மனஅழுத்தத்தை விரட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் தீபிகா படுகோன்!  

0

30 வயது தீபிகா படுகோன், 2014ல் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். ஆனால் இதை மூடி மறைக்காமல் வெளிப்படையாக பேசி வருகிறார் அவர். ‘நீங்கள் தனி ஆள் அல்ல’ (Your Are Not Alone) என்ற தன்னுடைய பிரச்சாரத்தின் மூலம் அவர் மன அழுத்தத்தைப் போக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். மனநோய் பற்றிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த தீபிகா விரும்பினார், மனஅழுத்தத்துடன் தொடர்புடைய குறியீடுகளை புறந்தள்ள நினைத்தார். இமயமலை ஏறும் சாகச வீரர் டேவிட் லியானோவுடன் இணைந்து தீபிகா செயல்பட்டார். டேவிட் லியானோ மனஅழுத்தத்துடன் போராடும் மக்களுக்கு கைகொடுக்கும் தனது எண்ணத்தை வெளிப்படுத்த எவரஸ்ட் சிகரம் ஏறி தன்னுடைய ‘லிவ் லவ் லாஃப் ஃபவுன்டேஷன்’ (Live Love Laugh Foundation) கொடியை நிலைநாட்டியவர்.

பெங்களூருவில் தன்னுடைய சொந்த பள்ளியான சோபியாஸ் மேல்நிலைப்பள்ளியில் தீபிகா தொடங்கிய விழிப்புணர்வு பிரச்சாரம் தற்போது 200 பள்ளிகளாக உயர்ந்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உணர்வுகளை பகிர்ந்தாளுவதற்கான பயிற்சி அளித்து அவர்கள் கோபம் மற்றும் மனஅழுத்தத்தை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் உதவுகிறது.

“இன்றைய தலைமுறையினரிடையே மனநல பாதிப்புகள் மற்றும் உணர்ச்சியை கட்டுப்படுத்துவதில் முதல் இடம் பிடிக்க பள்ளிகளால் மட்டுமே முடியும் என்று நாங்கள் நம்பினோம். நாங்கள் பள்ளிகளை கலந்தாய்வு நிறுவனங்களுடன் இணைக்க உதவினோம். அதோடு தேவைப்படும் பட்சத்தில் தனியாக ஆலோசனை அளிப்பவர்களையும் பரிந்துரைத்தோம்,” 

என்று தீபிகா இந்தியன் எக்ஸ்ப்பிரஸிடம் கூறியுள்ளார்.

இந்த புதிய திட்டம் ஒரு சில பள்ளிகளில் மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டில் ஜுன் மாதம் பள்ளிகள் தொடங்கும் போது பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். நிழல் உலகில் இருக்கும் மனநல பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே எங்களின் இலக்கு அதோடு இவற்றை ரகசியமாக கிசுகிசுக்காமல் வெறும் கலந்துரையாடல்கள் என்ற ரீதியில் கொண்டு செல்லாமல் ஓவியங்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தி கலந்துரையாடும் அம்சமாக வடிவமைத்துள்ளோம்” என்கிறார் தீபிகா.

அதிகாரப்பூர்வ தகவல்படி ஐந்தில் ஒரு இந்தியர் மன நோயால் பாதிக்கப்பட்டு தீவிர மனஅழுத்தத்திற்கு ஆளாவதோடு, தற்கொலை முடிவிற்கும் சென்றுவிடுகின்றனர். 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் மத்தியில் பணி நிமித்தமான மன அழுத்தத்தால் ஏற்படும் தற்கொலைகளின் அளவு அதிகரித்து காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன..

தங்களுடைய புதிய முன்எடுப்பை எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய 15 முதல் 29 வயதிலானவர்களை குறி வைத்து விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார் தீபிகா. 

“ஆம். 15க்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மிகவும் முக்கியமானவர்கள், இவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. எங்களது நிறுவனம் நிலையான வளர்ச்சியில் உள்ளது, எங்களால் இன்னும் அதிகம் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது, இது எல்லாவற்றையும் விட நாங்கள் எங்களது குறிக்கோளை மையப்படுத்தியே செல்ல வேண்டியது மிகவும் அவசியம்”.

சமுதாயத்தை அச்சுறுத்தும் மனநோயை விரட்ட, தான் உறுதிபூண்டுள்ள விஷயத்தைப் பற்றி தீபிகா கூறுகையில், தேசிய அளவில் மனநோய்க்கு சிகிச்சை அளிப்பவர்களைப் பற்றிய தகவல்களை திரட்டி அவற்றை ஒருங்கிணைக்கும் பணியிலும் தான் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். “நாங்கள் அடிப்படையில் இருந்து அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறோம் மனநோயை கண்டறியும் GP பயிற்சி அளிப்பதோடு, தேசிய அளிவலான மனநல சிகிச்சை நிபுணர்களின் தகவல்களை ஒன்று திரட்டி வருகிறோம். இதன் மூலம் மனநல நிபுணர்களை எளிதில் அணுகி சிகிச்சை பெற முடியும். இந்த முயற்சிகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிதியை அதிகரிப்பதற்கான செயல்களிலும் தீவிரம் காட்டி வருகிறோம். மேலும் NIMHANS மற்றும் TISS போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடன் எங்களுக்கு உறுதியான இணைப்பு உள்ளது,” என்றும் அவர் கூறுகிறார்.

‘நீங்கள் தனி ஆள் அல்ல’ என்ற தனது பிரச்சாரக் குடையில், வரும் ஆண்டுகளில் கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை கொண்டு வர தீபிகா திட்டமிட்டுள்ளார். தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர்களுக்குமானதாக விரிவாக்கம் செய்யும் முனைப்பில் தீபிகா படுகோன் செயல்பட்டு வருகிறார்.

தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

மக்களின் மன அழுத்தத்தை போக்க உதவும் ஜானகி விஸ்வநாதின் 'சாத்தி ஹாத் பதானா'

பதின்ம வயதினர் மனம் திறப்பதற்கான ஓர் இடம் 'அட்வைஸ்அட்டா.காம்'