கொசுத்தொல்லை இனி இல்லை: ஹெர்பல் ஸ்ட்ராட்டஜியின் நம்பிக்கை

0

பெங்களுருவை மையமாக கொண்ட 'ஹெர்பல் ஸ்ட்ராட்டஜி' கூறுவது இரசாயனங்கள் இன்றி இயற்கைத் தன்மை நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே. அதன் காரணமாக மூலிகைகளில் இருந்து செய்யப்பட்ட சுத்தம் செய்யும் திரவம், பூச்சி தடுப்பான்கள், செல்லப் பிராணிகளுக்கான பொருட்கள் என இயற்கையோடு ஒன்றியுள்ளனர்.

தொழில் முனைதல் என்பது ஜான் தாமசிற்கு கைவந்த கலை. அடுத்து என்ன புதிதாக களமிரக்கலாம் என தேடிய நேரத்தில், அவருக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. அதன் காரணம், அவர் பயன்படுத்திய இரசாயனங்கள் கலந்த கொசுவிரட்டி என மருத்துவர்கள் கருதினர். அவற்றில் புற்றுநோய் உண்டாகும் வஸ்துக்களும் உள்ளன என்றனர்.

இந்த தருணத்தை ஒரு வாய்ப்பாக கருதி, இந்த துறையில் அவர் களமிறங்கினர். சந்தையை ஆய்வு செய்த போது, இரசாயனங்கள் கலக்காத கொசுவிரட்டிகள் இல்லை என தெரிந்து கொண்டார். இதன் காரணமாக 2011 ஆண்டு 'ஹெர்பல் ஸ்ட்ராட்டஜி' பிறந்தது. இந்நிறுவனத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுபவை.

ஜான் பேசும்பொழுது, ஒரு பொருளுக்காக அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்து பெருமையாக கூறினார். ஒரு வருட கடின ஆய்வுகளுக்கு பிறகு அவர்களது முதல் தயாரிப்பான 'ஜஸ்ட் ஸ்ப்ரே' வெளிவந்துள்ளது. 10 சூத்திரங்களை வைத்து, இவரது அணி அவற்றை 400 வகையான கொசுக்கள் மீது பயன்படுத்திப் பார்த்துள்ளனர். இதற்காக பல வகையான கொசுக்கள் வாழும் கேரளாவிற்கு இவர்களது ஆய்வு இவர்களை அழைத்து சென்றுள்ளது.

சீமாப் எனப்படும் 'சென்ட்ரல் இன்ஸ்டிடுட் பார் மெடிசினல் அண்ட் அரோமாடிக் பிளான்ட்ஸ்' ஒடு இணைந்து, செயல்பட்டு வருகின்றனர். சிஎஸ்ஐஆர்-ன் கீழ் தாவரங்களை ஆய்வு செய்யும் ஆய்வகம் தான் சீமாப்.

“ஹெர்பல் ஸ்ட்ராட்டஜியில் எனது வாழ்வின் உண்மையான அர்த்தம் கண்டேன். நாங்கள் நம்புவது என்னவென்றால், இரசாயனங்கள் இன்றி, நல்ல ஆரோக்கியம், சுத்தமான இல்லம், மற்றும் ஆரோக்கியமான செல்லப் பிராணி ஆகியவற்றை நாம் பெற இயலும் என்பதே. எங்கள் நோக்கம் ஒன்றே. இரசாயனகள் கலக்காத, உயர்ந்த தரம் வாய்ந்த, மூலிகை பொருட்களை வாடிக்கையாளருக்கு கொடுப்பதே.”

நீண்ட நெடும் பயணம் :

பஞ்சாப் வேளாண்மை பல்கலைகழகத்திலிருந்து மீன் வளர்ப்பில் எம்.எஸ்.சி பட்டம், கொச்சின் பல்கலைகழகத்தில் இருந்து மேலாண்மை பட்டம் இரண்டும் ஜானிடம் உள்ளன. தொழில்முனையும் முன்பு, பொருட்களை பிரபலப்படுத்துவதில் அனுபவம் பெற விரும்பினார் ஜான். 1991-ல் தனது நிறுவனத்தை துவங்கும் முன்பு 10 வருடங்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் ஜான்.

“நானும் எனது கூட்டாளி மட்டுமே நிறுவனம் துவங்கிய புதிதில் இருந்தோம். ஏதோ ஒன்று துவங்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது. ஆனால் என்ன துவங்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. நந்திதுர்க் சாலையில் ஒரு அலுவலகம் அமைத்து, அதில் இரண்டு நாற்காலி ஒரு மேஜை போட்டு எங்களது அலுவலகத்தை துவக்கினோம்.”

முதலில் சுவிஸ் நாட்டின் வர்த்தக நிறுவனமான, லுயிஸ் ட்ரேபஸோடு இணைந்து முதலில் காபி வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆய்விற்காக சிக்மங்களூர், கூர்க் மற்றும் கர்நாடகாவில், காபி பயிரிடப்பட்டுள்ள பல பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்தியாவில் வெற்றிகரமாக தங்களது தொழிலை நிறுவிய பின்பு ஆப்ரிக்காவில் தங்களது தொழிலை துவக்கினர்.

ஜான் மற்றும் அவரது கூட்டாளி இருவரும் ஆரம்பக்கட்டத்தில் இருந்த சில்லறை வணிகத்திலும் ஈடுபட்டனர். சர்ஜாபூர் சாலையில் பார்கைன்ஸ் பஸார் என்று நிறுவினோம். அந்த தொழிலில் முதலில் சில ஆட்கள் மட்டுமே இருந்தனர். முதலில் நல்ல லாபம் கிடைத்தாலும் போக போக நஷ்டம் கூட ஆரம்பித்தது. எனவே அன்று அதை கைவிட வேண்டிய சூழல் எற்பட்டது. இன்று அந்த தொழில் என்னிடம் இருந்திருந்தால், என் வாழ்க்கை வேறு விதத்தில் சென்றிருக்கும். ஆனால் அதை நினைத்து எனக்கு வருத்தமில்லை,” என்றார் ஜான்.

2008-ல், அயல்நாட்டு வர்த்தக நிறுவனத்துடனான தொடர்பு முறிந்து, தனது கூட்டாளியும் விட்டுச்சென்ற பின்பு, புதிய துவக்கத்திற்கு தயாரானார் ஜான். மிகுந்த மனஉளைச்சல் இருந்த அந்த நேரத்தில் தான் தற்போது உள்ள நிறுவனத்துக்கான யோசனை அவரது மனதில் உதித்தது.

அவரது ஒவ்வொரு அனுபவத்தையும் நினைவுகூர்ந்து, ஒவ்வொன்றும் தனக்கு ஒரு விஷயத்தை கற்றுத்தந்ததை கூறுகிறார்.

“எந்த ஒரு புதிய நிறுவனமும் எளிதானது அல்ல. ஒரு தொழில் முனைவருக்கு ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கும். அவற்றை சந்தித்து தகர்க்கும் போதுதான் வெற்றியின் வாசம் நமக்குக் கிட்டும்.”

தனது குடும்பத்திடமிருந்தும், தனது நிறுவனத்தில் உள்ள அணியிடமிருந்தும் தனக்கு கிடைக்கும் உதவிகளை பெரிதாக நினைக்கிறார் ஜான்.

“இந்த பயணத்தோட துவக்கத்துல, என்னோட குடும்பம் எனக்கு பக்கபலமா இருந்தாங்க. ஹெர்பல் ஸ்ட்ராட்டஜிக்கு பின்னாடி உத்வேகமா நிக்கறது நம்பிக்கை நிரஞ்ச பல தனியாட்கள். அதுல நானும் ஒருத்தன்,” என்கிறார் ஜான்.

எதிர்காலம் :

ஒவ்வொரு வீட்டிலும் கொசுவிரட்டி என்பது உபயோகப்படுகின்றது. எப்போதும் நம்மை பயமுறுத்தும் மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா என கொசுவில் இருந்து பரவும் நோய்கள் அதற்குக் காரணிகளாக நிற்கின்றன. மேலும் இரசாயன பூச்சிகொல்லிகள் ஆபத்தை விளைவிப்பதால், அதற்கு மாற்றான இயற்கை மற்றும் மூலிகை நிறைந்த பொருட்களுக்கு நல்ல தேவை உள்ளது.

“இந்த சந்தை மிகவும் பெரிது. பூச்சிகொல்லிகள் என்பது தோராயமாக 3600 கோடி மதிப்புள்ள சந்தையாகும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு போட்டியாளர்கள் இல்லை. இரசாயனங்கள் கலந்த பொருட்களை விற்பவர்களை போட்டியாளர்கள் என சொல்லாம். எனவே அவர்களின் ஆரோக்கிய மாற்று நிறுவனமாக நாங்கள் இருக்கிறோம்,” என்கிறார் ஜான்.

ஜஸ்ட் ஸ்ப்ரே தற்போது தென்இந்தியாவில் நல்லபடி காலூன்றியுள்ளது. தற்போது மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளனர். பெங்களுருவில் தங்களில் கிளை கடைகளை தற்போது திறந்துள்ளனர். அயல் நாடுகளிலும் இவர்களது பொருள் கிடைகின்றது.

“இப்போது தான் எங்களது பயணம் துவங்கியுள்ளது. இன்னும் செல்லவேண்டிய தூரம் அதிகம் உள்ளது. ஆனால் ஒரு தொழில் முனைவோரின் பயணம் ஒரு யோசனையில் துவங்கும். எனவே என்னுடைய கதை தற்போதுதான் துவங்கியுள்ளது. வயது 58 ஆனாலும், 25 வயது இளைஞனாக உணர்கின்றேன்,” என முடித்துகொண்டார் ஜான்.

கட்டுரையாளர் :சௌரவ் ராய் | தமிழில்  : கெளதம் தவமணி