ஆப்பம் முதல் ஆய்வு வரை: கிரவுட் ஃபண்டிங்கை நம்பச் சொல்லும் கெட்டோ!

0

"நாம் அனைவரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் 'கிரவுட் ஃபண்ட்டிங்' உடன் நிச்சயம் தொடர்பு வைத்திருந்திருப்போம். நான் 14 வயதில் இருந்தபோது ஒரு கிரவுட் ஃபண்டிங் சம்பவத்தில் பங்கு வகித்தேன். நாங்கள் 25 சுட்டிகள் சேர்ந்துதான் விளையாடுவோம். எங்கள் குழுவில் ஒரு காவலாளியின் மகனும் இருந்தார். ஒருநாள் அந்த நண்பன் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டான். என்ன பிரச்சினை என்று அவனிடம் கேட்டபோது, பள்ளிச் செல்வதற்கு புத்தகங்களும் சீருடையும் அவனிடம் இல்லை என்பது தெரியவந்தது. உடனே, நாங்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து பணத்தைத் திரட்டினோம். எங்கள் நண்பனுக்கு உதவினோம்." - டெக்ஸ்பார்க் 2015-ல் 'கிரவுட் ஃபண்ட்டிங்' என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்திய நடிகரும் தொழில்முனைவருமான குணால் கபூர் இவ்வாறு பேசத் தொடங்கினார். எதோ ஒரு சூழலில் நம்மை கிரவுட் ஃபண்டிங் சூழ்ந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆரம்ப நிலை

தன் திரைப்படங்களுக்குப் பிறகு, தன் ஸ்டார்ட்அப் உடன், தான் உணர்வுபூர்வ பந்தம் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் 'கெட்டோ' (Ketto) இணை நிறுவனர் குணால். அவரைப் பொறுத்தவரையில், 2006 வரை கிரவுட் ஃபண்டிங் என்ற முறைக்கு பெயரே வைக்கப்படவில்லை. 2009-ல் தான் கிரவுட் ஃபண்டிங்குக்கு முதன்முறையாக உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டது. 2013-ல் இதன் சந்தை மதிப்பு 3 பில்லியன் டாலர்களை நெருங்கியது; இது, இந்த ஆண்டு இறுதிக்குள் 34 பில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெவ்வேறு திட்டங்களுக்காக, அதிகளவில் இணையத்தின் வாயிலாகவே பெரிய எண்ணிக்கையிலான மக்களிடம் இருந்து சிறுக சிறுக நிதியைத் திரட்டுவதே கிரவுட் ஃபண்டிங். குறிப்பாக, உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வேண்டும் எனில், ஒன்றோ அல்லது இரண்டோ முதலீட்டாளர்களிடம் நாட வேண்டிய அவசியமில்ல. மாறாக, கெட்டோ போன்ற கிரவுட் ஃபண்டிங் தளம் மூலமாக 1000 பேரிடம் தலா ரூ.100-ஐ திரட்டலாம்.

ஆழமும் பழமையும்

லிபர்டி சிலையை உதாரணமாக முன்வைத்து கிரவுட் ஃபண்டிங்கின் ஆழத்தையும் பழமையையும் விவரித்தார் குணால். பிரான்ஸிலிருந்து அமெரிக்காவுக்கு சிலை அனுப்பப்பட்டது. ஆனால், அந்த சிலையின் அடித்தளத்தை அனுப்ப மறக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள் மக்களிடையே நன்கொடை வசூலிக்க ஆரம்பித்தனர். அதன் மூலம் உடனடியாக திரட்டப்பட்ட 100,000 டாலர்களைக் கொண்டு சிலையின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

தகர்க்கப்படும் தடைகள்

"தடுப்புச் சுவர்களைத் தகர்த்தெறியும் வல்லமை மிக்கது இணையம். நிகழ்நேரத்தில் தொடர்புகொள்வது சாத்தியமான பிறகு, இடைவெளி என்பது முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டது. புதிய உறவுகளை கட்டமைப்பதற்காக, தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்டன சமூக வலைதளங்கள். வர்த்தகர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் இடைவெளியை ஆன்லைன் ஷாப்பிங் அகற்றிவிட்டது. அந்த வகையில், முதலீடுகள் உள்ள மக்களுக்கும், முதலீடுகள் இல்லாத மக்களுக்கும் இடையிலான தடைகளைத் தகர்த்து இணைக்கிறது இந்த கிரவுட் ஃபண்டிங்" என்றார் குணால்.

தங்களிடம் உள்ள முதலீட்டைக் கொண்டு செய்ய வேண்டியதை முடிவு செய்யும் வல்லமை என்பது சிலரது வசம்தான் இருந்தன என்று கூறும் அவர், பல ஆண்டுகளாகவே தொழில்கள், விரிவாக்கங்கள், ஆய்வு மற்றும் கல்விக்கான முதலீடுகளை அணுகுவது என்பது கடினமனதாகவே இருந்தது. அதை கிரவுட் ஃபண்டிங் மாற்றிவிட்டது. ஒவ்வொரு தனிநபரையும் முதலீட்டாளராக மாற்றுவதற்கு கிரவுட் ஃபண்டிங் துணைபுரிவதாகக் குறிப்பிட்டார்.

கெட்டோவும் அதன் ஆரம்பமும்

உலகம் ஏற்கத் தயாராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட, முதலீடு என்பது சிலர் வசம் மட்டுமே இருந்ததால், புதிய தயாரிப்புகளும் யோசனைகளும் வெளிச்சத்துக்கு வர முடியாமல் இருட்டிலேயே அடைபட்டன. ஆனால், இப்போது கிரவுட் ஃபண்டிங் மூலம் அதிகாரம் மீண்டும் மக்கள் வசம் திரும்பியிருக்கிறது.

சமூகப் பணிகளுக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, நிதி திரட்டுவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்ததை குணால் கண்கூடாகப் பார்த்திருக்கிறார். ஒவ்வொரு 100 ரூபாய் திரட்டுவதற்கும், சுமார் 45 ரூபாய் செலவிட வேண்டியதாக இருந்தது. "அது ஏற்கத்தக்கது அல்ல என்பதை அறிந்தேன். அத்துடன், வெவ்வேறு விதமான மனிதர்களை அணுகுவதிலும் அவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதைப் பார்த்தேன். மேற்கத்திய நாடுகள் போல் அல்லாமல், இந்தியாவில் சமூகப் பணி என்பது கடினமாக உள்ளது. இது மாற வேண்டுன் என்று நினைக்கிறேன்" என்றார் குணால்.

வருண் சேத் உடனான சந்திப்புக்குப் பின, இருவருக்குமே தங்கள் யோசனையை செயல்படுத்த உணர்வுபூர்வ ஈடுபாடு மிகுந்திருந்தாதால், இணையம் மூலம் மக்களை இணைக்க களமிறங்கினர்.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்