விளம்பரத் துறையிலிருந்து ஓவியக்கலையில் தன்னை நிலைநாட்டிக்கொண்ட வந்தனா ஜெயின்!

0

விளம்பரத் துறையில் பன்னிரண்டு வருடங்கள் பணியாற்றிய வந்தனா ஜெயின் தனக்கான தேடலில் ஈடுபட்டார், அதன் விளைவாக "ப்ரிட்டி பிங்க் பெபுல்ஸ்" (Pretty Pink Pebbles) என்ற நிறுவனத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.

'மகிழ்ச்சியை உருவாக்குபவர்' என இவரை அடையாளப் படுத்திக்கொள்ளவே விரும்புகிறார். தான் இந்த உலகத்தில் பிறக்கக் காரணம் உண்டென்று நம்பும் அவர், தன்னை சுற்றிலும் சந்தோஷத்தை விதைக்கவே விரும்புகிறார். கலை மூலம் அன்றாட வாழ்வை மகிழ்விக்க முடியும் என்பதே அவர் எண்ணமாக இருக்கிறது.

"எல்லோர் வீட்டிலும் வசதியான இடம் இல்லாவிட்டாலும், நமக்கென வசதியான மூலையை விரும்புகிறோம், இதற்கு கலை ஓவியம் கை கொடுக்கிறது" என்கிறார் வந்தனா. கலையுலகில் அனா ஜெ என்றழைக்கப்படுகிறார்.

அனா என்பது அவர் பெயரின் கடைசி மூன்றெழுத்து, ஜெ என்பது அவரது குடும்பப் பெயரின் முதல் எழுத்து. அமெரிக்க மற்றும் ஹீப்ரு மொழியில் இதற்கு கருணை என்றும் அர்த்தம் பொருந்துவது குறிப்பிடத்தக்கது.

ப்ரிட்டி பிங்க் பெபுல்ஸ் ஒரு வலைபதிவாகத் தான் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அதுவே வலைதளமாக உருபெற்று இரண்டு வாரங்கள் தான் ஆகின்றன.

தன்னுடைய ஓவியங்களை விற்க ஆரம்பித்துள்ளார், சில ஓவியங்கள் விற்பனை ஆகியுள்ள நிலையில் அதற்கான வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார்.

ஆன்லைன் மூலம் ஓவிய வர்த்தகம் தற்பொழுது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. படைப்பாளிகள் தங்களுடைய பெயரை நிலைநாட்டக் கூடியதுடன், வர்த்தகம் செய்யவும் முடிகிறது. "கலை ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது" என்கிறார் வந்தனா.

வந்தனாவை பற்றி ...

தனக்கென ஒரு பிராண்டை உருவாக்கியுள்ள வந்தனா, ஓவியர் மட்டுமின்றி ஒரு எழுத்தாளரும் கூட. வருங்காலத்தில் கையால் வரையப்பட்ட அங்கிகள் மற்றும் உயர் வகை தயாரிப்புகளை "அப்ஸ்டிராக்ட் ஹார்மநீஸ்" என்ற பெயரில் வர்த்தகம் செய்ய உள்ளார்.

டெல்லி பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் டெல்லி இன்ஸ்டிட்யூட் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் டெக்னிகல் எடுகேஷனில் கலையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். இந்தியாவின் தலை சிறந்த விளம்பர நிறுவனங்களான லிண்டாஸ், கிரே வேர்ல்ட்வைட், பாப்லீசிஸ், JWT, FCB உல்கா போன்ற நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். இங்கு இந்தியாவின் முன்னணி ப்ராண்ட்களான நேச்ட்லே, பெப்சி, சாம்சங், வேர்ல்பூல், மாருதி சுசுகி, டிஷ் டிவி, டாபர், எச்பி போன்ற நிறுவனங்களுக்கு விளம்பர உத்திகளை வடிவமைத்துள்ளார்.

தொழில் முனைவு பற்றி ..

வலைபதிவு ஆரம்பித்தது முதல், தான் நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக கூறுகிறார். இணையதளம் உதவியுடன் தானே வலைதளத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.

"இந்த முயற்சி அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை, என் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது. பாப் அப் நிலையங்கள் மூலம் வர்த்தகம் செய்கிறேன். பேக்கேஜிங், அச்சிடல் ஆகிவற்றிற்கு நிறையவே செலவு செய்துள்ளேன்" என்கிறார் இந்த ஓவிய தொழில்முனைவர்.

தன்னை ஒரு கலைஞராகவே முன்னிறுத்திக் கொள்ள ஆசைப்படுகிறார். எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் ஓய்வு நேரங்களில் சிறு கதை தொகுப்பையும் எழுதுகிறார்.

கைவரை ஓவியங்களையும் மேற்கொள்ளும் அவர் கலையை ஃபேஷன் உத்திகளுடன் ஒன்றிணைக்கவே விரும்புகிறார். சில நகை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து உயர் வகை தயாரிப்புகளிலும் ஈடுபட விருப்பம் என்கிறார்.

தனது சேமிப்பு முழுவதையும் இதில் முதலீடு செய்துள்ள இவர், தனது கலை முயற்சியை மேலும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளார். கைவரை ஓவியங்கள் மற்றும் ப்ரேத்யேக ஓவியங்கள் என பல்வேறு லிமிடெட் எடிஷனையும் கொண்டு வரவுள்ளார். "எந்த வித கலையானாலும் அது கலையே, ஒவ்வொன்றிற்கும் ஒரு அனுபவும், காரணம் இருக்கிறது." என்கிறார் வந்தனா. கலை என்பது தெய்வீகமானது.

மகனின் கலை ஆர்வம்

தனது குடும்பம் மிக பெரிய பக்க பலம் என்பதில் பெருமிதம் கொள்கிறார். தனது ஏழரை வயது மகன் கூட கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான் என்கிறார்.

"பள்ளி முடித்து திரும்பியவுடன் எனது ஸ்டுடியோவுக்கு விரைவான், இன்று நான் என்ன படைப்பு என்று அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வம். அவனுடைய முகத்தில் காணும் சந்தோஷம் அவ்வளவு நெகிழ்ச்சியை தரும். எனது ஸ்டுடியோ சந்தோஷமான மற்றும் ஆத்மார்த்தமான இடம், என்னுடைய மகனும் சில சமயம் அங்கு பணி புரிவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் வந்தனா உணர்ச்சி பொங்க.