உடற்பயிற்சியை சுவாரசியமானதாக மாற்றும் ஹாபிக்ஸ்

ஒருவர் ஹைதராபாத்தை சுற்றிலும் உள்ள பல உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்தும் வாய்ப்பை ஹாபிக்ஸ் வழங்குகிறது

0

ரஜத் ஜெயின், ஹைதராபாத்தில் அவர் அடிக்கடி சென்று வரும் உடற்பயிற்சி கூடத்தின் வருடாந்திர உறுப்பினர் அட்டை முடிவடைந்திருந்தது. அந்த அட்டையை புதுப்பிப்பதை அவர் விரும்பவில்லை. புதிதாக எதாவது முயற்சிக்கலாமா என யோசித்துக்கொண்டிருந்தார்.

“எனக்கு அந்த அனுபவம் பிடிக்கவில்லை. காரணம் வருடாந்திர உறுப்பினராக இருந்துகொண்டு இரண்டு மாதம் மட்டும் அவ்வப்போது சென்று வந்தேன் அவ்வளவுதான். முதல் சில வாரங்கள் பயிற்சியாளர்கள் மிகச்சிறப்பாக பயிற்சியளித்தார்கள். ஆனால் அவர்களே என் தனிப்பட்ட பயிற்சியாளர்களான பிறகு என்னை புறக்கணிப்பதாக உணர்ந்தேன். அதுமட்டுமல்லாமல் எனக்கு உடற்பயிற்சி செய்வதில் உள்ள ஆர்வமே குறைந்துவிட்டது” என்கிறார் ரஜத்.

ரஜத் தனது சக்திக்குட்பட்டதாக ஒன்றை தேடிக்கொண்டிருந்தார். அது அவரை தொடர்ச்சியாக ஊக்குவிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார். கொண்டாபூர் பகுதிகளில் இருக்கும் உடற்பயிற்சி கூடங்கள் பற்றிய தகவலுக்காக ஜஸ்ட்டையலில் விண்ணப்பித்த சில மணிநேரங்களில் அவருக்கு ஒரு கால் வந்தது. அழைத்தவர் ஜடின் பன்சால். "ஹாபிக்ஸ்" (Hobbyix) நிறுவனத்தின் நிறுவனர். ஒருமாதத்திற்கான பாஸ் எடுத்தாலே போதும், அதன் மூலம் நகரத்தில் உள்ள 120 உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும், என அவர் சொன்னது ரஜத்துக்கு பிடித்திருந்தது.

”இரண்டாயிரம் ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் அதிகமானவற்றை பயன்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜும்பா, நீச்சல் போன்றவை எனக்கு முற்றிலும் புதியதானது, இதையெல்லாம் முயற்சி செய்து பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்கிறார் ரஜத்.

யுரேக்கா தருணம்

சில வருடங்களுக்கு முன்பு ஜடினும் ரஜத் போல தான். அதிகமான பணத்தை வருடாந்திர கட்டணமாக செலுத்த தயங்கினார். ஏனெனில் வருடம் முழுவதும் முழுமையாக பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிந்திருந்ததே.

”யூ.எஸ்ஸில் க்ளாஸ்பாஸ் என்ற முறை பற்றி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் இத்தனை முறை ஒரே உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறார்கள். அதே போன்ற திட்டம் இந்தியாவில் பலனளிக்கும் என எனக்கு தோன்றவில்லை. எனவே தான் நான் இது போன்ற திட்டத்தை உருவாக்கினேன்” என்கிறார் ஜடின்.

நிறுவனம் பிறந்த கதை

ஜடின், ஐஐடி-டெல்லியில் படித்தவர், அவர் நண்பர் அபிஷேக் பாட்டியா என்.ஐ.டி குருக்‌ஷேத்ராவில் படித்தவர். இருவரும் சேர்ந்து நவம்பர் 2014வரை ஹாபிக்ஸ்காக பகுதிநேரமாக வேலைபார்த்தார்கள். இந்த வாய்ப்பை வெற்றியடைய செய்ய வேண்டுமானால் முழுநேரமாக இதற்காகவே உழைக்க வேண்டும் என்பதை சீக்கிரமே புரிந்துகொண்டார்கள்.

உடற்பயிற்சிக்கூடங்களின் இயக்கியவியலை ஆராய்ந்த போது, வருடாந்திர பாஸ் எடுத்திருப்பவர்களில் வெறும் 25லிருந்து 30 சதவீதம் பேரே தொடர்ச்சியாக உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வது தெரியவந்தது. இது இவர்களுக்கு நம்பிக்கையளித்தது. இதன் காரணமாகவே ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அளவில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் நான்காயிரம் பேருக்கு குறி வைக்கிறார்கள் என புரிந்துகொண்டார்கள்.

”ஒரு உடற்பயிற்சி கூடத்தில் உறுப்பினராக சேருகிறவர்கள் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான பயிற்சிகளையே செய்வதால் அவர்கள் எளிதில் சலிப்படைந்து விடுகிறார்கள். எனவே அடிக்கடி செல்வது தடைபடுகிறது. நாங்கள் இந்த அனுபவத்தை வேடிக்கையானதாகவும், ஈடுபாடு அளிக்கக்கூடியதாகவும், அற்புதமானதாகவும் ஆக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றில் ஈடுபடக்கூடிய வாய்ப்பளிக்கிறோம்” என்கிறார் ஜடின்.

இது வெற்றியடையவே அடுத்த சில மாதங்களில் ஜடினும், அபிஷேக்கும் தங்கள் வேலையை விட்டுவிட்டு ஹாபிக்ஸ் என்ற நிறுவனத்தை ஜூன் 19ம் தேதி துவங்கினார்கள்.

ஹாபிக்ஸின் சிறப்பம்சம்

ஹாபிக்ஸ் எண்ணிக்கை சார்ந்த மாதாந்திர உறுப்பினர் அட்டையை வழங்குகிறார்கள். இதன் மூலம் பல்வேறு உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்தும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கிறது. ஒருவர் 1,999ரூபாய்க்கு 30 தடவை(credit) பயன்படுத்தலாம். இதன் மூலம் ஹைதராபாத்திலுள்ள 120 நிலையங்களில் 300 வகையான பயிற்சிகளை எடுத்துக்கொள்ள முடியும்.

“பெரும்பாலான உடற்பயிற்சி கூடங்கள் ஒரு முறை பயன்படுத்த ஒரு க்ரெடிட் தான் எடுத்துக்கொள்கிறார்கள். சில குறிப்பிட்ட பயிற்சிக்கூடங்கள், அதாவது டோலிவுட் நடிகர்கள் பயன்படுத்தும் உடற்பயிற்சி கூடங்கள் போன்றவை மூன்று க்ரெடிட் வரை எடுத்துகொள்கிறார்கள். ஒருவர் தன் க்ரெடிட்டை விருப்பம் போல் பயன்படுத்தலாம். இது போன்ற மீள்தன்மையிலான சேவையை வழங்கவே எங்கள் நிறுவனம் விரும்புகிறது” என்கிறார் ஜடின்.

ஒருவர் பணம் செலுத்திய உடனே இணையத்திற்கு சென்று எந்த வகுப்பை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அது உறுதியான பிறகு விண்ணப்பித்தவர் பற்றிய தகவல் பயிற்சியாளருக்கு குறுஞ்செய்தியாக செல்லும். வகுப்பு துவங்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு கூட ஒருவர் விண்ணப்பிக்க முடியும். யோகா, ஜிம், நீச்சல், குத்துச்சண்டை என ஒருவர் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.

“ஒருவர் தினமும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி செய்வதால் சலிப்படைந்து உடற்பயிற்சியை கைவிட வேண்டியதாகிறது. தினந்தோறும் புதிது புதிதான ஒன்றை முயற்சித்து பார்க்கும் வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம்” என்கிறார் ஜடின்.

சந்தையும் போட்டியும்

இந்திய உடற்பயிற்சி சந்தையின் மதிப்பு 2015ஐ பொருத்தவரை நூறு பில்லியனாக இருக்கிறது. இது ஒவ்வொரு வருடமும் இருபதிலிருந்து இருபத்தைந்து சதம் வரை உயர்ந்துகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தை சரிவர ஒருங்கிணைக்கப்படாத காரணத்தால் இணைபவர்கள் எண்ணிக்கை குறைவாகவும்,சிலர் வருடம் வருடம் தங்கள் கணக்கை புதுப்பிக்காமல் இருப்பதற்கும் வாய்ப்பாக அமைகிறது.

இதையெல்லாம் சரிசெய்ய, ஃபிட்னஸ்பாபா, ஜிமர், ஜிம்பிக் போன்ற புதிய நிறுவனங்கள் முயற்சித்துவருகிறார்கள். மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை ஒரு உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்த இவர்கள் வாய்ப்பளிக்கிறார்கள்.

இன்று மற்றும் நாளை

ஒரே ஒரு மாதத்தில் ஹைதராபாத்திலிருந்து 700 வகுப்புகள் வரை ஹாபிக்ஸ் மூலமாக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. “எதிர்காலம் சிறப்பாக தெரிகிறது. ஹைதராபாத் முழுக்க இதை பரவலாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அடுத்த காலாண்டிலிருந்து மற்ற பெருநகரங்களில் துவங்கவும் திட்டமிருக்கிறது. புதிதாக வாழ்க்கைமுறை சார்ந்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இசை, புகைப்படம், சமையல் மற்றும் நடனம் போன்றவற்றை இது கொண்டிருக்கும்” என்கிறார் ஜடின்.

இணையதள முகவரி : Hobbyix