நியாய வர்த்தகத்திற்காக 450 கிலோமீட்டர் நடைப் பயணம் !

0

ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் ஓடிக் கொண்டே இருக்கும் நாயகன் போல, விளைவை எதிர்பார்த்து நடந்துக் கொண்டே இருக்கின்றனர் புஷ்பநாத் கிருஷ்ணமூர்த்தியும், நடேச ஐயரும்! புதுச்சேரியிலிருந்து ஊட்டி வரை 450 கிலோமீட்டர் நடந்துக் கொண்டிருந்த, வழியில் ஓய்வுக்காக எடுத்திருந்த சிறு இடைவேளையில் அவர்களைச் சந்தித்தேன்.

கடலூரில் இருக்கும் குறிஞ்சிப்பாடி என்னும் சிறு கிராமம் தான் நடேச ஐயரின் பிறப்பிடம். 1930 ல் இருந்து கைத்தறியில் ஈடுபட்டிருந்த குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலுமே, பிற்காலத்தில், அதை தொடராததால், எனக்கு அது பற்றின தெளிவான அனுபவம் இல்லாததாய் போனது எனச் சொல்லும் நடேச ஐயர்,

“என் தாத்தாவின் சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவருடைய நினைவுகளையும், அனுபவங்கள் சிலவற்றையும் நான் என்னோடு எடுத்து செல்கிறேன். அதன் காரணமாகத் தான் சமூக நலனுக்காக செயல்படுகிறேன்”, என்கிறார்.

ஆங்கில இலக்கியம் படித்திருக்கும் நடேச ஐயர், எம்.பி.ஏ படிப்பை முழுமையாக கற்காவிட்டாலும், தன் பத்தொன்பது வயதில், பாண்டிச்சேரியிலுள்ள ஒரு ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.

“அப்போது வரை நவீன சேவைகள் எதுவும் இல்லாது இருந்த ஹோட்டல் அது. மாதத்திற்கு எண்பதாயிரம் ஈட்டிக் கொண்டிருந்த ஹோட்டலை, துணிச்சலோடு, மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஈட்டிக் காட்டுவதாய் சொன்னேன். வணிகத்தை முன்னேற்றும் வகையில், எக்ஸ்பீடியா போன்ற சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகளுடன் கூட்டாண்மை வைத்துக் கொண்டேன். இப்படி ஏறத்தாழ மூன்றரை வருடம் வரை செய்த அந்த பணியின் மூலமாக எனக்கு இந்தத் துறையின் மீது ஒரு ஆழமான புரிதல் ஏற்பட்டது.

அநேக நேரங்களில், ஹோட்டல்களின் பட்ஜெட் வெளிப்படையக இருக்காது. இந்தியாவில், பெரும்பாலும் இருக்கும் நிலை இது தான். ஒன்று, நிறைய செலவழித்து சொகுசான ஹோட்டல்களில் தங்க வேண்டியிருக்கும்; அல்லது, ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களில் தங்க வேண்டியிருக்கும். இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் ஒரு குழுவின் தேவையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற சேவையை அளிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். எனவே, என்னைப் போலவே, இந்தத் துறையில், முன்னேற விரும்பும் பிறருக்கு நான் அறிவுரை சொல்லத் தொடங்கினேன்.

அப்படித்தான் தான் என் தொழில்நுட்ப தொழில் முனைவு தொடங்கியது. அது முக்கியமாக, விருந்தோம்பல் துறையை சார்ந்து இருப்பது தான். இப்போது வரை, பன்னிரண்டு வாடிக்கையாளர்களை பார்த்துக் கொள்கிறோம், அதாவது, அவர்களுடைய ஹோட்டல்களின் மொத்த நடவடிக்கைகளையும் நாங்கள் தான் பார்த்துக் கொள்வோம். அதன் மூலமாக, தங்கியிருக்கும் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்துகிறோம். பாண்டிச்சேரியின் நூறு ஹோட்டல்களை மேம்படுத்த உதவியிருக்கிறோம். மெல்ல மெல்ல எங்கள் சேவையை விரிவு படுத்துவோம்.

தொழில் முனைவர்களை ஊக்குவிக்கவும், குழந்தைகளுக்கு மத்தியில் ஆக்கப்பூர்வத் திறனை வளர்க்கவும், கல்வி முறையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே ‘நேச்சுரா’ (Natura) எனும் அமைப்பு உருவானதற்கு அடிப்படை காரணம்.

வணிகம் ஒரு புறம் இருந்தாலும், சமூக நலனிற்காக சில சேவைகளும் செய்து கொண்டிருக்கிறோம். அதன் மூலமாக, மூன்று வாரம் முன்பு ஒரு கருத்தரங்கில் பங்கேற்க சென்ற போது, புஷ்பநாத்தை சந்தித்தேன். அப்போது அவர், பருவநிலை மாற்றத்தின், ஏழைகளின் மீதான தாக்கம் மற்றும் நியாய வர்த்தகத்தை வலியுறுத்துதல் என்னும் இரண்டு காரணங்களுக்காக புதுச்சேரியிலிருந்து ஊட்டி வரை 450 கிலோமிட்டர் தூரம் நடந்தே செல்வதாய் எடுத்திருக்கும் முடிவை சொன்னார்”, என்றபடியே புஷ்பநாத்தை அறிமுகப்படுத்துகிறார்.

இந்த ‘நடையை’ப் பற்றிச் சொல்லுங்கள்...

“அதீத அநீதி இருக்கும் ஒரு சூழலிற்கு என்னுடைய பதில் தான் இந்த நடை. வீட்டில் வருமானம் இல்லாததால், நான் ஏழு வயதில் குழந்தை தொழிலாளராக வேலை செய்தேன். என் கல்வி கிட்டத் தட்ட நிலைகுலைந்து போனது. பிற்காலத்தில், ஆக்ஸ் ஃபாம் என்னும் பிரிட்டன் அமைப்பின் மூலமாக, வறுமை சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளை கண்டிருக்கிறேன், என்கிறார் புஷ்பநாத்.

ஒரு முறை உகாண்டா சென்றிருந்த போது, வயது முதிர்ந்த சில பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். நிச்சயமாக, என் தாயை அந்த நிலையில் பொருத்திப் பார்க்க முடிந்தது. என் அம்மாவும் இது போலத் தானே, சமைத்துக் கொண்டு பேசிக் கொண்டும் தானே இருப்பார்? இதைப் பற்றி நிச்சயம் எதாவது செய்யப் போவதாய் நான் முடிவெடுத்தேன். உலகை மாற்ற வேண்டும் என நினைத்தால், அந்த மாற்றமாய் நீங்களே இருங்கள். அவ்வளவுதான். அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, ஆக்ஸ்ஃபோர்டில் இருந்து கோப்பன்ஹேகன் வரை நடந்தேன். பலரை சந்தித்து, பல கதைகள் பேசி, சர்வதேச ஊடகத்தின் கவனத்தை பெற்றேன்.

எனவே, இரண்டாவது முறையாக, தேயிலை வணிகம் தொடர்பான கோட்பாடுகளை வலியுறுத்தி, சிக்மங்களூர் அருகே இருக்கும் பாபா புடன் கிரியிலிருந்து மைசூர் வரை நடந்தேன். காஃபி டு கோ? (Coffee to Go?) என்றொரு புத்தகத்தையும் எழுதினேன். தற்போது, இந்த ‘நடை’யின் மூலமாக நியாய வர்த்தக முறையின் தாக்கம் பருவ நிலை மாற்றத்தின் போது எப்படியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம்”, என்கிறார் புஷ்பநாத்.

நியாய வர்த்தகம் என்றால் என்ன?

நீங்கள் ஒரு சட்டை அணிந்திருக்கிறீர்கள். இந்தச் சட்டையை உற்பத்தி செய்ய, 250 கிராம் பருத்தி உபயோகப்பட்டிருக்கும். அந்த 250 கிராம் பருத்தியை வணிகருக்கு கொடுக்கும் போது, விவசாயிக்கு 20 ரூபாய் கிடைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் இந்தச் சட்டையை முன்னூற்று ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பீர்கள். இந்நிலையில் நாங்கள் கேட்பது, உற்பத்தி செய்யும் அந்த ஏழை விவசாயிக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்பதே. மற்றும், பருத்தி போன்ற அடிப்படை பொருட்களை வாங்கும் போதும், இயற்கைக்கு மாசு ஏற்படாத முறையில் அது நிகழ வேண்டும். அம்முறை இயற்கையோடு ஒன்றிப் போக வேண்டும். தற்போதைய சூழலில், நியாய வர்த்தக முறை ஒரு விடையாகவும், துவக்கமாகவும் இருக்கலாம் என நம்புகிறோம்.

இடைத் தரகர்கள்

இதை போன்ற துறைகளில் வணிகம் நடக்கும் போது, இடைத் தரகர்கள் இருப்பார்கள். எனவே, உலகம் முழுவதும் இருக்கும் 13 நிறுவனங்கள் ஒன்றிணைந்து, ஹைதராபாத்தில் இருக்கும் சேத்னா என்னும் அரசு சாரா அமைப்புடன் கை கோர்த்து, 35000 விவசாயிகளுக்கு, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் சேத்னா மூலமே கொள்முதல் செய்யப்படும் என்றும் வாழ்வாதாரக் கூலிக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதன் மூலமாக, விவசாயிகள் ஆளாகும் பிரச்சனைகள் சில தீர்க்கப்படுகின்றன.

“இதன் காரணமாகவே, நியாய வர்த்த்கத்தை வலியுறுத்தி, நடந்து அதன் மூலம் பணம் திரட்டினேன். முன்னர் நியாய வர்த்தகம் என்பது வாடிக்கையாளர் நடவடிக்கை. இந்தியாவில், முப்பது வருடங்களாக, நியாய வர்த்தக முறையில் பொருட்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி தான் செய்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தற்போது, இந்திய நியாய வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறோம். எல்லா நகரையுமே நியாய வர்த்தக் முறைக்கு கொண்டு வரலாம். ஏனெனில், 1900 நியாய வர்த்தக நகரங்கள் உலகில் இருக்கின்றன”, என்கிறார் புஷ்பநாத் கிருஷ்ணமூர்த்தி.

நடந்து, நடந்து கால்கள் அற்புதமான பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்த நடை பல அற்புதமான மனிதர்களை அறிமுகபடுத்தியிருக்கிறது. என்னையும் என் விநோத சிகை அலங்காரத்தையும் பார்த்து, ‘எங்க போற இப்படி நடந்துக் கிட்டு?’ என்று கேட்ட முதியவர், என்னை சரியாக கவனிக்காமல், பைக்கில் கடந்து சென்றுவிட்டு, திரும்பி வந்து என்னைப் பார்த்த ஒருவர், ஓடி வந்து எனக்கு பரிசளித்த குழந்தை ஒன்று என பல அழகான உள்ளங்களை சந்திக்கும் வாய்ப்பு.

சிறப்பு என்னவென்றால், இப்போது, உலக அளவில் மக்கள் எங்களோடு நடந்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களோடு நடக்க முடியாவிட்டால் நீங்கள் இருக்கும் இடத்தில் நடக்கத் தொடங்குங்கள். பார்க்கில் நடக்க முடியாவிட்டால் வீட்டில் நடை போடுங்கள்”, எனச் சிரிக்கின்றனர்.

இந்த நடையின் போது இவர்கள் சந்தித்த மனிதர்களின் கதைகளை, பாரிசில் நடந்த ‘கான்ஃபரன்ஸ் ஆஃப் பார்ட்டிஸ்’-ன் , முக்கிய நபர்கள் அறிந்தனர் என்பது கூடுதல் மகிழ்ச்சி!

சுயநலமற்ற சேவைகள் நிச்சயம் அதன் லட்சியத்தை நிறைவு செய்யும். நமக்காக, குளிரிலும் பனியிலும் நடந்து களைக்கும் நடேச ஐயர் மற்றும் புஷ்பநாத் கிருஷ்ணமூர்த்தியை கைதட்டி உற்சாகப்படுத்துவோம், பின் கரம் கோர்த்து அவர்களின் உன்னத நோக்கிற்கு உறுதுணையாய் நிற்போம்!

மேலும் விவரங்களுக்கு: Walk for Fair Trade