பியூட்டிஷியன், ஆர்ஜே, கலைஞர்: அசத்தும் நங்கைகளின் நம்பிக்கை நாயகி!

சமூகத்தில் திருநங்கைகள் மதிக்கத்தக்க நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில், பல திருநங்கைகளுக்கு தொழில் கற்றுக் கொடுத்து முன்னேற வழிவகுத்துக்கொடுக்கிறார் திருச்சியை சேர்ந்த திருநங்கை காஜல். 

0

திருநங்கைகள் என்றாலே பாலியல் செயல்களில்தான் ஈடுபடுவார்கள் என்ற கண்ணோட்டத்தால், தங்குவதற்கு வீடு கிடைக்காமலும், திறமை இருந்தும் செய்வதற்கு வேலை கிடைக்காமலும், ஒதுக்கி வைக்கப்பட்டு சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர். அன்றாட தேவைகளுக்கும் அடிப்படை தேவைகளுக்கும் பேராடிக் கொண்டிக்கும் திருநங்கைகளில் பலர், சப்தமின்றி சாதனை செய்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. அப்படியொருவர் தான் திருச்சியைச் சேர்ந்த திருநங்கை காஜல். அவரின் கதை...

பியூட்டிஷியன், ரேடியோவில் சிறப்பு ஆர்ஜே, கூவாகம் திருநங்கை திருவிழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளர், திருச்சி திருநங்கை அசோசியேஷனின் தலைவர், தமிழ்நாடு திருநங்கைகைள் நல அமைப்பில் 13 உறுப்பினர்களில் ஒருவர், திருநங்கைகளுக்கான ‘சேவ்’ என்ற அமைப்பின் நிறுவனர்... என காஜலுக்கு பல முகங்கள். 

திருச்சியை பூர்விகமாய் கொண்ட காஜல், பி.காம் பட்டதாரி. பள்ளி, கல்லூரி காலங்களிலே அவருளிருந்த பெண்மையை அவர் கண்டுக் கொண்டாலும், அதை வெளிக்கொணராமல், உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு கல்லூரியை முடித்திருக்கிறார். அச்சமயத்திலே, பியூட்டிஷியன் கோர்சும் படித்துள்ளார். தன்னை மெருகேற்றிக் கொள்ளவதற்காக படித்த படிப்பால், இன்று பல மங்கையர்களை மிளிர வைத்துக் கொண்டுள்ளார்.

“நான் ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிவதிலே பாதி காலம் போயிருச்சு. ஒரு கட்டத்தில் என்னை நான் உணர்ந்த பின், 2010ம் ஆண்டு ஆபரேஷன் செய்து கொண்டு முழு பெண்ணாக மாறினேன். அத்தருணத்தின் ‘நான் ஒரு பெண்’ என்பதை தாண்டி, ‘இனி, நான் ஆணில்லை’ என்பதில் சந்தோஷமடைந்தேன். ஆனால், அறுவை சிகிச்சையோடு முடிந்துவிடுவதில்லை. முடிவற்றது இது. பெண்மையை நோக்கிய தேடல் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. என்னை என் பெற்றோர்கள் புரிந்துக் கொண்டார்கள். பெற்றோர்களோடு சேர்ந்துதான் இருக்கிறேன்.” 

கஜோல், திருநங்கைகளின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான நோக்கங்களுடன் ‘சேவ்’ என்ற அமைப்பினை தொடங்கியுள்ளார். 2009ம் ஆண்டு வேலை வாய்ப்பு பதிவு அலுவலகத்தில் திருநங்கைகளும் பதிவு செய்ய தனி கேட்டகரி வேண்டும் என்று அவருடைய சேவ் அமைப்பின் சார்பாக மனு அளித்தார். இரண்டாண்டுக்களுக்கு பிறகு அவருடைய கோரிக்கை வெற்றி பெற்றது. ஆம், 2011ம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் திருநங்கைகளும் பதிவுசெய்யும்விதமாக ‘T’ என்கிற தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. 

தவிர, திருச்சியில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு வாக்காளர் அட்டை வழங்கக்கோரி விண்ணப்பித்து, 120 திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையும், ரேஷன் கார்டும் பெற்று கொடுத்துள்ளார். இன்னும் பல சமூகப்பணிகளுக்கான வேலைகளில் ஈடுப்பட்டு கொண்டிருந்தபோது, அப்போதைய திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரனின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவருடைய அறிவுரையின்பேரிலே, சொந்தமாக தொழில் தொடங்கியுள்ளார் காஜல்.

2011ம் ஆண்டு அரியமங்கலம் ரயில் நகரில் தொடங்கப்பட்ட ’லுக் மீ’ பியூட்டி பார்லரை கலெக்டரே திறந்து வைத்துள்ளார். 

“வங்கியில் லோன் வாங்கி தான் பார்லரை திறந்தேன். பார்லர் தொடங்கி புதிதில் பெண்கள் வரவே தயங்கினார்கள். வந்தாலும் துணையோடு தான் வருவார்கள். இப்போது என்னிடம் பேசுவதற்காகவே பார்லருக்கு வருகின்றனர்,” என்றார்.

இருப்பினும் திருமணத்துக்கு முதல் நாள் வரை என்னிடம் தான் பேசியல் செய்து கொள்வர். ஆனால், திருமணத்தன்று அலங்காரத்துக்கு என்னை கூப்பிடுவதில்லை. மணமகன் வீட்டார் எதுவும் கூறுவார்களோ, திருமணத்துக்கு அன்னைக்கு திருநங்கை மேக்கப் செய்துவிட்டால் வந்தோர் எதாச்சும் பேசுவாங்களோனு தட்டி கழித்து விடுகிறார்கள், என்று ஆதங்கப்பட்டார்.

”நிதி ரீதியாக சிரமப்பட்டுக் கொண்டு தான் உள்ளேன். மாதம் கிடைக்கும் பத்தாயிரம் ரூபாய் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கிறது,” என்கிறார் அவர். 

திருநங்கைகளும் உழைத்து முன்னேறி, அவர்கள் சமூகத்தில் கவுரவிக்கும் நிலைக்கு வரவேண்டும் என்ற நோக்கில் ‘ஏஞ்சல் சுய உதவிக் குழுவை’ ஆரம்பித்துள்ளார். அக்குழுவின் மூலம், திருநங்கைகளுக்கு பியூட்டிஷியன் பயிற்சி அளித்து வருகிறார். தையல் பயிற்சி மற்ற கலைப்பயிற்சிகளுக்கு ஸ்பான்சர்ஸ் மூலம் பணம் பெற்று சொந்தமாக தொழில் செய்ய உதவுகிறார். அப்படி, நடிகர் கார்த்தி அளித்த நன்கொடையை கொண்டு ஐந்து திருநங்கைகளுக்கு தையல் கடை அமைத்து கொடுத்திருக்கிறார்.

மேலும், திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள மகளிர்களுக்கான பூமாலை வணிக வளாகத்தில் கடை ஒதுக்கி தருமாறு 11 ஆண்டுகள் போராடிய பின், கலெக்டர் ராஜமணியின் உதவியால் ஏஞ்சல் சுய உதவிக்குழுவுக்கு கடை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஜூஸ், கவரிங் நகைகள் விற்கும் கடையை திறந்துள்ளது ஏஞ்சல் சுய உதவிக் குழு. அச்சமயத்தில் மூங்கில் கலைப்பொருள்களை பற்றி அறியவர, மூங்கில்களின் நன்மைகளை தேடி படித்திருக்கிறார். 

மஞ்சள் மூங்கிலுக்கு காற்றை சுத்தம் செய்யும் குணமுண்டு. அதுமட்டுமில்லாமல், பிளாஸ்டிக்கினை ஒழிப்பதற்கு அதற்கு மாற்றாய் அமையும் மூங்கில்கள் என்கிறார்.

 நாம் தான் இயற்கைக்கு மாறாக முடி வளர்த்து இருக்கிறோம், இயற்கையோடு இணைந்து வாழவாது செய்யலாம் என்று வீக்கெண்ட்களில் பாண்டிச்சேரி சென்று மூங்கில் கலைப்பொருள் உருவாக்க கற்றுக் கொண்டேன். மூங்கிலில் உருவாக்கும் கலைப்பொருள்களை கல்லூரிகளில் நடக்கும் பொருள்காட்சிகளில் கடை திறந்து விற்று வருகிறோம்.”  

தொடர்ந்து தன் சமூக வளர்ச்சிக்கும், சுயமரியாதையை தேடித்தரவும் உழைத்துக் கொண்டிருக்கும் கஜோல், ’லுக் மீ’ பார்லரின் அடுத்த கிளையை அண்மையில் திறந்துள்ளார்.