பாலியல் கொடுமைகளை தடுக்கும் ஒரு கருவியை உருவாக்கியுள்ள சென்னை மாணவி!

0

பாலியல் ரீதியிலான கொடுமைகள் பெண்களுக்கு அதிக அளவில் நடக்கிறது. இதற்கு தற்பொழுது சமூக வலைத்தளத்தில் நடந்த #metoo கேம்பேயன் ஒரு எடுத்துக்காட்டு. உலகளவில் பல பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கும், பலாத்காரத்திற்கும் ஆளாகுகின்றனர். இதில் பல சம்பவங்கள் புகார் செய்யப்படமால் வெளியே தெரியாமலே போகிறது; இன்னும் சில சம்பவங்கள் புகார் செய்யப்பட்டு தண்டனைகள் அளித்தாலும் குற்றவாளிகள் வெளியில் வந்து அதே பெண்களை துன்புறுத்தும் பல அவலங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்குத் தீர்வு காணும் விதமாக சென்னையைச் சேர்ந்த மாணவி மனிஷா மோகன் Intrepid என்னும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். இது பெண்கள் தங்கள் ஆடையில் அணிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்டிக்கர் போல் இருக்கும் இந்த கருவியை ஆடையில் ஒட்டி கொண்டால்; பெண்கள் ஆடையை அவர்கள் விருப்பம் இன்றி அவிழ்க்கும் போது அதனால் கண்டறிய முடியும்.

இந்த கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆப்-ஐ போனில் டவன்லோட் செய்துகொண்டால் பெண்கள் ஆடையை அவர்கள் விருப்பம் இன்றி அவிழ்க்கும் போது சத்தத்துடன் அந்த ஆப்பில் அபாய ஒலி அடிக்கும். எந்த கைபேசியில் எல்லாம் அது இணைக்கப்பட்டுள்ளதோ அனைத்திலும் அவர் இருக்கும் இடத்துடன் குறுஞ்செய்தி சென்றடையும்.

அதுமட்டுமின்றி, பெண்கள் ஏதேனும் ஆபத்து தங்களை நெருங்குவதை உணர்ந்தால் அந்த சென்சாரை அழுத்தினால் போதும், அதிக சத்தத்துடன் எச்சரிக்கை மணி அடிக்கும். மேலும் இந்த சென்சாரால் மயக்கநிலையில் இருந்தால் கூட உணர முடியும்.

பெண்களுக்கான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டு இருக்கும் இந்த சூழலில் வெறும் 6 சதவீத சம்பவங்கள் மட்டுமே வெளியில் தெரிகிறது. மேலும் இந்தியாவில் 2 நிமிடத்திற்கு ஒரு பெண், பாலியல் கொடுமைக்கு உள்ளாவதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. இந்தச் சூழலில் இது போன்ற கருவி மிகவும் அத்தியாவசிய ஒன்றாக இருக்கிறது.

மனிஷா, சென்னையில் உள்ள SRM பல்கலைகழகத்தில் ஆட்டோமொபைல் பொறியியல் (2015) முடித்தவர். அதன் பின் தன் மேல் படிப்பை அமெரிக்காவில் உள்ள Massachusetts தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (MIT) படித்தார். MIT-யில் படிக்கும்போதே இந்த கண்டுபிடிப்பை தயாரித்துள்ளார்.

“கல்லூரி வளாகத்தில் பெண்கள் 7 மணிக்குள் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு அறைக்கு சென்றுவிட வேண்டும். நாம் பெண்களை உள்ளே அடைப்பதை விட அவர்களுக்கான பாதுகாப்பை அளிக்க வேண்டும்,” என்கிறார் மனிஷா.

தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். குற்றங்களை குறைக்க ஒரு பக்கம் நாம் முயற்சி செய்ய; பாதுகாப்பிற்காக இது போன்ற கருவிகளை வரவேற்க வேண்டும்.

Related Stories

Stories by YS TEAM TAMIL