முதுமையைத் தாண்டி இந்தியாவின் நலனுக்காக உழைக்கும் சீனியர் சிட்டிசன்கள்!

0

தங்களின் வயதை பொருட்படுத்தாமல் தனி நபர்களாக சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் அயராது உழைக்கும் சிறந்த மூத்த குடிமக்கள். 

அறுவது வயதுக்கு பிறகோ அல்லது ஓய்வு பெரும் தருணத்திலோ பெரியவர்கள் தங்கள் வாழ்க்கை வட்டத்தை பேரக் குழந்தைகள், வீட்டில் ஓய்வு மற்றும் குடும்பம் என சுருக்கிக் கொள்கின்றனர். ஓய்வு காலம் என்பதே தொழில்/பணி ரீதியான தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு மீதம் இருக்கும் காலத்தை நிம்மதியாக செலவிடுவதே.

அப்படி இருப்பினும், சிலர் வயது எதற்கும் தடையில்லை என சமுதாயத்திற்காக அயராது உழைகின்றனர்; உதாரணமாக 82 வயதான ஒம்கர் நாத் ஷர்மா டெல்லியில் பல தெருக்களில் அலைந்து பல வீடுகளிலிருந்து பயன்படுத்தப்படாத மருந்துகளை பெற்று இல்லாதோருக்கு வழங்குகிறார். அதேபோல் பேராசிரியர் சந்தீப் தேசாய் தனது சொகுசு வாழ்க்கையில் இருந்து வெளிவந்து, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் கிராமப்புறங்களில் ஆங்கிலம்-நடுத்தரப் பள்ளி கட்டுவதற்காக மும்பை ரயில்களில் பிச்சை எடுத்தார்.

இதே போல் சமூக மேம்பாட்டிற்காக இன்னமும் உழைக்கும் சில மாமனிதர்களை கீழே பட்டியல் இட்டுள்ளோம்:

அலோக் சாகர்

டெல்லி ஐஐடி-யில் இருந்து பொறியியல் பட்டம், ஹூஸ்டன் பழ்கலைக்கழகத்திடம் இருந்து முதுகலை பட்டம் மற்றும் பிஎச்டி பட்டம் பெற்ற அலோக் சாகர், மத்தியப் பிரதேசத்தின் பழங்குடி கிராம மக்களுக்கு உதவி வருகிறார். அதற்கு முன் ஐஐடி-யில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் இவர்.

ஐஐடி-யில் பணியாற்றிய போது பல மாணவர்களை மெருகேற்றியுள்ளார், அதில் ஒருவர் முன்னால் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன். பேராசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற இவர் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் ஹாசன்காபாத் மற்றும் பெதுல் மாவட்டங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கு உதவத் துவங்கினார்.

“கடந்த 28 வருடமாக அலோக், கொச்சமு என்னும் தொலை கிராமத்தில் 750 பழங்குடியினருடன் வாழ்ந்து வருகிறார். அங்கு மின்சாரம், சாலை வசதி என்று எதுவும் இல்லை, வெறும் ஆரம்பப் பள்ளி மட்டுமே கொண்ட கிராமம். அங்கு வாழும் அலோக் இதுவரை 50,000 மரங்களை நட்டுள்ளார். அடிமட்டத்தில் இறங்கி பணிபுரிந்தால் மட்டுமே நாட்டை சிறப்பாக்க முடியும் என அவர் நம்புகிறார்.

அவர் வாழ்க்கையில் நம்மை ஈர்ப்பது அவரது எளிமையான குணம். வெறும் மூன்று ஜோடி ஆடைகள் மற்றும் ஒரு மிதிவண்டியை மட்டுமே தனக்குச் சொந்தமாக வைத்துள்ளார். பழங்குடியினர் மத்தியில் சேகரித்த விதைகளை விநியோகித்து தனது நாளை செலவழிக்கிறார். அலோக்கால் பழங்குடியினர் பயன்படுத்தும் பல வட்டார மொழிகளை பேச முடியும். ஷ்ராமிக் ஆதிவாசி சங்கத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறார் இவர், அவர்களது முன்னேற்றத்திற்கு அயராது உழைக்கிறார்.

இவரை பற்றி மேலும் படிக்க: அலோக் சாகர்

ஒம்கர் நாத் ஷர்மா

டெல்லியில் வசிக்கும் இந்த 82 வயது ஒம்கர் பிரபலமாக ’மெடிசன் பாபா’ என அழைக்கப்படுகிறார். காரணம், அவரே தானாக சென்று பயன்படுத்தாத மருந்துகளை மக்களிடம் பெற்று இல்லாதோருக்கு வழங்குகிறார். கடந்த 9 வருடங்களாக இந்த சேவையை செய்து வருகிறார் ஒம்கர்.

நொய்டா கைலாஷ் மருத்துவமனையில் இருந்து இரத்த வங்கி தொழில்நுட்பவராக ஓய்வு பெற்றவர் ஒம்கர். 2008-ல் அவர் சந்தித்த அதிர்ச்சிக்குரிய சம்பவமே அவர் இந்த சேவையில் ஈடுபடக் காரணம். 2008-ல் டெல்லியில் கட்டுமான பணியில் இருந்த மெட்ரோ பாலம் இடிந்து விழுந்து இரண்டு பணியாளர்கள் பலி அடைந்தனர். மேலும் பலர் காயமுற்றனர்.

“அப்பொழுது பொதுநல மருத்துவமனைகளில் தேவையான மருத்துவ வசதி இல்லாததை கண்டும், ஏழைகளால் பெற முடியாத மருந்துகள் பற்றி அறிந்தும் ஒம்கர் இந்த மருந்து விநியோகத்தை துவங்கினார்.

மேலும் இவரை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே படிக்கலாம்

பேராசிரியர் சந்தீப் தேசாய்

பேராசிரியர் சந்தீப் தேசாய், முன்னாள் கடல் பொறியாளர் மற்றும் நிர்வாக பேராசிரியர். இவர் சமூக நலனிற்காக மும்பை இரயிலில் பிச்சை எடுக்கத் துவங்கினார் அப்பொழுது அவரது சக ஊழியர்கள் இது மூர்க்கத்தனமான செயல் என அவரை கடிந்துக்கொண்டனர்.

ஆனால் அவரது யோசனை, மும்பை லோக்கல் இரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து பணம் வசூலித்து மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் உள்ள கிராமப்புற குழந்தைகளுக்கு ஒரு ஆங்கில-நடுத்தரப் பள்ளியை உருவாக்குவது தான்.

“2010 மற்றும் 2012-க்கு இடையில், சந்தீப் 50 லட்ச ரூபாய் வசூலித்து நான்கு பள்ளிக்கூடத்தை கட்டியுள்ளார். எட்டு வருடம் ஆன நிலையில், இன்று மஹாராஷ்டிராவில் உள்ள யவத்மல் என்னும் வறட்சி மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடமும், உதய்பூரில் உள்ள சிபூர், சதக்கடி மற்றும் நிஜார் கிராமங்களில் மூன்று பள்ளிக்கூடமும் கட்டியுள்ளார்.

யவத்மல் மாவட்டத்தில் உள்ள பள்ளி இரண்டாம் வகுப்புவரை உள்ளது அதில் 180 மாணவர்களும், ஐந்து ஆசிரியர்களும் உள்ளனர். உதய்பூரில் உள்ள மூன்று பள்ளிகளில் 310 மாணவர்களும், ஏழு ஆசிரியர்களும் உள்ளனர்.

பாலம் கல்யாணசுந்தரம்

எழுவத்தி நாலு வயதான பாலம் கல்யாணசுந்தரம் ஒரு ஓய்வு பெற்ற நூலகர். சிறந்த நூலகர் என்று இந்திய விருது பெற்ற இவர் ’உலகின் சிறந்த மனிதர்’ என கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐக்கிய நாடு சபையால் 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

“பொருட்கள் மீது ஆசைப்படாத இவர் தனது விருதுகள், பணம், ஓய்வுதியம், சம்பளம் என அனைத்தையும் தானம் செய்துள்ளார். கடந்த நாலு தசாப்தங்களாக அவர் தானமாக அளித்துள்ள தொகை சுமார் 30 கோடியாகும்.”

தமிழ்நாட்டில் உள்ள மேலகரிவேலங்குலம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இவர். சிறுவயதிலே தன் தந்தையை இழந்த இவர் தன் தாயின் ஊக்கத்தால் இன்று எளியோருக்கு உதவுகிறார். இலக்கிய படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், நூலக அறிவியல் பாடத்தில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இருப்பினும் சமுகத்திற்கு உழைக்க வேண்டும் என்று எண்ணிய இவர் தூத்துக்குடி நூலகத்தில் நூலகராக சேர்ந்தார். அன்று முதல் தன் சம்பள பணம், ஓய்வுதியம், தனது சொத்து அனைத்தையும் சமூக மேம்பாட்டிற்காக தானம் செய்துள்ளார்.

பாலம் கல்யாணசுந்தரம் ஐயா பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே படிக்கலாம்! 

வாணி மூர்த்தி

வாணி மூர்த்தி தன் நண்பர்களுடன் மாவல்லிபுரத்தில் உள்ள நிலச்சரிவில் சிறிய கழிவு மேலாண்மை திட்டதிற்காக சென்றதை மறக்க முடியாது என நினைவு கூறுகிறார். அன்று அவர் கண்டதை மாற்ற நினைத்துள்ளார்.

2008-ல் வாணி பெங்களூரில் திட கழிவை சீர் செய்ய முயற்சித்த ஒரு குழுவை சந்தித்தார். அந்த குழு மறுசுழற்சி செய்யும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. அப்பொழுது 43 வயதான வாணி அந்த குழுவின் முயற்சியை கண்டு வியந்து அவர்களுடன் இணைந்தார்.

“அவர்கள் குடியிருப்பில் துவங்கிய அந்த முயற்சி பல பரிமாணங்களில் வளர்ந்து பல நகரங்கள் மற்றும் பெரும் சமுகத்திற்கு சென்றடைந்தது.”

அப்பொழுது, ஈரமான கழிவுகளை பிரிப்பதற்கான வசதிகள், அறிவு மற்றும் விழிப்புணர்வு குறைவாக இருந்ததால், வீட்டுக் கழிவில் இருந்து உரம் தயாரிப்பதற்காக ஸ்வச்கராஹா என்னும் அமைப்பை நிறுவினார்.

ஹைதராபாத் ஒஸ்மானியா பல்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெற்ற வாணி, இப்போது உரம் தயாரிப்பில் பெரும் தேர்ச்சி பெற்றுள்ளார். அதாவது பல தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாளில் வார வாரம் எழுதுவது, டெட் பேச்சாளர் என பல வகையில் இது குறித்து விழிப்புணர்வு அளிக்கிறார் வாணி.

மருத்துவர் ஜெயச்சந்திரன்

சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற மருத்துவர் கடந்த 45 ஆண்டுகளாக ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். தற்போது 68 வயதாகும் ஜெயச்சந்திரன், வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறார். இவரைப் பார்க்க வரும் நோயாளிகள் பெரும்பாலும் தெரு வியாபாரிகள், குப்பை அள்ளுபவர், செருப்பு தைப்பவர் என ஏழை எளிய மக்கள் தான்.

“மருத்துவம் மட்டுமின்றி வடசென்னை மக்கள் மீதான அக்கறையால் பல்வேறு சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார் அவர். வடசென்னை மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். உதாரணமாக மெட்ரோ ரயிலை திருவொற்றியூர் வரை கொண்டு வந்ததைக் கூறலாம்.

நடப்போர் நலச்சங்கம் என்ற ஒன்றைத் தொடங்கி அதன் தலைவராக உள்ள ஜெயச்சந்திரன், கடந்த 15 வருடங்களாக ஏறக்குறைய 800 முகாம்களை நடத்தியுள்ளார். இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு பிராணாயாமம், உடற்பயிற்சி, யோகா போன்றவை கற்றுத் தரப்படுகிறது. ரத்ததானம் செய்வதற்கு என ஒரு பெரிய நட்பு வட்டமே வைத்துள்ளார்.

இவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள:  மருத்துவர் ஜெயச்சந்திரன்

ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ருதி கேதியா | தமிழில்: மஹ்மூதா நெளஷின்