ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் வாங்க...

6

நீங்கள் புறநகர் ரயில் மூலம் பயணிப்பவராக இருந்தால் ஒரு விளம்பர சுவரொட்டியை அடிக்கடி பார்த்திருக்கலாம். அதில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாதம் முப்பதாயிரம் ரூபாய் வரையில் சம்பாதிக்கும் வாய்ப்பு என்று குறிப்பிட்டு சிலபல தொலைபேசி எண்களையும் தந்திருப்பார்கள். மிகவும் அபத்தமாகத் தோன்றும் இந்த விளம்பரங்களில் ஒரு சிறிது உண்மையும் இல்லாமல் இல்லை. ஆன்லைன் மூலம் பல்லாயிரம் ரூபாய் சம்பாதிக்க வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதென்னவோ உண்மைதான். ஆனால் நிச்சயமாக இந்த விளம்பரதாரர்கள் மூலம் இல்லை.

தொழில்முனைவோர் ஆகும் கனவு இன்று இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும் மில்லியன் டாலர் கனவுகளுடனேயே வாழ்கின்றனர். நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலெல்லாம் அன்றன்றைக்கான தேவைகளுக்கு பணம் சேர்ப்பது மட்டுமே எங்கள் குறிக்கோளாக இருந்தது.

அதிகம் வளர்த்துவானேன், மாணவப் பருவத்திலேயே மில்லியன் கணக்கில் சம்பாதிக்க வழி வகைகள் உண்டா என்று கேட்டால் இணையம் அதற்கு ஆம் என்றே பதில் சொல்கிறது.

வலைப்பதிவு (Blog): ப்ளாக் மூலம் சம்பாதிக்க முடியும் என்பதொன்றும் பெரிய ரகசியமெல்லாம் இல்லை. ஆனால் வலைப்பதிவுகளை எழுதினாலே பணம் கொட்டத் துவங்கிவிடாது. சில அடிப்படை விதிகளைக் கடைபிடித்தால் மட்டுமே ப்ளாக் நமக்கு லாபம் ஈட்டித் தரும். முதலில் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து அதில் ஏதேனும் ஒரு முக்கியத் துறை குறித்து தொடர்ந்து எழுதி வாருங்கள். அத்துறை பற்றிய அடிப்படை அறிவும், தொடர்ச்சியான தகவல் சேகரிப்பும் அவசியம். ஆனால் உடனடியாக எதுவும் நடந்து விடாது என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆறுமாதம் முதல் ஒரு வருடம் வரை கூட நீங்கள் காத்திருக்க நேரலாம். ஆனால் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும், ப்ளாகை பிரபலமாக்க ஃபேஸ்புக், டிவிட்டர் என வாய்ப்பிருக்கும் அனைத்து வழிகள் மூலமும் முயற்சி செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். 

அத்துறையின் நிபுணர்களை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களையும் உங்கள் கட்டுரைகளில் புகுத்தலாம் அல்லது அவர்களையே விருந்தினர் பக்கம் என்ற வகையில் உங்கள் பதிவில் எழுத வைக்கலாம். வாரம் ஒரு கட்டுரையேனும் எழுதுவது என்பது எனது சங்கல்பம். ஆனால் அதற்கு வாரம் முழுவதும் படிக்க வேண்டியிருக்கும் என்பதுதான் யதார்த்தம். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு வோர்ட்பிரஸ் தளங்கள் உகந்தது. ஏனெனில் ஆட்சென்ஸ் கணக்குகள் சீக்கிரமாக வோர்ட்ப்ரஸ் மூலம் போகும்போது விரைவில் அங்கீகரிக்கப் படும் வாய்ப்பதிகம்.

யூட்யூப் (Youtube): யூட்யூபில் வரும் விளம்பரங்களை எல்லாம் யாருமே பார்ப்பதில்லை, ஸ்கிப் ஆட் மூலம் தாண்டிச் சென்றுவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். காத்ரீனா கைஃப்போ சல்மான கானோ சில சமயங்களில் நம் கவனத்தை ஈர்க்கவே செய்கிறார்கள். அப்படி ஒவ்வொரு முறை 30 வினாடிகளுக்கு மேல் விளம்பரங்களை நாம் பார்க்கும் போதும் அந்த வீடியோ சானலை நடத்துபவர்கள் அதன் மூலம் லாபம் அடைகிறார்கள். ஆயிரம் பேர் நமது வீடியோவின் மூலம் விளம்பரங்களைப் பார்த்தால் நமக்கு $5 வரை கிடைக்கும். எனவே வைரல் ஃபீவர் போன்று ஏதேனும் ஒரு முக்கிய தலைப்பை எடுத்துக் கொள்ளுங்கள். வீடியோ எடுத்து வலையேற்றுங்கள். பின்னூட்டங்கள் மூலம் அது பற்றிய விமர்சனங்களை பெற்று, அதைக் கொண்டு மேலும் மேலும் உங்கள் தயாரிப்பை செம்மைப் படுத்திக் கொள்ளுங்கள். இங்கும் பொறுமை அவசியம். ஆம், குறைந்தது ஒரு வருடத்திற்கேனும் உங்களுக்கு இதில் பெரிய வரும்படி இருக்காது, ஆனால் பதினைந்து நாட்களூக்கு ஒரு முறை கட்டாயம் ஏதேனும் வலையேற்றியபடியே இருக்க வேண்டும்.

iWriter.com : இப்படியெல்லாம் காத்திருக்க பொறுமையில்லை, உடனடியாக பணம் பண்ண வேண்டும் என்று துடிப்பவர் நீங்கள் என்றால் நேராக 'ஐரைட்டர்.காம்' எனும் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்கு முன் உங்களுக்கு பேபால் கணக்கு இருக்க வேண்டியது அவசியம். அப்படி இந்த தளத்தின் செயல்பாடுதான் என்ன என்று யோசிக்கிறீர்களா? மற்ற ப்ளாகர்களுக்கு அவர்கள் சொல்லும் தலைப்பில் கட்டுரை எழுதிக் கொடுப்பதே இந்த தளத்தின் பயனர்களுக்கு சம்பாதிக்கும் வழி. ஆம், சக ப்ளாகர்களுக்கு அவர்கள் கேட்கும் தலைப்பில், கேட்கும் முக்கிய சொற்கள் அடங்கிய புதிய கட்டுரைகளை வழங்கினால் கையில் காசு, வாயில் தோசை என்பது போல் உடனடியாக பணம் கிடைக்கும். ஆரம்பத்தில் ஒரு கட்டுரைக்கு $3 என்பது கணக்கு. போகப் போக கட்டுரையொன்றுக்கு $15 வரை கட்டணம் பெற முடியும். என் நண்பர் ஒருவர் இந்த தளத்தின் மூலம் மட்டுமே மாதம் 35- 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இன்னமும் எளிதான வழி ஒன்று உண்டு. ஒரு ப்ளலாக் மட்டும் தயார் செய்து கொண்டு ஐரைட்டரிலிருந்து கட்டுரை வாங்கி அதில் போட்டுக் கொண்டாலும் சில நாட்களில் நாம் நன்கு சம்பாதிக்க முடியும்.

Fiverr.com : நீங்கள் சிக்கலில் இருக்கும் நண்பர்களுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கும் ஆளா? இதே ஆலோசனையை பலருக்கும் தருவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

நீங்கள் அடுத்தவரின் எழுத்தில் இலக்கணப் பிழைகளை கண்டுபிடித்து திருத்துவதில் வல்லுனர் என்றால் அதன் மூலம் கூட இங்கே காசு பார்க்கலாம். http://www.fiverr.com/nogalicious/give-you-instant-relief-from-sadness-or-stress 

சொந்த வெளியீடு (Self Publishing) : நீங்கள் பொறுமையும் விடாமுயற்சியும் உடையவர் என்றால் இது உங்களுக்கான வழி. அமேசான்.காம் மூலமாக உங்கள் சொந்த புத்தகங்களை பதிப்பித்து வெளியிடுங்கள். ஏற்கனவே அச்சுப் புத்தகங்கள் எழுதி பிரபலமாகியிருந்தாலே ஒழிய முதல் இணைய புத்தகத்தின் மூலம் அதிகம் சம்பாதித்துவிட முடியாது. ஆனால் தொடர்ந்து எழுதுவதன் மூலம் உங்களுக்கான பிராண்ட் பெயரை சம்பாதித்து விட்டால் போதும், மில்லியன் கணக்கில் அதுவும் டாலர்களில் சம்பாதிக்க வாய்ப்புகள் இதில் உண்டு. ஏற்கனவே ப்ளாகில் நீங்கள் எழுதி வைத்திருக்கும் கட்டுரைகளை புத்தகத்திற்கு ஏற்றவாறு திருத்திக் கொண்டு கிண்டில் மூலம் புத்தகமாக்கி வெளியிடுங்கள். அதை தொடர்ந்து சந்தைப் படுத்தியவாறு இருங்கள் – வருமான விரைவில் பெருகும்.

Airbnb: சில மாதங்களுக்கு முன் நளின் ஜா என்பவரோடு பேசிக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு அறிமுகம் ஆனது 'அர்பின்ப்' தளம் மூலம்தான். அவரது ஒற்றை அறை ஃபளாட்டை நான் ஒரே ஒரு நாளூக்கு வாடகைக்கு எடுத்திருந்தேன். அதிகம் போனால் மாதம் முப்பதாயிரம் ரூபாய் வாடகை பெறுமானம் உள்ள அந்த ஃப்ளாட்டின் மூலம் மட்டும் அவர் மாதம் ஒரு லட்சத்தி இருபதினாயிரம் வரை சம்பாதிக்கிறார். ஆம், உங்களுக்கு சொந்தமாக ஒரு ஃப்ளாட்டோ ஒரு அதிகப்படி அறையோ இருந்தால் போதும். இந்த தளத்தில் அதைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் நகருக்கு வரும் வெளியூர்வாசிகள் நாட்கணக்கில் அந்த இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் நீங்களும் நன்கு லாபம் அடைய முடியும், பயணிகளுக்கு உதவுவது போலும் இருக்கும்.

இதில் ஒரு சில அல்லது அனைத்து விஷயங்களும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த வழிமுறைகளாக இருக்கலாம். ஆனால் எப்படி, எங்கிருந்து துவங்குவது என்பதே உங்கள் தயக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். இக்கட்டுரையில் நான் அந்த துவக்கப் புள்ளிகள் குறித்தே பேசியிருக்கிறேன். எனவே இனி தாமதமின்றி தொழில் முனைவோர் ஆகுங்கள். ஆனால் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படையான தாரக மந்திரம் – பொறுமையும், விடா முயற்சியும் மட்டுமே.

குறிப்பு: இந்தக் கட்டுரை வேறொரு தளத்தில் முதலில் வெளியானது (https://www.flatchat.com/blog/how-to-make-a-million-rupees-online-as-a-student/)

ஆங்கிலத்தில்: Gaurav Munjal | தமிழில்: எஸ்.பாலகிருஷ்ணன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

தொழில்முறை பிளாக் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஹர்ஷ் அகர்வாலின் பயணம்!

வலைப்பதிவு மூலம் வருவாய் ஈட்ட ஐந்து எளிய வழிகள்!