கிச்சன் கில்லாடிகள் பெண்கள் ஏன் தொழில்முறை செஃப் ஆக பிரபலமாக இருப்பதில்லை?

0

பெண்கள் எப்போதும் கிச்சன் கில்லாடிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். பின் ஏன் அவர்கள் பிரபல ரெஸ்டாரண்ட்களின் செஃப்பாக முடிசூட்டப்படுவதில்லை?

நவீன இந்தியப் பெண்கள்

1. சமையலை ரசிக்கிறார்களா?

2. வீட்டில் சமைக்கிறார்களா?

3. ப்ரொஃபஷனலாக சமைக்கிறார்களா?

இதில் முதல் இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியப் பெண்கள் ’தகுதியான இந்திய குக்’ என்கிற இடத்துக்கு உயர்த்தப்படுகிறார்கள். ஆனால் மூன்றாவதை தேர்ந்தெடுத்தால் என்ன?

இந்தியாவில் பெண் சமையல்காரர் மற்றும் பெண் செஃப் இரண்டும் முற்றிலும் வெவ்வேறாக உள்ளது. இந்திய வீட்டின் சமையலறை என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவில் வருகிறது? வட்டமான சப்பாத்தி, சுவையான அல்வா, காரசாரமான மட்டன் பிரியாணி, சாம்பார் சாதம் என பலதரப்பட்ட உணவுகளை ஒரு இந்திய தாய் சமைத்துக்கொண்டிருப்பது நினைவிற்கு வரும்.

இப்போது ஏதாவது ஹோட்டல் கிச்சனை கூர்ந்து நோக்கினால் அது ஆணாதிக்க துறை என்பதை நம்மால் எளிதாக தெரிந்துகொள்ள முடியும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஹோட்டல் கிச்சனில் பணிபுரிய அதிகமான உடலுழைப்பு தேவைப்படுவதால் பெண்களால் தினமும் அதை தாங்கிக்கொள்ள இயலாது என்று பலர் நம்புகின்றனர். 

எப்போதும் தயாராக இயங்கவேண்டும். அதிக சுமையை தூக்கவேண்டும். வேலை நேரம் உகந்ததாக இருக்காது. இந்த தொழில் பாரம்பரிய குடும்ப அமைப்பிற்கு எதிரானது. ஒருவர் தன்னுடைய வாழ்க்கையையும் குடும்பத்தையும் சமன்படுத்த முயற்சிப்பதில் போராட்டம் இருக்கும். ஆனால் எந்த தொழிலிலும் அதற்குரிய நன்மை தீமைகள் இருப்பதால் நாம் அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதைப் பொருத்தே அது அமையும்.

பெண்கள் எப்போதும் கிச்சன் கில்லாடிகளாக பார்க்கப்படுகின்றனர். இருந்தும் ஏன் உயர்ரக ரெஸ்டாரண்ட்களில் செஃப் எனும் பதவியை வகிப்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது? இந்தியாவில் தற்போதுள்ள பெண்கள் சமையல் துறையிலும் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டனர்.

சிறந்தவர்களுக்கு நிகராக திறன்படைத்தவர்கள் பெண்கள்

Puraw Vida நிறுவனத்தின் நிறுவனர் திவ்யா நிசானி, யோகா பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர். ஐயங்கார் யோகா ஸ்டைலை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கடந்த பத்தாண்டுகளாக பயிற்சியளித்து வருகிறார். உலகின் புகழ்பெற்ற சமையல் கல்வி நிறுவனமான கலிஃபோர்னியாவின் லிவிங் லைட் நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். மேலும் இவர் ஒரு துணை செஃப், பாஸ்ட்ரி செஃப் மற்றும் பயிற்சியாளர். 

பத்து வயது குழந்தைக்கு தாயான இவர் மைண்ட்ஃபுல்னெஸ் மற்றும் ஆரோக்ய வாழ்வு குறித்து அதிக அக்கறை கொண்டவர். ஆரோக்ய உணவு குறித்த ஆர்வமே இந்த துறையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. தற்போது சமைக்கப்படாத வகைகள், வேகன், தாவரம் சார்ந்த உணவு வகைகளில் குறிப்பாக குழந்தைகளுக்கான உணவு வகைகளில் வொர்க்‌ஷாப்கள் மற்றும் டெமோ நடத்தி வருகிறார்.

"பொதுவாக பெண்கள் வீட்டின் சமையலறையில் திறமைசாலியாக இருந்தாலும் ரெஸ்டாரண்ட் என்று வரும்போது ஆண்கள் இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கும்போது இது ஒரு மிகப்பெரிய சவால் என்றே தோன்றுகிறது. எனினும் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. பெண்கள் முன்வந்து உலகளவில் புகழ்பெற்ற செஃப்பாக தங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.” என்றார் திவ்யா.

பெண் செஃப்களைவிட ஆண் செஃப்களே மக்களை அதிகம் கவருகின்றனர். ஏனெனில் பெண்கள் செய்யவேண்டிய வேலையான சமையலைத்தான் பெண் செஃப்களும் செய்கிறார்கள் என்பதே மக்கள் கருத்து. ஆனால் ஆண்கள் ஏதோ அசாதாரண வேலையை செய்வதாக கருதப்படுகிறது. உணவு என்றவுடன் அது பெண்கள் சம்பந்தப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அதில் வென்று ஒரு கிரீடத்தை சூட்டிக்கொள்ளவேண்டும் என்றால் உடனே ஆண்கள் வந்துவிடுவார்கள் அல்லவா?

ஹோட்டல் கிச்சனில் ஆண்களின் ஆதிக்கம்தான் என்பதை ஒத்துக்கொள்கிறேன். இதற்குக் காரணம் வேலை நேரம். பெரும்பாலும் உங்களுடைய தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலிருந்தும் தேர்வுசெய்ய வேண்டி இருப்பதால் உலகெங்கிலுமுள்ள பெண் செஃப்கள் அதிகளவில் சமரசம் செய்துகொள்ளவேண்டிய சூழல் உள்ளது. நீங்கள் செஃப் சீருடையில் இருக்கும்போது நீங்கள் ஆணோ அல்லது பெண்ணோ அல்ல, வெவ்வேறு விதமான டிஷ்களை தயாரிக்கும் ஒரு செஃப். அவ்வளவுதான்.” என்றார்.

இந்தியாவிலுள்ள பெண் செஃப்களுக்கும் வெளிநாட்டிலுள்ள பெண் செஃப்களுக்க்கும் உள்ள வேறுபாடு குறித்து கேட்டபோது,

“வாடிக்கையாளர்களுக்கு செஃப் அளிக்கும் உணவு அலங்கரிக்கப்பட்டிருக்கும் விதத்தையும் உணவின் தரத்தையும் கொண்டு உடனடியாக ஒரு செஃப்பின் திறமையை தெரிந்து கொள்ளலாம். ஒரு செஃப் சமையலில் மட்டும் அதிக திறன் கொண்டிருந்தால் போதாது. மற்ற நாட்டு உணவு வகைகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். இந்தியாவிலுள்ள பெண் செஃப்கள் வெளிநாட்டிலுள்ள சிறந்த செஃப்ளுக்கு இணையாக திறம் படைத்தவர்கள் என்பதே மகிழ்ச்சியான செய்தியாகும்.”

மாஸ்டர் செஃப் போன்ற நிகழ்ச்சிகளால் இந்தத் துறை அதிகம் பிரபலமாகி உள்ளது. பெண்கள் வழக்கம் போல மிகச்சிறந்த செஃப் என்று அந்தத் துறையிலும் தங்களை நிரூபித்துள்ளனர். ஹோட்டல் துறையில் வெற்றி பெற்ற இந்தியாவின் சில பிரபலமான பெண் செஃப்கள் குறித்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் சமையல் கலை மற்றும் ப்ரசண்டேஷன் திறன் மட்டுமல்லாமல் சமையல் புத்தகங்கள் எழுதியுள்ளனர் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இவை அனைத்தும் உலகெங்கும் பலரது மனதை கவர்ந்துள்ளது.

வீணா அரோரா

வீணா அரோரா சுயமாக கற்றவர். அவரது மனதிற்கு தோன்றியவாறே சமைப்பார். தாய்லாந்தில் பிறந்து வளர்ந்த இவர் 1980-ல் தன்னுடைய அதீத விருப்பத்தை வாழ்க்கைப் பாதையாக மாற்றினார். வீணா ஒரு ஆலோசகர். புதுதெல்லியின் தி இம்பீரியல் ஹோட்டலின் Chef de Cuisine. புகழ்பெற்ற லலித் போன்றவற்றுடன் பணிபுரிந்துள்ளார். சுற்றுலா அமைச்சகத்தால் பெஸ்ட் லேடி செஃப் என்கிற விருது ஃபுட் N நைட்லஃப் என்கிற பத்திரிக்கையால் கோர்மெட் குரு விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

காமினி ஜா

Oberoi-ன் தலைமை செஃப்பான இவர் பனீர் டிக்கா, சிக்கன் டிக்கா, தந்தூரி நான் மற்றும் அஜ்வயினி மச்சி ஆகிய தயாரிப்புகளில் இணைந்துள்ளார். இவர் பத்து வயதில் சமைக்கத் தொடங்கினார். இன்றும் அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு சமையல்தான் என்கிறார் இவர். தந்தூரி உணவுவகைகள் இவரது சிறப்பு. இது இவரை திரும்பிப் பார்க்க வைத்தது. 

ரித்து டால்மியா

இவரும் சுயமாக கற்ற செஃப். இத்தாலிய சமையல் வகைகளில் பிரசித்தி பெற்றவர். டிவி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இத்தாலிக்கு பயணித்த பிறகு இத்தாலிய சமையல் மீதான ஆர்வம் அதிகரித்தது. டெல்லியின் ஹாஸ் காஸ் கிராமத்தில் அவரது 21வது வயதில் மெஸ்ஸாலுனா என்கிற ரெஸ்டாரண்டை அவர் அறிமுகப்படுத்தினார். இன்று டெல்லியில் ரித்துவிற்கு ஏழு ரெஸ்டாரண்ட்கள் உள்ளன. இதில் டெல்லியின் தெற்குப் பகுதியில் இருக்கும் திவா மிகவும் பிரபலமானது.

மது கிருஷ்ணன்

மது கிருஷ்ணன் இந்தியாவின் மிகச்சிறந்த செஃப்களில் ஒருவர். ஹோட்டலியர்ஸ் இந்தியா விருது, செஃப் ஆஃப் தி இயர், 2010, இன்க்ரெடிபிள் இந்தியா, சிறந்த லேடி செஃப் ஆஃப் தி இயர்-க்கான (2005-2006) நேஷனல் டூரிசம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடும் உழைப்பிலும் சிறப்பாக உணவு தேர்வு செய்வதிலும் பிரசித்தி பெற்ற மும்பையின் ITC க்ராண்ட் மராத்தாவின் சீஃப் எக்சிக்யூடிவ் செஃப்பான இவர் 1996-ல் திறக்கப்பட்ட வெஸ்ட் வ்யூ, ITC மயூரா ஆகியவற்றில் பெரிதும் பங்களித்ததார்.

நிடா நாகராஜ்

இந்தியாவிலுள்ள மிகக்குறைவான கார்ப்பரேட் செஃப்களில் சிறந்து விளங்குபவர் நிடா நாகராஜ். Jaypee ஹொட்டல்ஸின் கார்ப்பரேட் செஃப்பான இவர் முப்பது வருடங்களுக்கு முன்பு செஃப்பாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். சமையல் ஒருபோதும் அவரது கனவாக இருந்ததில்லை என்கிற இவர் தொடங்கிய சில மாதங்களில் இந்தத் துறையை விட்டு விலகிட விரும்பியிருக்கிறார். காண்டினெண்டல் உணவு வகை இவரது சிறப்பு. ப்ரொஃபஷனலாக பயிற்சிபெற்ற செஃப். Jaypee-யில் இணைவதற்கு முன்பு Oberoi மற்றும் தாஜ் குரூப்பில் பணிபுரிந்துள்ளார். பாஸ்தா, ஐஸ்க்ரீம், தந்தூரி சமையல் என ஹோட்டல் துறை சிறந்து விளங்கும் வகையில் பெண்கள் சமையலறையில் ஒரு புரட்சியே செய்துள்ளனர்.

அனைத்து கிச்சன் ராணிகளின் சாதனைகளுக்கும் ஒரு மிகப்பெரிய சபாஷ்!

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா எஸ் நாயர்