இளம் சமூகத்தினர் முதியோர்களை பராமரிக்க பயிற்சியளிக்கும் ஸ்டார்ட் அப்!

0

டாக்டர் அருண் வர்மா பத்தாண்டு காலம் IL&FS-ல் பணியாற்றியதில் முதியவர்களை பராமரிப்பவர்களுக்கான தேவை இருப்பதைத் தெரிந்துகொண்டார். 2020-ம் ஆண்டில் சுமார் ஐந்து பேரில் ஒருவர் 65 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகளின் பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதை அவர் கவனித்தார்.

வயது இடைவெளி குறைந்துகொண்டே வரும் நிலையில் முதியோர்களுக்கான பராமரிப்பாளர்களின் தேவை அவசியமாவதை அருண் உணர்ந்தார். எனவே இந்தப் பகுதியில் செயல்பட விரும்பினார். மக்கள் தொகை அதிகம் இருக்கும் நாடுகளில் தேவைக்கேற்ப பெரியளவில் செயல்படும் போக்கும் தொழில்நுட்பமும் மட்டுமே தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தார்.

இதுவே 2017-ம் ஆண்டு க்ராண்ட்ஏஜ் சர்வீசஸ் (Grandage Services) துவங்க காரணமாக அமைந்தது. இந்நிறுவனம் முதியோர் பராமரிப்பில் கவனம் செலுத்துகிறது. கிராண்ட்ஏஜ் சர்வீசஸின் ப்ராண்டான பெங்களூருவைச் சேர்ந்த வின்ஏஜ் (Winage) பராமரிப்பாளர்களில் துணை செவிலியர் பணிநிலையை (sub-nursing cadre) உருவாக்கி முதியோர்களுக்கான பராமரிப்பை சேவையாக வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

வின்ஏஜ் சமூகத்தின் நலிந்த இளம் சமூகத்துடன் பணியாற்றி அவர்களுக்கு பயிற்சியளித்து பராமரிப்பாளர்களாக சான்றிதழ் வழங்குகிறது. இந்த இளம் சமூகத்தினர் பின்னர் அன்றாட வாழ்க்கைக்கு உதவி தேவைப்படுவோரை பராமரிக்க மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் நியமிக்கப்படுகின்றனர்.

வின்ஏஜ் வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் பராமரிப்பாளர்களை நியமிப்பதுடன் முதியோர்களுக்கான நீண்டகால பராமரிப்பையும் வழங்குகிறது. மருந்து கொடுப்பது, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் தேவை எழும்போதும் உதவுகிறது. முதியோர் பராமரிப்பில் குறுகிய கால தேவைக்கும் பராமரிப்பாளர்கள் சேவையளிக்கின்றனர். 


பராமரிப்பாளர்களுக்கான பயிற்சி

வின்ஏஜ் அதன் வணிக மாதிரியின் ஒரு பகுதியாக வேலையில்லா இளம் சமூகத்தினர் அதிகபட்சமானோருக்கு பயிற்சி வழங்கி பராமரிப்பாளர்களாக மாற்ற விரும்புகிறது. அடிப்படை பராமரிப்பு மற்றும் முதலுதவி சேவைகளில் பயிற்சியளிக்கின்றனர். இளைஞர்கள் பராமரிப்பு திறன்பெற உதவும் வகையில் இக்குழுவினர் சுகாதார பயிற்சியாளர்களுடன் இணைந்துள்ளனர்.

ஒரு மாணவருக்கான பயிற்சி கட்டணம் சுமார் 15,000 ரூபாய். பராமரிப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 10,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

வின்ஏஜ் பராமரிப்பாளர்களுக்கு 450 மணி நேர பயிற்சியளிக்கிறது. கடந்த 18 மாதங்களில் இந்நிறுவனம் 300-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சியளித்து பணி வாய்ப்பும் வழங்கியுள்ளது.

”நகர்புறங்களில் உள்ள குடிசைப்பகுதிகளில் வேலை வாய்ப்புத் தேடும் சரியான நபர்களைக் கண்டறிகிறோம். அத்துடன் அரசு தரவுகளையும் ஆராய்கிறோம்,” என்றார் அருண்.

IL&FS-ல் HIV/AIDS சாரந்த உலகின் முதல் பொதுத்துறை-தனியார் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் அருண் தலைமை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் 45,000-க்கும் அதிகமான ஹெச்ஐவி பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பமான தாய்மார்கள் பராமரிப்பு மற்றும் சிகிச்சை வாயிலாக மீட்கப்பட்டனர். இந்த திட்டத்திற்கு அருண் பொறுப்பேற்றதால் அவரது முயற்சி எளிதானது.

ஒழுங்குபடுத்தப்படாத பிரிவில் செயல்பட்டதில் சந்தித்த சவால்கள் குறித்து அருண் குறிப்பிடுகையில், 

“சுகாதார நிலையங்கள் மற்றும் வீடுகளில் முறையான பயிற்சியும் திறனும் இல்லாத நபர்களை நியமிக்கும் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் ஏஜென்சிகளிடம் இருந்து பிரச்சனைகளை சந்தித்தோம். இவர்கள் அங்கீகரிக்கப்படாத சந்தையில் செயல்பட்டனர். இதில் ஊழியர்கள் நலன் முழுமையாக நிராகரிக்கப்பட்டது. சேவையைப் பொருத்தவரை இதில் ஈடுபடுவோருக்கு பணி குறித்த புரிதலே இல்லாத காரணத்தால் சிறப்பான சேவையும் வழங்கப்படவில்லை,” என்றார்.

குழுவை உருவாக்குதல்

டாக்டர் அருண் திட்டத்தை உருவாக்கியதும் IL&FS-ல் உடன் பணியாற்றிய பலர் அவருடன் இணைந்துகொண்டனர். ஃபார்சூன் 500 நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றிய இவரது மனைவி ரீடா வர்மாவும் இவருடன் இணைந்துகொண்டார்.

நீண்ட நாட்கள் உடன் பணியாற்றிய நண்பரான ராஜ் நாராயணின் அம்மாவிற்கு அல்சீமர் நோய் தாக்கம் ஏற்பட்டு முறையான உதவியின்றி இறந்துபோனார். இந்த துயரத்தை அனுபவத்த ராஜ், அருணுடன் இணைந்துகொண்டார். முப்பதாண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ராஜ், டிஜிட்டல் மீடியா நிபுணர், லைஃப் கோச், மற்றும் என்எல்பி பயிற்சியாளர். தற்போது இருபதுக்கும் அதிகமான நபர்கள் அடங்கிய குழுவாக செயல்படுகின்றனர்.

சேவைகள்

இந்நிறுவனம் பெங்களூருவைச் சேர்ந்தது என்றாலும் இக்குழுவினர் தற்போது மும்பையிலும் செயல்படுகின்றனர். ”பெரியளவில் செயல்படுவதிலேயே வெற்றி அடங்கியுள்ளது. நாங்கள் குறைவான ஊழியர்களுடனும் தேவையான அளவு சொத்துக்களுடனும் செயல்படுவதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். முறையான திட்டமிடல் வாயிலாக அதிக செயல்திறன் எட்டப்படுவதும் மிகவும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது,” என்றார் அருண்.

கடந்த 18 மாதங்களில், இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தேசியளவிலான பயிற்சி பார்ட்னராக வின்ஏஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் சுகாதார துறை திறன் கவுன்சில் மற்றும் வீட்டு வேலை செய்வோர் துறைக்கான திறன் கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற பெரிய நிறுவனங்களும் தங்களது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்காக வின்ஏஜுடன் இணைந்துள்ளது.

மெட்ரோ மருத்துவமனைகள் (டெல்லி/என்சிஆர்), ஆஸ்டர் மருத்துவமனை (பெங்களூரு), சுஷ்ருத் மருத்துவமனை (மும்பை) போன்ற மருத்துவமனை நெட்வொர்க்குகள் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பார்ட்னர்களாக இந்நிறுவனத்துடன் இணைந்துள்ளனர்.

வளர்ச்சி

வின்ஏஜ் நிறுவனம் அதன் செயல்பாடுகளைத் துவங்கியது முதல் சுமார் 30 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியது. முதல் 12 மாதங்களில் 30 லட்ச ரூபாய் ஈட்டிய நிலையில் உறுதியான ஆர்டர் அளவு 300 லட்ச ரூபாயாக இருப்பதாக அருண் தெரிவித்தார். இந்நிறுவனம் தற்போது சுயநிதியில் இயங்கி வருகிறது.

”செயல்பாடுகள் மீதான லாபத்தை 17-18 சதவீதமாக தக்கவைத்துக்கொண்டு வருகிறோம். சேவை வழங்கப்படும் தரப்பில் நாள் ஒன்றிற்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். எங்களது பயிற்சியாளர் வாயிலாக பல்வேறு குழுக்களுக்கு பயிற்சி வழங்குகிறோம்,” என்றார் அருண்.

அத்துடன் இந்நிறுவனம் நுகர்பொருட்கள் மற்றும் சுகாதார பொருட்கள் விற்பனையிலிருந்து சராசரியாக 15 சதவீத லாபம் ஈட்டுகிறது. இந்தப் பொருட்கள் வெவ்வேறு விற்பனையாளர்களிருந்து வாங்கப்படுகிறது.

சிசியு, இண்டியா ஹோம் ஹெல்த்கேர், ஹெல்த்கேர் அட் ஹோம், நைட்டிங்கேல்ஸ், அப்போலோ, மேக்ஸ் போன்ற நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவையளிப்போர் மற்றும் மருத்துவமனைகள் இந்தப் பகுதியில் செயல்படத் துவங்கியுள்ளது.

2015-ம் ஆண்டு ஜூலை மாதம் இவர்களது சேவை குறித்து விசாரித்தோரின் எண்ணிக்கை 60,000-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1,00,000-ஆக அதிகரித்தது. இது வீட்டிலேயே வழங்கப்படும் தரமான சுகாதார சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்து வருவதை உணர்த்துகிறது. வீட்டில் சுகாதார சேவைகள் வழங்குவோரான Portea நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சீரிஸ் சி நிதியாக 26 மில்லியன் டாலர் உயர்த்தியது இந்தத் துறையில் ஆர்வம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.

ஆரோக்கியமான எதிர்காலம்

வின்ஏஜ் வளர்ச்சியடைந்து ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, கொச்சி போன்ற பகுதிகளில் விரிவடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், வீடுகள் போன்ற இடங்களில் பணியில் அமரக்கூடிய துணை செவிலியர் தொழில்முறையினரை உருவாக்கவும் இக்குழுவினர் விரும்புகின்றனர்.

ஆர்வமுள்ள மக்கள் தங்களது சொந்த பயன்பாட்டிற்காகவோ பணி வாய்ப்பிற்காகவோ பராமரிப்பு குறித்து கற்றுக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த ஸ்டார்ட் அப் ‘வின்ஏஜ் அகாடமி ஃபார் கேர்’ உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

குறுகிய மற்றும் நடுத்தர கால அடிப்படையில் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு பராமரிப்பு கோறும் மக்களுக்காக ஒரு தனித்துவமான பிரிவாக ’கேர் ஹோம்ஸ்’ உருவாக்கவும் நிறுவனர்கள் விரும்புகின்றனர்.

பராமரிப்பில் IoT மற்றும் ரோபோடிக்ஸ் பங்களிப்பு குறித்தும் இக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். ”நகரமயமாதல் விரைவாக இருப்பதாலும் நகர்புற வாழ்க்கை மிகவும் பரபரப்பாக மாறி வருவதாலும் பராமரிப்பை சேவையாக வழங்கும் முறை அதிகம் பேரை சென்றடையும் என எதிர்பார்க்கிறோம். இதுவே வின்ஏஜ் நிறுவனத்திற்கான வாய்ப்பாகும்,” என்றார் அருண்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா