ஏழைப் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்லூரி மாணவிகள்...

0

ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் மாதவிடாயின்போது சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவது குறித்தும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். வேதியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் படிக்கும் இனாப் குர்ரம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் டாக்டர் ஹேதல் சச்சாநந்தினி ஆகிய இருவரும் இந்தப் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளனர்.

ஹேதல் மற்றும் இனாப் குடிசைப் பகுதிகளைப் பார்வையிட்டு சானிட்டரி நாப்கின்களும் சானிட்டரி சார்ந்த பிற பொருட்களையும் இலவசமாக விநியோகித்து வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக சுகாதாரமற்ற துணிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் குறித்த விழிப்புணர்வை பெண்களிடையே ஏற்படுத்த விரும்புவதாக கூறினார் இனாப். ஆரோக்கியம் சார்ந்த அடிப்படை கருத்துக்களையும் நேப்கின்களை அப்புறப்படுத்தும் விதம் குறித்தும் எடுத்துரைக்கின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மோசமாகவே உள்ளது. இந்தியாவின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் பெண்களில் 48 சதவீதம் பேர் மட்டுமே மாதவிடாயின்போது சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் 2015-16-ம் ஆண்டிற்கான அறிக்கை தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களின் நிலையும் சிறப்பாக இல்லை என்றே சொல்லலாம். இங்கும் 78 சதவீத பெண்கள் மட்டுமே மாதவிடாயின்போது சுகாதார முறையை மேற்கொள்கின்றனர். இன்றளவும் பெரும்பாலான பெண்கள் துணி போன்ற சுகாதாரமற்ற பொருட்களை பயன்படுத்துவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட 80 சதவீதம் பெண்கள் மாதவிடாயின்போது சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதில்லை என்று ஒரு அறிக்கையில் படித்ததாக தெரிவிக்கிறார் ஹேதல். இதில் பெரும்பாலானோர் சானிட்டரி நாப்கின் குறித்து அறியவில்லை. சானிட்டரி பேட் குறித்து அறிந்தவர்களுக்கு அவற்றை வாங்க முடிவதில்லை. அவர் சண்டிகரில் நடைபெற்ற ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரம் குறித்து அறிந்தார். உடனே ஜெய்பூரிலும் அதே மாதிரியான பிரச்சாரத்தை மேற்கொள்ள தீர்மானித்தார்.

இதுவரை அரசாங்கத்திடமிருந்தோ எந்த ஒரு லாப நோக்கமற்ற நிறுவனத்திடமிருந்தோ எந்தவித ஆதரவும் கிடைக்காதபோதும் ட்விட்டர் வாயிலாக ஹேதலுக்கு உதவி கிடைத்து வருகிறது. இவர்களது நோக்கத்திற்காக பலர் பேடிஎம் வாயிலாக நன்கொடை அளித்து வருகின்றனர். ஹேதல் மற்றும் இனாப்பின் நண்பரான த்ரிஷல் பின்சா பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவினார். ஹேதலின் ஒரு சில நண்பர்கள் இந்த பிரச்சாரத்தை டெல்லியிலும் மேற்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் கிராமப்புறங்களில் சானிட்டரி நாப்கின் பயன்பாட்டை ஊக்குவிக்க 2012-ம் ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கும் வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள பெண்களுக்கு ஐந்து ரூபாய்க்கும் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டது.

இந்த நாட்டைப் பொருத்தவரை பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மோசமாக இருப்பினும் ஹேதல் மற்றும் அவரது குழுவினரைப் போன்றோர் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதற்கான உன்னத பணியில் ஈடுபட ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்கின்றனர்.

கட்டுரை : Think Change India