50 நாட்கள்.. 5000 மைல்கள்.. 15 மாநிலங்கள்..'-பைக் பயணத்தில் 5,000 புன்னகையை படம் பிடித்த தமிழர்!

1

50 நாட்கள் – 5000 மைல்கள் – 15 மாநிலங்கள் – 5000 புன்னகைகள்... 

இந்தியா முழுதும் பைக்கில் தனியாக சாகச பயணம் மேற்கொண்டு, படங்கள் எடுத்து டெல்லி திரும்பியுள்ள போட்டோகிராபர்! 

முன்னாள் இந்திய வான்படை வீரரும், புகைப்படக் கலைஞருமான டெல்லியில் வாழும் தமிழர் ஜான் எட்வர்ட் சுரேஷ், 5000 மைல்கள் தன்னுடைய மோட்டார் பைக்கில் தனியே பயணித்து 15 மாநிலங்களை கடந்து இந்தியா முழுவதும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் சுமார் 5000 பேர்களின் புன்னகையை புகைப்படம் எடுத்து வந்துள்ளார். 

ஜான் எட்வர்ட் சுரேஷ்
ஜான் எட்வர்ட் சுரேஷ்

கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் இருந்து புறப்பட்ட சுரேஷ், தன்னுடைய பயணத்தை ஆகஸ்டு 16 ஆம் தேதியன்று அதே இந்தியா கேட் பகுதியில் முடித்துக்கொண்டார். இந்த பயணம் மற்றும் தன் அனுபவத்தைப் பற்றி புகைப்படக் கலைஞர் ஜான் எட்வர்ட் சுரேஷ் கூறுகையில்,

"இந்த சாகச பயணத்தின் பெயர் 'ஸ்மைல்ஸ்- 5000 மைல்ஸ்'. நான் தனியாக டெல்லியில் இருந்து கிளம்பி, மேற்கு கடற்கரை ஓரமாக பயணித்து கன்னியாகுமரியை அடைந்து, பின் மீண்டும் கிழக்கு கடற்கரை ஓரமாக பயணித்து சத்திஸ்கார், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் வழியாக டெல்லி வந்தடைந்தேன்," என்றார். 

ஏறத்தாழ 8000 கிலோமீட்டர் பைக்கில் பயணித்து, வழிநெடுகிலும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் புன்னகைகளை கேமரா வழியாக சிறைப்பிடித்து வந்துள்ளார் சுரேஷ். புன்னகைப்பது என்பது மனிதர்களால் மட்டுமே முடியும் செயல். இதனை மனிதர்கள் மறக்கத் துவங்கி விட்டார்கள். 

"பெருநகரங்களில் வாழும் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள், எனவே இந்தியா முழுதிலும் நெடுக பயணித்து, 5000 புன்னகைகளை ஒன்றாக என் கேமராவில் அடக்கிக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை விரைவில் கண்காட்சிக்கு வைக்கப்போகிறேன். ஒரு கூரையின் கீழ் 5000 புன்னகைகளை காட்சிக்கு வைப்பது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும்." என்று தன் அனுபவத்தை பற்றி விவரித்தார் சுரேஷ். 
பயணத்தில் படம் பிடித்த மக்களின் 'ஸ்மைல்ஸ்' 
பயணத்தில் படம் பிடித்த மக்களின் 'ஸ்மைல்ஸ்' 

இந்த பயணத்தை முடிக்க 50 நாட்கள் ஆனது. 15 மாநிலங்கள் வழியாக 8900 கிலோமீட்டர் தூரம் பயணித்து இருக்கிறார் இவர். வழியில் இரு விபத்துக்களை சந்தித்தும், இறையருளால் தற்போது நலமுடன் திரும்பியுள்ளார் சுரேஷ். 

தான் சந்தித்த மக்களைப் பற்றி விவரிக்கையில், 

"வழிநெடுகிலும் நம்முடைய சகோதரர்கள் விருந்தோம்பலுடன் என்னை வரவேற்றனர். மனித நேயமும் அன்பும் இன்னும் மறையவில்லை என்று இந்த பயணத்தில் உணர்ந்தேன். பலரும் தாங்களாகவே முன்வந்து எனக்கு உதவினார்கள். என் பைக் பழுதான போதெல்லாம், மெகானிக்குகள் பணம் வாங்காமல் இலவசமாகவே பழுது பார்த்துக்கொடுத்தார்கள். மிகவும் அற்புதமான அனுபவங்கள் எனக்கு கிடைத்தன..." 

இந்த பயணத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் விரைவில் டெல்லியிலும் மற்ற நகரங்களிலும் கண்காட்சியாக வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார் ஜான் எட்வர்ட் சுரேஷ்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்