பைக், கார் பழுதடைந்து நின்று விட்டதா? 'GoBumpr' செயலி மூலம் மெக்கானிக்கை உடனே அழையுங்கள்!

0

தரமான சேவையை இணைக்கும் பாலமாகவும் பெருகி வரும் சந்தை வாய்ப்பை கைப்பற்ற நினைக்கும் கல்லூரி நண்பர்களின் தொழில் முயற்சி.

நடுரோட்டில் வாகனம் பஞ்சர் அடைந்து அல்லது பழுதாகி நின்று செய்வதறியாது திணறும் சம்பவம் நம் எல்லோரின் வாழ்விலும் நிச்சயம் நடந்திருக்கும். இந்த நிலையை இனி இலகுவாக சமாளிக்க முடியும் - "கோபம்பர்" (GoBumpr) என்ற செயலியை நீங்கள் தரவிறக்கம் செய்திருந்தால்!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய இடைவிடாது வந்த சேவை அழைப்புகளைக் கடந்து சற்றே ஓய்வான ஒரு இனிய காலை பொழுதில் தமிழ் யுவர்ஸ்டோரி 'கோபம்பர்' நிறுவனத்தின் கார்த்திக் மற்றும் நந்தகுமாரிடம் பிரத்யேக நேர்காணல் நடத்தியது.

உருவான கதை

கார்த்திக், நந்தகுமார் மற்றும் சுந்தர் இணைந்து உருவாக்கியது தான் கோபம்பர், இவர்கள் மூவரும் முதுகலை படிப்பை IIM ஷில்லாங்கில் பயின்றவர்கள். மேலாண்மை படிப்பின் பொழுதே பல்வேறு தொழில் சார்ந்த போட்டிகளில் பங்கு பெற்று வென்றும் உள்ளார்கள்.

முதுகலை படிப்பு முடிந்ததும் அவரவர் பாதையில் பயணித்தாலும், தொடர்பிலேயே இருந்தனர். 2014 ஆம் ஆண்டு இவர்கள் அனைவரும் இணைந்து மேலாண்மைத் துறையில் கன்சல்டிங் நிறுவனம் ஒன்றை தோற்றுவித்து அதன் மூலமாக தொழில்முனை நிறுவனங்களுக்கும் சிறு தொழில் புரிபவர்களுக்கும் ஆலோசனை வழங்கினர்.

"என்னுடைய அப்பா, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு பரிசளித்த பைக் அவ்வப்போது பழுதடையும் அனுபவம் உள்ளது" என்று புன்முறுவலுடன் நந்தகுமார் நம்மிடம் பகிர்கிறார்.

படிக்கும் பொழுது ஆட்டோமொபைல் துறையில் ஒரு வர்த்தக போட்டியில் கலந்து கொண்ட அனுபவம் மற்றும் அது சார்ந்த சேவைத் துறையில் உள்ள இடர்பாடு, இதுவே நாங்கள் கோபம்பர் உருவாக்க உதவியது.

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணத்தை செயல் படுத்த ஆரம்பித்தோம். ஆறு மாத காலம் களம் இறங்கி பல்வேறு சேவை சார்ந்த இடர்பாடுகளை அறிந்து கொண்டோம், சேவை அளிப்பவர்களையும் நேரில் சந்தித்து எங்களின் செயலியில் இணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்தோம். "எங்கள் செயலியில் இடம் பெற்றிருக்கும் சேவை அளிப்பவர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் நேரில் சந்தித்து அதற்கான ஆற்றலும் வசதியும் உள்ளவர்களா என்று கண்டறியப்பட்டவர்கள்" என்கிறார் நந்தகுமார்.

கோபம்பர் செயலி

இரு சக்கர வாகனமோ அல்லது நன்கு சக்கர வாகனமோ, எந்த வித பழுதாகினும் அதற்கென்று சேவை அளிப்பவர்களை பகுதி வாரியாக பட்டியலிடுகிறது கோபம்பர்.

மல்டி சேவை வழங்கும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு மட்டுமின்றி நம் அக்கம்பக்கத்தில் உள்ள சிறு கராஜ் சென்டர்கள் மற்றும் மெக்கானிக் ஆகியோர்களையும் இதில் இணைத்துள்ளோம். இதன் மூலம் இவர்களை முன்னேற்றும் முனைப்பும் உள்ளது என்கிறது இந்த குழு.

தனது மாருதி கார் பஞ்சரான அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்த கார்த்திக், இக்கட்டான சமயத்தில் அருகாமையில் உள்ள மெக்கானிக் பற்றிய தகவலுடன் தரமான வல்லுனர்களை அறிந்து கொள்வது அவசியம் என்கிறார்.

"இது மட்டுமின்றி இரவு நேரங்களில் வண்டியில் கோளாறு ஆகுமேயானால் எங்களின் செயலி அந்த நேரத்தில் சேவை அளிக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களை மட்டுமே முன்னிலை படுத்தும்" என்று கூறுகிறார் கார்த்திக்.

நூற்றியிருபது இரு சக்கர வாகன சேவை மையங்களும் , நான்கு சக்கர வாகன மையங்களில் ஐம்பது மையங்களும் தற்பொழுது கோபம்பர் செயலியில் இடம் பெற்றுள்ளது.

பழுது சேவை மட்டுமின்றி வழக்கமான சேவைத் தேவையையும் கோபம்பர் செயலி மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வாகன சேவை எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள ரியல் டைம் ட்ராக்கிங் வசதி மற்றும் கூடுதலாக ஏதேனும் சேவையை வாகனத்திற்கு அளிக்க வேண்டும் என்ற தருணத்தில், வாடிக்கையாளருடன் நேரடியாக இன் ஆப் சாட் மூலம் இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

செயலி பதிவிறக்கம் செய்யாதவர்கள் 9003251754 என்ற எண்ணை தொடர்புக் கொண்டும் கோபம்பர் மூலம் சேவையை பெறலாம்.

எதிர்காலத் திட்டம்

ஆறு லட்சம் சொந்த முதலீட்டுடன் துவங்கிய கோபம்பர் தற்பொழுது அவர்களது வளர்ச்சிக்காக சில முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

"இந்த இரண்டு மாதங்கள் தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது" என்று கூறும் நந்தகுமார் மேலும் பல நகரங்களுக்கு தங்களின் சேவையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். பெங்களுரு, மும்பை மற்றும் டெல்லி ncr பகுதிகளில் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் கால் பதிக்க திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர பழுது பார்க்கும் சேவை மட்டுமின்றி வாகனம் சார்ந்த பிற சேவைகளையும் அடுத்த ஆறு மாதத்தில் சேர்க்கவுள்ளனர்.

இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் சேவைத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு குடையின் கீழ் அனைத்துச் சேவை என்ற இலக்கை நோக்கி இவர்கள் பயணிக்கின்றனர்.

செயலியை பதிவிறக்கம் செய்ய: GoBumpr , ஃபேஸ்புக் பக்கம்