'பணத்தை இலக்காக கொள்ள வேண்டாம்'- GoFrugal குமார் வேம்பு!

0

அக்டோபர் முதல் வாரத்தில் டை அமைப்பின் மாநாடு சென்னையில் நடந்தது. இதில் பலரது பேச்சுகள் பயனுள்ளதாக இருந்தது. 'கோ ஃப்ருகல்’ (Go frugal) நிறுவனத்தின் நிறுவனர் குமார் வேம்புவின் பேச்சும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குமார் வேம்பு வேறு யாருமில்லை, ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் சகோதரர். 

இவர் இன்ஜினீயரிங் படித்த முடித்த பிறகு ஐஐடி பேராசியர் அசோக் ஜுன்ஜுன்வாலாவிடம் புராஜக்ட் உதவியாளராக இருந்தார். அதனை தொடர்ந்து ஹெச்சிஎல் ஹெச்பி நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றினார். அதனை தொடர்ந்து குவால்காம் நிறுவனத்தில் (அமெரிக்காவில்) ஒர் ஆண்டு பணியாற்றியானார். அதன் பிறகு இந்தியா திரும்பிய இவர் சகோதரர்களுடன் இணைந்து வேம்பு சிஸ்டம்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்கள். பெயர் மாற்றப்பட்ட அந்த நிறுவனத்தில் 2003-ம் ஆண்டு வரை செயல்பட்டார். 

2004-ம் ஆண்டு கோ ஃப்ருகல் (Go frugal) என்னும் நிறுவனத்தை குமார் வேம்பு தொடங்கினார்.

இவரது நிறுவனம் இந்திய ரீடெய்ல் நிறுவனங்களுக்கு தேவையான மென் பொருளை வடிமைத்து தருகிறது. அவருடனான உரையாடலின் சுருக்கமான வடிவம்:

ரீடெய்ல் என்பது சிக்கலான விஷயம். அவர்களுக்கு சரியான தேவையான தொழில்நுட்பத்தை கொடுக்க முடியும் பட்சத்தில் அவர்கள் வேகமாக வளர முடியும். தவிர இந்தியாவில் பல ரீடெய்ல் நிறுவனங்கள் இருப்பதால் வேகமாக வளர்ச்சி அடைய முடியும் என்பதால் சிறு நிறுவனங்களை கவனம் செலுத்தத் செலுத்த தொடங்கினோம்.

அதனால் ஏற்கெனவே ரீடெய்ல் பிரிவில் மென்பொருள் தயாரித்துவந்த ஒரு நிறுவனத்தை நாங்கள் கையகப்படுத்தினோம். அந்த நிறுவனத்தில் 200 வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். இதனால் துணிந்து வாங்கினோம்.

தரமானதாகவும் இருக்க வேண்டும், அந்த மென்பொருள் சர்வதேச அளவில் குறைந்த விலையாகவும் இருக்க வேண்டும் என பெயர் மாற்றுவதை குறித்து சிந்தித்தோம். இந்த அடிப்படையில் பல பெயர்களை பரிசீலனை செய்தோம். அதில் ஒன்றுதான் ’கோ ஃப்ருகல்’ (Frugal என்றால் சிக்கனம் என்று பொருள்).

நிறுவனத்தை வாங்கியதில் தவறில்லை. ஆனால் பணம் இருக்கிறது என்பதற்காக சாப்ட்வேரை விற்பதற்காக விற்பனை பணியாளர்கள் பலரை வேலைக்கு எடுத்தோம். தவிர அந்த புராடக்ட்டில் இன்னும் பல மாறுதல்கள் செய்ய வேண்டி இருந்தது. வாடிக்கையாளர்களிடம் சென்ற பிறகு அவர்களுடைய தேவை வேறுமாதிரியாக இருக்கிறது என்பது எங்களுக்கு புரிந்தது. அதன் பிறகு அவர்களின் தேவைக்கு ஏற்றதுபோல புராட்க்ட்களை மாற்றினோம்.

சில சமயங்களில் நம்மிடம் முதலீடு இருப்பது ஆபத்தானது என்பதை நாங்கள் உணர்ந்த தருணம் இது என வேம்பு குறிப்பிட்டார்.

ஆரம்ப காலங்களில் புராடக்ட் உருவாக்குவதில் மட்டுமல்லாமல் வேறு சில சவால்களும் எங்களுக்கு இருந்தன. இப்போது டெக்னாலஜியில் முதலீடு செய்ய அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால் 2004-ம் ஆண்டு டெக்னாலஜி என்பது கொஞ்சம் காஸ்டிலியான விஷயமாக இருந்தது. தவிர, பெரும்பாலான கடைகளில் கம்யூட்டரே இல்லை. அதனால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும், விற்பனை அதிகரிக்கும், பணியாளர்களின் தேவை குறையும் என்று சொல்லும் சூழல் இல்லை. தவிர, அப்போது 2,000 ரூபாய்க்கெல்லாம் பணியாளர்கள் கிடைக்கும் சூழல் இருந்தது. அதனால் ரீடெய்ல் நிறுவனங்களுக்கு பணியாளர் ஒரு பிரச்சினையே இல்லை.

நாங்கள் எங்களுடைய சாப்ட்வேர் குறித்து வாடிக்கையாளர்களுக்கு சொன்னதை விட கம்யூட்டரின் பயன்களை குறித்த அதிகம் விளக்கினோம். அதன் பிறகுதான் எங்களுடைய புராடக்ட்களை குறித்து விளக்கத்தொடங்கினோம்.

அப்போது மொத்த ரீடெய்ல் துறையில் 10 சதவீதத்தனர் மட்டுமே கம்யூட்டர் வாங்கவே தயாராக இருந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. இப்போது கம்யூட்டர் வாங்க தயாராக இருக்கிறார்கள். அதனால் சந்தையில் இருக்கும் புராடக்ட்களில் எங்களுடைய புராடக்ட் சிறந்தது என்று விளக்கினால் மட்டும் போதுமானது.

ஆரம்பத்தில் இந்தியாவில் உள்ள ரீடெய்ல் நிறுவனங்களுக்கு மட்டுமே சேவை அளிக்க வேண்டும் என முடிவெடுத்தோம். பல ஆண்டுகள் இந்தியாவில் மட்டுமே கவனம் செலுத்தினோம். ஆனால் இந்தியாவில் எங்களது மென்பொருளை பயன்படுத்திய சிலர் வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்கின்றனர். அப்போது அவர்கள் மீண்டும் எங்களை தொடர்புகொண்டார்கள். அவர்கள் முலமாக மேலும் சிலர் என, எங்களுடைய பெரிய முயற்சி இல்லாமல் வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்து வந்தோம்.

தற்போது இந்தியா தவிர்த்து 54 நாடுகளில் எங்களின் சேவை பயன்படுத்தப்படுகிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் 100 நாடுகளில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இதற்கென பிரத்யேக குழுவினை அமைத்திருக்கிறோம். தற்போது எங்களுடைய மொத்த வருமானத்தில் 80 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் கிடைக்கிறது. இந்தியா தவிர்த்து மிகப்பெரிய சந்தை என்றால் ஆப்ரிக்க நாடுகளில் அதிக வருமானம் கிடைக்கிறது.

ஒப்பீடு தேவையா?

என்னுடைய சகோதரர் ஸ்ரீதர் வேம்புக்கும் எனக்கும் எப்போதும் ஒப்பீடு இருந்துகொண்டே இருக்கும். அவர் 10-ம் வகுப்பில் மாநில அளவில் நான்காவது மாணவர். அடுத்த ஆண்டு நான் பத்தாவது படித்தேன். 

அதனால் அனைவரும் நான் முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்பதற்காக நெருக்கடி கொடுத்தனர். இறுதியில் நான் பள்ளியில் கூட முதல் மாணவர் இல்லை. இது போல ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கும் ஸ்ரீதருக்கும் இடையே ஒப்பீடு தொடர்ந்து கொண்டே வந்தது. 

ஒரு கட்டத்தில் என்னுடைய கவலை என்னவென்றால், நீங்கள் இப்படி ஒப்பீடு செய்வதால் நான் கவலைப்பட மாட்டேன் என்றால் உங்களுடைய (ஒப்பீடு செய்பவரின்) எதிர்பார்ப்பு என்னவாகும் என்பதுதான். சச்சின் டெண்டுல்கரின் அண்ணனோ தம்பியோ சச்சின் கிடையாதே. தற்போது எதாவது புத்தகம் எழுத வேண்டும் என்றால் comparison குறித்து எழுதலாம். முதலாவது comparison செய்வதில் என்ன தவறு என்று, comparison செய்பவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என எழுதலாம் என இருக்கிறேன் என நகைச்சுவையுடன் பதில் அளித்தார் குமார் வேம்பு.

ஸ்டார்ட் அப் முதலீடு

தற்போது நிறுவனம் ஓரளவுக்கு வளர்ந்து விட்டதால், தனிப்பட்ட முறையில் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறேன். இதில் நிறுவனர்களின் தன்மை, அவர்களின் தொழில் குறித்த திட்டம் ஆகிவற்றின் அடிப்படையில் முதலீடு செய்கிறேன்.

இதுவரை நாங்கள் வளர்வதற்கு எங்களுடைய நிதியே போதுமானதாக இருக்கிறது. முதலீடு இல்லை என்றால் வளர்ச்சி பாதிப்படையும் என்றால் முதலீடு குறித்து யோசிக்கலாம். இது இல்லாமல் முதலீட்டை திரட்ட வேண்டும் என்பதற்காக முதலீட்டை பெறுவதை நாங்கள் விரும்பவில்லை.

திடீரென எதாவது புதிய ஐடியா கிடைக்கிறது, அதனை செயல்படுத்த முதலீடு தேவை என்றால் அப்போதைக்கு முதலீடு குறித்து யோசிப்போம்.

வேலையை அனுபவித்து அதற்கு இலக்கு வைத்து செயல்படுங்கள் என்பதுதான் தொழில்முனைவோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது. வேலையை ஈடுபாட்டுடன் செயல்பட்டால், பணம் புகழ் என அனைத்தும் கிடைத்துவிடும். ஆனால் பணத்தை இலக்காக கொண்டு செயல்பட தொடங்கினால், நீங்கள் நினைத்த பணம் கிடைத்த பிறகு உங்களுக்கு அந்த தொழில் மீது ஆர்வம், நம்பிக்கை, மரியாதை குறைந்துவிடும்.

உதாரணத்துக்கு ஒரு கோடியை இலக்காக வைத்தால், அந்த ஒரு கோடி சில ஆண்டுகளில் கிடைத்துவிடும். அடுத்து என்ன? அதனால் வேலையில் மட்டுமே தொழில்முனைவோர்கள் கவனம் செலுத்துவது நல்லது என விடைகொடுத்தார் குமார் வேம்பு.