கர்பிணிப் பெண்ணின் உயிரைக் காக்க அரியவகை ரத்த தானம் அளிக்க சென்னை வந்த பெங்களுரு இளைஞர்!

1

HH என்ற வகை ரத்தம் அரிதான வகையாகும். இதற்கு பாம்பே பெனோடைப் என்ற பெயரும் உண்டு. இது 10 ஆயிரம் இந்தியர்களில் ஒருவருக்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது முதன்முதலில் 1952-ல் பாம்பேவில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு பாம்பே ப்ளட் என்ற பெயர் வந்ததாம். Dr.ஒய்எ.ம்.பெண்டே என்பவரால் அப்போது கண்டிபிடிக்கப்பட்ட வகை ரத்தமாகும் இது. 

ஆதித்ய ஹெக்டே என்ற பெங்களுருவைச் சேர்ந்த நிதித்துறையில் பணிபுரிபவர், இந்த ரத்த வகை அரிது என்பதால், அதை தானம் செய்ய சென்னை வரை வந்துள்ளார். மேலும் HH ரத்தம் தேவைப்படும் போதெல்லாம் ஆதித்யாவிற்கு அழைப்பு வருகிறது. தி நியூஸ் மினிட் செய்தியின் படி, ஆதித்யா இதுவரை 55 முறை ரத்தத்தானத்தை 2000-ம் ஆண்டு முதல் செய்துள்ளார். பெங்களூருவில் மட்டுமல்லாமல், டெல்லி, ஹூப்லி, சிவமோகா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் இலங்கை வரை சென்று தன் ரத்தத்தை அளித்துள்ளார். 

புற்றுநோய் மற்றும் கட்டி உள்ளவர்கள், கர்பிணிப்பெண்கள் பலரும் இவரின் ரத்தத் தானத்தை பெற்றுள்ளனர். சங்கல்ப் என்ற அமைப்பு HH வகை தேவைப்படுவோரை ஆதித்யாவுடன் இணைக்கிறது. அது பற்றி பேசிய அவர்,

“பலமுறை நான் யாருக்கு ரத்தம் கொடுக்கப்போகிறேன் என்றே எனக்கு தெரியாது. வேறு நகரம் என்றாலும் அங்கே சென்று ரத்தத்தை கொடுப்பேன். சிலமுறை பெங்களூருவில் என் ரத்தத்தை எடுத்து மற்ற இடங்களுக்கு அனுப்புவதும் உண்டு. ரத்தத்தை 35 நாட்கள் வரை பாதுகாத்து மற்றவருக்கு ஏற்ற முடியும்,” என்றார். 

அண்மையில் ஆதித்யாவுக்கு சென்னையில் இருந்து அழைப்பு வந்தது. 21 வயது பெண்மணி ஒருவருக்கு இந்த வகை ரத்தம் தேவை அதுவும் உடனடியாக என்றதும், ஆதித்யா தாமதிக்காமல் புறப்பட்டார். எழும்பூர் அரசு மருத்துவமனையில் இருந்த அந்த பெண்ணுக்கு ரத்தம் தர ரயிலில் சென்னை வந்து உடனடியாக ரத்தம் தந்தார். அந்த பெண் கர்பிணிப்பெண் என்பதால் அவசர ரத்த தேவை இருந்தது. 

அப்பெண்ணின் மாமா ராமு டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில்,

“ஆதித்யாவை கடவுள் இங்கே அனுப்பினார். அவர் இல்லை என்றால் எங்கள் வீட்டு பெண்ணுக்கு என்ன ஆகியிருக்கும் என்று தெரியவில்லை என கூறினார்.”

கட்டுரை: Think Change India