டோமினோஸ் போல இந்திய உணவு வகைகளை பிரபலப் படுத்த விரும்பும் 'சார்க்கோல் பிரியாணி'

0

உணவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து, புதுவிதமான உணவு வகைகள் சந்தைகளுக்கு வரும் முன், உணவுகள் ஆர்டர் செய்வதும், அதனை விநியோகம் செய்வதும், குறிப்பிட்ட சில உணவு வகைகளுக்குள்ளேயே சுருங்கியிருந்தன. அந்த வகையில் உணவுச் சந்தையில் முதலிடத்தை பிடித்தவை பீட்சாக்கள். குறிப்பாக டொமினோஸ் பீட்சாக்கள் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்துவிட்டன என்றே கருதலாம். இன்றும் கூட டொமினோஸ் பீட்சாவை மாதிரியாகக் கொண்டு, சில நிறுவனங்கள் விரைவான சேவை வழங்குவதில் திறமையுடன் செயல்பட்டுவருகின்றன. அவற்றிற்கு மிக முக்கியமான சவாலாக இருப்பதே உணவிற்கான பட்டியலை தயார் செய்வதும், பட்டியலில் உள்ள உணவை அதிக தரத்துடனும், சுவையுடன் வழங்குவதும் ஆகும்.

உணவுச் சேவையில் முன்னணியில் உள்ள டொமினியன் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளும் நோக்கில் லயன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் அனுராக் மெஹ்ரோத்ரா மற்றும் கிருஷ்ண காந்த் தாகூர் என்ற இரு இளைஞர்கள் 'சார்க்கோல் பிரியாணி' Charcoal Biriyani என்ற பெயரில் புதுவித உணவுச் சேவை நிறுவனத்தை துவங்கியுள்ளனர். அனுராக் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. வலுவான நிதி ஆதார பின்னணியை கொண்ட இவர், மணிலாவின் ஏ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றவர். இவரை போன்றே பெங்களூரு ஐ.ஐ.எம் இல் முதுநிலை வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற கிருஷ்ணகாந்த் தாக்கூரும் வலுவான நிதி ஆதார பின்னணியை உடையவர். இந்த இருவரும் சேர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக லயன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய உணவு வகைகளின் மீது கவனம்

இத்தகைய சூழலில், முகம்மது போலுடனான இவர்கள் சந்திப்பு ஒரு திருப்புமுனை என்றே கூற வேண்டும். முகம்மது போல், பிரியாணி தயாரிப்பில் சிறந்த சமையல் கலை நிபுணர். இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளின் பல்வேறு புகழ்மிக்க நிறுவனங்களில் சமையல்கலைஞராக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. மூவரும் இந்தியாவில் சீரான, சுகாதாரமான கூடவே இந்திய பாரம்பரியமிக்க உணவு வகைகளை வழங்கும் உணவகத்தை நிறுவ வேண்டியதன் தேவையைப் புரிந்து கொண்டனர்.

இந்திய நுகர்வோர்களை பொறுத்தவரை, பீட்சாவும் பர்கரும் மட்டுமே எளிதில் கவனத்தில் வருபவை. பிரியாணி போன்ற இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் உணவு வகைகளை நல்ல தரத்துடன் சேவையளிக்கும் நிறுவனங்கள் தேசிய அளவில் இல்லை. இது குறித்து 34 வயதான கிருஷ்ண காந்த் கூறியது...

“இந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்வோம். தரமிக்க உணவு, சிறந்த தொழில்நுட்பம், தங்குதடையற்ற விநியோகம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை கவனத்தில் கொண்டு இந்தியா முழுவதும் பலதரப்பட்ட மக்களை சென்றடைவதே எங்கள் நோக்கம் “ என்றார்.

இந்த குழுவானது, பலதரப்பட்ட வயதினரிடையே 500க்கும் மேற்பட்ட கருத்துக்களை கேட்டறிந்தது. அவற்றில் கணிசமான அளவு சாதகமான கருத்துக்கள் வரவே, மிகப் பெரிய அளவில் உற்பத்தியை அவற்றிற்கான தளவாடங்களை பயன்படுத்தி, தொழில்நுட்ப உதவியுடன் சிறந்த விநியோகஸ்தர்களை தேர்ந்தெடுத்து, தங்கள் சேவையை துவங்க திட்டமிட்டனர்.

கிருஷ்ணகாந்த் மேலும் கூறுகையில் “தேவையையொட்டிய சீரான தயாரிப்பினை பெரிய அளவில் செய்வதன் மூலம் சமையலறை அல்லது சமையல் கலை நிபுணரை சார்ந்து இருப்பதை வெகுவாக குறைப்பதில் தான் எங்கள் வெற்றி உள்ளது” என்றார்.

ஒரே சீரான ருசியும், தரமும் மிகுந்த உணவு தயாரிப்பு முறையை அதிக அளவில் செய்வதும், அவ்வாறு தயாரிக்கப்படும் உணவிற்கு ஒரே மாதிரியான, நிலையான விலை நிர்ணயம் செய்வதுமே உணவகங்களுக்கு கடும் சவாலாக இன்று அமைந்துள்ளன.

தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சீர்படுத்துதல்

சார்க்கோல் பிரியாணியும் இதே போன்றதொரு சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனை சமாளிக்க குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவில் ருசியும், தரமும் மிகுந்த பிரியாணியை உற்பத்தி செய்தல், அதற்கான தளவாடங்களை சிறந்த முறையில் ஒருங்கிணைத்தல், உற்பத்தியாகும் உணவிற்கு குறைந்த விலையை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றுடன் சரியான நேரத்தில் விரைவாக விநியோகம் செய்வதிலும் கவனம் செலுத்தினர். கிருஷ்ணகாந்த தொடர்ந்து கூறுகையில்,

“இத்தகையதொரு சீரான திட்டத்தை நடைமுறைபடுத்த உலக அளவில் உணவு உற்பத்தியில் சிறந்த சமையல் கலைஞர்களுடன் உள்ள எங்களது கூட்டுறவு காரணமாக உள்ளது. தற்போது ஆறு வகையான பிரியாணியை மும்பை முழுவதும், குறிப்பாக கொலாபா முதல் பொறிவேலி வரை விநியோகம் செய்கிறோம்.”

வெளியில் அதிகஅளவில் தெரியப்படாமலிருப்பதை விரும்பும் அந்த சமையல் கலைஞர்கள் எல்லாப் பகுதிகளிலும் ஒரே சீரான தரத்துடன், ஒரே மாதிரியான ருசி மிகுந்த பிரியாணியை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய உதவுகின்றனர். மேலும் இதற்கான பணிகள் அனைத்துமே இணையதளம் மூலமும், ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலமும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சேவை தேவைப்படும் ஒரு நுகர்வோர் அதனை எளிதில் பயன்படுத்தி கொள்ள முடியும். அதோடு, சரக்கு மேலாண்மையையும், விற்பனை பற்றிய தகவல்களையும் கவனித்து கொள்ள வசதியாக அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஐ.ஐ.டி பெங்களூரு மற்றும் ஐ.எஸ்.எம் தன்பாதில் பட்டம் பெற்ற கவுதம் சிங் வடிவமைத்துள்ளார்.

உலக புகழ்பெற்ற சமையல் கலை வல்லுனரான மிகையில் சஹானி இந்த குழுவுடன் இணைந்த பின்னர் புதுவிதமான உணவு வகைகளை உற்பத்தி செய்ய பெருமளவு உதவினார். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நிறவனத்திற்கு அதிகரித்தது.

சந்தையில் தற்போது நடைமுறையில் இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இந்த குழுவிற்கு இருக்கும் போது, அவர்கள் ஒட்டு மொத்த தொழில்நுட்பத்தையும் தங்கள் நிறுவனத்திற்குள்ளேயே உருவாக்கிக் கொள்ள விரும்பினர். இத்தகைய முடிவு தேவைப்படும் சூழல்களில் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படவும், முழு அளவில் உற்பத்தியை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கவும் குழுவினருக்கு உதவும்.

செப்டம்பர் 2015 இல் சார்க்கோல் பிரியாணி 10 மடங்கு வளர்ச்சியை இலக்காக கொண்டு துவங்கப்பட்டது. அதிலிருந்து மும்பை மாநகரத்தின் 8 பகுதிகளில் தனது கிளையை விரிவுபடுத்தி செயல்பட்டுவருகிறது. 

இதுகுறித்து கிருஷ்ணகாந்த் குறிப்பிடுகையில் “மாதந்தோறும் 100 சதவீத வளர்ச்சியை வரும் மாதங்களில் எங்கள் நிறுவனம் எட்ட வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கிறோம்.” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் “எங்கள் குழுவானது உயர் தர உணவை விநியோகிப்பதோடு மட்டுமல்லாது வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் அவர்கள் திருப்தியடையும் அளவிலான சேவையை வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். இது வாடிக்கையாளர்களின் மனதில் எங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் அடையாளம் ஆழ் மனதில் நல்ல முறையில் பதிய உதவும். சார்க்கோல் பிரியாணி என்றாலே ஒரு வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்து கொள்ள வழிவகுக்கும் என்றார்.

எளிதில் மட்கக்கூடிய சிறிய அட்டையில் நன்கு பொட்டலம் செய்யப்பட்டு சார்க்கோல் பிரியாணி சந்தைக்கு வருகிறது. வாடிக்கையாளர் இதனை இணையதளம் மூலமாகவோ , ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலமோ அல்லது கால் செண்டர் மூலமோ ஆர்டர் செய்து கொள்ள முடியும். இவ்வாறு வரும் ஆர்டர்கள் வாடிக்கையாளர்கள் வசிக்கும் பகுதியின் அருகாமையில் உள்ள கடைகளுக்கு திருப்பப்படுகிறது. பல்வேறு விநியோக சேவைதாரர்களுடன் இந்த நிறுவனம் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதால் உணவு பொருட்களை அதிவிரைவாக செய்திட உதவியாக இருக்கிறது.

அடுத்த 60 தினங்களுக்குள் மும்பையின் அனைத்து பகுதிகளிலும் விநியோக சேவையை விஸ்தரிக்கும் இலட்சியத்துடன் இந்த குழு செயல்படுகிறது. அதே வேளை பெங்களூரு, புனே போன்ற நகரங்களிலும் சேவையை விரிவுபடுத்துவதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறது. கூடவே புதுவிதமான உணவு பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்து ஒரு வலுவான இடத்தை சந்தையில் பிடித்து கொள்ளவும் இந்த குழு உழைக்கிறது.

யுவர் ஸ்டோரியின் பார்வையில்...

ஜூபிலியன்ட் ஃபுட் வொர்க் நிறுவன தலைமை செயல் அதிகாரி அஜய் கவுலின் கூற்றுப்படி டொமினோஸ் பீட்சாவின் சந்தைபடுத்தலை ஆய்வு செய்யும்போது உணவு பொருள்களை சந்தைபடுத்த என்ன செய்ய வேண்டும் என தெரியவருகிறது. அவர்கள் தங்கள் நுகர்வோரை சந்தைபடுத்தலின் ஒரு பகுதியாக மாற்றிவிட்டுள்ளனர். இதனால் ஒரு புதிய உணவுப் பொருளை சந்தைபடுத்தும்போது அதற்கான குறைகளையும், நிறைகளையும் நுகர்வோரிடமிருந்தே பெற்றுவிடுகின்றனர்.

டொமினோஸ் பீட்சாவின் 30000 ஊழியர்களில் கிட்டத்தட்ட 20000 முதல் 25000 பேர் வரை நுகர்வோர்களிடம் நேரடி தொடர்பினை வைத்திருப்பவர்கள். டொமினோஸ் இந்த ஊழியர்களுக்கு பணம் வசூலிப்பதற்கான கருவிகளையும், ஜிபிஎஸ் மூலம் வாடிக்கையாளர்களின் இடங்களை கண்டறிவதற்கான வசதியையும், வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் அறிவதற்கான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. சார்க்கோல் பிரியாணியும் இத்தகைய வசதிகளை இந்திய உணவு வகைகளை சந்தையில் விநியோகம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

இணையதள முகவரி: Charcoal Biriyani

ஆக்கம்: சிந்து கஷ்யப் | தமிழில்: ஜான் மோசஸ்