குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள வெங்கையா நாயுடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0

ரமணம்மா மற்றும் ரங்கையா நாயுடு அவர்களுக்கு மகனாக 1949-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சவட்டபாளையம் என்ற ஊரில் பிறந்தவர் வெங்கையா நாயுடு. பி.ஏ., பி.எல். படித்துள்ள இவர் விவசாயம், அரசியல், சமூகப் பணிகளை தொழிலாக கொண்டிருப்பவர். 

வகித்த பொறுப்புகள்:

1971-ல் நெல்லூர் கல்லூரியின் மாணவர் பேரவையின் தலைவராக இருந்தவர். பின்னர் 73-74’களில் ஆந்திரப் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் மாணவர் பேரவையின் தலைவரானார். இளம் வயதிலேயே தலைமைப் பொறுப்பு வகிக்கும் திறனுடயவராக திகழ்ந்தார் வெங்கையா நாயுடு. 

1977-80-ல் ஆந்திரப் பிரதேசத்தின் ஜனதா கட்சி இளைஞர் அணி தலைவராகி முதன்முதலில் அரசியல் கட்சிப் பொறுப்பை வகித்தார். 1978-83 மற்றும் 1983-85-ல் ஆந்திரப் பிரதேச சட்டமன்றப் பேரவை உறுப்பினரானார். 

அரசியல் வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட வெங்கையா நாயுடு, 1980-83-ல் அகில இந்திய பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் பதவியை பெற்றார். 1980-85-ல் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை பாஜக தலைவராகி அக்கட்சியின் முக்கிய பொறுப்பை பெற்றார். 

பின்னர் 1985-88-ல் பாஜக ஆந்திரப் பிரதேச மாநில பொதுச் செயலாளர் ஆகி 1988-93-ல் தலைவர் பொறுப்பையும் ஏற்றார். பாஜக-ல் அகில இந்திய அளவில் பிரபலமடைந்த வெங்கையா, 1993 –2000-ல் அகில இந்திய பாஜகவின் பொதுச் செயலாளர் ஆனார். ஏப்ரல் 1998-ல் கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு முதன்முறையாக தேர்வானார்.

தொடர்ந்து பல முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், 2000–2002 வரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். 2002– 2004 வரை பாஜக-ன் தேசிய தலைவரானார்.  

ஜூன் 2010-ல் கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு மறுபடியும் தேர்வு (மூன்றாவது முறை) ஆகி, 26-ம் தேதி மே 2014 முதல் நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனார்.

ஜூன், 2016 – ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாகி (நான்காவது முறை) 2016, ஜூலை 6 முதல் 2017 ஜூலை 17 வரை, நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஆனார். பல பதவிகளை பொறுப்பு வகித்தும், இந்திய மாநிலங்கள் பலவற்றுடன் நல்லுறவையும் கொண்டிருந்த வெங்கையா நாயுடு 2017 ஆகஸ்ட் 11-ம் தேதி முதல்: இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக பொறுப்பேற்று உள்ளார். 

விவசாயம், சமூகப் பணி, மக்கள் நலன், அரசியல் சார்ந்த கட்டுரைகளை இதழ்களில் எழுதுதல், தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு ஊக்கமளித்தல், வேளாண்மை, சுகாதாரம், விலங்குகள் நலனைப் பேணுதல், தொழிற் பயிற்சி, கல்வி ஆகியவற்றுக்கு ஊக்கமளித்தல் வெங்கையா நாயுடுவின் முக்கிய ஆர்வங்கள் ஆகும். இவருக்கு முப்பவரப்பு உஷா என்ற துணைவியாரும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.