ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்ற சென்னை பெண் அக்‌ஷயா சண்முகம்!

0

தொடர்ந்து இரண்டாவது வருடமாக சென்னையைச் சேர்ந்த இளம் பெண், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான ஃபோர்ப்ஸின் '30 அண்டர் 30' பட்டியலில் இடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 29 வயதான அக்‌ஷயா சண்முகம், சுகாதாரப் பிரிவில் முப்பது வயதுக்கு கீழ் சாதனைப் படைத்தோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

Lumme Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் போதை பொருளுக்கு அடிமை ஆனவர்களை வெளிக்கொண்டு வரும் மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

யார் இவர்?

சென்னை செட்டினாடு வித்தியாஷ்ரம் பள்ளியில் படித்து முடித்த அக்‌ஷயா, மீனாட்சி- சுந்தராஜன் பொறியியல் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து 2009-ல் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார். அங்கு PhD படிக்கும்போது, சுகாதார கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்குவதில் ஈடு பட்டிருந்தார். அப்பொழுது அணியக்கூடியவை பற்றி ஆரய்ச்சி மேற்கொண்டிருந்த அபினவ் பரேட்வை சந்தித்தார். அதன் பின் அக்‌ஷயா, அபினவ் மற்றும் சில பேராசிரியர்கள் இணைந்து உலகளவில் போதைக்கு அடிமையாக்கும் சிக்கல்களுக்கு தீர்வுக்கான Lumme நிறுவனத்தை நிறுவினர்.

கருவியின் பயன்பாடு

கைகடிகாரம் போல் அணியக்கூடிய இந்த கருவி புகைப்பிடிப்பவர்களின் அசைவை அறிந்து, புகைப்பிடிக்க வேண்டாம் என்று ஒரு அறிவிப்பை அனுப்பும். டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் பகிர்ந்த அக்‌ஷயா,

“எங்கள் சாதனம் தானாகவே போதை பழக்கங்களைக் கண்டறிந்து, தலையிட்டு அதை தடுக்கிறது. தங்கள் அன்றாட வாழ்வில் சிறந்த நுண்ணறிவுகளைப் பெற இது உதவுவதோடு ஏன், எப்படி, மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை தேர்வுகள் எவ்வாறு உள்ளது என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது,” என்கிறார்.

இந்த தொழில்நுட்பம் மருத்துவரீதியாக சரிபார்க்கும் செயல்முறையில் உள்ளது, அதனை தொடர்ந்து 2018-ல் இதை வெளியிட உள்ளனர்.

“முதல் கட்டமாக, புகைப்பிடித்தலை நிறுத்தும் தளத்தை வெளியிட உள்ளோம். வெளியிட்ட பிறகு பெரும் நிறுவனங்களுடன் இணைய உள்ளோம், பணியாளர் நல திட்டங்களுக்கு இதை பயன்படுத்தலாம்,” என்கிறார்.

இரண்டு தடவை முயற்சி செய்து பார்த்தபோது 95% துல்லியமாக இந்த மென்பொருள் கணித்துள்ளது.

கருவியின் செயல்பாடு

இது எவ்வாறு வேலை செய்கிறது என விளக்குகிறார் அக்‌ஷயா. முதல் இரண்டு வாரங்கள் இந்த ஸ்மார்ட் கை கடிகாரத்தை அணிந்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு வாரம் முழுக்க நம் செயல்கள், நேரம், நம் தினசரி வேலை அனைத்தையும் கவனித்துகொள்ளும் இந்த கருவி. இதன் மூலம் அந்த நபரின் புகைப்பிடிக்கும் நேரம், இடைவெளி போன்றவற்றை கணித்துகொள்ளும். அவரின் தினசரி வேலையின்படி அடுத்து எப்பொழுது புகைபிடிப்பார் என்பதை கணிக்க முடியும். அப்படி கணித்த பிறகு, புகை பிடிக்க செல்லும் 6 நொடிக்கு முன்பு எச்சரிக்கையை அறிவித்துவிடும்.

மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம், அமெர்ஸ்ட், மற்றும் யேல் மருத்துவ கல்லூரியில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். தேசிய சுகாதார நிறுவனங்கள் இந்நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளது, நிதியளிப்பில் $ 1.7 மில்லியன் நிதி திரட்டப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸில் இடம் பெற்றதை பற்றி பேசிய அக்‌ஷயா,

“இந்த பட்டியலில் இடம் பெற்றது மிகவும் பெருமைக்குரியது ஆகும். இது நாங்கள் இன்னும் வளர எங்களை தூண்டியுள்ளது,” என்கிறார்.