இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற உழைக்கும் தமிழக இளம் நட்சத்திரம் விஷால் மனோகரன்! 

1

பதினைந்து வயதாகும் சென்னை பள்ளி மாணவன் விஷால் மனோகரன், தமிழக கிரிக்கெட் களத்தில் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக உலாவருகிறான். விஷாலின் அம்மா தேன்மொழிக்கு கிரிக்கெட் என்றால் உயிர். அதன் தொடர்ச்சி மகனிடம் மிளிர்கிறது. அப்பா மனோகரன், தமிழக ஓவிய வெளியில் மிகப் பிரபலமான ஓவியர். நீர் வண்ண ஓவித்தில் மிக குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தியவர்.

“எனக்கு முரளிவிஜய், சச்சின் டெண்டுகல்கர், தோனிதான் உந்துதலாக இருக்கிறார்கள். ஏழாம் வகுப்புப் படிக்கும்போது கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். என் ஆர்வத்தை வளர்த்தெடுத்து ஊக்குவித்தவர் கோச் கிரிதரன்” என்கிறார் இளம் வீரர் விஷால்.

சிறுபிராயத்தில் தெருக்களில் ஆடத் தொடங்கியதுதான் தொடக்கம் என்று சொல்லலாம். பிறகு ஹேண்ட்பால், த்ரோபால் என விளையாட்டுகள் மீது தீராத மோகம். ஆனால் தீராத தாகம் இருந்தது கிரிக்கெட்மீது மட்டுமே. அதுவே இப்போது விஷாலை நெடுந்தூரம் அழைத்துவந்திருக்கிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பயிற்சி தொடங்கிவிட்டது. தினசரி பயிற்சி. அபி என்பவர் விஷால் வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்று பயிற்சி அளித்திருக்கிறார். முதல் கிரிக்கெட் மேட்ச் நடந்தது திருவண்ணாமலையில். அன்று முதல் அவர் படிக்கும் ஆஷ்ரம் பள்ளி கிரிக்கெட் அணியின் கேப்டன் விஷால்தான். அடுத்து பெங்களூரு, இலங்கை, கோவா என நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று அசத்திவருகிறார். எல்லா போட்டிகளிலும் 50க்கும் குறையாமல் ரன்கள் குவித்திருக்கிறார்.

கேதார் கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியில் சேர்ந்த பிறகு விஷாலின் ஆட்ட உத்திகளில் மாற்றம் தெரிந்தது. தொழில்முறை கிரிக்கெட் பயிற்சி தொடங்கியது. முரளிவிஜயின் பேட்டிங்கை கூர்ந்து கவனித்துவந்த விஷாலுக்கு பேட்டிங் கைவந்த கலையாக மாறியிருக்கிறது. பெங்களுருவில் நடந்த போட்டியில் கிரிக்கெட் வீரர் வெங்கடேச பிரசாத் கரங்களால் பரிசு வாங்கியதை விஷால் பெருமையாக நினைக்கிறார்.

பதினான்கு வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி சார்பாக விளையாடிய விஷால் அணியினர், திருவண்ணாமலையில் நடந்த போட்டியில் ரன்னராக வந்தனர். பேட்டிங், கீப்பிங்கில் கலக்கும் விஷால், தனக்கு பயிற்சி அளிக்கும் மாஸ்டர்களை மறப்பதில்லை. கேதார்நாத், தமிழ்ச்செல்வி, கிரிதரன், அசோக் ஆனந்த், தேவ் ஆனந்த், மகேஷ் மற்றும் கண்ணன் என நன்றிக்குரியவர்களின் பட்டியல் நீள்கிறது.

ஏற்கெனவே தமிழக அணிக்காக ஆடிய விஷால், பதினேழு வயதுக்கும் குறைவானவர்களுக்கான தமிழக கிரிக்கெட் அணிக்கான தேர்வில் பங்கேற்றுள்ளார். இன்னும் இரு கட்டத் தேர்வுகள் இருக்கின்றன. நல்ல முடிவுக்காக காத்திருக்கும் விஷால், பத்தாம் வகுப்புத் தேர்வுக்காக சற்று கிரிக்கெட்டை தள்ளிவைத்திருக்கிறார்.

“தெருவில் கிரிக்கெட் விளையாடும் அண்ணன்களுக்கு பந்து பொறுக்கிப்போடும் சிறுவனாகத்தான் நான் அறிமுகமானேன். ஆனால் பின்னாளில் அதுவே என் பெரும் விருப்பமான விளையாட்டாக மாறிவிட்டது. இப்போது அந்த அன்புக்குரிய அண்ணன்கள் என்னை மதிக்கிறார்கள். தினமும் முறையான பயிற்சியும் உழைப்பும் என்னை சிறப்பான ஆட்டக்காரனாக மாற்றியிருக்கிறது. என் கனவை நோக்கி விளையாடிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அதை அடைவேன்” என்று தீர்க்கமாக பேசுகிறார் விஷால் மனோகரன்.

விஷாலின் அம்மாவுக்கு மகன் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அந்தக் கனவை நோக்கி விஷால் ஓடிக்கொண்டிருக்கிறார்.

ஆக்கம்: தருண் கார்த்தி