தினசரி 700-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு உணவளித்து ஆதரவளிக்கும் ஆட்டோ ராஜா! 

0

மற்றவர்களுக்கு உதவுவதே உண்மையான மகிழ்ச்சி என்பதை உணர்ந்தார் டி.ராஜா. இதனால் திருட்டு போன்ற தீய பழக்கங்களில் ஈடுபட்டிருந்த இவர் நல்ல மனிதராக உருவெடுத்தார். 20 வருடங்களுக்கு முன்னால் ‘ஹோம் ஆஃப் ஹோப்’ என்கிற இல்லத்தை துவங்கி ஆதரவற்றோருக்கு அடைக்கலம் அளித்து தங்குமிடமும் உணவும் வழங்கி வருகிறார்.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வசதியான வீட்டை விட்டு ஒவ்வொரு முறை வெளியே காலடி எடுத்து வைக்கும்போதும் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காக குழந்தைகளும் பெரியவர்களும் பிச்சை எடுப்பதை பார்த்திருப்போம். பலர் இவர்களைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். சிலர் கொஞ்சம் சில்லறை கொடுப்பார்கள். ஆனால் வெகு சிலரே தங்களது நேரத்தை செலவிட்டு அவர்கள் பேசுவதைக் கேட்டு உதவிக்கரம் நீட்டுவார்கள். அதில ஒருவர்தான் 49 வயதான டி.ராஜா. 

”வெளிநாட்டிலிருந்து மற்றொரு அன்னை தெரசா வரும் வரை நாம் காத்திருக்கக்கூடாது. தேவை ஏற்படும்போது நாம் ஒருவருக்கொருவர் உதவ முன்வரவேண்டும்.” என்று திடமாக நம்புகிறார்.

தீய செயல்களில் ஈடுபட்டவர் இரட்சகனாக மாறினார்

ராஜா திருட்டு, மது அருந்துதல், சூதாட்டம் ஆகிய நடவடிக்கைகளில் சிறு வயதிலேயே ஈடுபடத் துவங்கினார். தனது வீட்டிலேயே திருடியபோது குடும்பத்தினரால் வீட்டு விட்டு வெளியே துரத்தப்பட்டார். இரண்டு வருடங்கள் பிச்சைக்காரனைப் போல தெருக்களில் வசித்தார். துர்நாற்றமடிக்கும் குப்பைத்தொட்டிகள் ஊளையிடும் நாய்கள் ஆகியவற்றிற்கிடையே நடைபாதையில் படுத்து உறங்கினார். பெங்களூருவிலிருந்து சென்னைக்கு திரும்பினார். தனது பழைய வேலைகளைத் தொடர்ந்தார். அவரது குற்றங்களுக்காக பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் தனது வாழ்க்கையின் நோக்கத்தை தேடத் துவங்கினார்.

சிறையிலிருந்து வெளியே வந்ததும் ராஜா பெங்களூருவிற்குத் திரும்பினார். ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள விரும்புவதால் தனக்கு உதவுமாறு குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டார். தனக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஆட்டோரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டத் துவங்கினார். ஆட்டோரிக்ஷா யூனியன் தலைவருக்கு மெய்க்காப்பாளராகவும் பணியாற்றினார்.

வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறிந்தார். இறக்கும் தருவாயிலிருப்போர் மற்றும் ஆதரவற்றோர் ஆகியோருக்கு உதவும் நோக்கத்துடன் 'நியூ ஆர்க் மிஷன் ஆஃப் இன்டியா' (NAMI) உருவாக்கினார்.

உதவிக்கரம் நீட்டுதல்

ராஜா 1997-ல் NAMI-ஐ துவங்கினார். முதன் முதலில் எஸ்பி சாலையில் அரை நிர்வாணத்துடன் காணப்பட்ட ஒரு பெண்மணியை மீட்டார். அவரது கால் விரல்களில் தசைப்புழுக்களுடன் உண்ணிகள் சேர்ந்து இரண்டு கால் விரல்களைக் கடித்திருந்தன. அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்து வந்தார். இங்கிருந்து தான் அவரது பயணம் துவங்கியது. தெருவிலிருக்கும் ஆதரவற்றவர்களை தனது ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு சவரம் செய்து, குளிக்கச் செய்து காயங்களை சுத்தப்படுத்தி, புதுத் துணிகளை வழங்கி வயிறார உணவளிப்பார். இவ்வாறு அவரது ஒற்றை அறைக்கு வெளியே 5’ X 6 அடி இடத்தில் NAMI செயல்படத் துவங்கியது.

”ஆதரவற்றோரை அணுகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அவர்களை வசப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களது உடல் உறுப்புகளை திருடிவிடுவதாக அந்த வழியாக செல்பவர்கள் என்னை சந்தேகப்படுவார்கள். இவ்வாறு யாரும் அவர்களை அணுகியதில்லை என்பதால் ஆதரவற்றோர் மிகுந்த அதிர்ச்சியடைவார்கள். ஏனெனில் அவர்களை நோக்கி கல்லெறியப்படுவதையும் அவதூறாக பேசப்படுவதையுமே அனுபதித்துள்ளனர்.” என்றார் ராஜா

”சிலர் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். அவர்களால் நகரவே முடியாது. அவ்வாறு நகரக்கூடியவர்கள் குப்பைகளில் இருக்கும் எஞ்சிய உணவுக்காக தெரு நாய்களுடன் போட்டியிடவேண்டியிருக்கும். இதில் பெரும்பாலானோர் குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்டதால் மிகவும் கொடூரமான வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்க்ளைப் பார்க்க நேர்ந்தால் அவர்களை NAMI கீழ் செயல்படும் ஹோம் ஆஃப் ஹோம் என்கிற இல்லத்திற்கு அழைத்து வருவேன்.”

இரக்கம் மற்றும் பச்சாதாப உணர்வுடன் இயங்கும் இந்த இல்லம் தற்போது 700 மக்களுக்கு ஒரு நாளுக்கு மூன்று வேளை உணவளித்து வருகிறது. மருத்துவப் பராமரிப்பு அளிக்கப்படுகிறது. தங்குமிடமில்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்குமிடமும் கல்வி உதவியும் அளிக்கப்படுகிறது. பொதுமக்களின் நன்கொடை மூலமாகவே இயங்கி வருகிறது. அரசாங்கத் தரப்பிலிருந்து எந்தவித ஆதரவும் அளிக்கப்படவில்லை.

தண்ணீர் பிரச்சனை

ஹோம் ஆஃப் ஹோப்பில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதுதான் தற்போது ராஜா சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சனையாகும். தண்ணீர் வாங்குவதற்காக மாதந்தோறும் கிட்டத்தட்ட 40,000 முதல் 50,000 ரூபாய் வரை செலவிடுகிறார் ராஜா.

”ஹோம் ஆஃப் ஹோப் சந்தித்து வரும் தண்ணீர் பிரச்சனை குறித்தும் அதற்காக மிகப்பெரிய தொகை செலவிடப்படுவது குறித்தும் சில வாரங்களுக்கு முன்னால் செய்தித்தாளில் படித்துத் தெரிந்துகொண்டேன். என்னால் இயன்ற உதவியை செய்ய நினைத்தேன். இந்த பிரச்சனை குறித்து பேசுவதற்காக ராஜாவை சந்தித்தேன். வீட்டில் இருந்த போர்வெல்லில் தண்ணீர் வராமல் வற்றிவிட்டதாகவும் ஒவ்வொரு மாதமும் அதிகளவில் பணம் செலுத்தி டேங்கர்களில் தண்ணீர் வாங்குவதாகவும் அந்த சந்திப்பில் ராஜா தெரிவித்தார். தண்ணீர் பிர்ச்சனைக்கான உடனடி தீர்வு காணவேண்டும் என்பதை உணர்ந்தேன்.” என்றார் ரியல் எஸ்டேட் மற்றும் போட்டோகிராஃபி கன்சல்டண்டான 45 வயது ரெஜி கோஷி.

ஏரிக்கு அருகிலிருக்கும் நிலத்தில் புதிய போர்வெல் எடுத்து தண்ணீர் பிரச்சனைக்கான தீர்வுகாண ஒரு க்ரௌட் ஃபண்டிங் வாயிலாக நிதி உயர்த்துவதற்கு ‘தி வாட்டர் ப்ராஜெக்ட்’ என்கிற முயற்சியைத் துவங்கினார் ரெஜி. 

இந்தியாவில் ஆதரவற்றோர் யாருமே இல்லாத நிலை ஏற்படவேண்டும் என்பதற்காக தண்ணீர் பிரச்சனைக்கான தீர்வு கிடைத்ததும் NAMI விரிவடைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. 

“தேவையானோருக்கு உதவி புரிந்து அவர்களது மகிழ்ச்சியை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பயணத்தில் நான் சந்தித்த தடைகளை எதிர்கொள்ள அவர்களது மகிழ்ச்சிதான் எனக்கு வலிமையளித்தது.”

ஆங்கில கட்டுரையாளர் : சிரீஷா தமர்லா