இந்திய விவசாயிகளின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவரும் 'நமஸ்தே கிசான்' 

2

உண்ண உணவு, உடுக்க உடை என தினம் நம் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளை நம்மில் பலரும் மறந்துவிடுகிறோம். ஆனால் அந்த விவசாயிகளைப் போற்றும் வகையில் தொடங்கபட்ட நிறுவன அமைப்பே 'நமஸ்தே கிசான்'. 

எப்படி தொடங்கப்பட்டது?

"நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். விவசாயிகளுக்கு ஏற்படும் துயரங்களைப் பார்த்த என் அப்பா, என்னை பொறியாளராக்கினார். ஆனால் சமூகத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கண்ட என் மனம், என்னை விவசாயத்துறையில் ஈடுபட உந்தியது. அதன் வெளிபாடே நமஸ்தே கிசான் என்னும் புதிய நிறுவனம் உருவாகக் காரணம்", 

என்று பெருமிதத்துடன் கலந்துரையாடலை தொடங்கினார் 'நமஸ்தே கிசான்' நிறுவனர் துர்காபிரசாத் பண்டி.

தன் சுற்றுவட்டார விவசாயிகளிடம், அவர்கள் சந்திக்கும் இன்னல்களைப் பற்றி தீவரமாக விசாரித்தார் துர்காபிரசாத். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இடையே இருக்கும் அளவு கடந்த தூரத்தை உணர்ந்த அவர், இவர்களை இணைக்கும் விதமாக 'நமஸ்தே கிசான்' என்னும் ஒரு தளத்தை உருவாக்கினார். அறுவடைக்கு முன் தேவைப்படும் விளம்பர நடவடிக்கைகளையும், அறுவடைக்கு பின் மக்களிடம் பொருட்களை சேர்பதற்கான வழிமுறைகளையும் இணைத்து ஒரு தளமாக அதை அமைத்தார்.

நமஸ்தே கிசான் நிறுவனர் துர்காபிரசாத்
நமஸ்தே கிசான் நிறுவனர் துர்காபிரசாத்

விவசாயிகள் பெரும் நன்மைகள்

இன்று நிலவி வரும் சூழ்நிலையில், விவசாயிகள் மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யும் பொருட்கள் பல இடைத்தரகர்களின் வாயிலாக மக்களிடம் சேரும் போது, அதே பொருள்  20 ரூபாய் ஆகிவிடுகிறது. இந்த பிரிவை நமஸ்தே கிசான் கட்டுப்படுத்தும். அடுத்ததாக, இந்த தளத்தின் மூலம் துர்காபிரசாத் வியபார வாய்ப்புகளையும் விரிவுப்படுத்துகிறார். இதன் மூலம், ஏராளமான விவசாயப் பொருட்களுக்கு வியபாரமும், வாய்ப்புகளும் பெருகும் என்கிறார் நம்பிக்கையோடு.

'ஆர்கானிக் ஃபார்மிங்' என்று சொல்லப்படும் இயற்கை விவசாயத்திற்கும் நிச்சயமாக இது ஒரு சிறந்த தளமாக அமையும் என்கிறார்.

"விவசாயிகள் விவசாயம் மட்டும் செய்தால் போதும். அப்பொருட்களுக்கு உண்டான வியாபார வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், பிற இடங்களுக்கு கொண்டு செல்லுதல், போன்று தெளிவான நடவடிக்கைகளின் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் ஈட்டிக் கொடுக்கிறோம். மக்களிடம் அப்பொருட்களின் தரமும், வளமும் பற்றி அறிவுறுத்தி அதை உரிய நேரத்தில் சேர்ப்பது போன்ற அனைத்து வகையான விவசாய-மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம்", என்று துர்கபிரசாத் கூறினார்.

விவசாயத்தொழிலில் தொழில்நுட்பம்

பொறியளரான துர்காபிரசாத், விவசாயிகளுக்கு மிகவும் தேவையாக இருக்கும் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தி இத்தளத்தை, அனைவருக்கும் புரியும்படி வடிவமைத்திருக்கிறார். பண்டையக்கால தரமான பொருட்களை, தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறார். விதைகள், பழங்கள், காய்கறிகள், அரிசி வகைகள், தானியங்கள், காபி கொட்டைகள், தரமான பூ மற்றும் இதர சிறந்த பொருட்களை நமஸ்தே கிசானின் இணையதளத்தின் மூலம் விற்பனை செய்கின்றனர்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை இணைத்துள்ளார். விவசாயிகளுக்குத் தேவையான பயிற்ச்சிகளையும் ஒவ்வொரு மாதமும் வகுப்புகளாக நடத்தி வருகிறார்.

நமஸ்தே கிசானின் சிறப்புகள்

வருங்கால விவசாயிகளுக்கும் இந்த தளம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும். இந்தியா முழுவதும் எந்தவித பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் இத்தளம் இயங்குகிறது.

"ஊர் பேர் அறியாத இடங்களில் வசிக்கும் விவசாயிகளைத் தேடி வாய்ப்பளிப்பதே எங்கள் நோக்கு", என்று கூறினார் துர்கபிரசாத்.

இந்த தளத்தில் நீங்களும் விவசாயியாக சேர வேண்டுமா ? அது மிகவும் எளிது !

www.namastekisan.com என்னும் இணையதளத்தில் உங்களைப் பற்றியும், உங்களது பொருட்களைப் பற்றியும் பதிவு செய்தால் உங்களுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் !

இந்த முறை இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தும்.

நாளைய இந்தியாவை சிறப்பாக மாற்றும் எண்ணத்துடன் நம்மிடமிருந்து விடைப்பெறுகிறார் துர்காபிரசாத்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

விவசாயிகளை இணையத்தில் இணைக்கும் ‘ரெயின்போ அக்ரி’- கோவை இளைஞர்களின் முயற்சி! 

விளைபொருட்களை அதிக உற்பத்தி செய்துவிட்டு நஷ்டப்படும் விவசாயிகள்- தீர்வு சொல்லும் ஐடி வல்லுனர்கள்

Stories by Sowmya Sankaran