நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு உதவும் முன்னாள் பத்திரிக்கையாளர்

0

வறுமையின் பிடியில் வளர்ந்த தினேஷ் குமார் கௌதம், தனது அறக்கட்டளை வாயிலாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதுடன் பெண்களுக்கு ஹெல்த்கேர் சேவை வழங்கி அதிகாரமளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

இளம் வயதிலேயே ஆர்வம் ஏற்பட்டது

40 வயதான தினேஷ், தனது இளம் வயதிலேயே பல போராட்டங்களை சந்தித்துள்ளார். எதுவும் எளிதாக நடந்துவிடவில்லை. ஹரியானாவின் குபானா கிராமத்தில் பிறந்தார். குடும்பத்தில் எப்போதும் பணப்பிரச்சனை இருந்தது. நிலையை மேம்படுத்த அவரது குடும்பம் டெல்லியின் நஜஃப்கர் பகுதிக்கு மாற்றலாயினர். குடும்பத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கவேண்டியிருந்தது. பதின்பருவத்தில் தனிப்பட்ட தேவைகளை பூர்த்துசெய்துகொள்ளவும் படிப்பிற்காகவும் சிறு பணிகளை மேற்கொண்டார்.  இன்றைய நிலையை எட்ட அவர் எதிர்கொண்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நினைவுகூறுகையில், 

“தனியார் பேருந்துகளில் உதவியாளராக வேலை செய்துள்ளேன். வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்துள்ளேன். விற்பனையாளர்களிடம் பான் மசாலாவை விநியோகம் செய்துள்ளேன். அனைத்து விதமான வேலைகளையும் செய்துள்ளேன். உயிர் வாழவேண்டும் என்பதைத் தாண்டி எதையும் சிந்திக்காத மக்கள் அடங்கிய சமூகத்துடனே அந்த நாட்களில் நான் தொடர்பில் இருந்தேன். இதனால் அவர்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்கிற ஆர்வமும் விருப்பமும் தோன்றியது.”


பத்திரிக்கைப் பிரிவில் படித்தார். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனில்  டிப்ளோமா முடித்தார். முன்னனி ஹிந்தி நாளிதழில் பணியில் சேர்ந்தார். க்ரைம் ரிப்போர்டிங்குடன் சேர்த்து சமூக பிரச்சனைகளுக்காகவும் பணியாற்றத் துவங்கினார்.

வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்கிற விருப்பம் இல்லாத, தரமான கல்வி இல்லாத, அடிப்படை வசதிகள்கூட இல்லாத பிரிவினரைக் குறித்த நினைவுகள் அவருக்கு தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. இந்த எண்ணங்களுடன் அவர் வாழ்ந்து வந்த கடினமான காலகட்டமும் சேர்ந்து சமூக நலனுக்காக பணிபுரியவேண்டும் என்கிற வலுவான எண்ணம் அவரது பதின்பருவத்தில் தோன்றியது. 

“நான் பத்திரிக்கையாளராக இருந்த காலகட்டத்தில் ராஜஸ்தானின் மேவாட் மாவட்டத்தில் அல்வார், பரத்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்றேன். அங்குதான் மக்களுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு முறையான கல்வி இல்லாத நிலையை உணர்ந்தேன்.”

அங்குள்ள வருந்தத்தக்க நிலையைக் கண்டு அதிர்ந்த தினேஷ் செயலில் ஈடுபட்டார். 1998-ம் ஆண்டு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கத் துவங்கினார். அதன் பிறகு ஆல்வார் பகுதியில் அடுத்த ஆண்டே New Delhi Educationa Society என்கிற ஒரு இலவச நடுநிலைப் பள்ளியை துவங்கினார். அவருக்கு 19 வயதிருக்கையில் கிட்டத்தட்ட 187 குழந்தைகளுக்கு கல்வி வழங்கினார். அதே சமயம் தனது பத்திரிக்கையாளர் பணியையும் 2003-ம் ஆண்டு வரை தொடர்ந்துவந்தார். 

”கிராமப் பஞ்சாயத்தின் ஆதரவுடன் கல்வி வாயிலாக குழந்தைகளுக்கு அதிகாரமளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட கடமைகள் அதிகரித்தன. எனக்கு திருமணம் முடிந்தது. பணி மாறினேன். இதனால் 2004-ம் ஆண்டு கனத்த இதயத்துடன் பள்ளியை மூட தீர்மானித்தேன்.”

நிலையான சாதனைகள்

சமூக பணிகளுக்கான ஆர்வம் அதிகரித்து 2004 – 2011 இடைப்பட்ட காலத்தில் தினேஷ் டெல்லியின் குடிசைப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் பாடதிட்டத்தின் இணை நடவடிக்கைகளில் ஈடுபட உதவினார். மற்ற முயற்சிகள் பலவற்றையும் மேற்கொண்டார். நலிந்த குடும்பத்து குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் தனது பணி நேரத்திற்குப் பிறகான கூடுதல் நேரங்களை இதற்காக செலவிட்டார்.

2012-ம் ஆண்டு தனது பணியை முறையாக மேற்கொள்ளவேண்டும் என்கிற திடமான முடிவுடன் அஹமதாபாத்திற்கு மாற்றலானார். இங்கு திருஷ்டி அறக்கட்டளை நிறுவனத்தை நிறுவினார். ”என்னுடைய மகளின் பெயரையே அறக்கட்டளைக்கு வைத்தேன். பெண் குழந்தைகள் குடும்பத்திற்கு பாரமல்ல அவர்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள் என்பதை உலகிற்கு காட்டவே இந்த பெயரை வைத்தேன். ‘பெண் குழந்தை பெற்ற ஒருவரது குடும்பம் கஷ்டப்படுகையில் கடவும் அவருக்குக் கைகொடுப்பார்’ என்பார்கள். எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகே நான் வாழ்க்கையில் வெற்றியடைந்தேன்,” என்று பெருமிதத்துடன் கூறினார்.

இன்று டெல்லியின் ஜவஹர் கேம்ப் குடிசைப் பகுதியிலும் அஹ்மதாபாத்தின் வாத்வா குடிசைப் பகுதியிலும் திருஷ்டி ஃபவுண்டேஷன் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்த பள்ளிகள் வெவ்வேறு பாடங்களை குழந்தைகள் புரிந்துகொள்ள உதவுகிறது. இவர்களது நோக்கத்திற்கு ஆதரவளிக்கும் தனிநபர்கள் வழங்கும் பயன்படுத்தாத பகுதிகளிலும் இயங்குகிறது. ”நர்சரி முதல் உயர்நிலை வரை உள்ளது. பாடதிட்டம், இணை நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் ஆளுமை மேம்பாடு மற்றும் திறன் பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறோம். நலிந்த பிரிவைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்பட்டாலும் ஒரு நல்ல பணி கிடைக்கத் தேவையான மரியாதையான நடத்தை, தனிப்பாங்கு உள்ளிட்ட பிற குணாதிசயங்களை அவர்களுக்கு யாரும் கற்றுக்கொடுப்பதில்லை. எனவே அவர்களுக்காக பல்வேறு தனிநபர் முன்னேற்ற வொர்க்ஷாப்களையும் ஆலோசனை வகுப்புகளையும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.

கல்வி மட்டுமல்லாது பெண்களின் பல் மற்றும் வாய் பராமரிப்பு சார்ந்த ஹெல்த்கேரிலும் கவனம் செலுத்துகிறது திருஷ்டி அறக்கட்டளை. குறிப்பாக பல் பராமரிப்பை தேர்ந்தெடுத்தது குறித்து தினேஷ் விவரிக்கையில், 

“கிராமப்புறங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு ஒரே ஒரு பல் மருத்துவர் மட்டுமே இருப்பார். மேலும் பல் சம்பந்தப்பட்ட மருத்துவ செலவிற்கு மருத்துவ காப்பீடும் கிடையாது. அத்துடன் அவர்கள் குடிக்கும் தண்ணீரில் அதிகளவிலான ஃப்ளூரைட் இருந்ததால் அனைத்து வயதினருக்கும் இது தீங்கு விளைவித்தது. மேலும் பல் சார்ந்த மருத்துவ செக் அப்களுக்கும் சிகிச்சைகளுக்கும் அதிக செலவாகும். இதனால் அவர்களுக்கு வலியுடன் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

தினேஷ் மற்றும் தன்னார்வல மருத்துவர்கள் அடங்கிய குழுவிற்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. இதனால் இலவச பல் செக் அப்கள், மருத்துவ பராமரிப்பு முகாம்கள் ஆகியவற்றை குஜராஜ், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தர்கண்ட், மும்பை, சிக்கிம் உள்ளிட்ட ஏழு நகரங்களில் மேற்கொண்டனர். குருக்ராம் செக்டார் 31-ல் அறக்கட்டளை ஒரு மருத்துவ கிளினிக்கை அமைத்தது. இந்த கிளினிக் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டது. மேலும் வாய் புற்றுநோய் குறித்த முகாம்களையும் ப்ரோக்ராம்களையும் இவரது ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்தது.

சுய வருமானத்தைக் கொண்டே செயல்படுகிறார்

இதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால் துவங்கிய நாள் முதல் தற்போது வரை ஒவ்வொரு ப்ராஜெக்டிற்கும் தனது சொந்த வருமானத்தையே முதலீடு செய்து வருகிறார் தினேஷ். ஒரு ஹெல்த்கேர் நிறுவனத்தில் மார்கெட்டிங் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இதில் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு திருஷ்டி அறக்கட்டளையின் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். தனிப்பட்ட அளவில் இது தினேஷிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் அவரிடம் எந்தவித சேமிப்பும் இல்லை. ஆனால் ஆதரவான மனைவியும் மகளும் இருப்பது அதிர்ஷ்டம் என்றே அவர் உணர்கிறார். 

“தேவையான ஒப்புதல்களும் தகுதியும் இருப்பினும் அரசு தரப்பிலிருந்து கொடுக்க முன்வரும் உதவித்தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு பதிலாக வளங்களை ஏற்பாடு செய்வதற்காக வெவ்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளோம். அனைத்திற்கும் ஒரு விலை உண்டு என்பது நமது பொதுவான ஒரு புரிதலாகும். இது தவறு. பணம் ஈட்டவேண்டும் என்கிற நோக்கமில்லாமல் வளங்களை வழங்க முன்வரும் நபர்களும் இருக்கின்றனர்.”

சமூக பணிகளில் பங்களிக்க பலரை ஒன்றிணைக்கவேண்டியதன் அவசியத்தை தினேஷ் குறிப்பிட்டார். “திருஷ்டி ஃபவுண்டேஷன் ட்ரஸ்டில் ஊழியர்கள் யாரும் இல்லை. தன்னார்வலர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் பணத்தை நன்கொடையாக வாங்குவதில் எங்களுக்கு விருப்பமில்லை. மாறாக நாங்கள் கொடையாளர்களுக்கும் தேவையிருப்போருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைத்து அவர்களை இணைக்கும் பாலம் மட்டுமே. நலிந்த மக்களுக்காக பல்வேறு அரசு திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்குகிறது. எனினும் சரியான திசையை நோக்கி செல்வதில்லை. அதைத்தான் நான் செய்கிறேன். சமூக பொறுப்பு நடவடிக்கைகளிலும் ஊழியர்களை ஈடுபட்டு நிஜ உலகின் பிரச்சனைகளை நேருக்கு நேர் பார்க்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இதனால் சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற எண்ணம் தனிநபருக்கும் ஏற்படும்.”

நீங்களும் நானும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்

முழுமையாக தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனம் 1,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் வேறு பணியில் முழுநேரமாக ஈடுபட்டிருப்பவர்கள். ஐந்து வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள 600 தன்னார்வல மூத்த பல் மருத்துவர்கள் உள்ளனர். ஒவ்வொருவராக சுழற்சி முறையில் செயல்படும் இந்த தன்னார்வலர்கள் தினமும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். அத்துடன் பல் பிரச்சனைகள் மற்றும் சமூக பிரச்சனைகளுடன் போராடும் பெண்களுக்கு உதவுகின்றனர். இவ்வாறு செயல்பட்டு 15,000 க்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் 20,000 க்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தற்போது இந்த அறக்கட்டளை MobiShala பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஏழை மற்றும் கல்வியறிவில்லாதவர்கள் பண பரிவர்த்தனைகளுக்கு மொபைல் ஃபோனை பயன்படுத்தவும் பயிற்சியளிக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இந்த முயற்சி துவங்கப்பட்டது. ஏனெனில் அப்போதுதான் வணிகத்தில் ஈடுபட்டிருந்த தொழில்நுட்ப புரிதல் இல்லாத பிரிவினர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

”அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசாங்கம் திறம்பட முயற்சியெடுக்கவில்லை என்று புகார் கூறுவது எளிது. ஆனால் நம்மைப்போன்ற குடிமக்கள் தனிப்பட்ட அளவில் பங்களிக்கவேண்டும். தற்சமயம் நாம் எடுத்து வைக்கும் சின்ன அடிகளும் நீண்ட கால அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று கூறி முடித்தார் தினேஷ்.

மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் அரசு சாரா நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்களே முன்வந்து ஒரு அரசு சாரா நிறுவனமாக செயல்படலாம் என்பதை தினேஷ் போன்ற தனிநபர்கள் நிரூபித்து காட்டுகின்றனர்.

ஆங்கில கட்டுரையாளர் : சானியா ராசா