இந்திய கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யும் ஆன்லைன் தளம் தொடங்கிய சென்னை நண்பர்கள்!

0

கைத்தறித்துறை இந்திய பொருளாதாரத்தில் கணிசமான அளவு பங்களிக்கிறது. பல காலமாகவே கிராமப்புற கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. எனினும் இந்த கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் பவர் லூம் பயன்பாட்டின் காரணமாக பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். இடைத்தரகர்கள் தலையீட்டால் சரியான லாபம் கிடைப்பதில்லை. அதேசமயம் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யவும் முடியவில்லை.

இந்த சிக்கல்களுக்கு தீர்வுகாணும் முயற்சியில் மத்திய அரசும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளது.

ஆன்லைனில் கைத்தறி விற்பனையை ஊக்குவிக்க 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜவஹர் சிங், கலைவாணி சடகோபன் இருவரும் இணைந்து சென்னையில் Avishya.com அறிமுகப்படுத்தினர். 

இந்தியா முழுவதும் உள்ள கைவினைஞர்கள், நெசவாளர் சமூகங்கள், ப்ராண்டுகள், வடிவமைப்பாளர்கள் போன்றோர் தயாரிக்கும் கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும் உயர்தர ஆன்லைன் தளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி துவங்கப்பட்டது.

அவிஷ்யா இணைநிறுவனரான 52 வயது ஜவஹர் சிங், தனது 25 ஆண்டுகால கார்ப்பரேட் பணி வாழ்க்கையில் பல புதிய வணிக முயற்சிகளில் பங்கெடுத்துள்ளார். மஹிந்திரா ஹாலிடேஸ், சிஃபி.காம், எம்ஆர்எஃப் ஃபன்ஸ்கூல் டாய்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். மற்றொரு இணை நிறுவனரான 45 வயது கலைவாணி சடகோபன் மின்வணிகம், தொழில்நுட்பம் போன்ற பகுதிகளில் இருபதாண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்டவர். 

கலைவாணி மற்றும் ஜவஹர்
கலைவாணி மற்றும் ஜவஹர்

இந்த இரு நிறுவனர்களும் ஐந்தாண்டுகள் க்ளப் மஹிந்திராவில் ஒன்றாக பணியாற்றினர். நல்ல நண்பர்களான இவ்விருவரும் சொந்த முயற்சியில் இறங்கத் தீர்மானித்தனர். இருவரும் தங்களது கார்ப்பரேட் பணியை விட்டு விலகி தங்களது அனுபவத்தையும் நிபுணத்துவத்துவத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தைத் துவங்கினர்.

ஜவஹர் சிங் கூறுகையில், 

“எங்களது க்ளையண்ட் ஒருவரின் சில்லறை வணிக விரிவாக்கத் திட்டத்தை கையாண்ட சமயத்தில் தற்செயலாக இந்திய கைத்தறி துணிகள் மற்றும் கைவினைப் பொருட்களின் அழகையும் சிறப்பம்சங்களையும் கண்டோம். இந்திய கைத்தறித் துறையில் சொந்தமாக செயல்பட்டு ஒரு நிறுவனத்தை நிறுவ தீர்மானித்தோம்,” என்றார்.

கைத்தறித்துறை பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஜவஹர் மற்றும் கலைவாணி இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அழகான கைத்தறிப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. பல்வேறு நெசவாளர்கள், மொத்த வியாபாரிகள், வடிவமைப்பாளர்கள், ப்ராண்டுகள், சில துறைசார் நிபுணர்கள் போன்றவர்களை சந்தித்த பிறகு திறமையான நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதை உணர்ந்தனர்.

”அவ்வப்போது கைத்தறி கண்காட்சிகள், கலைக் கண்காட்சிகள் போன்றவை தொழில்முறை சேம்பர்கள் மற்றும் முழுமையாக அரசாங்கத்தால் இயக்கப்படாத அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவற்றில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நெசவு குழுக்கள் மற்றும் கைவினைஞர்களால் வெவ்வேறு நெசவு முறைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் அழகிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுவதில்லை,” என்றார்.

அப்போதுதான் ஜவஹர், கலைவாணி இருவரும் முழுமையாக டிஜிட்டலில் செயல்பட்டு தங்கள் நாட்டிலும் புலம்பெயர்ந்து வெளிநாட்டுகளிலும் வசிக்கும் வாடிக்கையாளர்களையும் சென்றடைவதற்காக வலைதளத்தைத் துவங்கத் தீர்மானித்தனர்.

சந்தை, உற்பத்தி மையங்கள், துணிகள் நெசவு செய்யப்படும் பகுதிகள் போன்றவை நாட்டில் ஆங்காங்கே அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை அணுக இவற்றை ஒன்றிணைக்கும் இடைமுகம் எதுவும் இல்லை. இதற்காக உருவானதுதான் Avishya.com. ஜவஹர் கூறுகையில்,

 “மிகச்சிறந்த கைத்தறிகளை சிறந்த விலையில் வாங்கி உலகத்தரம் வாய்ந்த ஆன்லைன் தளத்தில் காட்சிப்படுத்தி இந்திய கைத்தறிகளை ஊக்குவிக்கிறோம். அவிஷ்யா பயனருக்கு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கி தொடர்ந்து கைத்தறிப் பொருட்களை வாங்கச் செய்து சந்தையில் நிலையாக விரிவடைய விரும்புகிறது,” என்றார்.

வாடிக்கையாளர்கள் 10,000-க்கும் அதிகமான கைத்தறிப் பொருட்களில் இருந்து தேர்வு செய்துகொள்ளலாம் என்றார். “பாரம்பரிய கைத்தறிப் பொருட்கள் மற்றும் நாகரீகமான கைத்தறி சேலைகள், சல்வார், துப்பட்டா, ஸ்டோல், குர்தா, ஸ்கர்ட், தைக்கப்பட்ட ப்ளவுஸ், கைவினை ஆபரணங்கள் போன்றவற்றை வழங்குகிறோம். அத்துடன் வாடிக்கையாளர்களின் தனித்தேவைகளுக்கு சேவையளித்து மதிப்பு சேர்க்கும் வகையில் ப்ளவுஸ், சல்வார், குர்தா போன்றவற்றிகான தையல் சேவையையும் வழங்குகிறோம்,” என்றார்.

முக்கிய சந்தை குறித்து ஜவஹர் விவரிக்கையில், “இந்தியா முழுவதும் அனைத்து முக்கிய மெட்ரோக்களிலும், மினி மெட்ரோக்களிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் சந்தைப்படுத்துகிறோம். அமெரிக்கா, கனடா, யூகே, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற மிகப்பெரிய சந்தைகளில் செயல்பட்டு சர்வதேச அளவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களைச் சென்றடைகிறோம்.

மற்ற போட்டியாளர்களிடமிருந்து இவர்களது பொருட்களையும் சேவைகளையும் வேறுபடுத்திக் காட்டும் தனித்துவமான அம்சம் குறித்து அவர் விவரிக்கையில்,

“எங்களது குழுவினர் அவிஷ்யாவில் உள்ள ஒவ்வொரு ப்ராண்டையும் மதிப்பிடுகின்றனர். இதனால் அவிஷ்யாவில் இருந்து வாடிக்கையாளர்கள் மிகச்சிறந்த பொருட்கள் வாங்குவதை உறுதிசெய்கிறோம்,” என்றார்.

அவிஷ்யா பெரும்பாலும் உற்பத்தியாளர்களிடமிருந்தே பொருட்களை நேரடியாக வாங்குகிறது. சில குறிப்பிட்ட பிரிவுகளில் உற்பத்தியாளர்களை நேரடியாக அணுகுவதில்லை. பொருட்கள் அனைத்துமே நியாயமான விலையில் வழங்கப்படுகிறது.

சிறந்த தரமான தயாரிப்புகளை விற்பனை செய்வதே முக்கிய நோக்கம் என்கிறார் ஜவஹர். ஒவ்வொரு தயாரிப்பும் கிடங்கில் இருந்து அனுப்பப்படுவதற்கு முன்பு அவிஷ்யாவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்படுகிறது என்றார்.

அவிஷ்யா செயல்பாடுகள் துவங்கப்பட்டதில் இருந்து நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறது. இது குறித்து ஜவஹர் கூறுகையில், 

“ஐம்பது சதவீத வணிகம் அதே வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப பெறப்படுகிறது. இதுவே வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. செயல்பாடுகளில் எங்களுக்குள்ள அனுபவமும் நிபுணத்துவமுமே லாபகரமான வணிகத்திற்குக் காரணம்,” என்றார்.

இந்தியாவில் கைத்தறிப்பொருட்களுக்கான பிரிவில் டிஜிட்டல் மின்வணிகத்தில் செயல்படும் ஒரு சில ஆன்லைன் ஸ்டோர்களில் அவிஷ்யா ஒன்று. ஜவஹர் விவரிக்கையில், “இந்திய கைத்தறி பொருட்கள் பல்வேறு பிரிவுகளாக விற்பனை செய்யப்படுவதாலும் இந்தியர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்துள்ளதாலும் மின்வணிக உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினரும் பலனடைவதை சாத்தியமாக்குகிறது. கைத்தறி ஆடைகள் மற்றும் துணிகள் மிகப்பெரிய வணிக வாய்ப்பாக இருக்கும் அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான இந்திய நெசவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தையும் உருவாக்கித் தருகிறது.

ஆனால் இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் எளிதாக இருக்கவில்லை. பல்வேறு சவால்களை சந்தித்தனர். 

“பாரம்பரியமாக பொருட்களை கைகளில் தொட்டு உணர்ந்து வாங்கக்கூடிய கைத்தறி போன்ற பிரிவில் இருப்பு செலவுகள், கிடங்கின் சேமிப்புப் பகுதியின் அளவு, மார்கெட்டிங் சவால்கள் போன்றவை ஆன்லைன் சில்லறை வர்த்தகர்கள் அனைவரும் சந்திக்கும் சிக்கல்களாகும்,” என்றார். மேலும், 

”வாடிக்கையாளர் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு உற்பத்தியாளரும் முக்கியம் என்பது கைத்தறி வணிகத்தின் மிக முக்கிய படிப்பினை ஆகும்,” என்றார்.

எனினும் தயாரிப்புகளை வாங்குவதும் ஆங்காங்கே பிரிந்து செயல்படும் உற்பத்தி மையங்களை நிர்வகிப்பதும் இந்திய கைத்தறிகளின் அழகையும் சிறப்பம்சங்களையும் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கிய சவால்களாக இருந்ததாக தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களையும் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் அதிகம் பேரையும் சென்றடைவதற்கான கூடுதல் வழிமுறைகளில் முதலீடு செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜவஹர் தொழில்முனைவோருக்கு அறிவுரை வழங்கும் வகையில், 

“உங்களது கனவை நோக்கி விரைந்து செயல்படுங்கள். வழக்கமான பணியில் ஈடுபட்டுள்ள மூன்று அல்லது நான்காண்டுகளுக்காகவே செயல்படத் துவங்குங்கள். உங்களது கடின உழைப்பின் பலனைப் பார்க்கும்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணையே இல்லை. பணமும் மற்ற சலுகைகளும் தானாகவே வந்து சேரும். அது குறித்த கவலை வேண்டாம்,” என்கிறார்.

வலைதளம்: Avishya

ஆங்கில கட்டுரையாளர் : வத்ஸ்லா ஸ்ரீவத்ஸவா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL