செயலிகள் முதல் சினிமா வரை: மான்சி காந்தியின் மகத்தான பயணம்

0

டாக்டர்சி (DoctorC)-யின் இணை நிறுவனரும், சி.ஓ.ஓ.வுமான மான்சி காந்தி, தனது நண்பர்களுடன் இணைந்து ஐ.ஓ.எஸ். செயலிகள் டிங்கரிங்கில் ஆர்வத்துடன் ஈடுபட்டபோது, 2009-ல் ஒரு தொழில்முனைவோராக உருவெடுக்கத் தொடங்கினார். தொழில்துறையில் சிறந்து விளங்கும் குடும்பத்தின் வழிவந்த இவர், ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். குணாதிசயங்களை மேம்படுத்திக்கொண்டு தன்னைச் செதுக்கிக்கொள்வதற்கு, தான் படித்த வித்யாரண்யா உயர்நிலைப் பள்ளி பெரும் பங்காற்றியது என்கிறார் மான்சி. தனக்கு ஊக்கம் அளித்தது, கேள்வி கேட்கும் வல்லமையைத் தந்தது, இலக்குகளில் ஈடுபாடு காட்ட வைத்தது, சுதந்திர மனப்பான்மையுடன் வலம்வரச் செய்தது என அனைத்துமே அந்தப் பள்ளிதான் என்று சிலாகிக்கிறார்.

மான்சி காந்தி
மான்சி காந்தி

தனது குழந்தைப் பருவத்தை நினைவுகூறும் மான்சி, அறிவியல் சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது, சாகச விளையாட்டுகளில் மகிழ்வது, கலையில் ஈடுபாடு கொள்வது முதலானவற்றிலேயே அதிக நேரம் கவனம் செலுத்தியதாகச் சொல்கிறார். கலையையும் இசையையும் கற்றுக்கொள்வதற்கு தன் தாய் அளித்த உத்வேகமே காரணம் என்று சொல்லி வியக்கிறார். "என் தந்தை ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்ட். 'விங்ஸ் இன்ஃபோனெட்' (Wings Infonet) நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமாவார். தொழில், அறிவியல், மக்கள், வாழ்க்கை என பல விஷயங்களையும் தனித்துவமாகவும் வித்தியாசமான பார்வையாலும் அணுகுவதை அவரிடம் இருந்தே கற்றேன். நானும் ஒரு தொழில்முனைவோராகவே உருவெடுப்பேன் என்பது எனக்கு அப்போதே தெரியும்" என்கிறார் மான்சி.

தொழில்முனைவோர் ஆவதற்கு முன்பாக, ஆரக்கள் (Oracle) நிறுவனத்தில் சீனியர் அப்ளிகேஷன்ஸ் எஞ்சினீயராக பணியாற்றினார். அதேவேளையில், பல்வேறு ஐ.ஓ.எஸ். செயலிகளை உருவாக்கும் முயற்சிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். அப்படித்தான் அவரது முதல் முயற்சியான வெப்மின்க்ஸ் (WebMynx) உருவானது. தனது நிறுவனத்தின் மூலம் ஐபோன் மற்றும் ஐபேடுக்கு செயலிகள் பலவற்றையும் உருவாக்கித் தந்தார். இதுபற்றி விவரிக்கும் மான்சி, "குறிப்பாக, யூடியூபுக்காக சவுண்ட்பாக்ஸ் (Soundbox) என்ற செயலியை உருவாக்கிக் கொடுத்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். அந்த ஐபேட் செயலி, இணையம் முழுவதும் பரவிக் கிடக்கும் இலவச இசையைத் திரட்டித் தரவல்லது. 1,00,000-க்கும் மேலான டவுன்லோடுகள் மூலம் மகத்தான வெற்றி பெற்ற செயலி அது" என்று சிலிர்க்கிறார்.

அதன் பிறகு இரண்டாவது முயற்சியில் தடம் பதித்தவர், தன் கணவர் நீஹர் உடன் இணைந்து சான் ஃபிரான்சிஸ்கோவில் "ஸ்லீப்பிஹெட்" (Sleepyhead) நிறுவனத்தைத் தொடங்கினார். ஐ.ஓ.எஸ். செயலிகளை உருவாக்குவதுடன், சில குறும்படங்களையும், 'தி கிரீன் பேண்டிட்ஸ்' (The Green Bandits) என்ற திரைப்படத்தையும் இந்நிறுவனம் மூலம் தயாரித்தனர். சினிமா தயாரிப்பு முயற்சி பற்றி பேசும் மான்சி, "80 பேர் கொண்ட குழுவுடன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்ட முதல் முயற்சிதான் 'தி கிரீன் பேண்டிட்ஸ்'. இரண்டு ஆண்டுகள் நீடித்த தயாரிப்புப் பணிகளில் கிடைத்தவை அத்தனையும் மறக்க முடியாத அனுபவங்கள். ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவது போலவே சினிமா என்பதும் அற்புதமான ஒன்றே" என்கிறார்.

ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை தன் வசம் வைத்திருந்தாலும், மூன்றாவதாக உருவாக்கிய "ஷவுட்" (Shoutt) தான் தன்னை முழுநேர தொழில்முனைவோராக மாற்றியது என்று நம்புகிறார் மான்சி. ஆரக்கிளில் பணிபுரியும்போது சொந்த நிறுவனங்களுக்கான அச்சாரமிட்டார். ஆனால், ஷவுட்டுக்குப் பிறகே தனது வேலையிடம் இருந்து விடைபெற்று இந்தியா திரும்பினார்.

இந்திய மருத்துவ நலத்துறையில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு கண்டு மாற்றம் கொண்டுவருவதன் நோக்கத்தில் டாக்டர் சியை உருவாக்கினார். தனது தொழில்நுட்ப பின்னணியின் துணையுடன் ஹெல்த்கேர் நிறுவனங்களையும், நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக செயல்படத்தக்க அமைப்பை உருவாக்க முடியும் என நம்பியதைக் குறிப்பிட்ட மான்சி, "டாக்டர் சி-யை உருவாக்கிய பிறகு, பல யதேச்சையான சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறின" என்கிறார்.

தொழில்நுட்பமும் பொறியியலும் மான்சிக்கு எப்போதும் விருப்பத்துக்குரியவை. பொறியியலலில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தர்க்க ரீதியிலும் பகுப்பாய்வு ரீதியிலும் வலுவான வியூகம் தீட்ட வழிவகுக்க முடியும் என்று நம்புகிறார். "தொழில்நுட்பத்தை நேசிக்காமல் நம்மால் எப்படி இருக்க முடியும்? கம்ப்யூட்டர்கள் முதல் இணையதளம் வரை, எலக்ட்ரிக் கார்கள் முதல் செவ்வாய்க்கு விண்கலம் வரை... தொழில்நுட்பம் நமக்கு எவ்வளவு தந்திருக்கிறது பாருங்கள்" என்கிறார் மான்சி.

எல்லா தொழில்முனைவோர் போலவே தனது தொழில் வளர்ச்சியில் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார் மான்சி. எனினும், கச்சிதமான நபர்களை பணியமர்த்துவதுதான் மிகக் கடினமான சவாலாகக் கருதுகிறார். மேலும், பெண் தொழில்முனைவோர் சந்திக்கவல்ல வித்தியாசமான சிக்கல்களை இப்படி விவரிக்கிறார்:

"சமூகத்தில் காணப்படும் பாலினப் பாகுபாடும் பொதுபுத்தியும்தான் நான் அதிகம் எதிர்கொண்ட சவால்கள். உண்மையில், என் கணவருடன் நிறுவன அலுவல்களை கவனித்துக்கொள்ளும்போது, இந்த சவால்கள் இன்னும் கடுமையாகவே இருந்திருக்கின்றன. சக பணியாளர்களில் ஆண்களுடன் கூட்டங்களில் பங்கேற்கும்போது, என் மீது அலட்சியப் பார்வை விழுவதை பெரும்பாலும் கவனிக்க முடிந்தது. அந்தக் கூட்டங்களை வழிநடத்தும் தலைமையே நான் தான் என்று என் தோரணைகள் மூலம் உணர்த்திய பிறகுதான் அவர்கள் சரியான வழிக்கு வந்திருக்கிறார்கள்."

இது ஆரம்பத்தில் சற்றே கவலைக்குரியதாக இருந்தாலும், மனப்பான்மையில் மாற்றம் வரக்கூடிய அளவில் நடந்துகொண்டதன் விளைவாக, இப்போது மான்சியின் சூழல்கள் எல்லாமே இயல்பாகவும் அமைதியாகவுமே இருக்கின்றன. இதுபோன்ற விவகாரங்களுக்கு சரியான தீர்வு காண்பதற்கு வியூகங்களும், நிதானமும்தான் முக்கியம் என்பது மான்சி கற்றுத் தேர்ந்த அனுபவப் பாடம். "இந்தியாவில் பெண்கள் சரிசமமாக அணுகப்படும் காலத்தை அடைவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று கருதுகிறேன். பெண் தொழில்முனைவோரை தொடர்ந்து உத்வேகம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது என்றே சொல்லலாம்" எனும் மான்சி, குடும்பத்தையும் வேலையையும் சேர்த்து கவனித்துக்கொள்ளும் அமைப்பு முறைக்கு ஆதரவாகவே இருக்கிறார்.

தான் நேரடியாக கற்ற பாடங்களின் அனுபவத்தின் காரணமாக, தன் நிறுவனத்தில் உள்ள குழுவினரிடம் சம வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறார் மான்சி. பாலின பாகுபாடு இல்லாத சூழலை உருவாக்குவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார். தனது நிறுவனத்தின் உயரதிகார பதவி வகிக்கும் ஆறு பேரில் மூவர் பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பதே மான்சியின் மகத்தான அணுகுமுறைக்குச் சான்று. தனது ஒட்டுமொத்த நிறுவன விகிதம் 14 விழுக்காடு என்றும், வாரியத்தில் இடம்பெற்றுள்ள பெண்களின் விகிதம் 50:50 என்றும் தெரிவிக்கிறார் மானசி. தொழில் துறையில் பெண்களின் பங்கு என்பது வெறும் 6% தான் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. "வகுப்பு ரீதியாக, பாலீர்ப்பு தெரிவு, கலாச்சார ரீதியாக அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவதே எங்களது இலக்கு" என்கிறார் மான்சி.

ஒரு தொழில்முனைவோராக, புதுமைகளைப் படைப்பதன் மீது கூடுதல் ஈடுபாடு காட்டுகிறார். இதற்கு, உணர்வுபூர்வ விருப்பம், கடின உழைப்பு மற்றும் கற்பனைத்திறன் ஆகியவை தேவை என்பது மான்சியின் வாதம்: "சவால்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் ஆளாக வேண்டிய நிலை இருந்தாலும்கூட, அவற்றில் இருந்து விடுபடுவதற்காக உற்சாகமான சூழலை புதிதாக உருவாக்குவதே அற்புதமான அனுபவம்." தனது பங்களிப்பு, கற்றுக்கொண்ட விஷயங்கள் பற்றி கூறும்போது, "நோய் கண்டறியும் மைங்களைக் கண்டறிவதே சிக்கலானதுதான். அதிலும், சந்தையில் புதிதாக வருபவர்களுக்கு கேட்கவே வேண்டாம். ஆயினும், சரியான மையங்களை அணுகி, அவர்களுக்கு திருப்தி தரும் வகையில் நம் மாடலுக்கு டெமோ காட்டினால்போதும் வெற்றி நமதே. அதேபோல், மருத்துவ வல்லுநர்கள் பலருடன் சேர்ந்து பணிபுரிவது என்பது மிகப் பெரிய சவாலாகவும் வியப்புக்குரியதாகவும் இருக்கிறது" என்று விவரிக்கிறார் மான்சி.

பெண் தொழில்முனைவோருக்கு மான்சி சொல்லும் உத்வேகக் குறிப்பு இது:

"உங்களை ஒரு பெண் தொழில்முனைவோராக கருதாதீர்கள்... உங்களை ஒரு தொழில்முனைவோராகவே நீங்கள் கருதிக்கொள்ளுங்கள்."

முதலில் பெண்களின் தேவையை உணர்த்தவேண்டும். அதைக் கச்சிதமாக செய்துவிட்டால், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்கிறார் மான்சி. எனினும், நம் அமைப்பில் சரியான மாற்றம் வருவதற்கு நீண்ட நாள் ஆகும் என்பது அவரது கணிப்பு. "நம் பெண்களின் பெரும்பாலானோரும் ஒரே நேரத்தில் நிறுவனத்தையும் குடும்பத்தையும் நிர்வகப்பதில் சிக்கலைச் சந்திக்கிறார்கள். இரண்டையும் சமநிலையுடன் எதிர்கொள்வதில் சிரமம். அதிர்ஷ்டவசமாக, எனக்கு நீஹர் இருக்கிறார். என் கணவரான அவரே என் நிறுவனத்தின் இணை நிறுவனர். நாங்கள் வீட்டிலும் நிறுவனத்தில் சரிசமமாகவே செயல்படுகிறோம்."

தொழில்முனைவோராக தாம் மேற்கொண்டு வரும் பயணத்தில் மூன்று அம்சங்களை மிக முக்கியம் என மான்சி கருதுபவை: குழு மனப்பான்மை, கலாச்சாரம் மற்றும் வேகம். ஓர் அற்புதமான குழுவை உருவாக்கினால், மிகச் சிறந்த நிறுவனத்தை அமைத்துவிட முடியும். அதன்மூலம், ஒரு நல்ல கலாச்சாரத்தைத் தோற்றுவிக்கலாம். ஒரு திட்டத்தைத் தீட்டி, அதை செயல்படுத்தி, தோல்விகளை அப்புறப்படுத்தி, வெற்றியை நோக்கிச் செல்வது வரையில் தொடர்ச்சியாக நம்மிடம் இருக்க வேண்டிய ஆயுதம்தான்... வேகம்!

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்