மார்த்தாண்டம் முதல் லண்டன் வரை: கின்னஸ் சாதனை ஓவியர் ராஜசேகரனின் கதை!

2

பிப்ரவரி 12, 2008, நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையின் கேரள பகுதியான நெய்யாற்றின் கரையில் பிரமாண்டமான அழகிய ஓவியம் ஒன்று வரைந்து முடிக்கப்பட்டிருந்தது. கேரளாவின் முன்னாள் முதலமைச்சரான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டின் முகம், போட்டோவா? அல்லது ஓவியமா? என்ற வித்தியாசமே தெரியாத அளவில் வரையப்பட்டிருந்தது. அந்த படத்தை வரைந்த ஓவியரின், 5 நாட்கள் கடும் முயற்சியின் பலனாக அந்த ஓவியம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.

56.5 அடி உயரம், 31 அடி அகலம் என பரந்திருந்த அந்த ஓவிய பீடத்தில் 50 அடி வீதியும், 25 அடி உயரமும் கொண்ட இஎம்எஸ் ஓவியம் தான் கின்னஸ் சாதனையை அந்த ஓவியருக்கு பெற்று தந்தது. இதற்கு முன் ஜெர்மானிய ஓவியரான ரொனால்ட் சேர்க் 2002 இல் 22 அடி உயர ஓவிய பீடத்தில் வரைந்த ஓவியமே கின்னஸ் சாதனையாக அதுவரை இருந்து வந்தது.

கின்னஸ் சாதனைக்காக இ .எம் .எஸின் ஓவியம் வரைந்த போது ...
கின்னஸ் சாதனைக்காக இ .எம் .எஸின் ஓவியம் வரைந்த போது ...

நீண்ட தாடியுடன், குர்தா அணிந்து காணப்படும் ஓவியர் மார்த்தாண்டம் ராஜசேகரன் தான் இந்த சாதனையின் சொந்தக்காரர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மீனச்சல் கிராமம் தான் ஓவியர் ராஜசேகரனின் சொந்த ஊர். கணிதவியல் பயின்ற இவர் ஓவியத்தை முறையாக பயிலவில்லை என்பது கூடுதல் சுவாரசியமான செய்தி.

முறையாக ஓவியம் படிக்காத இவருக்கு ஓவிய ஆர்வம் ஏற்பட்டதன் பின்னணியை பற்றி கேட்ட போது,

“எனக்கு சிறு வயதிலிருந்தே படம் வரைய வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. நான் கல்லூரியில் படிக்கும்போதும், படித்து முடித்த பின்னும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் சுவர் விளம்பரங்கள் வரைவதற்கு செல்வது வழக்கம். அப்போது தமுஎகசவினரின் கலை இரவுகளுக்கு விளம்பரங்கள் வரைவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு ஆரம்ப கட்ட ஓவியனுக்கு தனது ஓவியத் திறமையை பொதுமக்கள் மத்தியில் வெளிக்காட்டுவதற்கான களம் வேண்டும். குமரி மாவட்டத்தில் தமுஎகசவினர் எனக்கு ஏற்படுத்தி தந்த களத்தை நான் நன்கு பயன்படுத்தி கொண்டேன்” என்று கூறுகிறார்.

________________________________________________________________________ 

தொடர்பு கட்டுரை:

இத்தாலி சென்று பாரம்பரியத்தை பறைசாற்றிய கொல்லிமலை பெண்கள்!

________________________________________________________________________

இதைத்தொடர்ந்து, தமிழில் முன்னணி வாரப் பத்திரிக்கையான ஆனந்தவிகடனின் 75 வது ஆண்டு பவள விழாவையொட்டி நடந்த ஓவிய போட்டியில் இவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். அப்போட்டியில் 75 சிறந்த ஓவியங்களை தேர்ந்தெடுத்து, அவற்றில் சிறந்த ஓவியத்தை தேர்ந்தெடுக்க தனது வாசகர்களிடம் ஆனந்த விகடன் கேட்டுக் கொண்டது. அதில் ஓவியர் ராஜசேகரன் வரைந்தது, வறுமையின் பிடியில் சிக்கி எலும்பு கூடாகத் தெரியும் மனிதன் ஒருவன், எலும்பு கூடாக இருக்கும் தனது சகோதரனை தூக்கி கொண்டு நிற்பது போன்ற ஓவியம். அந்த ஓவியம் மிகவும் நுட்பமாக, யதார்த்த தன்மையுடன் உயிரோட்டமுள்ள ஓவியமாகவே இருந்தது. வறுமையையும், சகோதரப் பாசத்தையும் ஒருசேர காட்டியதால் தான் என்னவோ ஆனந்த விகடனில் அந்த ஓவியம் வெளிவந்த போது வாசகர்களால் சிறந்த ஓவியமாக தேர்வு செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்த இவரை, கின்னஸ் சாதனை உலக அளவில் கொண்டு சென்றது என்றே கூற வேண்டும். அத்தகைய கின்னஸ் சாதனைக்காக ஒரு ஓவியத்தை வரைய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது எப்படி என அவரிடம் கேட்ட போது,

“ப்ளெக்ஸ் பிரிண்டிங் வருகை விளம்பர ஓவியர்களின் வாழ்க்கையை அழித்து வருகிறது. பல திறமை மிகுந்த ஓவியர்கள் பிளக்ஸ்களின் வருகையால் வேலையிழந்து வருகின்றனர். விளம்பர ஓவியங்கள் முற்றிலும் அழிவதற்குள் எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதனையொட்டி இப்படிப்பட்ட ஒரு ஓவியத்தை வரைய திட்டமிட்டேன்.” என்கிறார்.

ஆனால் ஓவியர் ராஜசேகரனுக்கு அந்த கின்னஸ் சாதனை, தனிப்பட்ட வகையில் அவரை உச்ச நிலைக்கு கொண்டு செனறுள்ளது. மலேசிய ராணி டோங்கு ஹாஜா ஹமினா பிண்டி ஹமிடுன்னின் ஓவியத்தை இவர் தத்ரூபமாக வரைந்திருப்பதை கண்டு அதிசயித்து போன ராணி, இவரை ராஜ உபசரிப்புடன் கௌரவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள ஓவிய சேமிப்பாளர்கள் என அழைக்கப்படும் குரேட்டர்களின் கவனத்தை இவரது ஓவியங்கள் ஈர்த்தன. லண்டனில் உள்ள உலகின் முன்னணி ஓவியர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்படும் நேஷனல் கேல்லரியில் நடந்த ஓவிய கண்காட்சியில் இவரது இரு ஓவியங்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஓவியத்தில் தனது திறமையை நன்கு வெளிக்காட்டி வரும் ஓவியர் ராஜசேகரன், திரைத்துறையிலும் தனது தடத்தினை பதித்துள்ளார். மலையாள திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், தான் இயக்கிய நாலு பெண்ணுங்கள் என்ற சினிமாவில் கலை இயக்குனராக இவரைப் பயன்படுத்திக் கொண்டார். அந்தத் திரைப்படம் சிறந்த கலை இயக்கத்திற்கான கேரள அரசின் விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது கலை இயக்கத்தை திறம்பட செய்து வருகின்றார்.

டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் வருகையை தொடர்ந்து ஆயில் பெயிண்டிங் உள்ளிட்ட ஓவியங்களின் எதிர்காலத்தை பற்றி கேட்ட போது,

"டிஜிட்டல் பெயிண்டிங்கின் ஆயுசு 10 முதல் 20 ஆண்டுகள் வரையே இருக்கும். ஆனால் ஆயில் பெயிண்டிங் 500 ஆண்டுகள் கழிந்தாலும் அழியாதவை. ஒரு ஓவியனின் படைப்பாக, அவனது காலம் கடந்தாலும், அவனைப் பற்றி பேசி கொண்டிருப்பவை ஆயில் பெயிண்டிங் ஓவியங்கள்” என்கிறார் தீர்கமாக.
மறைந்த மலையாள நடிகர் திலகனின் ஆயில் பெயிண்டிங்
மறைந்த மலையாள நடிகர் திலகனின் ஆயில் பெயிண்டிங்

திறமையை வெளிப்படுத்த முயற்சியும், பயிற்சியும் இருந்தாலே போதும் என்பதற்கு ஓவியர் ராஜசேகரன் சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறலாம்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற சாதனையாளர்களின் தொடர்பு கட்டுரைகள்:

உடுமலைபேட்டையில் இருந்து ஆம்ஸ்டர்டாம் வரை - மணி குமாரின் கால்பந்து ஆர்வம்

சின்னப்பாலம் டூ அமெரிக்கா: மீனவப் பெண் லட்சுமியின் அசத்தல் பயணம்!

Stories by Nandha Kumaran