பெரிய நகரங்களின் போக்குவரத்து சிக்கலுக்கு பைக்-டாக்சி சேவை தீர்வாகுமா?

0

குர்காவ்னை சேர்ந்த கவுசிக் நாத் தினமும் வேலைக்கு சென்று திரும்பும் போது, மற்ற இந்திய நகரங்களில் உள்ள அலுவலக ஊழியர்களைப்போல போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் தவிக்கிறார். "அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசலை வெல்வது என்பது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது போல் தான்” என்கிறார் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் கவுசிக், 28 வயதுடையவர். அவர் தனது அலுவலகத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள டி.எல்.எப் பேஸ் -2 வில் வசிக்கிறார். அவர் கேப், ஆட்டோ மற்றும் ஷட்டில் சேவைகளை பயன்படுத்திப்பார்த்தும் பயனில்லை. சில நாட்களுக்கு முன்னர் அவர் பைக்-டாக்சிஸ் சேவை பயன்படுத்திய போது இந்த நிலை மாறியது., “போக்குவரத்து நேரம் பாதியாக குறைந்தது என்கிறார் கவுசிக் உற்சாகமாக.

இந்திய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க இயலாதவை. நகரங்களில் இரண்டு இடங்களுக்கு இடையிலான நத்தை போன்ற பஸ் சேவையை கேலி செய்யும் மெமிக்கள் இந்த வருத்தம் தரும் நிதர்சனத்தை படம் பிடித்து காட்டுகின்றன. இரு சக்கர வாகனமான பைக்குகளால் போக்குவரத்து நெரிசலில் வேகமாக செல்ல முடியும். அவற்றை டாக்சியாக பயன்படுத்துவது எளிதான யோசனை தான். இந்த சேவையை வழங்கும் ஸ்டார்ட் அப்கள் குர்காவ்னில் இந்த சேவையை வழங்கத் துவங்கியுள்ளன.

மும்பை போன்ற நகரங்களில் கட்டுப்பாடு காரணங்களுக்காக இந்த சேவையை தடை செய்திருந்தாலும் ஹரியானா அரசு தனது மாநில ஒப்பந்த வாகன பர்மீட்டின் கிழ் பைக்-டாக்சிஸ் சேவையை அனுமதித்துள்ளது.

"குர்காவ்னில் செல்ல வேண்டிய இடங்களை சென்றடைவது மிகவும் சிக்கலானது. நகரில் தினமும் 2,00,000 தொழில்முறைவோர் அலுவலகம் மற்றும் வர்த்தக சந்திப்புகளுக்காக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்” என்கிறார், இந்த சேவைக்கான வாய்ப்பை உணர்ந்து பைக்-டாக்சிஸ் சேவையான 'எம்-டாக்சி'யை துவக்கியுள்ளார் அர்னாப் மாதூர். எம்-டாக்சி மற்றும் இன்னொரு பைக் டாக்சி சேவையான பேக்சி ஆகியவை குர்காவ்னில் டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கின.

பேக்சி இணை நிறுவனரான அசுடோஷ் ஜோஹ்ரி (Ashutosh Johri) குர்காவ்ன், நொய்டா மற்றும் பரிதாபாத்தில் மோசமான பொது போக்குவரத்து அமைப்பு பயணிகளின் சிக்கலை அதிகமாக்குகிறது என்கிறார். போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாக அவர் கூறுகிறார்.

எம்-டாக்சி தினமும் 40 ரைடுகள் மற்றும் பேக்ஸி 140 ரைடுகளையும் அளிக்கிறது. பேக்சியிடம் 23 பைக்குகள் உள்ளன. எம்.-டாக்சியிடம் 10 பைக்குகள் உள்ளன. வரும் வாரங்களில் 100 பைக்குகளை இணைக்க உள்ளது. இந்த நிறுவனங்கள் சந்தை மாதிரியை பின்பற்ற விரும்பினாலும் , செயல்பாடுகளை முறைப்படுத்த பைக்குகள் இருப்புடன் துவங்கியுள்ளன. டாக்சி செயலிகளுடன் ஒப்பிடும் போது இவை மலிவானவை. பைக் டாக்சிகள் முதல் 3 கிமீக்கு ரூ25 மற்றும் அதன் பிறகு ஒவ்வொரு கிமீக்கும் ரூ 5 கட்டணமாக வசூலிக்கின்றன. ஓலா மினியில் முதல் நான்கு கிமீக்கு ரூ 100 மற்றும் அதன்பிறகு கிமீக்கு ரூ 8 கட்டணம் வசூலிக்கிறது. எம்-டாக்சி 10 கிமி வரம்பு வைத்துள்ளது. பேக்சியிடம் எந்த வரம்பும் இல்லை.

மெட்ரோ மற்றும் பிற நகரங்களில் தேவையான இடங்களை சென்றடைவதற்கான தனி போக்குவரத்து சிக்கலாக இருப்பதாகவும் இந்த சந்தை 5 பில்லியன் டாலர் மதிப்பிலானது என்றும் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

“ இரு சக்கர வாகன டாக்சி முறை சுவார்ஸ்யமானதாக தோன்றுகிறது. பெரிய நகரங்களில் தேவையான இடங்களை சென்றடைவது மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. பெரிய நகரங்களில் பைக் டாக்சிகள் எளிதான, செலவு குறைந்த மற்றும் செயல்திறன் மிக்க போக்குவரத்து வழியாக அமையும்” என்கிறார் வென்ச்சர் கேபிடல் நிறுவனமான எஸ்.ஏ.ஐ.எப் பங்குதாரரான அலோக் கோயல்.

இருந்தாலும் மாநிலங்களுக்கு இடையே மாறும் கட்டுப்பாடுகள் சிக்கலாக அமைந்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு முன் மும்பையின் ஹே டாக்சி சில பகுதிகளில் பைக் டாக்சி சேவையை துவக்கியது. எனினும் இந்த சேவை மகாராஷ்டிரா மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரவில்லை என்று மும்பை போக்குவரத்து வட்டார அலுவலகம் அனுமதி மறுத்துவிட்டது. இந்த சேவைக்கான தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

எனவே ஹே டாக்சி, பயண பகிர்வு சேவையாக செயல்படுகிறது. பார்சல் சேவையையும் அளிக்கிறது. தெற்கு மும்பையில் உள்ள பகுதிகளில் பார்சல், பேக்கேஜ் மற்றும் கடிதங்களை டெலிவரி செய்கிறது. தினமும் 50 டெலிவரிகள் செய்வதாக தெரிவிக்கிறது.

“மும்பையில் ( பைக்-டாசிகள்) புதிய நெறிமுறைகளை உருவாக்க அரசுத்தரப்பில் தொடர்புடையவர்களிடம் பேசி வருகிறோம்” என்கிறார் ஹே டாக்சி இணை நிறுவனர் மனோஜ் மகேஸ்வரி.

அடுத்த ஆண்டு குர்காவ்னில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

எம்-டாக்சி மற்றும் பேக்சி இரண்டுமே செயல்பாடுகளை துவங்குவதற்கு முன்பாகவே இரண்டாம் கட்ட நிதி பெற்றன. பேக்சி ரூ.10 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. எம்-டாக்சி 4 லட்சம் டாலர் முதல் 5 லட்சம் டாலர் வரை நிதி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இரு நிறுவனங்களுமே இதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டன.

நெரிசல் மிக்க இந்தோனேசியாவின் ஜாகர்த்தாவில் பைக் டாக்சி பிரபலமாக இருக்கின்றன. சீனா மற்றும் வியட்னாமிலும் பிரபலமாக இருக்கின்றன. இந்தோனேசிய சந்தையில் கோ-ஜெக், ப்ளு-ஜெக், கிராப் பைக் (கிராப் டாக்சியின் அங்கம்) ஆகிய நிறுவனங்கள் பிரபலமாக உள்ளன. கோ-ஜெக் தனிநபர் மற்றும் வர்த்தகங்களுக்கு பார்சல் டெலிவரி சேவையும் அளிக்கிறது.

இது போன்ற சேவையின் தேவையை இந்திய அதிகாரிகளும் உணரத்துவங்கியுள்ளனர்.

"குர்காவ்னில் பயணிகள் தேவையான இடங்களுக்கு செல்ல மோட்டார்சைக்கிள் டாக்சிகள் நல்ல தீர்வாகும். இந்த வகை சேவை போக்குவரத்தில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்வதுடன் பாதுகாப்பு மற்றும் வெளிப்படையான தன்மையுடன் சேவை வழங்குகின்றன” என்கிறார் குர்காவ்ன் காவல்துறை இணை கமிஷ்னர் சவுரப் சிங்.

ஹரியானாவில் பரிதாபாத், பஞ்ச்குலா மற்றும் பஹதுர்கா பகுதிகளில் செயல்பட பேக்சி அனுமதி பெற்றுள்ளது.

குர்காவ்ன் போக்குவரத்து துணை கமிஷனர் பல்பீர் சிங் பைக் டாக்சியில் பயணிக்கிறார்
குர்காவ்ன் போக்குவரத்து துணை கமிஷனர் பல்பீர் சிங் பைக் டாக்சியில் பயணிக்கிறார்

வாய்ப்புகள் பெரிதாக இருந்தாலும் இந்த நிறுவனங்கள் போட்டிக்கும் தயாராக இருக்க வேண்டும். தெற்காசியாவில் கிராப் டாக்சி செய்தது போல ஓலா நிறுவனம் இந்த பிரிவில் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. சாப்ட் பேங்க் நிதி பெற்ற இந்நிறுவனம் உபெர் ரஷ் போன்ற சேவையை பூக்கள், பேக்கரி பொருட்கள் மற்றும் ஐஸ் கிரீம்களை 3 மணி நேரத்தில் வழங்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யுவர் ஸ்டோரி பார்வை

எல்லா இந்திய நகரங்களிலும் போக்குவரத்து பிரச்சனையாக உள்ளது. டாக்சி சேவைகள் போக்குவரத்து நெரிசலில் வீணாகும் நேரத்தை குறைக்க முடியாமல் இருக்கின்றன. தினசரி பயன்பாட்டிற்கு இவை செலவு மிக்கவையும் கூட. இவற்றுக்கு மாற்றான ஆட்டோக்களில் பல நகரங்களில் மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

எனவே போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பைக் டாக்சி சேவை சிறந்தவையாக இருக்கின்றன. பேக்சி மற்றும் எம்-டாகிசிக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் மாநில கட்டுப்பாடுகள் தடைக்கல்லாக இருக்கின்றன. உபெர் மற்றும் ஒலா போன்ற சேவைகளே கூட கட்டுப்பாடு விதிகள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. ஆனால் ஹரியானா மாநிலத்தை பார்த்து மற்ற மாநிலங்களும் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் இந்தோனேசியாவில் இருப்பது போல இந்தியாவிலும் துடிப்பான பைக் டாக்சி சேவைத் துறை உருவாகி பயணிகளுக்கு நலன் பயக்கும்.

இணையதளங்கள்; M-Taxi , BaxiTaxi

ஆக்கம் ஜெய் வரதன் | தமிழில் சைபர்சிம்மன்