வரிச் சலுகை முதல் ஆதார் வரை: சாமானியர்களுக்கான பட்ஜெட் அம்சங்கள்

0

மக்களவையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சாமானியர்கள் அறிய வேண்டிய சிறப்பு அம்சங்கள் இதோ..

வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை...

* 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள தனிநபர்களுக்கு வருமான வரி விதிப்பு சட்டம் 87 பிரிவின் கீழ் வழங்கப்படும் வரிச்சலுகைக்கான வரம்பு ரூ.2000-ல் இருந்து ரூ.5000 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால், 2 கோடிக்கு மேற்பட்ட வரி செலுத்துவோர் 3 ஆயிரம் ரூபாய் வரை வரிச்சலுகை பெறுவர்.

* வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு 80 ஜிஜி பிரிவின் கீழ் கொடுக்கப்பட்ட வாடகையில் அளிக்கப்படும் குறைப்பு வரம்பு ரூ.24,000-ல் இருந்து ரூ.60,000 ஆக உயர்த்தப்படுகிறது.

சிறிய வர்த்தகர்களுக்கு...

* வருமான வரிச் சட்டம் 44 ஏடி பிரிவின் உத்தேச வரிவிதிப்பு திட்டத்தின் கீழான மொத்த வர்த்தக வரம்பு ரூ.2 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது தற்போது ஒரு கோடியாக உள்ளது. இதனால் 33 லட்சம் சிறிய வர்த்தகர்கள் பயன்பெறுவார்கள். நடுத்தர சிறிய நுண்ணிய தொழில் முயற்சி பிரிவுகளில் பெரும் எண்ணிக்கையிலானோருக்கு பயன்கிடைக்கும். அவர்கள் விரிவான கணக்குகளை பராமரிக்கும் சுமையிலிருந்து விடுபடுவார்கள். அவற்றை தணிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டிய தேவையும் இராது.

* ரூ.50 லட்சம் வரை வருவாயும் 50 சதவீத உத்தேச லாபமும் உடைய தொழில் ரீதியானவர்களுக்கும் உத்தேச வரிவிதிப்பு திட்டம் இப்போது விரிவுபடுத்தப்படுகிறது.

மருத்துவம்

* குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் அளவிற்கு மருத்துவ காப்பீடு வழங்கும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்.

* பிரதமர் மக்கள் மருத்துவ திட்டத்தின்படி 2016-17-ல் 3,000 மருந்துக் கடைகள் திறக்கப்படும்.

* தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பொதுத் துறை தனியார் துறை பங்களிப்பு மாதிரியில் தேசிய டயாலிசிஸ் சேவைத் திட்டம் தொடங்கப்படும்.

ஏழைகளுக்கு சமையல் எரிவாயு

* வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள 1.5 கோடி குடும்பங்களுக்கு அந்த வீட்டுப் பெண்களின் பெயரில் பதிவு செய்யும் வகையில் இலவச சமையல் எரிவாயு வசதி வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களில் மொத்தம் 5 கோடி குடும்பங்களுக்கு இந்த வசதி விரிவுபடுத்தும் வகையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இத்திட்டம் தொடரும்.

ஆதாரும் மானியமும்

* ஆதார் திட்டத்தைப் பயன்படுத்தி புதிய சமூகப் பாதுகாப்பு தளம் ஒன்றை உருவாக்குவதன் மூலமும், புதிய சட்டம் ஒன்றின் மூலமும் மானிய உதவிகள் பெறுவதற்குத் தகுதியுள்ள மக்களுக்கு நிதி மற்றும் இதர மானியங்களை நேரடியாக வழங்க ஏற்பாடு. அதாவது, ஆதார் அட்டையைக் கட்டாயமக்குவதற்கு சட்டம் இயக்கப்படும்.

கிராமங்களில் மின்வசதி

* 2018 மே மாதம் ஒன்றாம் தேதி அன்று 100 சதவீத கிராமங்களுக்கும் மின் வசதி செய்துதரப்படும்.

* திறந்தவெளி மலம் கழிப்பதை முற்றிலும் அகற்றிய கிராமங்களுக்கு பரிசளிக்கும் வகையில் அவற்றுக்கான மத்திய அரசு ஆதரவு பெறும் திட்டங்களில் முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குதல்.

* அடுத்த மூன்று மாதங்களில் 6 கோடி கூடுதல் வீடுகளை இணைக்கும் வகையில் நாட்டின் கிராமப்புற பகுதிகளுக்கு புதிய டிஜிட்டல் எழுத்தறிவு இயக்கத் திட்டம்.

கல்வி

* புதிதாக 62 நவோதையா வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படும்.

* பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்லூரி பட்டச் சான்றிதழ், கல்வி விருது சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் போன்றவற்றிக்கான டிஜிட்டல் அடிப்படை இருப்பு மையம் உருவாக்கப்படும்.

வீடு வாங்கும் திறனை வளர்க்க...

* முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள வீடுகளுக்காக ரூ.35 லட்சம் கடன்பெறுபவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கூடுதல் வட்டிக் கழிவு அடுத்த நிதி ஆண்டில் வழங்கப்படும்.

* 60 சதுர மீட்டர் பரப்பளவில் மத்திய மாநில அரசின் எந்த ஒரு திட்டத்தின் கீழ் பி.பி.பி. திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் உள்பட அனைத்து மலிவு விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

விலை உயரக் கூடியவை:

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வரி விதிப்பு மாற்றங்களால் ஸ்போர்ட் யுடிலிட்டி வாகனங்கள், சிறிய ரக கார்கள், டீசல் கார்கள், சொகுசு கார்கள், வெள்ளி அல்லாத ஆபரணங்கள், பீடி நீங்கலாக சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், விமானப் பயணச்சீட்டு, பிராண்டட் உடைகள், தங்க ஆபரணங்கள், வைரம், ஹோட்டல் உணவுகள், செல்போன் கட்டணம், இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள், ஸ்மார்ட் ஃபோன்கள், சினிமா தியேட்டர் கட்டணம், திரைப்பட கட்டணம், மினரல் வாட்டர், ரெடிமேட் ஆடைகள், குளிர்பானங்கள், அலுமினிய பாயில், பிளாஸ்டிக் பைகள் ஆகியவை விலை உயரக் கூடியவை ஆகும்.

விலை குறையக் கூடியவை:

பிரெயிலி தாள்கள், இன்டர்நெட் மோடம், ஆம்புலன்ஸ் சேவை, பொதுக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகை குறையும். டயாலிசிஸ் சிகிச்சையின் செலவு குறையும். காலணி, சூரியசக்தி விளக்கு, செட்டாப் பாக்ஸ், கண்காணிப்பு கேமரா, பேட்டரி வாகனங்கள், மைக்ரோவேப் அவன், சானிட்டரி நாப்கின் ஆகியவற்றின் விலையும் குறையும்.

தொகுப்பு: கீட்சவன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

பட்ஜெட் 2016: தொழில்முனைவுக்கு ஊக்கம் தரும் அம்சங்கள்!