ஒப்பனைக்கு சென்னையில் இருந்து சென்று சேவை செய்து வருகின்றனர். தற்பொழுது கோவையில் தனது குழுவை அமைத்துள்ளார் வளர்மதி. கூடிய விரைவில் இன்னும் தனது சேவைகளை பெருக்க முயற்சி செய்து வருகிறார்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin