ஹாலிவுட் வரை சென்று வர்த்தகத்தில் சாதனை புரியும் 22 வயது இளைஞன்!

0

அந்த சிறுவனின் வயதுடைய மற்றவர்கள் எல்லாம் பாட்டி கதைகளில் சொன்ன புதையலைத் தேடுவதிலும், வீடியோ கேம் விளையாடுவதிலும் நேரத்தைச் செலவழிக்க, அவன் மட்டும் வித்தியாசமாய் வேறு ஒன்றில் கவனம் செலுத்தினான். ஆம். பதினான்கு வயதான இஷான் வியாஸின் கவனம் முழுவதும் புதிது புதிதாக இணையதளம் வடிவமைப்பதில்தான் இருந்தது. அது 2008ம் ஆண்டு. மக்களுக்கு இணையம் அவ்வளவாக பரிச்சயம் ஆயிராத காலமது. ஆனால் எல்லா நிறுவனங்களுக்கும் இணையத்தின் அவசியம் புரிந்திருந்தது. நிறுவனங்களின் இந்த எண்ணத்தையே அந்த சிறுவன் முதலீடாக்கினான். இஷான் வடிவமைத்த முதல் இணையதளம் அவனுக்கு 3500 ரூபாயையும் கூடவே அளவில்லா நம்பிக்கையையும் தந்தது. பதின்பருவ அனுபவங்கள் எல்லாம் கைகொடுக்க, 21வது வயதில் "ஆஸ்பிரிகாட்" ( Aspricot ) என்னும் இணையதள வடிவமைப்பு நிறுவனத்தை முதலீடே இல்லாமல் தொடங்கினார் இஷான். செலவே இல்லாமல் துவக்கப்பட்ட அந்த விதை இன்று 2மில்லியன் டாலர் மதிப்பில் ஹாலிவுட் உட்பட 36 நாடுகளில் கிளை பரப்பி பெருவிருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

ஆஸ்பிரிகாட் குழுவினர்
ஆஸ்பிரிகாட் குழுவினர்

டிஜிட்டல் வர்த்தகத்தை மையப்படுத்தியே ஆஸ்பிரிகாட் நிறுவனம் இயங்குகிறது. மற்ற நிறுவனங்களைப் போல் இல்லாமல் சில தனித்தன்மைகளை கொண்டுள்ளது ஆஸ்பிரிகாட். முதலாவது, மற்ற தளங்களின் வடிவமைப்பை அப்படியே நகல் எடுப்பதை ஆஸ்பிரிகாட் ஊக்குவிப்பதில்லை. அஸ்திவாரத்தில் தொடங்கி, படிப்படியாய் கட்டமைத்து, வாடிக்கையாளர்களுக்கு அவ்வளவாய் பரிச்சயமில்லாத, ஆனால் அவசியம் தேவைப்படுகிற, மேம்படுத்தப்பட்ட வசதிகளை எல்லாம் புகுத்தி, ஆறே நாட்களில் பளபளவென தளத்தை வடிவமைத்து கையில் கொடுத்துவிடுகிறார்கள். “ அதற்காக தரத்தை எக்காரணம் கொண்டும் நாங்கள் விட்டுக்கொடுப்பதில்லை. அந்த இணையதளத்தை எல்லாவித கருவிகள் மூலமாகவும் அணுக முடிகிறதா என ஆராய்கிறோம். இணையவெளிக்கான தரங்களை நிர்ணயிக்கும் வேர்ல்டு வைட் வெப் கன்சோர்டியம் (World Wide Web Consortium) வகுத்த விதிகளை மீறாமல்தான் வடிவமைக்கிறோம். அதேபோல் அந்த தளத்தின் கூகுள் பக்கம் வேகத்திறன் சோதனையில் 80க்கு அதிகமான புள்ளிகளை பெறுகிறதா எனவும் சோதிக்கிறோம். அதேபோல் ஒரு வாடிக்கையாளருக்கு வடிவமைத்த டிசைனை இன்னோரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவதில்லை” என இதுகுறித்து கூறுகிறார் இஷான்.

இரண்டாவது, ஆஸ்பிரிகாட்டின் கட்டமைப்பு. “புதிதாய் தொழில் தொடங்குபவர்கள் பெரும்பாலும் முறையான கட்டமைப்பிலும், செயல்முறைகளிலும் கவனம் செலுத்துவதில்லை. நானும் தொடக்கத்தில் இதே தவறைத்தான் செய்தேன். அந்த தவறுகள் எனக்கு ஆசிரியராய் இருந்து நிறைய கற்றுக்கொடுத்தன. அதன்பின் தெளிவான செயல்முறைகளையும், தானியங்கி சூட்சமங்களையும் கண்டுகொண்டேன்“ என தன் அனுபவத்தை பகிர்கிறார் இஷான்.

அதேபோல் சேல்ஸ் மற்றும் சப்போர்ட் செயல்முறைகளிலும் அதிகபட்ச கவனத்தோடு செயல்படுகிறது இந்த நிறுவனம். உதாரணமாக, நிறுவனத்திலிருந்து அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு, குறித்த காலத்தில் பதில் அனுப்பாவிட்டால் அந்த ஊழியர் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மூன்றாவதுதான் இருப்பதிலேயே முக்கியமானது. நிறுவனத்தில் 60 சதவீதத்திற்கும் மேல் பெண் ஊழியர்கள்தான். இந்த எண்ணிக்கையை குறைக்கும் எண்ணமே எங்களுக்கு இல்லை என்கிறார் இஷான்.

கோட்பாடுகளை தகர்த்த துறுதுறு இளைஞன்

இஷான் வியாஸ் பிறந்தது ஒரு பிராமண குடும்பத்தில். அவரது தந்தைக்கு தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. இதனால் இஷான் பதின்பருவத்தில் நுழைவதற்கு முன்பே அவரின் தந்தை ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும் எந்தக் குறையும் இல்லாமல் சுதந்திரமாகத்தான் வளர்ந்தார் இஷான்.

“நான் பள்ளியில் பாடங்களை கூர்ந்து கவனிக்கும் மாணவன் இல்லை. என் சுயதொழிலில் அதிக கவனம் செலுத்தியதால் பத்தாம் வகுப்பு கணிதத்தில் தோல்வியடைந்தேன். பதினோராம் வகுப்பு படிக்கும்போது ஒரு நிறுவனத்தின் பகுதிநேர ஊழியனாக பணியாற்றினேன். பின்னர் பெங்களூரில் இளங்கலை வணிக மேலாண்மை படித்தேன்” என தான் கல்வி பயின்ற கதையை சிரித்தபடியே கூறுகிறார் இஷான்.

நிறுவனர் இஷான் வியாஸ்
நிறுவனர் இஷான் வியாஸ்

பெங்களூரில் படித்தகாலத்தில் செய்திகளை மையமாய் கொண்ட ஒரு இணையதளத்தில் பணியாற்றினார். அந்த அனுபவம் அவருக்கு தனியாய் தொழில் தொடங்கும் நம்பிக்கையை கொடுத்தது. இரண்டு நண்பர்கள், ஒரு மடிக்கணினி, ஒரு சாதாரண கணினி என 2013ல் ஒரு நன்னாளில் எளிமையாய் தன் நிறுவனத்தைத் தொடங்கினார் இஷான். தொடங்கிய இருபதே நாட்களில் ஒரு லட்சம் மதிப்பளவிற்கு வர்த்தகம் செய்தது அவரின் நிறுவனம்.

“நம் சமூகம் எப்போதும் சுயதொழில் முனைவோரை ஒதுக்கி வைத்தே பார்க்கிறது. ஆனால் எனக்கு என் பெற்றோர் மிகவும் ஆதரவாய் இருந்தனர். அதற்காக அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். இதுதவிர நிறைய சவால்களும் இருந்தன. ஒரு சின்ன பையனால் எந்தளவிற்கு பொறுப்பாய் வேலை பார்க்க முடியும் என என் வாடிக்கையாளர்கள் பயந்தார்கள். அவர்களை திருப்திபடுத்த நான் கடுமையாக போராட வேண்டியதிருந்தது. அதேபோல் சொன்ன தேதியில் சொன்ன சம்பளத்தை தந்துவிடுவேன் என என் ஊழியர்களுக்கும் நம்பிக்கையளிக்க வேண்டியதிருந்தது” என தன் கடந்தகாலத்தை நினைவுகூறவும் இஷான் தவறவில்லை.

இன்று இந்த 22வயது இளைஞரின் நிறுவனம் ரியல் எஸ்டேட், ஹெல்த்கேர் என பல துறைகளிலும் கொடி கட்டிப் பறக்கிறது. சிஸ்கோ, ஐபிஎம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் ஆஸ்பிரிகாட்டிற்கு வாடிக்கையாளர்களாக உள்ளன. இன்டோரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், சர்வதேச வர்த்தகங்களுக்காக சமீபத்தில் ஹாலிவுட்டிலும் தன் கிளையை நிறுவியுள்ளது. இதன்மூலம் இந்த நிறுவனத்தின் மதிப்பு இரண்டு மில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.

“எங்கள் வாடிக்கையாளர்கள் சொல்வதை கவனமாக கேட்கிறோம். அவர்கள் சொல்வதை செயல்படுத்தி பல சமயங்களில் தோல்விகளையும் சந்தித்திருக்கிறோம். ஆனால் அவற்றை எல்லாம் எங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்புகளாகவே பார்க்கிறோம்” என தங்கள் நிறுவனம் பெற்ற படிப்பினையை பகிர்ந்துகொள்கிறார் இஷான்.

முன்னே செல்!

ஆஸ்பிரிகாட் எப்போதும் அடுத்த கட்டத்திற்கு பாய்வதற்கு தயங்குவதே இல்லை. “ஆப்பிள் வாட்ச் கருவிக்கான செயலிகளை இப்போது வடிவமைத்து வருகிறோம். அடுத்த கட்டமாக, விழித்திறனை மையப்படுத்தி செயலிகள் வடிவமைக்க இருக்கிறோம். இப்போது 22 பேர் இங்கே பணியாற்றுகிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை நூறைத் தொட்டுவிடும். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடவேண்டும். ஆஸ்பிரிகாட்டை இந்தியாவின் தலைசிறந்த டிஜிட்டல் வர்த்தக சேவை நிறுவனங்களுள் ஒன்றாக மேம்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள்” என தங்களின் எதிர்கால திட்டங்களை கோடிட்டு காட்டுகிறார் இஷான்.

“சின்ன சின்ன சமரசங்கள் வாழ்க்கையை அழகாக்கலாம். ஆனால் கலை என வந்துவிட்டால் அங்கே சமரசத்திற்கு இடமேயில்லை”. இந்த கொள்கையைத்தான் பின்பற்றுகிறது ஆஸ்பிரிகாட். இருக்காதா பின்னே? டிஜிட்டல் வர்த்தகத்தையே கலைகண்ணோடு பார்ப்பவர்களாயிற்றே அவர்கள்.

இணையதள முகவரி: Aspricot