தலைமைப்பதவியின் சவால்கள்: பெண்களுக்கு எவ்விதத்தில் மாறுபடுகின்றது?

0

நீங்கள் இதுவரை அடையாத உயரத்தை அடைய, இதுவரை இல்லாத அளவுக்கான உழைப்பைக் கொடுக்க வேண்டும்’ என ‘7 ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபக்டீவ் பீப்பில்’ புத்தகத்தின் ஆசிரியர், பேச்சாளர் ஸ்டீவன் கோவி குறிப்பிட்டுள்ளார்.

தொலைநோக்குப் பார்வை, தைரியம், நேர்மை, பணிவு, அதே போல சிறப்பான திட்டமிடல், கவனம், ஒத்துழைப்பு, மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை நீங்கள் விரும்பும் தலைமையை அடைய முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன. இவற்றையெல்லாம் நாம் மேம்படுத்துவது என்பது புதிராகவே உள்ளது. தலைமைப்பதவிக்கான சவால்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே மாறுபடுமா? என்பது இந்தத் தலைப்புக்கு சரியான கேள்வியாக இருக்கும். தலைமை என்பது ஆண், பெண் பேதமின்றி வெறும் தலைமைப்பதவிக்கானதா?

என்னைப் பொருத்தவரை தலைவருக்கான குணங்கள் ஒன்றுதான். ஆனால், பெண்கள் சில விஷயங்களைச் சமாளிக்கும் தந்திரத்தை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் எனத் தோன்றுகின்றது.

மனப்போக்கு

தலைமைக்கு நம்மை நாமே தயார் செய்துகொள்ள நமது மனப்போக்கு மூன்று அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும். இவற்றில் முதன்மையானது, அடிப்படை உண்மைகள் அல்லது கொள்கைகளை நமக்குள் பதியச் செய்ய வேண்டும். இது நமது ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஸ்திரத்தன்மையை அளிக்கும். இரண்டாவது மனப்போக்கு, நமது ஒவ்வொரு செயலும், மனதில் திட்டமிட்ட பின்னர்தான் செயல்படுத்தப்பட வேண்டும். இது, மற்றவர்களது திசைதிருப்பல்களிலிருந்து மாறுபட்டு, நமது நோக்கத்தின்படி செயல்பட உதவும். மூன்றாவது, முக்கியத்துவம் வாய்ந்த செயல்களிலிருந்து, முக்கியத்துவம் அல்லாதவற்றை பகுப்பதில் உதவும். இதன்மூலம், அதீத முக்கியத்துவம் உள்ள காரியங்களில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவானதாக இருக்கும்.

எவற்றையெல்லாம் உங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என உணருங்கள்

நமக்கு ஏற்ற சூழல் எப்போதுமே நிலவாது. பெண்கள் வீட்டையும் கவனித்து, குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய சூழல்தான் இங்கு நிலவுகின்றது. இந்தச் சூழலுக்கு ஏற்ப பணியாற்றத் தொடங்கினால், எவ்வித சூழலையும் திறம்பட சமாளிப்பதற்கான வழியை இதன்மூலம் உணரலாம். தீர்வுகளை கண்டறியுங்கள், ஒத்துழைப்பைப் பெறுங்கள், உங்களது பணி சீராக நடைபெறுவதற்கான முறையை உணர்ந்து செயலாற்றுங்கள்.

உங்களின் செயல்பாடுகளை இந்த கட்டங்களுக்கேற்ப வகைப்படுத்தவும்.

இதில், நீங்கள் நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் மாற்றியமைக்கக்கூடியவற்றைத் தெரிந்துகொள்ளவும்.

உங்களது, எண்ணங்கள், மனநிலை மற்றும் நடத்தையை அறிக

எவ்வகையான நடத்தை மற்றும் பதிலை வெளிப்படுத்துகின்றீர்கள்? உங்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பார்வையாளராக மட்டும் கவனிப்பவரா? உங்களின் நடவடிக்கைகள் காலம் காலமாக உங்களது சமூக மற்றும் கலாச்சார நிபந்தனைகளால் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். இவை உங்களின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் நீங்கள் பாதிப்படைந்தவராக உணர வைக்கின்றதா?

நீங்கள் நினைப்பதை அடைய தீவிரமான முறையில் செயல்பட வேண்டும் என்கிற எண்ணத்தை இது விதைத்துள்ளதா? உங்களது விடை செயலற்றதிலிருந்து தீவிரமானதாக மாறுகின்றதா? என்பது போன்ற சிறிய சுயபரிசோதனைக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது சிறப்பைத் தரும். மேலும், அத்துடன் உங்களை ஈர்த்த தலைவரை நினைவு கூறுங்கள். இந்தத் தலைவர் தமது மனதில் உள்ள எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்துபவரா? அமைதியானவரா? பதிலளிப்பவரா? ஏனெனில் இவை உறுதியான நடத்தைக் கொண்ட தலைவருக்கான குணங்கள். இத்தகைய தலைவர் தற்போதைய சூழலைத்தாண்டி தொலைநோக்குப் பார்வையுடன் செயலாற்றுபவராகவும் இருப்பார்.

பணியிட ஏற்புடைமை

உயர்ந்த நம்பிக்கை வளமான ஆதாயத்தை தருகின்றது. நம்பிக்கையை வளர்க்கும் விதமாக வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உண்மையான தகவல்களைப் பகிறுங்கள். தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்காதீர்கள். கருத்துக்களை தெரிவியுங்கள்/கேளுங்கள். இத்துடன் ரகசியத்தை காத்துக்கொள்ளுங்கள். ஒரு தலைவராக நீங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய வேண்டும். எல்லையை வகுத்திடுங்கள், ஒப்பந்தங்களை வைத்துக்கொள்ளுங்கள், இவையனைத்திலும் சீராக செயல்படுங்கள். இவை, பணியிடத்தில் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட காரணமாகும். ஒரு தலைவராக, பிரதிநிதியாக மற்றவர்களது திறமைகளை மதியுங்கள். அவர்களை முடிவுகள் எடுக்க ஊக்குவியுங்கள். உங்களது பார்வையைத் தவிர்த்து, சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ள, அவர்களை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். உடன் பணியாற்றுபவர்களுடன் உணர்ச்சிகரமான உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களது உறவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். பொதுவாக பெண்கள் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த பணியிடத்தில் தாம் வரவேற்கப்படாததாக உணர்வர். ஆனாலும், அரசியல், வணிகம் எனப் பலதரப்பட்ட துறைகளிலும் பெண்கள் தலைவர்களாக சாதிப்பது தொடர்ந்து வருகின்றது. இந்தப் பெண்கள் சாதிப்பதற்கு பணியிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதே முக்கியக் காரணம்.

தகவல்தொடர்பின் அவசியம்

ஒரு தலைவர் தனக்கு கீழியங்கும் குழு முயற்சிகளில் உதவியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு தலைவர் முன்கூட்டியே தனது குறிக்கோளை குழுவினரிடம் வெளிப்படுத்த வேண்டியது அவசியம். ஒவ்வொரு முறை தலைவி தனது கருத்தை வெளிப்படுத்தும்போதும், அவர் குழுவின் நடத்தை மற்றும் கலாச்சாரத்தை உருவாக்குகின்றார். இவை மிகவும் அவசியமான தகவல் தொடர்பாகும். இவை நீளமானதாகவோ, குறுகியதாகவோ அல்லது உத்தியோகப்பூர்வமானதாகவோ இருக்கலாம். உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ இது அனுதினமும் நிகழ்ந்துகொண்டேதான் உள்ளது. எளிமையான வடிவில் இந்த தகவல் பரிமாற்றங்கள் இருக்கும்படி கவனித்துக்கொள்ளுங்கள். நிறுவன அளவில், பணியாளர்கள் பயமின்றி பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டியது தலைவரின் கடமையாகும்.

நேரத்தை திட்டமிடல்

நேரத்தை திட்டமிடுவது முன்னுரிமை தரப்பட வேண்டியவற்றின் மீது கவனம் செலுத்த உதவும். மேலே கூறியிருந்ததைப் போல உங்களால் கட்டுப்படுத்த முடியும் மற்றும் தாக்கம் ஏற்படுத்த முடியும் பணிகளை, அவசரமாக முடிக்கப்பட வேண்டியவை எது என பகுத்தெடுத்து, முக்கியப் பணிகளில் கவனம் செலுத்துவது தலைவரின் கடமையாகும்.

ஆணோ, பெண்ணோ ஒவ்வொரு நாளும் சந்திக்கும் சவால்களில் பேதம் இருக்கப்போவதில்லை. உங்களின் திறன்களின் மீது கவனம் செலுத்தி, அவற்றை மேம்படுத்தற்கு ஏற்ப ஒவ்வொரு அடியையும், கவனமாக எடுத்துவைத்து சிறந்த தலைவராக உருவாவதற்கான முயற்சியில் இறங்குங்கள். ‘நீங்கள் காண விரும்பும் மாற்றத்தை உருவாக்க சிறப்பான சூழலை உருவாக்குங்கள்’ என சிம்பயாசிஸ் கோச்சிங்கில் மூத்த ஆசிரியையும், இன்வர்ட் ஃபோகஸின் நிறுவனருமான சந்தியா மாத்துர் குறிப்பிட்டார்.

ஆக்கம்: சந்தியா மாத்துர் | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பில்லியன் டாலர் பெண்கள் !

பெண் தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய அம்சங்கள்!