90 வயதில் பிஎச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த பால் சிரோமோனி! 

0

பால் எஸ் சிரோமோனி, 90 வயதான சென்னைவாசியான இவர், தற்போது பிஎச்டி முடித்துவிட்டு, கல்விக்கு வயது தடையில்லை என்று நிரூபித்துள்ளார். ரிட்டையர் ஆனவுடன் தனது ஆராய்ச்சிப் பணிகளை தொடங்கிய பால், ஆய்வறிக்கையை மூன்று வருடங்களில் எழுதி முடித்து, பிப்ரவி 2017-ல் முனைவர் பட்டம் பெற்றார்.  

பால், YMCA-வின் பொது செயலாளராக பணிபுரிந்தார். பின்னர் செயிண்ட்.மார்க் கதீட்ரலின் தொழிற்சாலை குழு சேவையின் தலைவராக சேர்ந்தார். முனைவர் பட்டம் பெற, ஆறு பாடங்கள் பயின்று, மூன்று தேர்வுகள் எழுதி மற்றும் பல செமினார்களில் பங்குகொண்டு உள்ளார். 

உளவியல் சம்மந்தமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள பால், இளைஞர்கள் பலரும் மன உளைச்சல் மற்றும் டென்சனால் அவதிபடுவது குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளார். இதை அடுத்து, Indian Society for Applied Behavioural Science (ISABS) அமைப்பை தொடங்கி, அதில் ஒழுக்கம், கூட்டு முயற்சி, போன்றவற்றை ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். 

இந்த அமைப்பு நல்லிணக்க அடிப்படையில், மனிதர்களை குழுவாக, சமூகமாக ஒன்றிணைக்க இயங்குகிறது. ISABS மனித செயல்பாடுகள், திறமைகள், வளர்ச்சி போன்ற பல விஷயங்களில் ஆராய்ச்சி செய்து மனித அறிவியல் குறித்த அறிக்கைகள் வெளியிடுகிறது. 

சுயநலம் இல்லாத மனிதரான பால், தன் வாழ்நாளில் பாதியை பெங்களுரு சேரிகளில் அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம் பற்றி கற்பிப்பதில் செலவிட்டவர். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து 'Joy of Giving Week' என்ற முயற்சியை தொடங்கினார். நன்கொடை கொடுப்பதில் மகிழ்வடையுங்கள் என்ற அடிப்படையில் இந்த முயற்சி பல ஊர்களில் செய்யப்பட்டது. ஒரு முறை இரவு நேரத்தில் லைட் ஹவுஸ் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாலை, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்துறையில் உள்ள அவருடன் சமூக பணிகளில் ஈடுபட்டிருந்தோர், அவரை பிஎச்டி செய்ய ஊக்குவித்தனர். 

87 வயதாகும் பாலின் மனைவி ஜாய்ஸ் சிரோமோனியும் பாலுக்கு உதவியாக இருந்து வருகிறார். மனிதாபிமான அடிப்படையில் இருவரும் இணைந்து செயல்படுகின்றனர். அவரும் பல சமூக பணிகளை ஆற்றி பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். பெண்கள் நல மருத்துவரான ஜாய்ஸ், இந்தியா மற்றும் லண்டனில் டாக்டராக பணியாற்றி உள்ளார். கொல்கத்தாவில் Halfway Home என்ற மையத்தை நடத்தும் இவர், சிஎன்என்-ஐபிஎன் ரியல் ஹீரோஸ் என்ற பட்டத்தை 2010-ல் வென்றுள்ளார். 

பால் மற்றும் ஜாய்ஸ் சிரோமோனி
பால் மற்றும் ஜாய்ஸ் சிரோமோனி

இந்தியா டுடே பேட்டியில் பேசிய பால்,

“துரதிஷ்டவசமாக நாம் கலாச்சாரத்தால் கட்டுப்பட்டுள்ளோம். அதே கலாச்சாரம் பொருளாதாரத்தை விட மேலோங்கி இருக்கிறது,” என்கிறார்.

உலகம் மனிதாபிமான அடிப்படையில் இல்லாததால் பலரும் மன நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை பால் மற்றும் அவரது மனைவி இருவரும் தீவிரமாக நம்புகின்றனர். அதனால் இதில் செயல்பட்டு உலகை அன்பான இடமாக மாற்றி, அமைதி நிலவ தொடர்ந்து உழைத்து வருகின்றனர். 

கட்டுரை: Think Change India